மார்க்சிய மனித நேய இலக்கிய ஆளுமை செ. கணேசலிங்கன் | தினகரன் வாரமஞ்சரி

மார்க்சிய மனித நேய இலக்கிய ஆளுமை செ. கணேசலிங்கன்

இலங்கைத் தமிழ் நாவல் 1885இல் சித்திலெப்பையின் அஸன்பேயுடைய சரித்திரம் முதலாக வளர்ச்சி பெற்றுவந்துள்ளது என்பது பொதுவான வரலாறு. ஆயினும் இலங்கையில் தமிழ்ச் சமூக நாவலின் வரலாறு எழுத்தாளர் செ. கணேசலிங்கனின் நீண்ட பயணம் (1965) என்ற நாவலுடனேயே முறையாக ஆரம்பிக்கிறது. நாவல் துறையில்  தொடர்ந்து சடங்கு (1966), செவ்வானம் (1967) தரையும் தாரகையும் (1968) போர்க்கோலம் (1969)வரை தரமான நாவல்களை அவர் தந்துள்ளார்' என குறிப்பிட்டுள்ளார் கலாநிதி துரை மனோகரன் (ஞானம் இதழ் 42. பக்கம் -13)

செ.கணேசலிங்கன், 1950ஆம் ஆண்டு 'மன்னிப்பு' எனும் சிறுகதையை  எழுதியதன் மூலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர். இவரது படைப்புகளாக 63  நாவல்களும் 9சிறுகதைத் தொகுதிகளும் 11சிறுவர் நாவல்களும் 20கட்டுரை  நூல்களும் வெளிவந்துள்ளன. 

மாணவப்பருவத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கார்த்திகேயனின் தொடர்பு, டொமினிக் ஜீவா ஊடாக கணேசலிங்கனுக்கு ஏற்பட்டது. அத்தொடர்பு செ.கணேசலிங்கனை மார்க்சிஸ்ட் சிந்தனையுடையவராக்கியது. மார்க்சிய பொருள்முதல்வாத சிந்தனையால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். மார்க்சிய தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு கற்றறிந்தார். மார்க்ஸியக் கருத்தியலின் பின்னணியில் அவரது இலக்கியப்படைப்புகள் அமைந்தன. 

சுதந்திரன், தினகரன், புதுமை இலக்கியம், சாந்தி, சரஸ்வதி, தாமரை முதலான இதழ்களில் சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது, 'சாயம்' என்ற சிறுகதை இலங்கை சிறுகதை தொகுப்பில் இடம்பெற்று, அத்தொகுப்பு ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்டது. இவருடைய சிறுகதைகள் சில ஆங்கில, ரஷ்ய, மலையாள மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

இவரது நீண்ட பயணம் என்ற நாவல் 1966இல் வெளிவந்தது. வர்க்க  முரண்பாடுகள் கூர்மையடையத் தொடங்கிய ஒரு காலகட்டத்தில்,  நிலப்பிரபுத்துவத்தின் சுரண்டல்களுக்கு உட்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்ட  அடிநிலை மக்களின் அவலமான நிலையைச் சித்தரித்து, அந்த மக்களை எழுச்சியுறச்  செய்யும் விதமாக ' நீண்ட பயணம் ' நாவல் விளங்கியது. இந்த நாவலுக்கு இலங்கை  அரசு 1966ஆம் ஆண்டுக்குரிய சாகித்திய மண்டலப் பரிசு வழங்கியது. இந்த  நாவலுக்குப் பின் சடங்கு என்ற நாவலையும் செவ்வானம் என்ற நாவலையும்  எழுதினார். செவ்வானம் நாவல் பேராசிரியர் கைலாசபதியின் முன்னுரையுடன் வெளிவந்தது. இந்த மூன்று நாவல்களும் முப்பரிமாண நாவல்கள் என கைலாசபதி  குறிப்பிட்டுள்ளார். 

தேசிய இனப்பிரச்சினைய மையமாக வைத்து, இளமையின் கீதம்,  பொய்மையின் நிழலில், விலங்கில்லா அடிமைகள், ஒரு மண்ணின் கதை, வதையின் கதை,  அந்நிய மனிதர்கள், வன்முறை வடுக்கள், அயலவர்கள், ஈனத்தொழில், இலட்சியக்  கனவுகள் முதலிய நாவல்களை எழுதியுள்ளார். 

இவரது பல நாவல்களில், பெண்விடுதலை மற்றும் பெண்ணியச்  சிந்தனைகள் மிக ஆழமாகவும் தெளிவாகவும் விவாதிக்கப்பட்டுள்ளன. ஒரு பெண்ணின்  கதை, ஒரு குடும்பத்தின் கதை, இரண்டாவது சாதி, நீ ஒரு பெண், கவர்ச்சிக்  கலையின் மறுபக்கம், குடும்பச் சிறையில், நான்கு சுவர்களுக்குள், புதிய  சந்தையில், நரகமும் சொர்க்கமும் ஆகிய நாவல்களில் பெண்கள் எதிர்கொள்ளும்  பன்முகப்பட்ட அழுத்தங்கள், பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்துள்ளார். 

செ.கணேசலிங்கன் எழுதிய 'தேன் பறிப்போர்' என்ற நாவல் Bitter Honey  என்ற மகுடத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு  வெளியிடப்பட்டுள்ளது.  

இவர், இலங்கையில் யாழ்ப்பாணம் அருகில் உள்ள உரும்பிராய் என்னும் கிராமத்தில் 09.03.1928அன்று, க. செல்லையா - இராசம்மா  தம்பதியரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.  

கணேசலிங்கன் தமது ஆரம்பக் கல்வியை உரும்பிராய் கிராமத்தில்  உள்ள தமிழ்ப் பாடசாலையில் ஆறாவது வகுப்புவரை பயின்றார். பின்னர்,  1940களில் யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியில் சேர்ந்து எச்.எஸ்.சி.  பயின்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார். இவர் கல்வியில் மிகத் திறமைபெற்ற  மாணவராக விளங்கியதால் சிறப்பு வகுப்பேற்றம் (Double Promotion) செய்யப்பட்டார். மேலும், இவர் லண்டன் மெட்ரிகுலேசன் தேர்விலும்  தேர்ச்சியடைந்தார். நாள்தோறும் காலையில் விவசாய வேலைகளைச் செய்த பின்னர்,  கல்லூரிக்கு நடந்தே சென்று படித்தார்.  

அக்காலகட்டத்தில் தனது கிராமத்தில் 'மகாத்மா காங்கிரஸ்'  என்னும் சங்கத்தை அமைத்து அதன் செயலாளராகப் பணியாற்றினார். அச்சங்கத்தின்  மூலம் தீண்டாமை ஒழிப்புக்காகவும், கோவில்களில் அனைத்துச் சாதி மக்களும்  வழிபட உரிமை வேண்டும் என்பதற்காகவும் கோவில்களில் பலியிடுவதற்கு எதிராகவும்  பரப்புரையில் ஈடுபட்டார்.  

 1950ஆம் ஆண்டு இலங்கை அரசின் பாதுகாப்புத்துறையில்  எழுத்தாளராக பணியில் சேர்ந்த கணேசலிங்கன், திருகோணமலை மற்றும் கொழும்பு  ஆகிய நகரங்களில் 1981ஆம் ஆண்டுவரை பணியாற்றினார். 

கொழும்பில் 1956ஆம் ஆண்டு உலக சமாதான மாநாடு நடைபெற்றது. அம்  மாநாட்டிற்கு உலகப் புகழ்பெற்ற சிலி நாட்டுக் கவிஞர் பாப்லே நெருடா வருகை  புரிந்தார். அவரை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பில் பிரதான  வீதியில் உள்ள மண்டபத்தில் சொற்பொழிவு ஆற்றிட ஏற்பாடு செய்தது.  அக்கூட்டத்திற்கு செ.கணேசலிங்கன் தலைமை தாங்கினார் என்பது வரலாற்று  முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். 

இவரது கட்டுரைத் தொகுதிகள் மார்க்சியப் பார்வையினை  அடிப்படையாகக் கொண்டவை. இவை, கலை, இலக்கியம், பெண் விடுதலை, பெண்ணியச்  சிந்தனை, பழந்தமிழ் இலக்கியம், சமயம், உளவியல், பயண அனுபவங்கள் எனப்  பல்வேறு பிரச்சனைகளை மார்க்சியப் பார்வையில் ஆராய்கின்றன.  

நவீனத்துவமும் தமிழகமும், பகவத் கீதையும் திருக்குறளும்,  கனவுகளின் விளக்கம், குறள் கூறும் பாலியல் கோட்பாடு, மாக்கியவல்லியும்  வள்ளுவரும், பெண்ணியப் பார்வையில் திருக்குறள், சித்தர் சித்தாந்தமும்  சூபிசமும், அர்த்த சாஸ்திரமும் திருக்குறளும் - முதலிய ஆய்வு நூல்களையும்  தமிழுலகிற்கு படைத்தளித்துள்ளார். 

உலக அதிசயங்கள், உலகச் சமயங்கள், உலகை மேம்படுத்திய  சிந்தனையாளர்கள், உலக மகாகாவியங்கள் கூறும் கதைகள், புதிய ஈசாப் கதைகள்,  சிறுவர்க்கான சிந்தனைக் கதைகள் முதலிய நூல்களை சிறுவர்களுக்காகப்  படைத்துள்ளார். ஈழத்துச் சிறுவர் இலக்கிய வளர்ச்சியில் செ. கணேசலிங்கனுக்கு  முக்கிய இடமுண்டு என்பது இலக்கிய ஆய்வாளர்களின் கருத்தாகும். 

'திரும்பிப் பார்க்கிறேன்' என்ற சுயசரிதை நூலையும், சில பயணக்  குறிப்புகள்–அமெரிக்கா, இங்கிலாந்து என்ற பயண நூலையும் எழுதியுள்ளார். 

பொதுவுடைமைச் சித்தாந்தத்தை தெளிவாகவும், எளிமையாகவும்  விளக்கும் விதத்தில், சாதாரணமானவர்களும் படித்து புரிந்து கொள்ளும் வகையில்  குமரனுக்கு கடிதங்கள், குந்தவிக்கு கடிதங்கள், எனும் தொகுதிகளை எழுதி  வெளியிட்டுள்ளார். 

ஈழத்து இதழியல் வளர்ச்சியில் செ.கணேசலிங்கனுக்கு முக்கிய  இடமுண்டு. இவரது 'குமரன்' இதழ் 1979ஆம் ஆண்டு முதல் வெளிவந்தது. 'குமரன் '  இதழ், அரசியல், சமூக, பொருளாதார, கலாசார, பன்னாட்டு இதழாக வெளிவந்தது. கலை  இலக்கிய குறிப்புகள், கேள்வி பதில்கள், கவிதைகள், துணுக்குகள்,  கட்டுரைகள், சிறுகதைகள், இலக்கிய உலகில் – எனப் பல பகுதிகள் இதழில்  இடம்பெற்றிருந்தன. மேலும், உலகப் புகழ்பெற்ற பிறமொழிக் கதைகள், மார்க்சிய  கட்டுரைகள், மார்க்சிய நோக்கிலான இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், கலை  இலக்கியம் குறித்த கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இச் சஞ்சிகையின் 77  இதழ்களும் பின்னர் தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது. 

இவர், குமரன் பதிப்பகம் மூலம் நூற்றுக்கணக்கான நூல்களை தமிழ்நாட்டிலும், கொழும்பிலும் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். 

இவரது நாவல்கள் தமிழகத்திலும், இலங்கையிலும் இருபதுக்கும்  மேற்பட்ட மாணவர்கள் எம்.பில் ஆய்வு, முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு  பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளனர். 

 இவரது 'மரணத்தின் நிழலில்' என்னும் நாவலுக்கு 1994ஆம்  ஆண்டு தமிழ்நாடு அரசு பரிசு வழங்கிச் சிறப்பித்தது. மலேசிய பல்கலைக்  கழகத்தில் பட்டப்படிப்பிற்கு ஒரு பாடநூலாக 'சடங்கு' நாவல்  வைக்கப்பட்டுள்ளது. 'அயலவர்கள்' நாவல் சென்னைப் பல்கலைக் கழக முதுகலைப்  பட்டப்படிப்பிற்கு பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.  

செ.கணேசலிங்கன் 1960ஆம் ஆண்டு மீனாம்பாள் என்பவரைத் தமது  வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். இவர்களுக்கு குந்தவி, குமரன், மான்விழி என  மூன்று பிள்ளைகள். 

கணேசலிங்கன் 1980களின் பிற்பகுதியிலிருந்து தமிழகத்தில் சென்னை நகரில் வசித்து வந்தார். இவர் தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த பின்னர் The Hindu என்ற ஆங்கில நாளிதழில் புத்தக மதிப்புரைகள் எழுதியுள்ளார். 

ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவை அறக்கட்டளையின் 45ஆம் ஆண்டு  விழாவில் (15.3.2008), இவருக்கு எஸ்கேஎம் இலக்கிய விருது அளித்துக்  கௌரவிக்கப்பட்டது.  

Comments