ஐசிசியின் சிறந்த வீரராக மெத்தியூஸ் | தினகரன் வாரமஞ்சரி

ஐசிசியின் சிறந்த வீரராக மெத்தியூஸ்

இலங்கை அணியின் அனுபவ வீரர் அஞ்சலோ மெத்திவ்ஸ், மே மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பிரகாசிப்புகளை வழங்கிவரும் வீரர்களை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) கௌரவித்து வருகின்றது.

அதன்படி கடந்த மே மாதத்திற்கான சிறந்த வீரர்களாக இலங்கை அணியின் அஞ்செலோ மெதிவ்ஸ்,  அசித பெர்னாண்டோ மற்றும் பங்களாதேஷ் அணியின் முஷ்பிகூர் ரஹீம் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இதில் வாக்குகள் மூலம் ஒருவர் சிறந்த வீரராக அறிவிக்கப்படுவார். அஞ்சலோ மெத்திவ்ஸ் மே மாதத்திற்காக சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அஞ்சலோ மெத்திவ்ஸ் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2சதங்களை விளாசியிருந்தார். குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியில் 199ஓட்டங்களையும், இரண்டாவது டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 145ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

இவரின் இந்த ஓட்டக்குவிப்பு, அசித பெர்னாண்டோ மற்றும் கசுன் ராஜிதவின் அபார பந்துவீச்சுக்களின் உதவியுடன் இலங்கை அணி தொடரை 1-0என கைப்பற்றி, ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்கும் முன்னேறியிருந்தது.

ஐசிசியின் இந்த கௌரவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அஞ்சலோ மெத்திவ்ஸ், “இந்த வாய்ப்பை நினைத்து நான் பெருமைப்படுவதுடன், என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அணி வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் இரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை கூறிக்கொள்கிறேன். அத்துடன் இந்த கௌரவத்தை எப்போதும் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கும் இலங்கை இரசிகர்களுக்காக அர்ப்பணிக்கிறேன்” என்றார்.

இதேவேளை மகளிர் அணிக்கான சிறந்த வீராங்கனையாக பாகிஸ்தான் மகளிர் அணி வீராங்கனை தூபா ஹாஸன் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments