எல்லோருக்குமான நெருக்கடி இது இணைந்துதான் மீண்டெழ முடியும் | தினகரன் வாரமஞ்சரி

எல்லோருக்குமான நெருக்கடி இது இணைந்துதான் மீண்டெழ முடியும்

மீண்டும் பஞ்சமொன்று ஏற்படுமாயின், அதனை முன்னே உணர்ந்து செயற்படும் பக்குவமும் அனுபவமும் எங்கள் மக்களிடம் உள்ளது. பல இளையோர்கள் விவசாயத்தில் நாட்டம் காட்ட ஆரம்பித்துள்ளார்கள்.  தன்னிறைவு பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஆரம்ப நடவடிக்கைகள் இப்போது யாழ்ப்பாணத்தில் தொடங்கியுள்ளன என்கிறார் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன். தினகரனுக்கு வழங்கிய நேர்காணலில் அவர்தெரிவித்த கருத்துக்கள்...

கே: இலங்கையில் மிகப்பாரிய பஞ்சமொன்று ஏற்படவுள்ளது. அதைப்போன்று யாழ்ப்பாணமும் பாரிய பஞ்சத்தை எதிர்கொள்ளவுள்ளது. தென்னிலங்கை போன்று யாழ்ப்பாணத்திலும் பாதிப்பு ஏற்படுமா?

எமது வரலாற்றும் அனுபவங்களும் இதற்கான பதிலை வழங்கியுள்ளன. நாடு பஞ்சத்தை எதிர்கொண்ட கடந்தகால சந்தர்ப்பங்களில் எல்லாம் முதலில் மீண்டெழுந்த பிரதேசங்களாக தமிழர் பிரதேசங்கள் விளங்கின. அதிலும் யாழ் மாவட்டம் முன்னுதாரணமாக திகழ்ந்தது. யுத்தகால பொருளாதார தடைகளின்போதும் யாழ் மாவட்டம் தன்னிறைவோடு செயற்பட்டது. அதற்கான காரணம் எமது மாவட்டத்தில் விவசாயம், கடற்தொழில், கிராமிய கைத்தொழில்கள், சுயசார்பு தொழில்கள் என்பவற்றில் மக்கள் சம அளவில் ஈடுபட்டு வந்தனர். அத்தோடு இவற்றுக்கு துணை சேர்க்கும் வகையில் கல்வியையும் எங்கள் மக்கள் கட்டிக்காத்து வந்தனர். ஸ்ரீமாவோ அம்மையார் கால பஞ்சத்தின்போது எங்கள் விவசாய பெருமக்கள் தமக்கான கல்வீடுகளை தமது விவசாய வருமானத்தில் கட்டும்வகையில் பொருளீட்டியிருந்தனர்.

அதேபோல போர் நிலவிய காலத்தில் புலம்பெயர் உறவுகள் எங்கள் மாவட்டத்தையும் மக்களையும் பொருளாதார ரீதியில் காப்பாற்றி வந்திருந்தனர். அது இப்போதும் எங்கள் மக்களின் பலமாகவே அமைகிறது.

மீண்டும் பஞ்சமொன்று ஏற்படுமாயின், அதனை முன்னே உணர்ந்து கொண்டு செயற்படும் பக்குவமும் அனுபவமும் எங்கள் மக்களிடம் உள்ளது. பல இளையோர்கள் விவசாயத்தில் நாட்டம் காட்ட ஆரம்பித்துள்ளார்கள். வீட்டுத்தோட்டங்களை ஆரம்பித்துள்ளார்கள். தென்னைசார் கைத்தொழில்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார்கள். தன்னிறைவு பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஆரம்ப நடவடிக்கைகள் இப்போது யாழ்ப்பாணத்தில் தொடங்கியுள்ளன. இதற்கு பக்கபலமாக புலம்பெயர் முதலீடுகளும், கல்வியறிவும் பெரிதும் கைகொடுக்கின்றன. குறிப்பாக IT தொழில்துறையில் ஈட்டும் வருமானத்தை விவசாயத்தில் முதலீடு செய்யும் பல இளைஞர்களை யாழ் மண்ணில் சந்தித்துள்ளேன். அவர்கள் பெரும் நம்பிக்கை தருகிறார்கள்.

எரிவாயு அடுப்புகளுக்கு பழக்கப்பட்டிருந்தாலும் விறகை மீண்டும் பாவிக்க ஆரம்பித்துள்ளனர். ஒப்பீட்டளவில் தென்னிலங்கையை விட எமக்கு மாற்றீடுகளுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாலும், கடந்த கால அனுபவங்களைக் கொண்டு சுதாகரிக்கும் பக்குவம் இருப்பதாலும் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டாலும் அதிலிருந்து மீண்டுவர யாழ்ப்பாண மாவட்டம் தயாராகவே இருக்கும். மக்கள் பிரதிநிதியாக தற்சார்பு பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை எமது மாவட்டத்தில் ஆரம்பிக்க பெரிதும் பங்களிப்பு வழங்கியுள்ளேன்.

கே:    இந்த நெருக்கடி நேரத்தில் வடபுலம் முழு நாட்டுக்கும் வழங்கும் பங்களிப்பு எவ்வாறு இருக்கும்?

நிச்சயமாக பெரியளவில் பங்களிப்பை வழங்கும். இறக்குமதி பொருட்களை கட்டுப்படுத்தி அவற்றை நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வாய்ப்பு வடபுலத்துக்கு உள்ளது. உர இறக்குமதியை தொடர்ந்து வருகிற பெரும்போகத்தில் நெல் வயல்கள் அதிக விளைச்சலை தருமென எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று வெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறி வகைகள், திராட்சை உற்பத்தி என விவசாயம் சார்ந்த பங்களிப்பை நாட்டுக்கு வடபுலம் வழங்கும். விவசாய பிரதி அமைச்சராக நான் செயற்பட்டபோது, உருளைக்கிழங்கு மற்றும் திராட்சை செய்கையை யாழ் மாவட்டத்தில் ஆரம்பித்து வைத்திருந்தேன். அதன் நற்பலன்களை இந்த காலகட்டத்தில் எம்மால் பெறமுடியும். அதேபோன்று விவசாய குளங்களை அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் புனரமைத்துள்ளோம். எனவே தேவையான அளவு உரமும் எரிபொருளும் எமது விவசாயிகளுக்கு கிடைக்கும் பட்சத்தில் விவசாய பங்களிப்பை எமது மக்கள் வழங்குவார்கள்.

அதேபோன்று புலம்பெயர் உறவுகளின் முதலீடுகள், அவர்கள் நாட்டுக்கு அனுப்பிவைக்கும் அந்நிய செலவாணி என்பனவும் எமது நாட்டுக்கு பலம் சேர்க்கும். ஒப்பீட்டளவில் அந்நிய செலவாணியை நுகரும் மக்கட்தொகை நாட்டின் வடபுலத்திலேயே அதிகமாக உள்ளது. அத்தோடு யாழ்ப்பாண விமான நிலையம் செயற்பட ஆரம்பிக்கும் போது சுற்றுலாசார், ஏற்றுமதி வர்த்தகங்கள் ஊடான வருவாயும் எமது பகுதிகளிலிருந்து கிடைக்கும். குறிப்பாக கருவாட்டு உற்பத்தி, தெங்கு சார் உற்பத்திகள், பனைசார் உற்பத்திகள், பற்றிக் ஆடை உற்பத்திகள் போன்ற துறைகள் மீளவும் வேகமெடுக்கும்போது அவற்றினூடாக கணிசமான அளவு வருமானம் கிடைக்கும். அதற்காகவே உற்பத்தி கிராமங்களை நிறுவி ஓர் ஆரம்பத்தை ஏற்படுத்தியுள்ளோம்.

இவற்றோடு உள்ளூர் உற்பத்தியாளர்கள், சந்தைப்படுத்துனர்கள், தொழில்முனைவோர் எமது பிரதேசங்களில் இந்த நெருக்கடிநிலையில் கைகொடுக்க தயாராக இருக்கிறார்கள்.

எனவே பிரதேச மட்டத்தில் ஆரம்பித்து நாடு தழுவிய முன்னேற்றத்தை ஏற்படுத்த எமது பிரதேசங்களை சேர்ந்தவர்கள் நிச்சயம் பங்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கே:    நாடு மிகவும் வங்குரோந்து நிலையை அடைந்துள்ளது. அதற்கான காரணம் என்ன என்பதை கலக்காது சொல்வீர்களா?

பலர் பல்வேறு காரணங்களை சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை இழந்தவற்றை நினைத்து நினைத்து காலத்தை வீணடிப்பதை விட இழந்த இடத்திலிருந்து மீண்டெழுந்து வருவதே வெற்றியாகும். குறிப்பாக பொருளாதார வெற்றி என்பது எல்லாருக்கும் தேவையாக உள்ளது. நாடும் இன்று அதையே எதிர்பார்த்து நிற்கிறது. எனவே பொருளாதார ரீதியாக அடுத்தவரை சார்ந்திருக்கும் நிலையை விட்டு தமக்கான சுயசார்பு பொருளாதார கட்டமைப்பை வளர்த்தெடுப்பது அவசியம். அதில் நாமெல்லோரும் தவறிழைத்துவிட்டோம். அதன் பிரதிபலன்களை இப்போது எதிர்கொண்டுள்ளோம். எங்கள் நாடு அனைத்து வளங்களையும் கொண்டிருந்தாலும் அவற்றை சரிவர பயன்படுத்தி முன்னேற தவறிவிட்டோம். கடந்தகால போர், அதனை தொடர்ந்த  அரசியல் போக்குகள் என்பன நாட்டை தடுமாற வைத்துள்ளது. இனி அந்த தவறுகளை செய்யாதிருக்க வேண்டும் என அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன்.

கே:    இந்த நெருக்கடி நிலையில் தமிழ் தரப்பு அரசியல் மற்றும் சமூக பங்களிப்பை போதிய அளவு அளிக்கவில்லையே. இதற்கான காரணம் என்ன?

கடந்தகால அனுபவங்களாக இருக்கலாம். அல்லது அரசியல் கொள்கைநிலைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் இப்போதைய சூழலில் அரசியல் நிலைப்பாடுகளை ஒரு பக்கமாக வைத்துவிட்டு மக்களை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். நாமெல்லோரும் இந்த நாட்டினை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்புக்குரியவர்கள். கடந்த காலங்களில் எமது பெற்றோர்கள் எவ்வாறு எம்மை வளர்த்தெடுத்தார்களோ அதே பொறுப்பும் கடமையும் எமக்கும் உண்டு. அதை உணர்ந்து நாம் செயற்பட வேண்டும். இயற்கை அனர்த்தங்களின் போதேல்லாம் எங்கள் தரப்புகள் எவ்வாறு கடந்தகாலங்களில் நாடு முழுவதுக்கும் பங்களித்தார்கள் என்பதை நினைவில்நிறுத்தி செயற்பட வேண்டும். இது அரசியல் பிரச்சினையல்ல. இதனை வைத்தும் அரசியல் செய்ய நினைக்க கூடாது. அது மக்களுக்கு மீண்டும் மீண்டும் செய்யும் நம்பிக்கை துரோகமாக மாறிவிடும். இப்போது மக்கள் பிரதிநிதிகள் ஒன்றாக நின்று மக்களின் பொருளாதார மீட்சிக்காக செயலாற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

கே:    காலிமுகத்திடல் போராட்டங்கள் பற்றிய உங்கள் கருத்து என்ன?

நாட்டின் ஜனநாய மாண்பை உலக நாடுகள் உணர்ந்து கொள்ளும் ஒரு சந்தர்ப்பமாக கருதுகிறேன். மக்களுக்கு உரித்தான கருத்து சுதந்திரத்தை, அரசை நல்வழிப்படுத்தும் உரிமையை மிக பொறுமையாக அமைதி வழியில் முன்னெடுக்கும் பாங்கானது சிறந்த முன்னுதாரணமாக உள்ளது. போராட்டத்தில் கலந்துகொண்டிருப்போர் இந்த நாட்களில் பல்வேறுபட்ட விடயங்களை சாத்தியப்படுத்தியுள்ளனர். குறிப்பாக இன முரண்பாடு தொடர்பாக விளக்கத்தை ஆரோக்கியமான உரையாடலாக மாற்றியுள்ளனர். கடந்த கால அரசியல்வாதிகளால் சாத்தியப்படுத்த முடியாத விடயங்களாக கூட அவை அமைந்திருந்தன. நாட்டை முன்னேற்றுவதற்கான யோசனைகளை வெளிப்படுத்துகிறார்கள். இந்த ஆரோக்கியமான உரையாடல் சூழலானது வளர்ச்சியடைந்த நாடுகளில் காணக்கூடியது. அங்குள்ள அரசுகள் மக்களின் பிரதிபலிப்பை இப்படியான சந்தர்ப்பங்கள் ஊடாகவே பெற்றுக்கொள்ளும். அவை நாட்டின் வெற்றிகரமான ஆட்சிமுறைக்கு உதவுவதாய் அமையும். அத்தகைய சூழலாகவே இதனை நான் கருதுகிறேன். இது அரசியல் வடிவம் பெறாமல் மக்கள் மயப்பட்டதாக தொடர வேண்டியதும் அவசியமானதாகும்.

கே:    தமிழர்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பது இந்த சமயத்தில் சரியானதா?

முற்றுமுழுதும் தவறானது. அரசியல் நிலைப்பாடுகளை களைந்தெறிந்து நாம் ஒன்றாக நின்று நாட்டை பொருளாதார ரீதியாக மீட்டெடுக்க வேண்டிய தருணமிது. எங்கள் தலைமுறைக்கு பொருளாதார பலத்தை நாம் கொடுக்க வேண்டியது எமது கடமை. அதை நாம் தட்டிக்கழிப்பதும், வேடிக்கை பார்ப்பதும் பெரும் தவறு.

வெற்றிகரமான உலக நாடுகளை பார்த்தீர்களானால், தேர்தலுக்கு பின்னதாக அனைத்து கட்சிகளும் பிரதிநிதிகளும் மக்கள் முன்னேற்றத்தையும் தேவைகளை தீர்க்கும் பொறுப்பையும் ஏற்று செயற்படுவார்கள். ஆனால் எங்களில் சிலர் அடுத்த தேர்தலுக்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மக்களையும் அதனை நோக்கிய சிந்தனையோடு வைத்திருக்க விரும்புகிறார்கள். இது இந்த சூழ்நிலைக்கு பொருத்தமில்லாதது. வேடிக்கை பார்க்கும் மனிதர்களாக நாம் நிற்பதை விடுத்து திட்ட வகுப்பில், அவற்றை நடைமுறைப்பட்டுதலில் கூட்டுப்பொறுப்போடு  செயலாற்ற வேண்டும் என்பதே எனது எண்ணப்பாடு. இதன் காரணமாகவே எனது கட்சி எதிரணியில் இருந்தாலும், அரசை வழிப்படுத்தும் பொறுப்பில் நான் இணைந்து செயற்படுகிறேன். இது எம் எல்லோருக்குமான நெருக்கடி. இதிலிருந்து நாம் இணைந்துதான் மீண்டெழ முடியும்.

கே: யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொண்டால் எவற்றை பிரதான பிரச்சினையாக கருதுகின்றீர்கள்?

போர் நடந்த பிரதேசமொன்று எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சினைகளும் யாழ்ப்பாணத்துக்கும் உள்ளன. அவை இன்னும் தீரவில்லை. எமது மாவட்டத்தின் சுமார் 40ஆண்டுகால முன்னேற்றம் பாதிப்படைந்த நிலை காணப்படுகிறது. இந்நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியானது யாழ் மாவட்டத்துக்கு பேரிடியாகவே பார்க்கிறேன். யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவந்த உட்கட்டுமான  திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. புதிய தொழில் வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. துரித அபிவிருத்திக்கான அனைத்து பாதைகளிலும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. மக்களின் புதிய திட்டங்கள் அனைத்தும் ஆரம்பிக்கப்படாமல் இருக்கின்றன. எங்கள் மக்களும் எரிவாயுக்காகவும் எரிபொருளுக்காகவும் வீதிகளில் காத்திருக்கிறார்கள். விவசாயிகள் மண்ணெண்ணைக்காக காத்திருக்கிறார்கள். மக்களின் அன்றாட வாழ்வியலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எரிபொருட்களும் உரங்களும் எமது மக்களுடைய உடனடிக் கோரிக்கையாக இருக்கின்றன. அவற்றை பெற்றுக்கொடுப்பதற்கான அழுத்தங்களை நான் மேற்கொண்டுள்ளேன்.

கே:      மக்கள் எதிர்க்கும் தலைவர்கள் அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என்று கருதுகின்றீர்களா?

இது ஜனநாயக நாடு. இதில் அரசியலில் யார் இருக்க வேண்டும், யார் வெளியேற வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதுவே சரியானதுமாகும். ராஜபக்ச தரப்பின் அரசியலை மக்கள்  ஆதரித்திருந்தனர். இப்போது எதிர்ப்பலை இருப்பதாக தென்படலாம். ஆனால் மக்கள் முடிவை யாராலும் முற்கூட்டியே தீர்மானிக்க முடியாது. மக்கள் முடிவெடுக்கும்போது அதனை ஏற்பதுதான் மக்கள் பிரதிநிதிகளின் கடமை.

கே:    இது அரசியல் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுமா?

அரசியல் பிரச்சினைக்கான முற்றுப்புள்ளியை நோக்கிய ஒரு அடித்தளத்தை உருவாக்கும் வாய்ப்புள்ளது. இப்போது இன முரண்பாடுகள் தொடர்பாக உரையாடல்கள் ஆரம்பித்துள்ளன. நாடு முழுவதும் ஒரே மாதிரியான நெருக்கடியை சந்தித்துள்ளது. எல்லோரும் எல்லோரைப்பற்றியும் பேசுகிறார்கள். கடந்தகால அரசியல் முரண்பாடுகள் தொடர்பில் பரஸ்பர புரிதல்கள் வடக்கிலும் தெற்கிலும் ஏற்படத் தொடங்கியுள்ளது. தவறிழைத்த தருணங்கள் தொடர்பான பார்வைகள் அகலமாகியுள்ளன. அதே தவறுகள் மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற பக்குவம் மக்களிடத்தில் ஏற்படத்தொடங்கியுள்ளது. நெருக்கடியான மன அழுத்தங்கள் கூடிய இந்த சூழ்நிலையிலும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த அபிப்பிராய மாற்றங்களும் உரையாடல்களும் முரண்பாடுகளற்ற இன ஒற்றுமையை ஏற்படுத்தும் அடித்தளங்கள் என நம்புகிறேன். இதனை நேர்மையான முறையில் கட்டியெழுப்புவதை அரசியல் தலைமைகள் உறுதி செய்ய வேண்டும்.

கே:  இந்த விடயத்தில் நீங்கள் சொல்லும் தீர்வு என்ன?

உழைப்பை நம்பி நேர்மையுடன் செய்யும் பணிகளில் செயலாற்ற வேண்டும். இப்போதைய சூழலில் சிக்கனத்தை கடைப்பிடித்து கிடைக்கும் மீதியை முதலீடுகளாக்கி அதிலிருந்து பொருளாதார மீட்சியை பெற எல்லோரும் செயற்பட வேண்டும்.

உள்ளூர் உற்பத்திகளை ஏற்றுமதி வருமானத்தை பெறும் வகையில் அதிகரித்து அதனூடான அந்நிய செலவாணியை பெறுதல், உள்ளக பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்துதல், சுற்றுலாத்துறையை முழுவீச்சுடன் செயற்பட வழிவகை செய்தல் மற்றும் அதற்கான முதலீடுகளை அதிகரித்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பெறுவதில் கூடிய கவனத்தை திருப்புதல், திறன் மிக்க உயர்கல்விக் கோட்பாட்டை வரையறை செய்தல், உற்பத்தி வலயங்களை அப்பிரதேசங்களின் வளங்களை மையப்படுத்தி அதிகரித்தல், தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தலும் சந்தை வாய்ப்பை உறுதி செய்தலும் உள்ளிட்ட பல விடயங்களை முன்னெடுப்பதே இப்போதைய நெருக்கடி நிலையிலிருந்து நிரந்தரமாக மீள வாய்ப்பாக அமையும்.

இவ்விடயம் தொடர்பாக ஏனைய தமிழ் பிரதிநிதிகளை விட நான் அதிக அக்கறை கொண்டு செயற்படுகிறேன். திட்ட முன்மொழிவுகள், ஆலோசனை கூட்டங்கள், சந்திப்புக்கள் என்பவற்றில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறேன். அதே நேரத்தில் ஏனைய தமிழ் பிரதிநிதிகளையும் இவ்விடயத்தில் கைகோர்க்குமாறு அழைப்பு விடுக்கிறேன்.

கே:  ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட்டால் செல்வந்த நாடுகள் எங்களுக்கு உதவி செய்யுமென நம்புகிறீர்களா?

ஜனநாயக பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நாடுகளில்தான் செல்வந்த நாடுகள் முதலீடுகளையும், உதவிகளையும் செய்ய முன்வரும். அத்தகைய ஜனநாய பாதுகாப்பை இலங்கை உறுதி செய்யும் நடவடிக்கைகள் இப்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை குறைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகிறது. தனியொருவருக்கான அதிகார குவிப்பை மக்கள் பிரதிநிதிகள் நிறைந்த சபையான பாராளுமன்றத்திடம் கொண்டுவருவது ஒரு ஜனநாய பாதுகாப்பு நடவடிக்கையாகும். ஆனால் இவையனைத்தையும் தாண்டி, பொருளாதார நிலைபேற்றை உறுதிப்படுத்தி, அதற்கான கொள்கை வகுப்புகளை தீட்டினால் மாத்திரமே செல்வந்த நாடுகளின் உதவிகளை எம்மால் அதிகரிக்கமுடியும். அந்தப் பணிகளை காலம்தாழ்த்தாது அரசு முன்னெடுக்க வேண்டும். தாமதிக்கும் தருணங்கள் அனைத்தும் எமக்கான உதவிகளை தடுப்பதாகவே அமையும்.

சுமித்தி தங்கராசா...?

Comments