அப்பாவின் பேனா | தினகரன் வாரமஞ்சரி

அப்பாவின் பேனா

மழை சட சடவென பெய்துகொண்டிருந்தது. அகல்யா வீட்டையே இரண்டாக்கி எதையோ தேடிக்கொண்டிருந்தாள். பல மணித்தியாலங்கள் தேடியும் கிடைக்கவில்லை.  

 “காலையில இருந்து எத தேடிக்கிட்டிருக்க? பாரு மழை வேறு பெய்யுது. இதுல வேற நீ வீட்டையே இரண்டாக்கி வச்சிருக்க” அகல்யாவின் அம்மா கேட்டாள். “கொஞ்சம் நேரம் பேசாம இருப்பியா...” அகல்யா கோபத்துடன் எகிறினாள். “என்னானுதானே கேட்கிறேன்.. சொன்னா என்ன கொறஞ்சா போயிருவா”.. “ஐயோ அம்மா... ஆமா கொறஞ்சுதான் போயிடுவேன் இப்போ போதுமா?” “அத்தை அவ எதவேனுமானாலும் தேடிக்கட்டும் நீங்க சும்மா இருங்க” அது அகல்யாவின் கணவர் கிஷோர். அகல்யா அரசு பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றுகிறாள். அவள் வசிக்கும் தோட்டத்திலேயே பாடசாலை அமைந்திருந்தது. கிஷோர் அவரும் அரசாங்க தொழில். வெளியிடம். விடுமுறை நாட்களில் தான் வீடு வருவார். இருவருக்கும் திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை பேறு இல்லை. அகல்யாவுக்கு இது மனவருத்தத்தை தந்தாலும் குடும்ப வாழ்க்கை சந்தோசமாகவே அமைந்தது. அவளுக்கு ஏற்றால் போலவே அவள் கணவா் கிஷோரும். “டீச்சா் டீச்சா்”.. இது கீர்த்திகா, அகல்யா வீட்டிற்கு அயல்வீடு. அவள் கற்பிக்கும் பாடசாலையில் தரம் பத்தில் கற்கின்றாள். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த இவளுக்கு அவர்களுடைய முகம்கூட தெரியாது. அவருடைய தாத்தா பாட்டியின் அரவணைப்பு அவளை பக்குவமாய் படிப்பில் கவனம் செலுத்தவைத்தது. படிப்பில் கெட்டிக்காரி. அகல்யா என்றால் இவளுக்கு ஒரு தனி பிரியமும் கூட இருந்தது. “வா.. கீர்த்தி! உள்்ள வா”.. அகல்யா அழைத்தாள். “என்ன டீச்சர்.. ஒரே டென்சனா இருக்கீங்க போல.. கீர்த்திகா கேட்டாள். “உங்க டீச்சரோட மூளை காணாமல் போயிடிச்சாம் காலையில இருந்து அத தான் தேடிகிட்டு இருக்காங்க..” கிஷோர் சிரித்துக்கொண்டே சொல்லவே, “உண்மையா டீச்சர்?” கீர்த்தி விளையாட்டுத்தனமாய் கேட்டாள், “உனக்கு இப்ப தெரிந்தே ஆகணுமா?.. ம்.. சொல்லு.. கொஞ்சம் கோபத்தோடு அகல்யா. “என்னானு சொல்லுங்க... டீச்சர் நானும் தேடிப் பார்க்கிறேனே”.. கீர்த்திகா உதவிக்கு வந்தாள். நீங்க வேற கீர்த்திகா.. அத தான் நானும் அவங்க அம்மாவும் காலையில இருந்து கேட்டுக்கிட்டிருக்கோம்..” கிஷோர் கீர்த்தியிடம் கூறினார். அகல்யா சலிப்போடு கதிரையில் அமர்ந்தாள். கீர்த்தி அவளருகே செல்ல, “அது ஒரு பேனா.. கீர்த்தி” அகல்யா பொறுமையோடு சொன்னாள். “பேனாவா?... கொஞ்சம் வியப்புடன் கீர்த்தி கேள்வி எழுப்பினாள். கிஷோர் மெளனமாய் சிரித்த படி  

“பேனா.. தானே வேற ஒண்ணு வாங்கிக்கலாம். முதல்ல என்னோட டிரஸ் எல்லாம் ரெடி பண்ணி வைங்க. இரண்டு மணி பஸ் ஏறினாதான் போய்ச்சேற நேரம் சரியா இருக்கும்” அகல்யா ஏக்கத்தோடு எழும்பிச் சென்றாள். கீர்த்தியும் வீடு புறப்பட்டாள்.  

மறுநாள் பாடசாலை முடிந்து அகல்யாவும் கீர்த்தியும் நடைப் பயணமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்கள். அகல்யா வேகமாக நடக்க. கீர்த்தி பேசத் தலைப்பட்டாள்.  

“ஏன் டீச்சர்.. என்னைக்கும் இல்லாமா இவ்வளவு வேகமா நடக்கிறீங்க?  

“ஒண்ணும் இல்ல” சட்டென்று பதில் சொன்னாள் அகல்யா.  

“ஒண்ணும் இல்லையா”? சொல்லுங்க டீச்சர் என்ன பிரச்சினை?” கீர்த்தி பரிதாபத்தோடு கேட்டாள். “அந்த பேனாவ தேடணும்” ஆறு வருசமா எவ்வளவு பத்திரமா வச்சிருந்தேன் தெரியுமா?.. எங்க போனிச்சேனு தெரியல?.... அகல்யா வெறுமையோடு சொன்னாள். கீர்த்தி சற்று மெளனமானாள். வீடு நெருங்கியிருந்தது. “சரி கீர்த்தி டிரஸ் மாத்திட்டு முகம் கழுவீட்டு வா.. எங்க வீட்ல சாப்பிடாம். அகல்யா சொல்ல கீர்த்தி தலையசைத்தாள். இரண்டு நாட்கள் கழிந்தன. வழமை போலவே பாடசாலை முடிய அகல்யாவும் கீர்த்தியும் திரும்பிக் கொண்டிருந்தார்கள். “டீச்சர் நேற்று பேப்பர்ல கதை ஒண்ணு படிச்சேன்”. சொல்லவா? கீர்த்தி ஆரம்பித்தாள். சற்றுநேர மெளனத்துக்கு பின்.  

“இன்னிக்கு வேனாம். அந்த பேனா காணாமல் போனதிலிருந்து எனக்கு மூடே சரியில்ல.. இப்போ கத கேட்கிற அளவுக்கு எனக்கு மைண்டும் இல்ல”.    கீர்த்திக்கு கதை படித்தல் என்றால் கொள்ளைப் பிரியம். தான் படித்த கதைகளை யாரிடமாவது சொல்லுவது வழக்கம். அதற்கு அகல்யாவிடமிருந்து தாராளமாய் இடம் கிடைத்தது. அவள் வாசித்த கதைகளை சொல்லும்போது ஒரு அழகான தொனியும் நேரில் பார்த்த ஒரு சம்பவம் போலவும் இருக்கும். அது அகல்யாவுக்கும் பிடிக்கும். அகல்யாவிற்கு மட்டுமா, அவளுடைய கணவரும் அப்படிதான். வார இறுதி நாட்களில் வாரபத்திரிகைகளை அகல்யாவும் கிஷோரும் வாங்கிக் கொடுப்பார்கள். இதற்காகவே கீர்த்தி ஞாயிற்றுக்கிழமைகளில் இவர்களோடு டவுன் வரை சென்று வருவாள். சில நேரங்களில் இவர்களுக்கு குழந்தை இல்லாத குறையைகூட கதை சொல்லியே தீர்த்து வைப்பாள் கீர்த்தி. ஆம் அகல்யாவின் அயல் வீடு என்பதால் சிறு வயதிலிருந்தே ஒரு பிணைப்பு இருக்கவே செய்தது.  

“ஏன் டீச்சர் அந்த பேனாவில அப்படி என்னதான் இருக்கு? சாதாரண ஒரு பேனாதானே” கீர்த்தி மெல்லமாய் கேட்டாள்.  

 “அது என் அப்பா கடைசியா எனக்கு கொடுத்தது. இப்ப அவர் இறந்து ஆறு வருசம் கிட்ட ஆகிடுச்சி... அப்பா நினைவு வாரப்போ அத எடுத்து பார்த்துக்குவேன். மனசுக்கு ஆறுதலா இருக்கும்! அவ்வளவு ஏன் எங்களுக்கு இன்னும் குழந்த பாக்கியம் இல்ல. அதக்கூட அந்த பேனா கிட்டதான் சொல்லி அழுவேன். நான் அத எடுத்து பார்த்தா பார்த்துட்டு வேற எங்கயும் வைக்க மாட்டேன். ஹேன்ட்பேக்லதான் வழமையா வைப்பேன்” இடையில் நிறுத்திக் கொண்டாள் அகல்யா. சில மாதங்கள் கழிந்தன. அன்று ஞாயிற்றுக்கிழமை. கிஷோரும் வீடு வந்திருந்தார். கீர்த்தி அகல்யா வீட்டினுள் வேகமாய் நுழைந்தாள் “டீச்சர் டவுன் போகலையா? கீர்த்தி ஆவலுடன் கேட்டாள். “என்ன நீ வந்ததும் வராததுமா டவுன் போகலையானு கேட்குற?..... “பேப்பர் வாங்கதான் டீச்சர்..” கீர்த்தி மெதுவாக பதில் சொன்னாள். “இன்னைக்கு டவுன்போகல. நேற்று வரும்போதே வீட்டுக்குத் தேவையானதை வாங்கி வந்துட்டேன்” கிஷோர் சொல்ல முகம் வாடிப்போனது கீர்த்திகாவிற்கு.  

“என்ன கீர்த்தி கதை ஒன்னும் இல்லையா? கிஷோர் கேட்க கீர்த்திகா மெளனமாய் இருந்தாள். இடையில் அகல்யா நுழைந்தாள். “என்னங்க நீங்க” பாருங்க அவ முகமே வாடி போயிரிச்சி” இன்னும் அரை மணித்தியாலத்துல டவுன் போவோம் ஓகே வா? அவரு விளையாட்டுக்குச் சொன்னாரு. நீ ரெடியாகு..” “டீச்சர் நா.. ரெடியா தான் வந்திருக்கேன்..” கீர்த்தி மெல்லிய சிரிப்போடு சொன்னாள். சிறிது நேரத்தில் புறப்பட்டார்கள். இது திரும்பிவரும் நேரம். பஸ் வண்டியை விட்டிறங்கி சிறிது நேரம் நடந்து வரவேண்டும் வீடு நெருங்க. மூவருமாய் நடக்க ஆரம்பித்தார்கள். “டீச்சர் பேப்பர்ல ஒரு கதை இருக்கு சொல்லவா?.... ஆசையோடு கேட்டாள் கீர்த்தி.  

“ம்... சொல்லிக்கிட்டு வாங்க நடந்துக்கிட்டே கேட்போம்”. கிஜோர் சொல்ல, கதை சொல்ல ஆரம்பித்தாள் கீர்த்தி. அவள் கதை சொல்லிக் கொண்டு வரும்போதே இடையில் குறுக்கிட்டாள் அகல்யா. “போதும் கதைய நிறுத்தீட்டு சும்மா வாரீயா?...” கிஷோர் பேச்சுக் கொடுத்தார். “என்ன நீங்க அவ பாட்டுல கதை சொல்லிட்டு வாரா உங்களுக்கு என்னவாம்?....”  

“ம்.. எனக்கு பொறாமையா இருக்கு” அகல்யா கோபத்தோடு சொன்னாள். “அவங்க இருக்கட்டும் நீங்க சொல்லுங்க நான் கேட்குறேன்” கிஷோர் தட்டிக் கொடுத்தார். மீண்டும் குறுக்கிட்டாள் அகல்யா. “ஐயோ..! அது பேப்பர்ல வந்த கதையில்லைங்க.. என்னோடு காணாம போன பேனாவையும் என்னையும் பத்தி என்கிட்டயே கேட்டுட்டு அத கதை மாதிரி சொல்லிக்கிட்டு வாரங்க உங்ககிட்ட..” “இல்ல டீச்சர் நா கதையத்தான் சொல்றேன்..” கீர்த்திகா சொன்னாள். கையில் கொண்டு வந்த பொதியை கீழே வைத்துவிட்டு, “பேசாம வான்னா கேட்க மாட்டியா நீ கதை சொன்னது போதும் வாய மூடிகிட்டு வா” என்றவாறு கீர்த்திகாவின் காதை பிடித்து திறுக அவள் “அம்மா..” என்று சத்தமிட சட்டென கையை எடுத்துக் கொண்டாள் அகல்யா. “நீங்க என்னா இவ்வளவு கோபப்படுறீங்க.. அவ சொன்னா சொல்லிட்டு போகட்டும் அவளும் நம்ம பிள்ளை மாதிரி தானே..” கிஷோர் சொல்ல தொடர்ந்தாள் அகல்யா. “யார் இல்லைன்னு சொன்னது? நீங்க சொல்றது உண்மைதான். இவ சின்ன வயசுல என்னோட தாவணியைப் பிடிச்சிகிட்டு அம்மா.. அம்மான்னு சுற்றிச் சுற்றி வருவாள். இப்போதும் அப்படித்தான். ஒரே வித்தியாசம் அப்போ அம்மா இப்போ டீச்சர். “இப்போ இது இல்லைங்க பிரச்சினை.... அந்த பேனாவ காணலைன்னு எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? அதையே ஞாபக படுத்திக்கிட்டு இவ கதை சொல்லிக்கிட்டு வந்தா கோபம் வராதா என்ன..” “இல்ல டீச்சர் நா உண்மையதான் சொல்றேன் இந்தா பாருங்க பேப்பர்ல வந்துருக்கு...” கீர்த்திகா மீண்டும் சொல்ல பெருமூச்சு விட்டாள் அகல்யா. அவதான் சொல்றாளே பேப்பர்ல வந்திருக்குன்னு” கிஷோஷ் சொல்ல.. “என்னங்க நீங்க என்னா சின்ன பிள்ளையா? நாம மூணு பேருமாதானே கடையில பேப்பர் வாங்கினோம். பஸ்லையும் வந்தோம்.. இவ பேப்பர எடுத்து ரெண்டே ரெண்டு பக்கத்த தான் திருப்பி பார்த்தா.. ஒரு தாள் புள்லா வந்திருக்க கதைய ஒரு செக்கனுல வாசித்து எங்ககிட்ட சொல்ல முடியுமாங்க.. யோசித்து பாருங்க..” சொல்லிக் கொண்டே போனாள் அகல்யா.  

”இந்த கதைய எழுதுனதே நான் தான் டீச்சர்..” அழுத்தமாய் கீர்த்தி சொல்ல. அருகில் வந்தாள் அகல்யா. “இந்தா பாருங்க இங்க செல்வி. எஸ். கீர்த்திகானு என்னோட பெயரும் நம்ம ஸ்கூல் பெயரும் இருக்கு ஆர்வத்தோடு காட்டினாள் கீர்த்திகா. அந்த பெயரோடு சேர்த்து கதையின் அச்சிடப்பட்டிருந்த கடைசி வரியும் அகல்யாவின் மனதில் தாராளமாய் பதிவு கொண்டது. மிகுதி கதையை சொல்லி முடிக்கவும் வீடு வரவும் நேரம் சரியாக இருந்தது. கிஷோரும் அகல்யாவும் பத்திரிகையை வாங்கி கதையை வாசித்துப் பார்த்தாா்கள். கீத்திகாவிற்கு பாராட்டுகளும் சொன்னார்கள்.  

மாலையானது. அகல்யா எதையோ யோசித்தபடி வாசலில் அமர்ந்திருந்தாள். கீர்த்திகா அருகில் வரவே அவள் முகத்தைப் பார்த்தபடி “எப்படிமா?.. இந்த சின்ன வயசுல இவ்வளவு அழகா ஒரு கதையை ஆரம்பித்து அர்த்தமுள்ளதா முடிச்சிவச்சிருக்க.. அதும் பேப்பர்ல பிரசுரமாகிற அளவுக்கு. என்னால எல்லாம் இப்படி எழுத முடியாதும்மா!”  

“அது சரி, யார் உனக்கு அவ்வளவு தைரியம் கொடுத்தது. “அதுவா டீச்சர் ஒரு பேனா தான்..” “பேனாவா..” வியப்புடன் கேட்டாள் அகல்யா. கையிலிருந்த ஒரு பேனையை நீட்டினாள் கீர்த்திகா. அது அகல்யாவின் காணமற்போன பேனை.  

“உங்க பேனாவை நான்தான் டீச்சர் எடுத்தேன். இத திரும்ப கொடுத்துரலாம்னு நிறைய தடவ கொண்டுவந்தேன். ஆனா, இத எடுத்தது நான்தானு தெரிஞ்சி என்னோட பேசாம போயிட்டா. அந்த பயத்துலதான் உங்ககிட்ட கொடுக்காம விட்டுட்டேன்” “ஆனா, இந்த பேனா என்கிட்ட இருக்கும் வரைக்கும் ஒரே உறுத்தலாவே இருந்திச்சி. இத வச்சி ஏதாவது ஒன்ன சாதிச்ச பிறகு உங்ககிட்ட கொடுத்தா நீங்க கோபபட்டாலும் என்னோட பேசாம இருக்க மாட்டீங்கங்கிற ஒரு நம்பிக்க வர... யோசிச்சி பாாக்கிறப்போதான் உங்க பேனாவை வைத்தே இந்த பேனாவுடைய கதைய எழுதலாம்னு தோணிச்சி. ரெண்டு வாரமா ட்ரை பண்ணி எழுதி வாரமஞ்சரிக்கு தபால்ல அனுப்பி வைச்சேன் டீச்சர்”. நான் கூட நம்பல டீச்சர் பெரிய பெரிய எழுத்தாளர்களோட கதைகள் பிரசுரமாகிற ஒரு பத்திரிகையில இந்தக் கதையும் பிரசுரமாகும்னு.. “ஸொரி டீச்சர்...” “ஏன் ஸொரி சொல்ற?...” “என்ன இருந்தாலும் கேட்காம எடுக்கிறது திருட்டு தானே!..” “இல்லம்மா நீ அத திருடல” “இல்ல டீச்சர் நான்தான் அதை திருட்டுத்தனமா எடுத்தேன். பிழை என்மேல தான்” “சொன்னா புரிஞ்சிக்க.. கீர்த்தி” அகல்யா ஆறுதல்படுத்த நினைத்தாள். “இங்க வந்து உட்காரு.. நீ அத திருடலனு எனக்கு நல்லா தெரியும்” “நீ எழுதுன கதையில உள்ள கடைசி வரி நினைவிருக்கா..” “நான் அந்தப் பேனையை திருடவில்லை. யாரோ என்னை எடுக்க வைத்தார்கள். அது யார் என்பது தான் இன்னும் எனக்குப் புரியவில்லை. அது தான் உண்மை..” “என் அப்பாவோட ஆசைதான் உன்னை அதை எடுக்க தூண்டி விட்டிருக்கு”  

“எனக்கு புரியல டீச்சர்” கீர்த்தி கூற. அகல்யா தொடர்ந்தாள். “என் அப்பாவுக்கு எழுத படிக்க தெரியாது. தோட்டத்துலதான் வேலை செய்தாரு. இந்தப் பேனாவ என்கிட்ட கொடுக்கும்போது அவர் ஒண்ணுமே சொல்லாம தான் கொடுத்தாரு. அவர் சொல்லாட்டியும். அப்போ அவர் மனசுலையும் ஏதவாது ஒரு நம்பிக்க இருந்திருக்கும் தானே! நான் இதை வச்சி எதையாவது சாதிக்கணும்னு. ஆனா நான் இத அப்பா கொடுத்த ஒரு பரிசு இல்லாட்டி ஒரு நினைவு பொருளாதான் பார்த்தேனே ஒழிய இதுல ஏதாவது சாதிக்கணும்னு நினைச்சிக்கூட பார்க்கல. அப்பாவோட ஆசையையும் நிறைவேற்றல. இப்போ உன்ன வச்சி அவரோட ஆசையை நிறைவேற்றிக்கிட்டாரு..! “இப்ப புரியுதா நீ இந்த பேனாவை திருடலனு ஏன் சொன்னேன்னு” இந்த பேனாவோட பெறுமதியே எனக்கு இப்பதான் புரியிது.. முழு உலகமே இன்னைக்கு தந்தையர் தினத்த கொண்டாடிக்கிட்டிருக்காங்க. எல்லோரும் தன் அப்பாமார்களுக்கு ஏதவது ஒரு பரிசு வாங்கி கொடுத்திருப்பாங்க. எனக்கு அந்த வாய்ப்பு இல்லாட்டியும் பாரு. என் அப்பா எனக்கு ஒரு பெரிய பரிசே கொடுத்திருக்காரு” “என்ன பரிசு டீச்சர் அது?” கீர்த்தி செல்லமாய் கேட்டாள். “அப்போ இந்த பேனாவை மட்டும் தான் எனக்கு கொடுத்தாரு. இப்ப இந்த பேனாவோட சேர்த்து எங்களுக்கு ஒரு மகளையும் பரிசா கொடுத்திருக்கிறாரு இல்ல..” “நீங்க என்ன சொன்னாலும் நான் செய்தது பிழை தானே டீச்சர். இதுல இப்ப மையும் இல்ல! கீர்த்திகா அழுதுகொண்டே சொன்னாள். “எங்க இதுல மை இல்ல? அதற்கு மையாகத்தான் நீ கிடைச்சிட்டாயே” என்று மனதுக்குள் எண்ணியபடியே. அவள் கண்களில் வழிந்த நீரினை துடைக்க மனமில்லாதவளாய் கீர்த்தியை கட்டி அணைத்துக் கொண்டாள். அந்த அணைப்பிலும் தாய் மகளின் பாசம் குறைவின்றி இணைந்திருந்தது.   

பா. விஜயபல்லவன்

Comments