அமைச்சர் டக்ளஸ் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி; ஜூலை 01 முதல் பலாலி விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் | தினகரன் வாரமஞ்சரி

அமைச்சர் டக்ளஸ் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி; ஜூலை 01 முதல் பலாலி விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும்

யாழ்.சென்ற அமைச்சர் நிமாலுக்குஅமைச்சர் டக்ளஸ், அங்கஜன் MP அமோக வரவேற்பு
புலம்பெயர் தமிழர் தமது தாயகத்துக்கு நேரடியாக தரையிறங்கலாம் எனவும் அமைச்சர் தெரிவிப்பு

யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதி தொடக்கம் தனது சேவையை ஆரம்பிக்குமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பலாலியில் அறிவித்ததார்.    பலாலி விமான நிலையத்துக்கு சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விமானங்கள் வருகை தருமென தான் எதிர்பார்ப்பதாகவும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.  

குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் தமது தாயகத்துக்கு நேரடியாக விமானத்திலேயே வருகை தர முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார். பலாலி விமான நிலையம் இனிமேல் பிராந்திய விமான நிலையமல்ல. இது ஒரு சர்வதேச விமான நிலையம். உலகத்தில் எந்தப் பகுதியிலிருந்தும் விமானங்கள் வரலாம்.அவர்கள் விரும்பின் வாடகைக்கமர்த்தப்பட்ட விமானங்களிலும் வரலாம். சவூதி அரேபியா, இந்தியா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகளிலிருந்தும் தங்களது தாயகத்துக்கு புலம்பெயர் தமிழர் வரலாம். இது அவர்கன் பிறந்த மண். அவர்கள் இங்கு வந்து முதலீகளையும் செய்யலாம்.  

என்னிடம் அடிக்கடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அங்கஜன் இராமநாதனும் விமான நிலையத்தின் திறப்பு தொடர்பில் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். நான் இங்கு வந்து நேரடியாக கள நிலவரங்களை ஆராய்ந்த பின்னரே அதனை தீர்மானிக்க முடியும் இன்பதாலேயே இன்று வந்திருக்கிறேன்.  

ஒரு சர்வதேச விமான நிலையத்துக்குண்டான அனைத்து அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் 100வீதம் இல்லாவிட்டாலும் திருப்திகரமாக இருக்கிறது.  

இனவே ஜூலை 01ஆம் திகதி வரை விமானநிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கிறேன் என்றார்.  

யாழ்.பலாலி விமான நிலைய செயற்பாடுகள் 01ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகும் சந்தர்ப்பத்தில் வடக்கில் பல துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுமென்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்..  

எனவே அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஆராயுமாறும் அமைச்சர் நிமால் கேட்டுக் கொண்டார் .  

சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஜீ.ஏ. சந்திரசிறி, யாழ்ப்பாணம் இந்திய துணை உயர்ஸ்தானிகர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  

யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அமைச்சருடன் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்தார்.  

யாழ்ப்பாணம் விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதை பிரதான நோக்கமாக கொண்டு அமைச்சரது விஜயம் அமைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.  

இந்நிலையில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட குழுவினர் பலாலி விமான நிலையத்துக்கான கள விஜயத்தை மேற்கொண்டனர்.  

பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்த பின்னர் காங்கேசன்துறைக்கான கள விஜயத்திலும் கலந்து கொண்டார்.  

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் அண்மையில் அமைச்சரவையில் பெறப்பட்ட அங்கீகாரத்துக்கமைவாக காங்கேசன்துறைக்கும் பாண்டிச்சேரிக்குமான கப்பல் சேவை ஆரம்பிப்பது குறித்தும் அமைச்சர் நிமால் ஆராய்ந்தார்.  

இதனூடாக விரைவில் இந்தியாவுக்கான கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுமென்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

யாழ். விசேட, பருத்தித்துறை விசேட நிருபர்கள்  

Comments