நாட்டை மீட்பதென்பது வெறும் மந்திரத்தால் ஆகாது சொந்தக் காலில் நிற்கக் கூடிய அரசியல் சமூக பொருளாதாரத்தின் மூலமே அது சாத்தியமாகும் | தினகரன் வாரமஞ்சரி

நாட்டை மீட்பதென்பது வெறும் மந்திரத்தால் ஆகாது சொந்தக் காலில் நிற்கக் கூடிய அரசியல் சமூக பொருளாதாரத்தின் மூலமே அது சாத்தியமாகும்

நாட்டின் நிலவரத்தையும் மக்களையும் புரிந்து கொள்வதற்கு எரிபொருள் பிரச்சினையும் நிரப்பு நிலையக் காட்சிகளும் போதும். பற்றாக்குறை வரவரக் கூடிக் கொண்டிருக்கிறது. பற்றாக்குறை கூடக் கூட பாவனையாளர்கள் எரிபொருளைப் பெறுவதற்கு முண்டியடிக்கின்றனர். இதனால் கிலோ மீற்றர் கணக்கில் வரிசைகள் (க்யூ) நீள்கின்றன. வரிசை நீள நீள காத்திருப்பின் நேரம் கூடுகிறது. இரவு பகலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து தெரு நீளத்துக்கும் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆண்கள், பெண்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள், அரச உத்தியோகத்தர்கள், முதியோர் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் இரண்டு நாட்கள் கூடக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அப்படிக் காத்திருந்தாலும் எரிபொருள் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. அப்படிக் கிடைத்தாலும் போதிய அளவுக்குப் பெற முடிவதில்லை. குறைந்த பட்சம் எடுத்துச் செல்லும் வாகனத்தின் கொள்கலனை நிரப்பக் கூடிய அளவுக்குக் கூட கிடைப்பதில்லை. யானைப் பசிக்குச் சோளப்பொரி என்பதைப்போல மிகக் குறைந்தளவு எரிபொருளே கிடைக்கிறது. மண்ணெண்ணெய் கிடையவே கிடையாது. இது காத்திருப்பின் பெறுமதி என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்த நெருக்கடி மக்களிடம் கோபத்தையும் எரிச்சலையும் உண்டாக்குகிறது.  இதனால் ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் அதன் சுற்றயல் பிரதேசங்களிலும் சண்டையும் அடிதடி பிரச்சினையுமாகவே உள்ளது.  

இதைக் கட்டுப்படுத்துவதற்கென இராணுவத்தையும் பொலிசையும் அரசாங்கம் நிறுத்தியுள்ளது. சமயங்களில் பாதுகாப்புப் படையினரைப் பொருட்படுத்தாமலே மக்கள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். அவர்களாலும் எதுவும் செய்ய முடிவதில்லை. இதேவேளை எரிபொருளுக்கான வரிசையில் காத்திருந்தோரில் ஏழு எட்டுப்பேர் மரணமடைந்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் கூடப்போகிறது. இவ்வளவுக்கும் இடையில் வாராவாரம் எரிபொருளுக்கான விலையேற்றம் வேறு நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமையைச் சீர்ப்படுத்துவதைப்பற்றி அரசாங்கத்தரப்பிலிருந்து எந்த உத்தரவாதங்களுமே இல்லை. எரிபொருளுக்கான அமைச்சு வழங்கும் உத்தரவாதங்களும் விடுக்கப்படும் அறிவிப்புகளும் அன்றே மதிப்பிழக்கின்றன. அந்த அளவுக்குத்தான் நிலைமை  உள்ளது. எரிபொருள் கப்பல் வரவில்லை. அல்லது தாமதமாகிறது. அல்லது எரிபொருளைப் பெறுவதற்கான டொலர் இல்லை என்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்த அறிவிப்புகள் வரவர மக்களிடம் கொந்தளிப்பும் பதட்டமும் உருவாகின்றன.  

எரிபொருள் இல்லை என்றால் ஏறக்குறைய சமூக இயக்கமே இல்லை என்றாகி விடும். போக்குவரத்து, உணவு உற்பத்தி தொடக்கம் அனைத்து உற்பத்தித்துறைகளும் சேவைத்துறைகளும் படுத்து விடும் அபாயமுண்டு. இப்பொழுதே ஏறக்குறைய பாதி அளவுக்கு பல துறைகள் படுத்து விட்டன. எரிபொருளுக்காகக் காத்திருப்பதால் மக்களின் உழைப்புச் சக்தியும் வீணாகிறது. மூன்று லீற்றர் பெற்றோலை அல்லது பத்து லீற்றர் டீசலைப் பெறுவதற்காக ஒரு நாள் முழுவதும் வண்டியோடு (வாகனத்தோடு) நின்றால் எப்படி உற்பத்தியில் அல்லது சேவையில் ஈடுபட முடியும்?

இதை  முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஒரு மாதம் எவ்வளவு எரிபொருள் தேவை? இதில்  அத்தியாவசிய தேவைகளுக்கான எரிபொருளின் விகிதம் என்ன? அவற்றை வழங்குவதற்கான  நடவடிக்கையும் பொறிமுறையும் என்ன?  கிடைக்கும் எரிபொருள் அல்லது பெறக்கூடிய அளவு எவ்வளவு? அதை எப்படி, எந்த அடிப்படையில் முகாமைத்துவம் செய்வது? என  எந்த விதமான திட்டமிடல்களிலும் அரசாங்கத்தரப்பு ஈடுபடுவதாகத் தெரியவில்லை. குறைந்த  பட்சம் மாவட்டச் செயலங்கள், பிரதேச செயலகங்களாவது இதில் ஒரு பொருத்தமான ஏற்பாடுகளைச்  செய்யலாம். அப்படிச் செய்ய முன்வர வேண்டும். இல்லையென்றால் நிலைமை படுமோசமாகி விடும். இப்பொழுதே  நிலைமை மிக மோசம். சட்டமும் மனித நடத்தைகளும் மிகக் கேவலமாகியுள்ளன. யாரையும்  யாரும் மதிப்பதில்லை. எவருடைய நிலைமையையும் எவரும் பொருட்படுத்துவதில்லை. இதனால் ஒவ்வொரு  எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் அதனைச் சூழ நிற்கும் பாவனையாளர்களிடத்திலும் ஏகப்பட்ட  குழப்பங்கள், பிரச்சினைகள். மிக வருத்தமளிக்கக் கூடிய அளவுக்குத் தரந்தாழ்ந்த  செயற்பாடுகள். மூன்று  லீற்றர் பெற்றோலுக்காக மானத்தை, கௌரவத்தை, மதிப்பை இழக்க வேண்டிய நிலை. இது கொலைகளில் கொண்டு போய் விடக் கூடிய சூழலை  உருவாக்குகிறது.

நாடு எந்த வகையிலும் மீட்பர்களும் வழிப்படுத்துநர்களும் இல்லாமல் பின்னடைந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நிமிசமும் மேலும் மேலும் நெருக்கடிக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தினால் நிலைமையை உடனாடியாகச் சீர் செய்ய முடியவில்லை என்றால், அதற்குரிய வளங்களைத் தேட முடியவில்லை என்றால், வழங்கல்களைச் சீராகச் செய்யக் கூடியதாக இல்லை என்றால் அரசுக் கட்டமைப்பிலுள்ள நிர்வாகப் பிரிவு அதை முகாமைத்துவம் செய்ய வேண்டும். இது தேசிய இடர்காலம். இத்தகைய தேசிய இடர்களின்போது அதை முகாமைத்துவம் செய்து நிலைமையைப் பாதக நிலைக்குச் செல்லாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரச நிர்வாகக் கட்டமைப்புச் சார்ந்தோருக்கே அதிகம் உண்டு. அதிகாரிகள் இதில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். தமது நிபுணத்துவ அறிவையும் சமூக அக்கறையும் ஒருங்கிணைத்து இதைச் செயற்படுத்த முடியும். இது தனியே எரிபொருள் பிரச்சினைக்கு மட்டுமல்ல, உணவு உற்பத்தி தொடக்கம் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத்துறைகள் அனைத்துக்கும் பொருந்தும்.

உதாரணமாக இரண்டு விசயங்களை இங்கே குறிப்பிடலாம்.

1. எரிபொருள் முகாமைத்துவம் (மாவட்டச் செயலகம் / பிரதேச செயலகம்)

(அ) தமது மாவட்டத்தில் அல்லது பிரதேசத்தில் உள்ள தொழில் மையங்கள், உற்பத்தியாளர்களின் விவரங்கங்களின் அடிப்படையில் அவர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டைச் செய்தல்.

(ஆ) தமது மாவட்டத்தில் அல்லது பிரதேசத்தில் உள்ள வாகனங்களுக்கு அவற்றின் வகை (ஓட்டோ, மோட்டார் சைக்கிள், பாரவூர்தி, கார், பேருந்து, சிற்றுந்து போன்றவற்றை வகைப்படுத்தி) அவற்றுக்கான எரிபொருள் விநியோக அளவையும் நாட்களையும் தீர்மானித்தல்.

(இ) ஒரே தரப்பு அல்லது ஒரே கும்பல் மறுபடி மறுபடி எரிபொருளைப் பெறவும் அடாவடி செய்வதையும் தவிர்த்து அனைவரும் எரிபொருளைப் பெறக்கூடிய வகையில் பங்கீட்டு முறையை நடைமுறைப்படுத்துதல். அதில் பதிவு முறையை அமூல் படுத்துதல்.

(ஈ) வாகனங்களின் மூலமாகத் தொழில் செய்வோருக்கு - வாழ்வாதாரத்தைக் கொண்டோருக்கு  (வாடகை ஓட்டோ, வாடகை கார், வாடகை வான், பேருந்துகள் மற்றும் நடமாடும் வியாபாரிகள் போன்றோருக்கு) அதற்கேற்ப எரிபொருளை வழங்குதல். (கிடைக்கும் எரிபொருளுக்கேற்ப இந்தப் பகிர்வைச் செய்வது).

(உ)  அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகளுக்கு அவர்களுக்குரிய  பங்கீட்டின் அடிப்படையில் வழங்கலைச் செய்தல். இதில் ஒவ்வொரு தரப்புக்கும்  உரிய நாட்களையும் கூட ஓரளவுக்கு அறிவிக்கலாம். ஆனால், எரிபொருள் கப்பல்  வரவில்லை என்றால் இதில் குழப்பங்களும் நெருக்கடிகளும் ஏற்பட வாய்ப்புண்டு.  அதையும் உரிய முறையில் சிந்தித்தால் முகாமைத்துவம் செய்ய முடியும்.

(ஊ)  இப்பொழுது வாகனங்களை  எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு  எடுத்துச் சென்றே  எரிபொருளை நிரப்ப முடியும் - பெற முடியும் என்ற நிலை  உள்ளது. இதில் மின்பிறப்பாக்கிகள் (ஜெனறேற்றர்கள், படகுகள் போன்றவற்றை  எப்படி எடுத்துச் செல்ல முடியும்? ஆகவே அவற்றுக்கான எரிபொருள்  விநியோகமும்  நடைபெற வேண்டும்.

(எ)  எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மேலதிகமாகச் சேவையில் ஈடுபடுத்துவதற்கு  உரிய அனுமதியை அரசாங்கத்திடம் பெற்றுக் கொண்டு அவர்களை எரிபொருள் நிரப்பு  நிலையங்களில் பங்கீட்டு விநியோகத்தில் ஈடுபடுத்துதல். வேண்டுமானால்  இதற்குப் பலமாக பொலிஸ் மற்றும் படைத்தரைப்பை இணைத்துக் கொள்ளலாம்.

இதை  விடவும் வேறு மேலான ஏற்பாடுகள் பிறருடைய சிந்தனையில் இருக்கும். அவற்றை  வரவேற்று இந்தப் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்குரிய  செயற்றிட்டமாக மாற்றிக் கொள்ளலாம். தேசிய இடர்  நிலைமையின்போது ஒவ்வொருவரும் பொறுப்பாக எப்படி நடக்க வேண்டும் என்பதைக்  குறித்து அறிவுரைப்பது. பொறுப்பாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்வதன்   மூலமே நாம் இந்த நெருக்கடிக் காலத்தையும் நெருக்கடி நிலைமையையும் கடக்க  முடியும் என்ற உண்மையை அடிப்படையை புரிய வைக்க வேண்டும்.

2. விவசாயம் மற்றும்  கடல் தொழில் (அதாவது உணவு உற்பத்தியில் ஈடுபடுத்துதல்)

(அ)  ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரதேசத்திலும் உள்ள  விவசாயத்துறையினரை ஒருங்கிணைத்து அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு  புதிய - சாத்தியமான திட்டங்களை உருவாக்குதல்.

(ஆ) மாவட்டத்திலும் பிரதேசத்திலும் வெளிச் சூழலிலும் உள்ள துறைசார் நிபுணர்கள், அனுபவமுடையோரின் பங்களிப்பு, பங்கேற்புடன் புதிய - சாத்தியமான  திட்டங்கங்களை நடைமுறைப்படுத்துதல்.

(இ) எரிபொருள், உரம், மருந்து வகைகள் எதுவும் எதிர்பார்க்கின்ற அளவுக்குக்  கிடைக்காது. ஆகவே இதைப் புரிந்து கொண்டு மாற்றுப் பொறியமைப்பைப் பற்றிச்  சிந்தித்தலும் அவற்றில் ஈடுபடுதலும்.

கருணாகரன் 

Comments