பெற்ற மனம் கல்லு பிள்ளை மனம் பித்து; தனது மகனையே ஆற்றில் வீசி எறிந்த கொடூரத் தாய்! | தினகரன் வாரமஞ்சரி

பெற்ற மனம் கல்லு பிள்ளை மனம் பித்து; தனது மகனையே ஆற்றில் வீசி எறிந்த கொடூரத் தாய்!

வத்தளை பொலிஸ் பிரிவானது அதிக மக்கள் சனத்தொகையைக் கொண்ட பிரதேசமாகும். கடந்த செவ்வாய்க்கிழமை பொசோன் பௌர்ணமி தினத்தில் வத்தளை எலகந்த சந்தியில் தனியார் வங்கிக்கு முன்னால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்துள்ள இனந் தெரியாத துப்பாக்கிதாரிகள் இருவரால் 23வயது இளைஞனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.

போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு இடையில் இடம்பெறும் மோதல்களால் இந்தக் கொலை வத்தளை பிரதேசத்தில் இடம்பெற்று  இரண்டு தினங்கள் கடந்த நிலையில் வத்தளை பொலிஸ் பிரிவில்  மற்றொரு சோகச் சம்பவம் கடந்த வியாழனன்று இடம்பெற்றது.

சமூகம் எந்தளவுக்கு கொடூரமாகியிருக்கின்றது என்பதை  இந்த சோகமான செய்தி பிரதிபலிக்கின்றது.  42வயது நிரம்பிய தாய்  தனது வயிற்றில் பிறந்த ஐந்து வயது நிரம்பிய  சின்னஞ் சிறு மகனை களனி கங்கையில் வீசி எறிந்த துயரச் செய்திதான் அது. அந்தப் பெண் 15ம் திகதி இரவு  வத்தளை ஹெந்தளை பிரதேசத்தையும், கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தையும் இணைக்கும் கதிரானை பாலத்திற்கு அருகில் தனது சிறிய மகனுடன் வந்தார். அப்போது நேரம் இரவு 7.20. அவளது மகனுக்கு வயது ஐந்து.  ஊன்று கோலுடன் காணப்பட்ட  அந்தப் பெண் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு திடீரென  மனிதாபிமானமற்றவளைப் போன்று தனது பிள்ளையைத் தூக்கி களனி ஆற்றினுள் வீசியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அப்பெண்ணும் களனி கங்கையினுள் பாய்வதற்கு முயற்சித்த போதும் அது சாத்தியமற்றுப் போனது. அவ்வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பிரதேசவாசிகளின் முயற்சியால் அந்தப் பெண்ணின் தற்கொலை முயற்சி தோல்வியடைந்தது. தனது பிள்ளையையும் ஆற்றில் வீசிவிட்டு, தானும் ஆற்றில் பாய்வதற்கு முயன்ற அப்பெண்ணைப் பிடித்துக் கொண்ட பிரதேசவாசிகள், அப்பெண்ணை  ஹெந்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்படை மற்றும் பொலிஸ்   சோதனைச்  சாவடியில் ஒப்படைத்துள்ளதோடு, அப்பெண் மேற்கொண்ட குற்றச் செயல் பற்றியும் பிரதேசவாசிகள் பாதுகாப்புத் தரப்பினரிடம் விபரித்துள்ளனர்.  சோதனைச் சாவடியில் ஒப்படைக்கப்பட்ட பெண், தனது மகனை ஆற்றில் தான் வீசியெறிந்ததை ஏற்றுக் கொண்டுள்ளார்.  இதற்கிடையில் ஒரு பெண் தனது குழந்தையை ஆற்றில் விசி எறிந்து விட்டாள் என்ற செய்தி கேட்டு ஆத்திரமடைந்த மட்டக்குளி பிரதேச மக்கள் அங்கு வந்து பொலிஸ் சோதனைச் சாவடியினுள் வைத்தே அப்பெண்ணைத் தாக்குவதற்கு முயன்றுள்ளனர்.

ஆனால்   அதனைத் தடுத்துக் கொண்ட பொலிஸார் அப்பெண்ணை வத்தளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். அதேநேரம் சிறிய மீன்பிடிப்  படகுகளைப் பயன்படுத்தி களனி ஆற்றினுள் வீசப்பட்ட சிறுவனைத் தேடும் பணியில் பொலிஸ் உயிர்காப்பு குழு, கடற்படை நீச்சல் குழுவுடன் இணைந்து பிரதேச மக்களும் ஈடுபட்டனர். எனினும் கடந்த வெள்ளிக்கிழமை வரையிலும் சிறுவனின் சடலத்தைக் கண்டு பிடிக்க முடியாமல் போயுள்ளது.  களனி கங்கையின் இரு மருங்கிலும் விரிவான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறுவனைத் தேடும் பணிகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் குற்றச் செயலை மேற்கொண்டவர் திம்பிரிகஸ்யாய பிரதேசத்தைச் சேர்ந்த 42வயதுடைய பிரவிநாதன் ஞானகலா என்ற  பெண்ணாகும். களனி ஆற்றில் நீருடன் கலந்து மறைந்து போனவர் ஐந்து வயதுடைய தஸ்மிக பிரபாஸ்வரனாகும். ஞானகலா  இரண்டு தடவை திருமணம் முடித்தவர். அவரது முதல் கணவர் அவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டவரும் கடந்த வருடம் வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். இப்பெண்ணின் இரு பிள்ளைகளுள் மூத்த மகன்  அவளது முதலாவது திருமணத்தின் மூலம் பிறந்தவராகும்.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஞானகலா, வத்தளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு  வத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சிலோகமகே தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இவ்வாறு தெரிவித்தார்.

“சேர்..... எனது கணவர் சில காலங்களுக்கு முன்னர் மரணித்து விட்டார்.... எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்... என்னால் இந்த இரு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்குவதற்கு வழிகள் இல்லை... மூத்த மகன் உறவினர் வீட்டில் இருக்கிறார்... சிறிய மகனுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சரியான சாப்பாடு கிடைக்கவில்லை...உணவு கொடுக்க என்னிடம் வசதியில்லை. இதனால்தான் நான் பிள்ளையை ஆற்றில் வீசிவிட்டு நானும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வதற்கு முயற்சித்தேன்... எனினும் அங்கு வந்த மக்கள் என்னை ஆற்றில் குதிக்க விடாமல் தடுத்து விட்டார்கள்... எனது மகன் போன இடத்திற்கே நானும் போக விரும்புகிறேன்....”

அந்தப் பெண் கூறும் விடயங்கள்  துயர்மிக்கவை. எனினும்    அநியாயமாக  சின்னஞ் சிறு பிள்ளையின் வாழ்க்கையை அழிப்பதற்கு அவருக்கு உரிமை இல்லை. எந்தளவுக்கு தடைகள், பிரச்சினைகள் இருந்தாலும் வாழ்க்கையினை வெற்றி கொள்ள பாடுபட்டு முகங்கொடுக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனதும் பொறுப்பாகும். அவ்வாறில்லாமல் இதயமில்லாதவர்களைப் போன்று வாழ்க்கையை விட்டு தப்பிச் செல்வது முட்டாள்தமான செயலாகும். அப்பாவியான சின்னஞ் சிறுவனில் வாழ்வை அவ்வாறு பறிப்பதற்கு அச்சிறுவன் செய்த குற்றம்தான் என்ன?

இந்தக் குற்றச் செயலைச் செய்த பெண் ஒற்றைத் தலைவலி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அடிக்கடி அதிக கோபத்திற்கு உள்ளாவதாகவும் இந்தக் குற்றச் செயல் இடம்பெற்றதைத் தொடர்ந்து வத்தளை பொலிஸ் நிலையத்திற்கு வந்த அந்தப் பெண்ணின் மூத்த மகனும், சகோதரியும் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

அவள் அனேக சந்தர்ப்பங்களில் மூத்த பிள்ளையை விட இளைய மகன் மீதே அதிக பாசத்தைக் காட்டியுள்ளார். சில நாட்களாக  அவள் வீட்டில் இருக்கும் போது மனவேதனையுடன் இருந்ததாகவும், அன்றிலிருந்து எவருடனும் பேசவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  அத்துடன் கணவரின் மரணத்தின் பின்னர் இப்பெண் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி அவதிப் பட்டுக் கொண்டிருந்ததாகவும் அவளது சகோதரி தெரிவித்துள்ளார். தனது சிறிய வயதில்  தனது தாய் தனக்கு பெனடோல் மாத்திரைகளை  தந்து  கடலில் வீசுவதற்கு முயன்றதாகவும், அதன் பின்னர் தான் மாமியின் வீட்டில் வசிக்கச் சென்றதாகவும் அப்பெண்ணின் மூத்த மகன் மேலும் தெரிவித்தார்.

அமில மலவிசூரிய
தமிழில் - எம். எஸ். முஸப்பிர்
(புத்தளம் விசேட நிருபர்)

Comments