பெருந்தோட்ட தரிசு காணிகளை தோட்ட சமூகத்துக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட தரிசு காணிகளை தோட்ட சமூகத்துக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்

இலங்கையில் மிக விரைவில் உணவு தட்டுப்பாடு அல்லது பஞ்சம் ஏற்படலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் சூழலில் இதற்காக அரசாங்கமும் தனியார் துறையினரும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. இதற்காக அரசாங்கம் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றது.  

தரிசு நிலங்கள் அனைத்திலும் விவசாயம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்களுக்கு அரசு அறிவித்தல் வழங்கியுள்ளது. இந்த அடிப்படையில் தற்பொழுது நாடு பூராகவும் பல விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

இராணுவத்தினரும் இந்த விடயத்தில் மிகவும் வேகமாக செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறான ஒரு நிலையில் அரசாங்கத்தின் இத்தகைய பல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரிகள் முட்டுக்கட்டையாக இருப்பது கடந்த சில மாதங்களாக பேசு பொருளாக மாறியிருக்கின்றது.  

உதாரணத்துக்கு,  மின்சார சபையில் சூரிய ஒளி மின்சாரத்தை பெற்றுக் கொள்வது தொடர்பாக சில உயர் அதிகாரிகள்  முட்டுக்கட்டையாக இருப்பதாக பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளதைக் குறிப்பிடலாம்.   அது மாத்திரமன்றி சமையல் எரிவாயு கொள்வனவில் அதிகாரிகளின் முட்டுக்கட்டை, அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வரியை பெற்றுக் கொள்வதில் முட்டுக்கட்டை என அதிகாரிகளின் குறுக்கீடுகளை குறிப்பிடலாம். 

அண்மையில் ஹட்டன் வெலிஒயா தோட்டத்தில் கடந்த பல வருடங்களாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்ற வேலு ராமச்சந்திரன் என்பவரை அவருடைய விவசாய காணியை திரும்ப கையளிக்குமாறு பெருந்தோட்ட அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளரால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட தரிசு காணிகளை விவசாயத்துக்கு பயன்படுத்தும்படி அரசு ஒருபுறம் ஊக்குவிக்கும் அதே சமயம் இன்னொரு புறம் விவசாயம் செய்யப்படும் காணியை தரிசாக்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதை என்னவென்று புரிந்து கொள்வது? இது தொடர்பாக சில பிரமுகர்களிடம் பேசினோம். 

மலையக தொழிலாளர் முன்னணியின் உப தலைவர் கிருஷ்ணன் 

அரசாங்கம் தரிசு மற்றும் கைவிடப்பட்ட காணிகளில் விவசாயத்தை மேற்கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்ற அதே சமயம் விவசாயத்தில் தற்பொழுது ஈடுபட்டுள்ள பெருந்தோட்டத்துறை சார்ந்த விவசாயிகளை தங்களுடைய நிலங்களில் இருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சம்பவம் ஒன்று ஹட்டன் வெலிஒயா தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. 

ஹட்டன் வெலிஒயா பகுதியில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள இராமச்சந்திரன் என்பவருடைய விவசாய காணியை உடனடியாக தோட்ட அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு பெருந்தோட்ட அமைச்சின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஜே.எம்.சி. பிரியதர்சனி கடிதம் மூலம் அறிவித்துள்ளார். 

அந்தக் கடிதத்தைப் பாருங்கள். 

வேலு ராமச்சந்திரன் 

மேல் வெலிஒய பிரிவு வெலிஒய தோட்டம் ஹட்டன். 

1997ஆம் ஆண்டு 29இலக்க சட்டத்தின்படியும் 1992ஆம் அண்டு 45இலக்க சட்டத்தின்படியும் 1987ஆம் ஆண்டு 50இலக்க சட்டத்தின்படியும் 1983ஆம் ஆண்டு 29இலக்க சட்டத்தின்படியும் 1981ஆம் ஆண்டு 58இலக்க சட்டத்தின்படியும் திருத்தியமைக்கப்பட்ட 1979ஆம் ஆண்டு 7இலக்க சட்டத்தின்படியும் அரசாங்க காணிச்சட்டத்தின் 3பிரிவிற்கு அமைய (அத்துமீறி இருப்பவர்களிடம் இருந்து மீள பெற்றுக் கொள்ளல்) வழங்கப்படும் அப்புறப்படுத்தலுக்கான அறிவித்தலாகும். 

அப்புறப்படுத்தலுக்கான அறிவித்தல் 

அரசாங்கத்தின் காணிச் (மீள் பெற்றுக் கொள்ளல் தொடர்பில்) சட்டத்திற்கு அமைய அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் இலங்கை அரசாங்கத்தின் அரச பெருந்தோட்ட நிறுவனத்தின் மற்றும் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையினால் நியமிக்கப்படடுள்ள அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி தொழில் அமைச்சின் பெருந்தோட்ட முகாமைத்துவ பணிப்பாளர் பிரிவின் பிரதி பணிப்பாளர் அதிகாரமளிக்கப்பட்ட ஜயவீர முதியான்சேலாகே சந்திரிகா பிரியதர்சனி ஆகிய நான் ஹட்டன் வெலிஒய தோட்டத்தின் மேல் வெலிஒய பிரிவில் வசிக்கும் வேலு ராமச்சந்திரன் ஆகிய நீங்கள் இங்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைக்கு அமைய அரச காணியில் சட்டவிரோதமாக தங்கள் வசப்படுத்தியிருப்பதாக நான் கருத்தில் கொண்டு எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் அரசாங்க காணச்சட்டத்தின் 3பிரிவின் பிரகாரம்  

(அ) குறித்த இடத்தில் தங்களுடன் வேறு எவரேனும் தங்கியிருப்பார்களாயின் அவர்களுடன் காணியை விட்டு வெளியேறுமாறும் 

(ஆ) குறித்த இடத்தின் அதிகாரமளிக்கப்பட்ட உரித்துடையவரான வெலிஒயா தோட்டத்தின் தோட்ட அதிகாரியான வெத ஆராச்சிலாகே அஜித் பிரசன்ன பிரேமசந்திரவிடம் அல்லது அவரால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரமளிக்கப்பட்ட ஒருவரிடம் 05.07.2022திகதிக்கு முன்பதாக காணியை கையளிக்குமாறு வேலு ராமச்சந்திரன் ஆகிய உங்களுக்கு பணிக்கின்றேன். 

(ஒப்பம்) 

எனவே அரசாங்கம் ஒரு புறத்தில் அனைத்து தரிசு நிலங்களையும் பகிர்ந்தளித்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கின்றது. ஆனால் அதிகாரிகளோ இவ்வாறு கடிதம் அனுப்புகின்றார்கள். எனவே அரசாங்கத்தின் இந்த திட்டத்திற்கு அதிகாரிகள் முட்டுக்கட்டையாக இருக்கின்றார்களா? அல்லது விடயம் தெரியாமல் கொழும்பில் ஏ.சி அறையில் இருந்து கொண்டு தீர்மானம்  எடுக்கின்றார்களா என்ற கேள்வியே எங்களிடம் எழுகின்றது. 

இது தொடர்பாக வேலு ராமச்சந்திரனிடம் பேசினோம். 

நாங்கள் கடந்த 1979ஆம் ஆண்டு முதல் அதாவது என்னுடைய தந்தையார் காலம் முதல் இந்த காணியில் விவசாயம் செய்து வருகின்றோம். இதுவரையில் தோட்ட நிர்வாகமோ அல்லது வேறு நிறுவனங்களோ எங்களிடம் இந்த காணியை தோட்ட நிர்வாகத்திற்கு ஒப்படைக்குமாறு கடிதம் அனுப்பியது கிடையாது. 

 

நான் மட்டுமல்ல,  என்னைப் போன்ற பலரும் இந்த தோட்டத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்கள் யாருக்கும் எந்தவிதமான  கடிதமும் வரவில்லை. எனவே என்னை தனிப்பட்ட முறையில் பழிவாங்குவதற்காக இதனை செய்திருக்கின்றார்களா? என்ற சந்தேகம் எழுகிறது. 

நான் எக் காரணம் கொண்டும் இந்தக் காணியை கையளிக்கப் போவதில்லை.  ஏனென்றால் தற்பொழுது இருக்கின்ற பொருளாதார கஷ்டங்களுக்கு அமைய எங்களால் குடும்பங்களை நடத்த முடியாது. நாங்கள் இந்த விவசாயத்தை நம்பியே வாழ்கின்றோம். இதற்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருந்தாலே போதும். நான் இந்த காணி தொடர்பான பல ஆவணங்களையும் வைத்திருக்கின்றேன். எந்த காரணம் கொண்டும் இந்த விவசாய காணியை கையளிக்க முடியாது என்பது இவரது நிலைப்பாடு. 

இதே சமயம் தரிசு காணி பகிர்ந்தளிப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் இராதாகிருஷ்ணன் பேசியிருந்தார். 

அரசாங்கத்தின் அறிவித்தலுக்கு அமைய மலையகத்தில் இருக்கின்ற தரிசு நிலங்களை மலையக இளைஞர் யுவதிகளுக்கு பகிர்ந்தளித்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து விவசாயத்தில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன். 

மேலும் தற்பொழுது எற்பட்டுள்ள நிலையில் விலைவாசி அதிகரிப்பு வருமானக் குறைவு என்பன காரணமாக மலையக மக்கள் பெரிதும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே இவ்வாறான ஒரு நிலையில் மலையகத்தில் இருக்கின்ற தரிசு நிலங்களை இங்குள்ளவர்களுக்கு பகிர்ந்தளித்து அதற்கான வாய்ப்பை எங்களுடைய மலையக இளைஞர் யுவதிகளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார். 

காணி பகிர்ந்தளிப்பு தொடர்பாக மலையகத் தலைவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்?

கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பல ஏக்கர் தரிசு காணிகள் மலையகத்தில் இருப்பதாகவும் அதனை மலையக இளைஞர்களுக்கு பகிர்ந்தளித்து விவசாயம் செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் எனவும் மறைந்த அமரர் ஆறுமுகன் தொண்டமான்,  இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம் உட்பட மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தார்கள்.

நுவரெலியா தியாகு

Comments