3 ஆண்டுகளின் பின்னர் களைகட்டும் கோடி அற்புதரின் பெருவிழா | தினகரன் வாரமஞ்சரி

3 ஆண்டுகளின் பின்னர் களைகட்டும் கோடி அற்புதரின் பெருவிழா

கொச்சிக்கடை அந்தோனியார் திருவிழா என்றாலே, அப்பகுதியெங்கும் களைக்கட்டத் தொடங்கிவிடும். கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை, ஜிந்துப்பிட்டி, விவேகானந்தமேடு,செட்டியார் தெரு என சுற்றுவட்டார பகுதியெங்கும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். எங்கும் கொடிகளுடன் விளக்கொளியில் வீதிகள் ஜொலிக்கும். நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் அலை அலையாய் மக்கள் திரண்டுவருவார்கள். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித அந்தோனியார் கம்பீரமாக வட்டாரமெங்கும் பவனி வருவார். ஆனால் கடந்த மூன்று வருடங்களாக புனித அந்தோனியாரின் ஆடம்பரமற்ற  எளிமையான திருவிழா கொண்டாடங்களையே காணக்கிடைத்தது. ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல், கொவிட் 19தொற்று என திருவிழா கொண்டாடங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் இம்முறை பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் புனித அந்தோனியாருக்கு விழா எடுக்கவுள்ளனர்.  

இலங்கையில் எத்தனையோ இடங்களில் புனித அந்தோனியார் ஆலயங்கள் இருப்பினும், கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், இன, மத வேறுபாடு இன்றி அனைவரும் வந்து வழிப்படும் புனித ஸ்தலமாகவுள்ளது. செவ்வாய்க்கிழமை தோறும் பல்வேறு நன்மைகள் தேடிவந்து சேரும் கூட்டங்களில் பல மதத்தவர்களும் அடங்குவர். ஓடிவரும் அடியாரை புனித அந்தோனியார் எப்போதும் வெறுங்கையோடு அனுப்புவதில்லை என்பது அவரது பக்தர்களின் அசையா நம்பிக்கை. உலகெங்கும் திருமறையோரும் ஏனையோரும் பாதுவா நகர் அந்தோனியாரை அண்டி அவரிடம் மன்றாடி, அவர் வழியாய் இறைவனிடம் எண்ணிலடங்கா ஆன்ம, உடல் நலன்களை பெற்று வருகின்றார்கள். 

 புனித அந்தோனியார், தாம் வாழ்ந்த காலத்திலும் இறப்பிற்குப் பின்னும் கடவுள் அளித்த கொடையினால் அநேக புதுமைகளை செய்தார். இதனால் கோடி அற்புதர் என அவர் அழைக்கப்பட்டார். புனித அந்தோனியார் போரத்துக்கல் நகரான பாதுவாவில் தனது கடைசிக் காலத்தைக் கழித்தார். 1195ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி லிஸ்பன் நகரில் பிறந்தார். எனவே தான் போர்த்துகேயர் கைப்பற்றிய நாடுகளில் புனித அந்தோனியார் வழிபாடு பிரபல்யம் அடைந்தது. அந்தவகையில் போர்த்துக்கேயர் இலங்கையை கைப்பற்றி ஆட்சிசெய்ய தொடங்கியதுடன் இலங்கையிலும் புனித அந்தோனியார் வழிபாடுகளும், ஆலயங்களும் ஏற்படுத்தப்பட்டுவிட்டன. எனினும் ஒல்லாந்தர்களின் வருகையோடு கத்தோலிக்க மதத்தை பரவுவதிலும் வழிபாடுவதிலும் தடைஏற்பட்டது. ஒல்லாந்தர்கள் புரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். எனவே கத்தோலிக்க மதத்துக்கு எதிராக கடுமையான கொள்கைகளை அவர்கள் கையாண்டனர்.  

அவர்களிடமிருந்து தப்பிய பல கத்தோலிக்கர்கள் இரண்டாம் இராஜசிங்கன் (1635_ - 1687)ஆட்சி செய்த கண்டி இராச்சியத்தில் தஞ்சம் புகுந்தனர். மாத்தளை வாகோட்டே என்கிற இடத்தில் புனித அந்தோனியாருக்கு ஒரு சிறிய சிலையை வைத்து வணங்கினார்கள். இன்றும் வாகொட்டேயில் அந்த அந்தோனியார் தேவாலயம் இருக்கிறது. கண்டி மன்னன் இரண்டாம் விமலதர்மசூரியன் பாதிரியார் ஜோசப் வாஸுக்கு (Joseph Vaz) அந்தோனியார் வழிபாட்டுக்கு பூரண சுதந்திரம் வழங்கினார். கண்டியில் அந்தோனியாருக்காக பாதிரியார் ஜோசப் வாஸ் எந்த கெடுபிடியுமின்றி திருவிழா நடத்தினார். அதன் பின்னர் திறைசேரியில் களவு போயிருந்தவேளை மன்னர் ஸ்ரீ வீர நரேந்திர சிங்கனும் புனித அந்தோனியாரை வழிபட்டதாக வரலாற்று பதிவுகளில் சொல்லப்படுகின்றன. இக்காலப்பகுதியில் தான் கொச்சினிலிருந்து அந்தோணி (Friar Antonio) என்ற கத்தோலிக்க மத போதகர் கொழும்புக்கு வந்தார். எனினும் துன்புறுத்தல் காரணமாக அவரால் பாதிரியாராக செயற்பட முடியவில்லை. அதனால், வியாபாரி போல் மாறுவேடமிட்டு, பகலில் (இன்றைய மாலிபன் தெருவில் உள்ள) கடையில் மீன் விற்றார். இரவில் அவர் கத்தோலிக்கர்களை இனம் கண்டு வழிபாடுகளை நடாத்தினார். சிறிதுகாலத்தில் இதை அறிந்த ஒல்லாந்தர்கள் அந்தோனியை தேடினர். மீனவ சமூகத்தினர் அதிகமாக வாழ்ந்த முஹுதுபொடவத்தை என்ற பகுதிக்கு அவர் சென்றபோது கடல் அரிப்பால் தாம் பாதிக்கப்படுவது பற்றி மீனவர்கள் அவரிடம் முறையிட்டனர். கடல் அரிப்பைத் தடுக்க பிரார்த்தனை செய்யுமாறு அவர்கள் அவரிடம் கோரினார்கள். அந்தோணி அவ்வாறு செய்தால் டச்சு வீரர்களிடமிருந்து அவரைப் பாதுகாப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். அந்தோணி மணலில் ஒரு சிலுவையை நட்டு, மண்டியிட்டு மூன்று நாட்களாக உண்ணா நோன்பிருந்து பிரார்த்தனை செய்தார். அவர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது, கடல் பின்வாங்கத் தொடங்கி, அரிப்பைத் தடுக்கும் மணல் அணையை உருவானது. டச்சு வீரர்களும் இதைக் கண்டு பின்வாங்க வேண்டியிருந்தது. அதைக்கண்டு வியப்படைந்த மீனவர்கள் அந்தோனியைச் சுற்றித் திரண்டனர். அவர்கள் கத்தோலிக்கத்தை ஏற்றுக்கொண்டனர். அந்த இடம் தான் இன்றைய கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் அமைந்திருக்கும் இடம்.  

"அந்தோனியின் அதிசயம்" பலராலும் அப்போது பேசப்பட்டது. டச்சு ஆளுநர் வில்லெம் மௌரிட்ஸ் ப்ரூய்னின்க் (Willem Maurits Bruyninck - 1739-_1742) அந்தோணியின் பிரார்த்தனையின் சக்தியை அறிந்தார். அந்த அதிசயம் நிகழ்ந்த நிலத்தை அந்தோணிக்கு வழங்கினார். அங்கே அவர் சிறு தொழிலையும் சமய பணியையும் மேற்கொள்வதற்கு ஆளுநரால் அனுமதி வழங்கப்பட்டது.  

அந்தோணி முதலில் அந்த நிலத்தில் ஒரு சிறு கடையை ஆரம்பித்தார். அது “கடே” என்றே அழைக்கப்பட்டது. கொச்சினில் இருந்து வந்தவரின் கடை என்பதால் “கொச்சியாகே கடே” காலப்போக்கில் “கொச்சிக்கடை” என அழைக்கப்பட்டது. இந்த நிலம் அதிகாரபூர்வமாக டச்சு கிழக்கிந்திய கம்பனியால் ஜனவரி 20, 1790அன்று, தேவாலயத்துக்கு ஒப்படைக்கப்பட்டது. இதில் கிழக்கிந்திய கம்பனியின் உத்தியோகபூர்வ இலட்சினை பொறிக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்தோணி இறந்தபோது அவரின் உடலும் இந்த ஆலயத்தினுள் தான் அடக்கம் செய்யப்பட்டது. இன்று நாம் காணும் புனித அந்தோனியாரின் சிறிய பீடம்தான் கடலரிப்பு அற்புதத்தின் போது மரச்சிலுவை நாட்டப்பட்ட இடம். தற்போது தேவாலயத்தில் மீண்டும் வைக்கப்பட்டுள்ள புனித அந்தோனியின் புனிதச் சிலை 1822ஆம் ஆண்டு கோவாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒன்றாகும். 1806ஆம் ஆண்டு அடித்தளம் இடப்பட்டு 1834ஆம் ஆண்டு புதிய தேவாலயம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அந்த ஆண்டைத்தான் ஆலயத்தின் தொடக்க நாளாக இன்றுவரை கணிக்கப்பட்டுவருகிறது.

1934இல் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. 1938ஆம் ஆண்டு ஆலயம் பெருப்பிக்கப்பட்டது. இன்று இலங்கையில் புனித அந்தோனியார் ஆலயம் மிகப்பெரிய புனித தேவாலயமாக மாறியுள்ளது.  

பாதுவா நகரிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித அந்தோனியாரின் நாக்கின் ஒரு சிறிய பகுதி இங்கே விசேடமாக வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. 1912ஆம் ஆண்டு கவர்னர் சேர் ஹென்றி மெக்கலம் கொழும்பு துறைமுகத்திற்காக இந்த நிலத்தை கையகப்படுத்த முயற்சித்தபோது ரோமன் கத்தோலிக்க மக்களின் வழிபாட்டுத் தலமெனக் கூறி அவரின் ஆலோசகர்கள் பலர் அதனை எதிர்த்தமையால் அவரது முயற்சி கைவிடப்பட்டது. லலித் அத்துலத் முதலி துறைமுக அமைச்சராக இருந்த காலத்தில் துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதியை அந்தோனியார் தேவாலய விஸ்தரிப்புக்கு வழங்கினார். பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் அந்தோனியார் ஆலயத்தை கொழும்பு உயர் மறை மாவட்டப் பங்காக ஆக்கும்படி விடுத்த கோரிக்கை ஆயரால் ஏற்றுகொள்ளப்படாமையால் ஆலய நிர்வாகம் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டியது. முதற் தடவையாக மூன்று மாதங்கள் ஆலயம் மூடப்பட்டது. இறுதியில் 15.08.1990அன்றிலிருந்து சுதந்திர ஆலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அதுவரை கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலய நிர்வாகத்தின் கீழ் தான் புனித அந்தோனியார் ஆலயம் இயங்கிவந்தது.   அந்தோனியார் தேவாலயத்தின் வரலாற்றைக் கூறும் சிறு நூதனசாலையொன்று 2013ஜனவரி 13இலிருந்து இயங்கி வருகிறது.  

இவ்வாறு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பக்தர்களாலும் இராணுவத்தினரின் பங்களிப்புடனும் புதுபொலிவுடன் காட்சி தந்த புனித அந்தோனியார் ஆலயம் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் குண்டுகளால் துளைக்கப்பட்டது.

ஆம் கோடி அற்புதர் புனித அந்தோனியாரையும் சோதித்த தருணமது. உயிர்த்த ஞாயிறு தினத்தில் அல்லேலுயா புகழ் பாடிய மக்களை அன்றைய தினம் ஆலயத்தில் அல்லுற செய்துவிட்டார்கள். பல மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. பலர் உடல் சிதறி கிடந்தார்கள். இன்னும் சிலர் அவயவங்களை இழந்தார்கள். குண்டு வெடிப்பின் அதிர்வுகளால் தேவாலயத்தின் வெளிப்புறம், உட்புறம், சுவர்கள், கூரைப் பகுதிகள் சேதமடைந்தன. இதனையடுத்து ஆலயம் மூடப்பட்டு திருப்பலிகள், ஆராதனைகள் நிறுத்தப்பட்டன. எனினும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை எந்த பயங்கரவாத படுபாதக செயல்களினாலும் அழிக்கமுடியவில்லை. 

பாரிய அழிவு ஒன்றின் சாட்சியமாக வேதனை தரும் வரலாற்றுச் சின்னமாக இந்த இடம் மாற்றம் பெறுகின்றது.   மேலும் ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து ஆலய வளாகம் விஸ்தரிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது.  

அந்த ஆண்டு புனித அந்தோனியாரின் திருவிழா கொண்டாடங்கள் மிக அமைதியான முறையில் எத்தகைய ஆடம்பர நிகழ்வுகளும் இன்றி திருப்பலி மட்டுமே நடைபெற்றது.  

இந்நிலையில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான சூழலுக்கு மத்தியிலும் மக்கள் புனித அந்தோனியாரின் பெருவிழாவை கொண்டாட காத்திருக்கின்றார்கள். 

வசந்தா அருள்ரட்ணம்

Comments