அறியாமை | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

அறியாமை

இதமான காலைப் பொழுது. அந்த அகன்ற பாதையின் இருமருங்கிலும் அமைந்திருந்த பசுமையான புற்தரையில் பனித்தூறல்கள் படர்ந்து புத்தொளி பரப்பிக்கொண்டிருந்தது. பெரியவர்களும், சிறியவர்களும் சுறுசுறுப்பாக தத்தமது பணிகளில் ஈடுபட்டிருந்தனர். வெள்ளைச் சீருடையில் வெண்ணிற ரோஜாக்களாக இதழ் விரித்துச் செல்லும் மாணவர்களை காணும் போது எனக்கு பொறாமையாக இருந்தது. புத்தகச் சுமைகளை சுமக்க முடியாமல் வெறுப்புடன் நடக்கும் சின்னஞ் சிறுசுகளை அவதானிக்கின்றேன். ‘இந்த சுமைகளுக்கே இவ்வளவு தள்ளாடும் இவர்கள் நாளக்கி வாழ்க்கைச் சுமைகளை எப்படி தாங்க போறாங்களோ தெரியல.’ எனக்குள் நானே நினைத்துக் கொண்ட போது ‘கிரீச்..’ என்ற சத்தத்துடன் என்னை உரசிச் செல்லும் அளவுக்கு ஒரு ஆட்டோ வந்து நின்றது. நான் ஒரு கணம் பதறி போய் விட்டேன். வீல் சாரதி வெளியே தலையை நீட்டி ‘என்னா காசீம் காக்கா மகள ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறங்க போல. இதுல ஏத்திவுடுங்க நான் கூட்டிட்டு போறன்’ என்றதும் கொஞ்சம் சுதாகரித்துக் கொண்டேன். ‘இல்ல தம்பி நீங்க போங்க. நான் இவட ரீச்சர் கூட கொஞ்சம் கதைக்க இருக்கு. அதனால நானே கூட்டிட்டு போறன். நீங்க கவனமா போங்க.’ நான் சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் அதே வேகத்தில் பறந்தது அந்த ஆட்டோ. அதற்குள் சுமார் எட்டு பிள்ளைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்த போது மனசுக்குள் ‘திக்’ என்றது. அந்த பிள்ளைகளைப் பற்றி அந்த ஆட்டோக் காரருக்கு எந்தவித கவலையும் இல்லை. வருமானமே அவருக்கு முக்கியமானதாக இருந்தது. அந்த சிறுசுகளை பெற்றவர்களும் அது பற்றி கண்டு கொண்டதாக எனக்குத் தெரியவில்லை. முன்பு என்றால் அப்துள்ளா சேர் இது பற்றி அடிக்கடி பெற்றார் கூட்டம் போட்டு பேசுவார். அப்போது ஒரு கட்டுப்பாடு இருந்தது. பிள்ளைகள் கூட பாதையின் வலது புறமாக அழகாக நடந்து செல்வார்கள்.  

பாடசாலை ஒழுங்கைக்குள் எந்தவொரு ஆட்டோவும் செல்ல முடியாது. பாடசாலைக்குள்ளேயும் வெளியேயும் கடமை, கட்டுப்பாடு, கௌரவம், ஒழுக்கம் அனைத்தும் பேணப்பட்டன. ஆனால் இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. ‘தடி எடுத்தவரெல்லாம் வேட்டைக் காரர்’ என நினைத்துக் கொண்டு செயற்படுகிறார்கள். எந்தவொரு ஒழுங்கு விதியும் இல்லை. இருந்தாலும் அதை பின்பற்றுவதற்கும் யாரும் தயாராகவும் இல்லை. இதை எல்லாம் எண்ணிப் பார்க்கின்றபோது தலை சுற்றியது. பெருமூச்சொன்றை ஆழமாக விட்டவனாக பாடசாலை வளவுக்குள் பாதங்களைப் பதிக்கிறேன். பிள்ளைகள் அங்குமிங்குமாக சிதறிக் கிடக்கின்றனர். ஆசிரியர்கள் மரத்தடிகளில் கூடி கதைத்துக் கொண்டிருந்தார்கள். ஓரிருவர் அதிகார தொணியில் கர்ஜித்துக் கொண்டிருந்தார்கள். சுற்றுப்புரத்தைப் பார்த்துக்கொண்டே காரியாலய வாசலுக்கு வந்துவிட்டேன். ஒரு நாய் கூட என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ‘நீங்க யாரு? ஏன் வந்தீங்க?’ என்று கேட்பதற்கு கூட யாருக்கும் நாதியில்லை. மெதுவாக தலையை உயர்த்தி காரியாலயத்திற்கு உள்ளே பார்வையை செலுத்துகிறேன். இதில் யார் அதிபர் என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு நான்கு பேர் சரி சமமாக அமர்ந்து அரசியல் பேசிக்கொண்டிருந்தார்கள்.  

 

அதிபர் காரியாலயம் என்பதால் கச்சிதமாக இருந்தது. அழகான சோபாவும், அதற்கே உரிய தளபாடங்களும் பளபளத்துக்கொண்டிருந்தன. காபட் போட்ட தரையில் கால் வைக்கவும் கூச்சமாக இருந்தது. இத்தனைக்கும் நடுவே காரியாலய சுவரில் மாட்டியிருந்த அந்த பெரிய கடிகாரத்தின் மீது என் பார்வை படர்கிறது. அது சரியாக காலை ஏழு ஐம்பது மணியைக் காட்டிக்கொண்டிருந்தது. என் கைக் கடிகாரத்தையும் ஒரு முறை சரிபார்த்துக் கொண்டேன். இரண்டுமே சரியாகத்தான் இருந்தன. ஆனால் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு விட்டதா, இல்லையா என்பதை என்னால் ஊகித்துக்கொள்ள முடியவில்லை. தலையை சொரிந்த வண்ணம் என் வலது கையை இறுக்கிப்பிடித்துக்கொண்டிருந்த மகளைப் பார்க்கிறேன். அவள் இந்த உலகத்தில் இல்லை என்பதை புரிந்து கொண்டு காரியாலயத்திற்குள் நுழைய எத்தனிக்கிறேன். அப்போது பாடசலையின் ஆரம்ப பிரிவின் பக்கமிருந்து ஒரு ரீச்சர் ஓடி வருவதை கண்டு என் பாதங்களை நகர்த்திக்கொண்டேன். அவர் என்னை நோக்கித்தான் வருகிறார் என்பதை நான் உணர்ந்து கொள்வதற்குள் ‘வாப்பா...வாப்பா.. அந்தா எங்கட ரீச்சர் வாரா என்ன விடுங்க நான் போரன்.’ என் கைகளை உதறிவிட்டு ஒடும் மகளை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போதுதான் அது ஆமினா ரீச்சர் என்பதை நான் தெரிந்து கொண்டேன். முன்பெல்லாம் ஒரு ஆசிரியரை சந்திப்பதென்றால் அதற்கு ஒரு தினத்தை ஒதுக்கி இருப்பார்கள். இல்லாவிட்டால் அதிபரிடம் முன்னனுமதி பெற்றதன் பின்புதான் குறித்த ஆசிரியரை சந்திக்க வேண்டும். ஆனால் ஆமினா ஆசிரியரை கண்டதும் இதையெல்லாம் நான் மறந்துவிட்டேன். என் மகளைப் போல் ஓடிச்சென்று அவரின் கைகளைப் பற்றிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. இருந்தாலும் மனதை அடக்கிக்கொண்டு அவர் வருகின்ற திசையை நோக்கி வேகமாக நடக்கிறேன்.  

அதற்குள் அவர் என்னருகில் வந்துவிட்டார். நான் அவரிடம் சென்று மரியாதையாக ‘அஸ்ஸலாமு அலைக்கும் ரீச்சர்’ என்கிறேன். ‘வஅலைக்கும் ஸலாம். வாங்க ராஜா இப்பதான் இந்த ரீச்சரயும், ஸ்கூலயும் பார்க்க தோணிச்சு போல?’ அதே பழைய பாணியில் மலர்ந்த முகத்தோடு பேசினார் ரீச்சர். ‘இல்ல ரீச்சர் இப்ப நான் கொழும்புல கட செய்றன். அதனால அடிக்கடி வர முடியல. ஆனா மகள் எப்பவும் உங்கள பத்திதான் கதப்பா. இன்னக்கி கூட என்னய லீவு போட வச்சு அவதான் அடம்புடிச்சி உங்ககிட்ட கூட்டி வந்திருக்கா.’ மூச்சி விடாமல் கூறி முடித்த என்னை செல்லமாக கோபித்தார் ஆமினா ரீச்சர். ‘அப்ப இன்னிக்கும் தொரயா நெனச்சி வரல்ல. மகள் கூப்பிட்டான்னு வந்திருக்கீங்க. சரி சரி வாங்க கிளாஸ்ல போய் பேசுவம்.’  

கூறிக்கொண்டே ரீச்சர் முன்னே நடக்க, பெட்டிப் பாம்பாக அவரை பின்தொடர்ந்த எனக்குள் சிந்தனை வட்டமிட்டது. ஆமாம் நானும் இப்பாடசாலையின் பழைய மாணவர்களுள் ஒருவன்தான். நான் முதலாம் வகுப்புக்கு சேர்க்கப்பட்ட போது முதன் முதலாக என்னை தாங்கிக்கொண்ட எனது இரண்டாவது தாய்தான் இந்த ஆமினா ரீச்சர். அன்று அவர் எனக்குச் சொல்லிக்கொடுத்த அகரமும், அவர் காட்டிய அன்பும், அரவணைப்பும்தான் என்னையொரு வணிகத்துறை பட்டதாரியாக உருவாக்கி இருக்கிறது என்றால் அதில் மிகையில்லை. இன்று தனியொரு வியாபாரத்ததை ஆரம்பித்து நடாத்துகின்ற மன வலிமையைக் கொடுத்தது நான் பெற்ற பட்டம் என்பதைவிட ஆமினா ரீச்சர் போன்றவர்கள் காட்டிய வழிதான் என்பதை நினைக்கும் போது எனக்கே ஆச்சரியமாக இருக்கும். எனக்கு ஆரம்ப கல்வியை ஊட்டிய அதே ஆசிரியர் இன்று எனது மகளுக்கு இரண்டாம் தரத்திலே கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அன்று நான் பார்த்த ஆமினா ரீச்சர் இளமையாகவும், துடிதுடிப்பாகவும், கலகலப்பாகவும் இருந்தார். ஆனால் இன்று அவரிடம் அந்த சுறுசுறுப்பை காணவில்லை.  

எதையோ இழந்த மாதிரியான ஒரு சோகம் அவர் முகத்திலே இழையோடிப் போயிருந்தது. இது முதுமையினால் ஏற்பட்டதா அல்லது பாடசாலை மீதுள்ள வெறுப்பினால் ஏற்பட்டதா என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சுமார் முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஆசிரியர் தொழிலில் அர்ப்பணிப்போடு செயற்பட்டுக் கொண்டிருக்கும் இவருக்கு தொழில் சலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என எனக்குள் நானே நினைத்துக் கொண்ட போது, ‘ஆ..காசிம் நீ போய் அந்த ெவயிட்டிங் ரூம்ல உட்காரு. நான் புள்ளைகளுக்கு முதல் பாடத்த முடிச்சு அதுல ஏதாச்சும் வேல கொடுத்துட்டு வாரன். இன்னக்கி உன்னோட நிறைய கதைக்க இருக்கு. ப்ளீஸ் பண்ணி எனக்காக கொஞ்சம் வெயிட் பண்ணு.’ என்ற ரீச்சரின் குரல் என்னை சுய நினைவுக்கு கொண்டு வந்தது. ‘பரவாயில்ல ரீச்சர் நீங்க பாடத்த முடிச்சிட்டே வாங்க எவ்வளவு நேரம்னாலும் நான் வெயிட் பண்றன்.’ எனச் சொல்லிக் கொண்டே அந்த ரூமுக்குள் நுழைகிறேன்.  

நல்ல வேளை அங்கு யாரும் இருக்கவில்லை. பாடசாலையின் வெளியில் பார்வை படும் விதத்தில் வாசலோரமாக இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டேன். என்னைத் தாண்டி எத்தனையோ பேர் சென்று விட்டார்கள் யாரும் எதுவும் கேட்கவில்லை. பாடசாலை ஆரம்பித்து முப்பது நிமிடங்களையும் தாண்டி விட்டது. ஆரம்ப பாடவேளையில் இருக்க வேண்டிய அமைதி இதுவரையும் ஏற்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. மாணவர்களின் ஆரவாரம் காலை நேரத்தின் புனிதத்தை புதைத்துக் கொண்டிருந்தது. ஆசிரியர்கள் ஆங்காங்கே கூடிக்குலாவிக் கொண்டிருந்தார்கள். வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை அவர்களிடம் காணப்படவில்லை. இந்த நேரம் ஆமினா ரீச்சரை நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருந்தது.  

ஏனெனில் ஒரு சைக்கிள் இடைவெளி கிடைத்தால் கூட வகுப்புக்குச் சென்று கற்பிப்பதை தவிர்த்துக் கொள்ளும் புதிய தலைமுறை ஆசிரியர்களோடு ஒப்பிடுகின்றபோது முப்பத்தைந்து வருட அனுபவத்தைக் கொண்ட பழைய முதுமைகள் இன்னும் கற்பித்தலுக்கு முன்னுரிமை கொடுப்பதை காணும்போது கண்களில் நீர் கசிகிறது. கைக் குட்டையை எடுத்து கண்களை துடைத்துக்கொள்கிறேன். ‘என்ன ஸ்கூல பார்த்தா தொரக்கி அழுக வருதோ?’ கேட்டுக் கொண்டே ஆமினா ரீச்சர் அந்த ரூமுக்குள் நுழைவதைக் கண்டு அவசரமாக எழுந்து நின்று கொண்டேன். ‘என்ன காசிம்..மிச்ச நேரமா காக்க வச்சிட்டேனா? சொரிப்பா என்னால காலையிலேயே படிப்பிக்காம இருக்க ஏலா. எங்கள நம்பி வார இந்த சிறுசுகள ஏமாத்தினா அன்னக்கி தூக்கமே வராது அதனாலதான்.....’ ரீச்சர் சரியாக முடிக்கவுமில்லை இடையில் நான் குறுக்கிட்டேன்.  

‘இல்ல ரீச்சர் இல்ல எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல. இந்த வயசுலயும் கடமையில ஆர்வமா இருக்குற உங்கள பார்த்தா எனக்கு புல்லரிக்குது ரீச்சர்’ என எனது பாணியில் நான் சொல்ல, ‘அப்ப எனக்கு வயசு போயிருச்சி நான் கிழவியாகிட்டன்னுதானே சொல்ல வார..?’ என அவர் கிண்டலடிக்க இருவரும் கலகலவென சிரித்துக்கொண்டோம். எனக்கு பாலர் வயதிற்கே சென்று விட்டதைப் போன்று மனசெல்லாம் நிறைந்திருந்தது. ரீச்சரின் முகத்திலும் பௌர்ணமி பளிச்சிட்டது. இருவரும் அமர்ந்து நீண்ட நேரம் பேசினோம்.  

முதலில் ரீச்சர் என்னைப்பற்றியும், எனது குடும்பத்தைப் பற்றியும், என்னுடைய வகுப்புத் தோழர்கள் பற்றியும் ஒவ்வொருவராக விசாரிக்கின்றார். பதிலுக்கு நானும் ரீச்சரை பற்றியும், அவரது குடும்பம், பிள்ளைகள் பற்றியும் விசாரித்து தெரிந்து கொண்டேன். சுக விசாரிப்பகளைத் தொடர்ந்து கொஞ்ச நேரம் இருவருமாக பழைய ஞாபங்களை மீட்டிக் கொண்டோம். இருவர் முகத்திலும் புன்னகையின் ரேகைகள் படர்ந்திருந்தது. ஒரு கணம் ரீச்சரின் கண்களில் நீர் கசிய, எனது கண்களும் இலேசாக ஈரமாகியது. இந்த ஈர நினைவுகளை வேறு திசையில் திருப்ப நினைத்து, ‘அதெல்லாம் சரி ரீச்சர் இப்ப எங்கட ஸ்கூல் எப்படி போகுது’? என மெதுவாக பேச்சை ஆரம்பித்தேன்.  

‘அத ஏன் கேக்குற காசிம்... எல்லாம் முடிஞ்சி போச்சி.. ஒரு காலத்துல ஆஹா ஓ,,ஹோன்னு இருந்த இந்த ஸ்கூல் இப்ப குட்டிச் சுவரா போச்சு... இதுக்கு மேல என்னால முடியலடா... அதனால காலத்துக்கு முன்னமே பென்சன் போரதா முடிவெடுத்துட்டன். மாணிக்கமா பார்த்த ஸ்கூல மண்ணாங்கட்டியா பார்க்க முடியலடா..’ பெருமூச்சுடன் ரீச்சர் பேசி முடிக்க ஒருகணம் தொண்டை அடைத்தது. இருந்தாலும் என்னை கட்டுப்படுத்திக் கொண்டே, ‘யே ரீச்சர் அப்துள்ளா சேர் பிரின்ஸிபெல்லா இருந்த நேரம் இந்த ஸ்கூல் நல்லாதானே இருந்திச்சு.. அப்ப ரிசல்ட்டும் நல்லா இருந்திச்சு..ஒழுக்கமும் நல்லா இருந்திச்சு... அவர் போய் ஏழு வருசம் இருக்கும்னு நெனக்கிறன்..அதுக்குள்ள இவ்வளவு வீழ்ச்சியா...? என்னால தாங்க முடியல ரீச்சர்..’ என என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். ‘எல்லாம் அந்த மனுசனோட போச்சி காசிம்... அவர்ட காலத்துல வெளி இடங்கள்ற இருந்தும் பெரிய பெரிய ஸ்கூல்ற இருந்தும் பிள்ளைகள் இங்க வந்தாங்க.. இன்னக்கி எல்லாரும் இங்க இருந்து வேற ஸ்கூலுக்குப் போறாங்க. அவருக்குப் பின்னால மூணு பிரின்ஸிபெல் வந்தாச்சு... ஒண்ணும் உருபடியில்ல.. செய்றான்களும் இல்ல...செய்ய விடுறான்களும் இல்ல... இன்னொன்னு உனக்கு தெரியுமா...? இப்ப இங்க நாலு பிரின்சிபெல்டா... இது எல்லாத்துக்கும் உங்கட எஸ்டீசீ, ஓல்ட் போயிஸ் எல்லாரும் பதில் சொல்லி ஆகணும் காசிம்..’ ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியாக ரீச்சர் லேசாக என்னையும் கடிப்பதைப் போல் இருந்தது. நான் கொஞ்சம் உசாராகினேன். ‘எனக்கு தெரிஞ்ச வர இந்த எஸ்டீசீ, ஓல்ட் போயிஸ் எல்லாரும் ஸ்கூல முன்னேத்தனும்னு நல்லா கஷ்டப்பட்றாங்க ரீச்சர் ஆனா ஸ்கூல் நிர்வாகம் அத சரியா பயன்படுத்தலன்னு எனக்கு தோணுது ரீச்சர்’ என கொஞ்சம் அழுத்திச் சொன்னேன்.  

‘முயற்சி செஞ்சா மட்டும் போதா காசிம்.. ஒருத்தர ஒருத்தர் மதிக்கனும்.. விட்டுக்கொடுக்கணும்.. ஒரு நாளும் ஸ்கூல் நிர்வாகத்துல தல போடாம இருக்கணும்.. நன்றி மறக்காம இருக்கணும்.. தன்ன பெரிய ஆளா காட்டிக்க நெனக்கக் கூடாது.. ஸ்கூலுக்காக எதையும் செய்ய தயாரா இருக்கனும்...’ ஆமினா ரீச்சர் அடுக்கிக் கொண்டே போனார் என்னால் எதுவும் பேச முடியாது வாயடைத்துப் போனேன். அதுக்காக ஆமினா ரீச்சர் பக்கச் சார்பாக பேசவும் இல்லை. நடு நிலையாக பேசினார். பாடசாலை நிர்வாகத்தின் குறைபாடுகளையும், ஆசிரியர்களின் கற்பித்தல் குறைபாடுகளையும் விலாவாரியாக விளக்கினார்.

அப்துள்ளா அதிபரின் அளப்பரிய அர்ப்பணிப்புகளை நன்றியோடு நினைவு கூர்ந்தார். அவருடைய காலத்தில்தான் அனைவரும் மகிழ்ச்சியாக வேலை செய்தோம் என்பதை ஒப்புக்கொண்டார். எஸ்டீசீக்கும் அப்துள்ளா சேருக்குமிடையில் இருந்த உறவை மெச்சினார். அனைவரும் சந்தோசமாக வேலை செய்து நல்லதையே அறுவடை செய்தோம். அது மாதிரியான ஒரு காலம் இனி வரப்போவதில்லை எனச் சொல்லி கண்ணீர் விட்டழுதார்.  

அனைத்தையும் உள்வாங்கிக் கொண்ட நான் மெதுவாக கேட்டேன். ‘ரீச்சர் நீங்க அப்துள்ளா சேரப்பத்தி இவ்வளவு பெருமையா பேசுறீங்களே.. ஆனா அவருதான் போர நேரம் இந்த ஸ்கூல குழப்பிட்டு போனார்னு யாரோ ஒருத்தர் சொல்லி இருக்காரே..?’ இதை கேட்ட ஆமினா ரீச்சர் கொஞ்சம் ஆவேசப்பட்டார். ‘இத கேட்குற நேரம் எனக்கே நெஞ்சு பத்துது காசிம்.. இத சொன்னது யாருமில்ல அப்துள்ளா சேர் தூக்கி வச்சிருந்த அப்போதைய எஸ்டீசீ செக்கரெட்டரிதான் ஒரு கமிட்டி மீட்டிங்ல வச்சு சொன்னாரு.. அதுல நானும் இருந்தன். இன்னும் நிறையப் பேர் இருந்தாங்க.. யாருமே இதுக்கு எதிர்த்து பேசல..நான் கூட மௌனமா இருந்தத நெனச்சா வெக்கமா இருக்கு காசிம்..’ சொல்லிக் கொண்டே சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டார் ஆமினா ரீச்சர்.   எனக்கு அப்துள்ளா சேரப்பற்றி நல்லா தெரியும். இந்த பாடசாலையை தன் உயிரா நினைத்து கஷ்டப்பட்டவர். இரவு பகல் பாராது பாடசாலைக்காக உழைத்தவர். தன் கரங்களால் செங்கற்கள் இறக்கியவர்.

 

எல்லாவற்றையும் விட அந்த பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளர ஊருக்கு அறிமுகம் செஞ்சவரே அவர்தான். இவருக்குப் போய் இப்படி கதைத்தால் அல்லாஹ்வுக்கே பொறுக்காதே என்றெல்லாம் நான் மனதால் புலம்பிக் கொண்டிருந்த போது ரீச்சரே மீண்டும் பேச்சை ஆரம்பித்தார். ‘இப்ப பழசெல்லாம் பேசி ஒன்னும் ஆகப்போறதில்ல காசிம்.. இருந்தாலும் ஒன்னு மட்டும் உறுதி என்றைக்கு செக்கரெட்டரி அப்படி அப்துள்ளா சேர் மேல பழிய போட்டாரோ அன்னையில இருந்துதான் இந்த ஸ்கூல் குழம்பி போச்சு.  

நல்லவங்கட மனச உடைக்கிறது லேசான காரியமில்ல காசிம்... இத போய் சமூகத்துல சொல்லி பிராயசித்தம் தேட சொல்லு..’ எந்த சலனமும் இல்லாமல் தீர்க்கமாய் சொன்ன ஆமினா ரீச்சரிடம் மேற்கொண்டும் எதையுமே என்னால் பேச முடியவில்லை. ஆரம்ப சந்தோஷங்கள் காணாமலாகி இதயம் லேசாக வலிக்கத் தொடங்கியது. தொடர்ந்து இங்கு இருந்தால் இந்த நன்றி கெட்ட சமூகத்தின் மீது வெறுப்புதான் அதிகரிக்கும் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டேன். ஆமினா ரீச்சர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். ‘ரீச்சர் நீங்க இப்பவே பென்ஷன் போக கூடாது ரீச்சர்.. உங்கட சேவ எங்களுக்கு இன்னும் தேவ ரீச்சர்.. இந்த ஸ்கூல முந்தி மாதிரி மாத்தி காட்டுவோம் ரீச்சர்.. அப்துள்ளா சேர்கிட்ட நான் போரன் ரீச்சர்.. அவரு ஒரு நாளும் இந்த ஸ்கூல கீழ போட நெனக்கவே மாட்டாரு.. இது எனக்கு நல்லாவே தெரியும் ரீச்சர்..’ என்னை அறியாமலே வார்த்தைகள் கொட்டின. அந்த கால ஆமினா ரீச்சராய் அதை ரசித்துக் கொண்டே என் தோளில் தட்டிக்கொடுத்தார்.  

‘போ காசிம் போ எல்லாரையும் சேர்த்துக்கிட்டு ஓன்ட ஸ்கூல காப்பாத்த போராடு’ அன்று போலவே இன்றும் எனக்கு தைரியமூட்டி வழியனுப்பும் ஆமினா ரீச்சரை பிரிய மனமின்றி பிரிகிறேன். வெறுமையான மனதுடன் பாடசாலை வளவுக்குள் நுழைந்த நான் பல வேதனைகளோடு விலகிச் செல்கிறேன். என்னதான் ஆமினா ரீச்சரிடம் வீறாப்பு பேசினாலும் உள்ளம் தணலாய் கொதித்தது. அப்துள்ளா சேருக்கு யாரோ ஒருத்தர் சொன்ன ஒரு சொல் எனக்கே இவ்வளவு கஷ்டமாக இருக்கும் பொழுது அது அப்துள்ளா சேரின் இதயத்தை துளைத்திருக்குமே. அவர் ஒரு நாளும் சாபமிட்டிருக்க மாட்டார். ஆனால் அவரின் மனக்கஷ்டமே இந்த பாடசாலைக்கு சாபமாக மாறி இருக்குமே என்றெல்லாம் என் சிந்தனை நொந்தது. அப்போதுதான் ஒரு மூத்த கல்விமான் சொன்னது என் ஞாபகத்தில் வருகிறது. அதாவது ‘ஒரு காலத்தில் எங்கள் சமூகத்தில் நிறைய தரமான பாடசாலைகள் இருந்தன. இன்று அவையெல்லாம் சரிந்து சீரழிந்து விட்டன.  

பல புத்தி ஜீவிகள் இணைந்து பாடுபட்டும் முன்னேற்றமின்றி தவிக்கிறது. முன்னெப்போதும் இல்லாத விதத்தில் கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைத்தும் பயனின்றி தவிக்கின்றோம். இதற்கு எல்லாம் ஒரே காரணம், முன்பு அந்த பாடசாலைகளுக்காக தியாகத்துடன் உழைத்து, சொல்லாலும், செயலாலும் அடிவாங்கியவர்களின் மன உளைச்சல்தான் என்றால் அதில் மிகையில்லை.

அந்த உத்தமர்களின் உள்ளங்க ளைக் காயப்படுத்தியதால்தான் சமூகம் அவர்களின் சாபங்களுக்கு பலியாகி சீரழிகிறது’. இந்த வார்த்தைகளின் அர்த்தம் இன்றுதான் எனக்குப் புரிகிறது. ‘ஒரு முஸ்லிமின் உள்ளத்தை உடைப்பது புனித கஃபாவை இடிப்பதற்கு சமன்’ என்று உலமாக்கள் சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதனால் பல நல்ல உள்ளங்களை உடைத்து சாபங்களை சூடிக்கொண்ட பாடசாலைகளை நினைத்துப் பார்க்கிறேன். என்னையறியாமல் உஷ்ணப் பெருமூச்சொன்று தோன்றி மறைகிறது.

வரக்காமுறையூர் ராசிக்

Comments