மக்கள் மனங்களில் என்றும் நிறைந்த முக்காலமும் அறிந்த மனிதர் டட்லி | தினகரன் வாரமஞ்சரி

மக்கள் மனங்களில் என்றும் நிறைந்த முக்காலமும் அறிந்த மனிதர் டட்லி

நான்  டட்லி சேனநாயக்கவைமுதன் முதல் 1970ஆம் ஆண்டிலேயே சந்தித்தேன்.டட்லி  சேனநாயக்கவின் "தேசிய அரசு"தோல்வியடைந்த சந்தர்ப்பத்தில் நான்உள்ளிட்ட கொழும்பு ஆனந்தா கல்லூரிமாணவர்கள் சிலரும் அவரை"வுட்லண்ட்ஸ்" தனியார் இல்லத்தில் சந்தித்தோம்.

அவ்வேளையில்  ஆனந்தாவில் கம்யூனிஸ்ட், லங்கா சமசமாஜ கட்சி,ஜே. வி .பி வகுப்புகளுக்கு  செல்லும் மாணவர்கள் இருந்தார்கள். அந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத நாம் "ஜனநாயக மாணவர் அமைப்பு" என்னும் அமைப்பை உருவாக்கி இருந்தோம். எமது  கொள்கைகளுடன் இணைந்த கட்சியாக கருதிய ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புகளை  ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் நாம் டட்லி சேனநாயக்கவை சந்தித்தோம்.  நாம் எமது வேண்டுகோளை அவர் முன் வைத்தோம். எமது கோரிக்கைக்கு அவர் இவ்வாறு  பதிலளித்தார். "நீங்கள் தற்போது பாடசாலைக்கு செல்லும் வயதில் உள்ளவர்கள்.  இப்போதே அரசியலில் ஈடுபட வேண்டாம். நன்றாக படியுங்கள். பல்கலைக்கழகம்  சென்று வந்த பின்னர் அரசியலில் ஈடுபடலாம். நாம் உங்களுக்கு அவ்வேளையில்  நல்ல சந்தர்ப்பத்தை பெற்றுத் தருகின்றோம்."

அந்த  வார்த்தைகளில் இருந்து அவருடைய நம்பகத்தன்மை, நேர்மை தெளிவாக புரியும்.  தனது அரசியல் லாபம் கருதி மாணவர்களை பகடைக்காய்களாக்க அவர் தயாரில்லை.  அவரின் பதிலால் பின்வாங்காத நாம் எமது கருத்தை தீவிரமாக அவர் முன்  வைத்தோம்.

"நீங்கள் இந்த நிலைப்பாட்டில்  இருந்தால் வெகு விரைவில் இந்த நாடு கம்யூனிஸ்ட் நாடாக மாறிவிடும்.  அடிப்படைவாத அரசியல் சக்திகள் பாடசாலைக்குள் நுழைந்து வகுப்புகளை நடத்தி  இளம் மாணவர்களை மூளைச்சலவை செய்து வருகின்றன.

நாம் முன் வைத்த விடயங்களின் தீவிரத்தை அவர் புரிந்துகொண்டார்."சரி எனக்கு இரண்டு வாரங்கள் அவகாசம் தாருங்கள் நான் யோசனை செய்து உங்களை மீண்டும் சந்திக்கிறேன்" என கூறினார்.

இரண்டு  வாரங்கள் முடிவடைவதற்கு முன்னரே எமக்கு அவரிடமிருந்து அழைப்பு கிடைத்தது.  இம்முறை அவரை சந்திக்க வேறு சிலரையும் அவர் அழைத்திருந்தார். ஆரம்ப  சந்திப்பில் அவர்களுடனிருந்த கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைமை செயலாளர்  ஜினதாச நியதபாலவுடன் பேராசிரியர் திலக் ரத்னகார, ஜே .ஆர் .பி சூரிய பெரும  மற்றும் இளம் பல்கலைக்கழக விரிவுரையாளரான கருணாசேன கொடித்துவக்கு ஆகியோரும்  அவருடன் இருந்தார்கள். "நீங்கள் கூறிய விடயம் குறித்து நாம்  சிந்தித்தோம். நாம் கட்சியாக மாணவர் அமைப்பு ஒன்றை ஆரம்பிக்க மாட்டோம்.  ஆனால் நீங்கள் ஆரம்பித்துள்ள ஜனநாயக மாணவர் அமைப்புக்கு உதவி செய்ய முடிவு  செய்துள்ளோம். அதன்படி கட்சி சார்பில் இந்த நான்குபேரையும் உங்களுக்கு  தேவையான வழிகாட்டுதல்களையும் உதவிகளையும் அளிப்பதற்காக நியமித்துள்ளோம்."

அன்று  டட்லி சேனநாயக்கவுடன் ஏற்படுத்திக்கொண்ட தொடர்பு நீண்ட அரசியல் பயணமாக  ஆரம்பமாகியது. இன்றும் எனது அரசியல் வாழ்க்கையில் எடுத்துக்காட்டான  பாத்திரமாக எனது தந்தையும் டட்லி சேனநாயக்கவுமே உள்ளார்கள். அவரது எளிமை,  எளிமையான வாழ்க்கை, தேசத்தின் மீது, நாட்டு மக்கள் மீது கொண்ட அன்பு,  நேர்மை மற்றும் கருணை ஆகியவற்றில் நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கை  கொண்டிருந்தனர்.

இளம் அரசியல்வாதியாக  இலங்கைக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட டட்லி  சேனநாயக்கவும் அவரது நண்பரான ஜே.ஆர் .ஜயவர்தனவும்  இரண்டாம் உலகப் போரின் போது  பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிராக ஜப்பானுக்கு உதவி செய்ய வேண்டும்  என்ற நிலைப்பாட்டை முன்னெடுத்தார்கள்.

சுதந்திர  இலங்கையில் முதலாவது விவசாய மற்றும் காணி அமைச்சராக நியமிக்கப்பட்ட டட்லி  சேனாநாயக்கவுக்கு முதல் சவால் இலங்கைக்கு முதலாவது பல்நோக்கு திட்டமான  கல்லோயா பல்நோக்கு திட்டத்தை ஆரம்பித்து வைப்பதாகும். கல்லோயா திட்டத்தின்  கீழ் இலங்கையில் அதுவரை அமைக்கப்படாத பாரிய நீர்த்தேக்கமான ஏக்கர் அடி  770,000நீர் கொள்ளளவு கொண்ட இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரம்  அமைக்கப்பட்டு 120,000ஏக்கர் வயல் காணிகளில் பெரும் போகத்தை தொடர்ந்து  செய்யக்கூடிய நீர்ப்பாசன வசதி அதன் மூலம் கிடைத்தது.

பிரதேசத்துக்கு  தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காகவும் நீர் மின்சார உற்பத்தி  நிலையம் ஒன்றும் அதன் கீழ் அமைக்கப்பட்ட தோடு சீனி தொழிற்சாலை உள்ளிட்ட  கைத்தொழில் அபிவிருத்திக்கும் அடித்தளம் இடப்பட்டதோடு அத்திட்டத்தின் மூலமே  அம்பாறை மாவட்டம் அதிகளவு நெல் உற்பத்தி செய்யும் மாவட்டமாக மாறியது.

கல்லோயா  திட்டத்தை தவிர 1948ஆம் ஆண்டு முதல் வரவு செலவுத் திட்டத்தில்  முன்வைக்கப்பட்ட 6வருட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உடவளவை பல்நோக்கு  திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இரண்டாவதாக 1947தொடக்கம்1952  காலப்பகுதியில் விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள் மகா இழுப்பல்லம,அம்பாறை  ,போம்புவல,கந்தளாய் போன்ற இடங்களில் அமைக்கப்பட்ட தோடு பதலேகொட மத்திய  அரிசி ஆய்வு நிறுவனமும் ஆரம்பிக்கப்பட்டது. இன்று இந்த நிறுவனங்கள் மூலமே  உயர்ந்த தரமான விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது.

1956  இனவாத கலவரத்தின் பின்னர் தேசிய ஐக்கியத்தை மீளக் கட்டியெழுப்ப தேசிய  அரசை உருவாக்கினார். இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பெடரல் கட்சியையும்,  தமிழ் சங்கத்தையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற தமிழ் மக்களை  பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து தமிழ் கட்சிகளும் அதில் அடங்கியிருந்தன.  இலங்கையில் மார்க்சியத்தின் தந்தை என அழைக்கப்படும் பிலிப் குணவர்தனவும்,  ஜே.ஆர். ஜெயவர்தனவும் இலங்கையில் மாத்திரமன்றி தெற்காசியாவிலும் திறந்த  பொருளாதார சீர்திருத்தங்களை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார்கள். இன்றைய  சிங்கள அடிப்படைவாத அரசியலின் அடையாளமாக கருதப்பட்ட கே. எம் .பி ராஜரத்ன  மற்றும் குசுமா ராஜரத்ன ஆகியோரையும் தன்னுடைய ஆட்சியில் டட்லி சேனநாயக்க  இணைத்துக்கொண்டார். அனைத்து அடிப்படைவாத கருத்துக்களைக் கொண்ட அவர்களின்  ஒத்துழைப்பையும் பெற்றுக் கொண்டு ஐந்து வருடங்கள் தனது ஆட்சியை நடத்தி  சென்றது எதனைக் காட்டுகின்றது என்றால் டட்லி சேனநாயக்காவின்  முதிர்ச்சியையும் நடுநிலையான அனுபவமிக்க நம்பிக்கையான குணத்தையும்  காட்டுகின்றது.

டட்லி சேனநாயக்கவின் பொருளாதாரக்  கொள்கைகள் சந்தைப் போட்டியை எதிர்கொள்ள முடியாத விவசாயிகள் உட்பட, சிறு  வியாபாரிகள், பணம் இல்லாத வறிய மக்களை அரச உதவியுடன் பாதுகாக்கும் வகையில்  நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை டட்லி சேனநாயக்காவின் பொருளாதார  கொள்கையில் தெளிவாக காணக்கூடியதாக இருந்தது. அவரின் பொருளாதாரக் கொள்கைகள்  மூலம் தெளிவாக தெரிவது என்னவென்றால் லிபரல் ஜனநாயகவாதியாக அல்லாமல் சமூக  ஜனநாயகவாதியாவே அவர் அறியப்பட்டார். திறந்த பொருளாதார சக்திகளுக்கு  சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும் அந்த போட்டித்தன்மை மூலம்  பின்னடைவை சந்திக்கும் பிரிவினரை பாதுகாப்பதற்காகவும் பாதுகாப்பு  விதிமுறைகளை அறிமுகம் செய்து மக்களை நேசித்த அரசியல்வாதியாவார்.

டட்லி  சேனநாயக்க தொடர்பாக இன்னும் ஒரு கதை ஞாபகத்தில் உள்ளது. இதனை கூறியவர்  இன்றும் எம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பவரான கலாநிதி கருணாசேன  கொடித்துவக்கு ஆவார்.

ஒரு முறை கருணாசேன  கொடிதுவக்கு கைத்தொழில் அமைச்சராக இருந்த வேளையில் சுகவீனமுற்றிருந்த  பிலிப் குணவர்தனவை பார்க்கச் சென்றார். அவ் வேளையில் பிலிப் குணவர்த்தன  டட்லி சேனநாயக்கவுடன் இருந்த நட்பை ஞாபகப்படுத்தி இருந்தார்.

"கரு  டட்லி என்பவர் உன்னதமான மனிதர் அதேபோன்று சிரேஷ்ட மக்கள் தலைவர் அவருடன்  நான் மிகக் குறுகிய காலமே பணியாற்றி இருந்தேன்.

இன்று அவருடன் வேலை  செய்யாத நாட்கள் எனது வாழ்க்கையில் வீணான காலம் என்று எண்ணுகின்றேன்.  அவருடன் இன்னும் அதிக காலம் பணியாற்றியிருந்தால் இதைவிட அதிகமாக பெரும்  சேவையை செய்திருக்கலாம்". இடதுசாரி அரசியலின்  இலங்கையில் பெரும் தூணாக விளங்கிய பிலிப் குணவர்த்தன டட்லி சேனாநாயக்க  தொடர்பாக அவ்வாறான நற்சான்றினை வழங்கினார்.

இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்
தமிழில்: வீ.ஆர்.வயலட்

Comments