யதார்த்தத்தை உணர்ந்து நெருக்கடியை எதிர்கொள்வோம் | தினகரன் வாரமஞ்சரி

யதார்த்தத்தை உணர்ந்து நெருக்கடியை எதிர்கொள்வோம்

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் கண்டி இராச்சியத்தை 1815ம் ஆண்டு ஆங்கிலேய அரசு கைப்பற்றி முழு இலங்கையையும் பிரிட்டிஷ் முடிக்குரிய கொலினியாக இலங்கையை மாற்றிய பின்னர் இந்நாடு இவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடிக்கு ஒரு போதும் ஆளானதில்லை. பிரெஞ்சு பேரரசுடன் போர், உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி, கோப்பிச் செய்கை சடுதியாக வீழ்ச்சியடைந்தமை, முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப்போர் எனப் பல பொருளாதார நெருக்கடிகளை பிரிட்டிஷ் கொலனி ஆட்சி சந்தித்த போதும் இலங்கை மக்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்படாமல் ஆங்கிலேய அரசு பார்த்துக் கொண்டது.
 
ஆனால் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் எழுபது ஆண்டுகளாக சுதேசிகள் இந்நாட்டை ஆண்டதன் பலன்களை நாம் இன்று வீதிகளில் காண்கிறோம். மக்கள் கொதித்துப்போய் நிர்வாகத்தை, தலைவர்களை, அரசியல்வாதிகளைத் திட்டித் தீர்க்கிறார்கள். மக்களின் ஆத்திரத்தை காலிமுகத்திடலில் நாம் பார்க்கிறோம். நாட்டின் பிரதமரே அடுத்துவரும் வாரங்கள் கடினமாக இருக்கும் என்றும் இலட்சக்கணக்கான குடிமக்கள் கடுமையாக பாதிக்கப்படவுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார். அரசு ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றும்படி கூறியுள்ள அரசு இரண்டு வாரங்களுக்கு பாடசாலைகளையும் மூடியுள்ளது. மொத்ததில் இலங்கை குடிமக்கள் ஒட்டுமொத்தமாக வீதிக்கு வந்து விட்டார்கள்.
இன்று இதுதான் களயதார்த்தம். எனவே திட்டித் தீர்ப்பதா அல்லது யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு சவால்களுக்கு முகம் கொடுப்பதா என்பதை மக்கள் தீர்மானித்தாக வேண்டும். பெரும்பாலானோர் இன்னும் கள யதார்த்தத்தை சரியாகப் புரிந்து கொண்ட மாதிரித் தெரியவில்லை. தமிழ் பேசும் சமூகம் இன்னும் திரைப்படம், தொலைக்காட்சி என்றும் இன்றைய வாழ்க்கையை இப்படியே தொடரலாம் என்றும் ஒரு கொண்டாட்ட மனநிலையில் நீடித்திருப்பதாகத் தெரிகிறது. பெரும்பான்மை இனத்தின் தவறுகளால் விளைந்த விளைவுகளை அனுபவிக்கிறார்கள் என்று வேடிக்கை பார்க்கும் நிலையையும் சில தருணங்களில் அவதானிக்க முடிகிறது. 
 
ஆனால் கள யதார்த்தம் இதுவல்ல. ஒரு பேரலை எப்படி ஒரு இடத்தை ஒட்டுமொத்தமாக மூழ்கடிக்குமோ அவ்வாறே இந் நெருக்கடி நிலை அனைத்து மக்களையும் தாக்கப்போகிறது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இது அரசியல் வாதிகளை தாக்கிப் பேசும் நேரம் அல்ல. இவற்றுக்கு நதி மூலம் ரிஷி மூலம் தேடுவதற்கான நேரமும் அல்ல. உண்மையைச் சொன்னால் இன்றைய நெருக்கடி நிலையை கையாள்வோருக்கு நாம் உதவுபவர்களாக இருப்பதே சரியான வழிமுறை. கொழும்பு மாநகரசபை மேயர் ரோசி சேனநாயக்க, கொழும்பில் கஞ்சித் தொட்டிகளைத் திறக்கவிருப்பதாகச் சொன்னபோது பலர் அதை புன்சிரிப்புடனே பார்த்தார்கள். அதன் உள் அர்த்தத்தை, சமையல் செய்ய முடியாத, வருமானம் தேட முடியாத சத்தான உணவுகளை  உண்ண முடியாத ஒரு அபாயகரமான நிலையை பூரணமாக புரிந்து கொள்ள வேண்டும். தினசரி செய்திகளை வாசிப்போரும் கேட்போரும் அச் செய்திகள் சொல்லும் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வது அவசியம்.
 
இந் நெருக்கடி நிலை தினம் தினம் உக்கிரம் பெற்று வருகிறது. முழு நாடும் முழுமையான ஒரு முடக்க நிலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பொருட்களை பெறுவதற்கான வரிசைகளில் பல மணித்தியாலங்களாக நிற்பவர்களில் இதுவரை 13பேர் மரணித்துள்ளனர். இந்த நிலை நம்மில் பலர் நினைப்பது போல அமெரிக்காவும், இந்தியாவும் ஜப்பானும் இலங்கைக்கு உதவ வந்ததும் மாறிவிடப் போவதில்லை.
 
எனவே, இது உள்ளவர்கள் இல்லாதோருடன் இருப்பதைப் பகிர வேண்டிய காலம். சிலர் பட்டினி கிடக்கும் போது அதைப் பார்த்தபடி நாம் நிறை உணவை உண்டு ஏப்பம் விடுவது தீய காரியம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். நெல்லும், அரிசியும், நிறைய பணமும் வைத்திருப்போர் அவற்றைப் பகிரவேண்டும். பகிரச் சொல்ல வேண்டும். பகிர்வை பகிரங்கப்படுத்தி ஏனையோரை ஊக்குவிக்க வேண்டும். பகிர்ந்து கொள்ளுங்கள் என்று போதனை செய்யாத மதமே கிடையாது. இது தான் இருப்பதை பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற போதனையை செயற்படுத்துவதற்கான காலம். எனவே பகிர்ந்து கொள்வோம். பகிர்வின் மூலம் நாம் இந்த நெருக்கடியை கடந்து செல்ல முடியும்.

Comments