21 ஆவது திருத்தத்தை சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்கள் எதிர்பார்த்தபடி உள்ளன | தினகரன் வாரமஞ்சரி

21 ஆவது திருத்தத்தை சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்கள் எதிர்பார்த்தபடி உள்ளன

நாம் 21ஆவது திருத்தத்தைக் கொண்டு வருகிறோமா என்பதை சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச நன்கொடை நிறுவனங்களும் இன்னும் பல நாடுகளும்  எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். இவ்வாறான மாற்றங்களை அவர்கள் நேரடியாகக் கோராவிட்டாலும் நாட்டின் அரசியல் கட்டமைப்பு மாற்றம் அவசியம் என்பதை அவர்கள் கோடிட்டுக் காட்டுவர். இவ்வாறு துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா தெரிவித்தார். நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதாயின், அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது அவசியமானது எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா தெரிவித்தார். 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வரும்முயற்சிகள் உள்ளிட்ட தற்போதைய நிலைவரங்கள் குறித்து அவர் தன்னுடைய கருத்துகளைஎம்முடன் பகிர்ந்து கொண்டார்.

கே: தற்பொழுது காணப்படும் சூழ்நிலையில் 21ஆவது திருத்தம் போன்ற புதிய அரசியலமைப்பு திருத்தம் நாட்டுக்குத் தேவையானதா?

பதில்: அத்தகைய திருத்தம் நாட்டிற்கு மிகவும் தேவையாக உள்ளது. இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சமூகத்தின் பல துறைகளின் கோரிக்கை இதுவாகத்தான் இருக்கிறது. அத்துடன், சர்வதேச சமூகமும் இவ்வாறானதொரு திருத்தத்தைக் கோருவதுடன், எமது நாட்டின் அரசியல் கட்டமைப்பு அதற்கமைய மாற்றியமைக்கப்பட வேண்டும் என அவர்கள் கருதுகின்றனர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என சிலர் கூறுகின்றனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது மாத்திரமன்றி 19ஆவது திருத்தத்தை அரசியலமைப்பு ஏற்பாடுகளுடன் மீட்டெடுப்பதை உறுதி செய்வதற்காக, இரட்டைக் குடியுரிமை பெற்ற எவரும் ஜனாதிபதியாகவோ, அமைச்சராகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராகவோ முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதும் அவர்களுடைய நிலைப்பாடாக உள்ளது. பல அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருகின்றன. சுயாதீன ஆணைக்குழுக்களை பலப்படுத்த வேண்டும். அதேநேரம், கணக்காய்வு ஆணைக்குழுவை மீளக் கொண்டு வருவது நாம் 21ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கிய ஒரு முக்கிய அம்சமாகும்.

உண்மையில், அரசாங்கத்தின் அன்றாட விவகாரங்களில் தலையிடக் கூடாது என்பதற்காக நீதி அமைச்சர் கொண்டு வரும் அரசியலமைப்புத் திருத்தமே இதுவாகும்.  நாம் 21ஆவது திருத்தத்தை கொண்டு வருகிறோமா என்பதை சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச நன்கொடை நிறுவனங்களும் இன்னும் பல நாடுகளும்  எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். இவ்வாறான மாற்றங்களை அவர்கள் நேரடியாகக் கோராவிட்டாலும் நாட்டின் அரசியல் கட்டமைப்பு மாற்றம் அவசியம் என்பதை அவர்கள் கோடிட்டுக் காட்டுவர்.

கே: எனினும், அரசியலமைப்புத்                            திருத்தத்துக்குப் பதிலாக பொருளாதார நெருக்கடிக்கே அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என ஆளும் கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூறி வருகின்றனர். இதில் உண்மை இருப்பதாக நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்: பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது என்பதை அமைச்சரவை அமைச்சர் என்ற ரீதியில் நான் நன்கு அறிவேன். நாங்கள் பல்வேறு மன்றங்களில் சந்தித்து, எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவுக்காக வரிசைகள் ஏதும் இல்லாத சூழலை உறுதி செய்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். எனினும் 24மணித்தியால நேரத்திற்குள் முடிவுகளை அடைய முடியாது. சர்வதேச நாணய நிதியத்தின் நம்பிக்கையைப் பெற நமது கடனை மறுகட்டமைக்க வேண்டும். அதற்கு நாம் பல பொருளாதார நடவடிக்கைகளை மறுசீரமைக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியம் என்பது எமது திறைசேரிக்குப் பணத்தைக் கொட்டும் ஒரு அமைப்பல்ல.

நமது எதிர்காலத் திட்டங்கள் என்ன, பொருளாதாரத்தை எப்படி வலுப்படுத்தப் போகிறோம் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் செலவினங்களைக் குறைப்பது மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களை எவ்வாறு நிர்வகிக்கப் போகிறோம் என்பதைத் தெரிவிக்க வேண்டும். அதேபோல், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற பொருளாதார மீட்புத் திட்டத்தை வழங்க வேண்டும். இப்போது அவர்கள் இலங்கையை மிகவும் சாதகமாக பார்க்கின்றனர். அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் மக்களும் இதைப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். இலங்கையின் மீட்புக்கான நிதியை சர்வதேச நாணய நிதியம் வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம், பின்னர் எங்களுக்கு உதவி செய்யும் மற்ற சர்வதேச நன்கொடையாளர்களிடம் நாங்கள் செல்லலாம்.

எவ்வாறாயினும், இந்த நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் அர்ப்பணிப்பு எங்களுக்கு மிகவும் அவசியம். சீனா கூட சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்று அவர்களின் நம்பிக்கையைப் பெறச் சொல்கிறது. நிறைய பேருக்கு இது தெரியாது. சிலருக்கு இது தெரிந்தாலும் சொல்ல விரும்புவதில்லை. எனவே, இதை நாம் அப்படித்தான் அணுக வேண்டும்.

இந்த நெருக்கடியை இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் தீர்க்க முடியாது, ஆனால் அரசாங்கத்தின் ஒவ்வொரு கையும் நிலைமையை சமாளிக்க கடுமையாக முயற்சிக்கிறது. உதாரணமாக, விவசாயிகள் உரம் கேட்கிறார்கள். பல பிரச்சினைகள் மற்றும் சிரமங்களுடன், இப்போது இந்திய கடன் வரியிலிருந்து பணத்தைப் பெற முடிந்தது, ஆனால் இந்தியாவிடம் உரம் இல்லை. எனவே, ஓமானில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை நான் புரிந்து கொள்கிறேன், ஆனால் இலங்கைக்கு உரங்களை கொண்டு வர ஓமானுக்கு ஒரு கப்பலை அனுப்ப வேண்டும். பின்னர் அவற்றைப் பொதி செய்து விவசாயிகளிடையே விநியோகிக்க வேண்டும். இது 24மணி நேரத்தில் நடக்காது. அதற்கு சிறிது காலஅவகாசம் தேவை ஆனால் உரம் சம்பந்தமாக நாம் சரியான பாதையில் செல்கிறோம். அடுத்த பருவத்திற்கான உரத்திற்கான பணத்தை உலக வங்கி ஏற்கனவே உறுதி செய்துள்ளது. விவசாய அமைச்சரிடமிருந்து நான் புரிந்து கொள்வது என்னவென்றால், அவர் கொள்முதல் செயல்முறையைத் தொடங்கியுள்ளார். அடுத்த பருவத்தில் உரம் சம்பந்தமாக எந்தப் பிரச்சினையும் இருக்காது. எரிவாயு மற்றும் எரிபொருளுக்காக பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மத்திய வங்கி மற்றும் பிற வங்கிகளிடம் போதுமான டொலர்கள் இல்லாததால் இதனைத் திரட்டுவதற்குக் கடுமையாக முயற்சிக்கிறோம்.

கே: 21ஆவது திருத்தம் நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை இல்லாதொழிக்க வழி வகுக்கும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: ஓரளவிற்கு. அரசியல் ஸ்திரமின்மையின் விளைவாக, நாட்டில் பொருளாதார ஸ்திரமின்மை மற்றும் சமூக உறுதியற்ற தன்மை காணப்படுகிறது. இந்தக் காரணியை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும். 21ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கோரி வீதியில் இறங்கிப் போராடும் மக்களின் கோரிக்கையும் இதுதான். உதாரணமாக, அரசாங்கக் கட்சிகளுக்குள்ளேயே 21ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக ஏராளமான பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் மற்றும் முழு எதிர்க்கட்சியும் அதற்கு ஆதரவாக உள்ளது.

இதைப் பற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்க சட்டப் பேரவைக்கு அவகாசம் வேண்டும் என்று நான் கூறுகிறேன்.

மூன்றில் இரண்டு பங்கு இருந்தால் நிறைவேற்றப்படும், இல்லை என்றால் நிராகரிக்கப்படும். எனவே, இந்தத் திருத்தத்தை யார் நிறைவேற்ற விரும்பினார்கள், யார் அதை நிறைவேற்ற விரும்பவில்லை என்பதை நாடு அறியும்.

21ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவோ அல்லது எதிர்க்கவோ ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் சுதந்திரம் உள்ளது.

அதுதான் தற்போது அவர்களுக்கு இருக்கும் ஜனநாயக உரிமை. எனவே, அந்த உரிமையை உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்கு நாம் ஏன் அனுமதிக்கக் கூடாது? பாராளுமன்றம் என்று வரும் போது அதை ஏற்பதும் அல்லது நிராகரிப்பதும் உறுப்பினர்களின் கையில் உள்ளது.

கே: நிறைவேற்று  அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை விட பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. நீங்களும் அதே பார்வையில் இருக்கிறீர்களா?

பதில்: அது அவ்வளவு எளிதல்ல. 21ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் சில நிறைவேற்று அதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கு மாற்றப்படும். அனைத்து நிறைவேற்று அதிகாரங்களையும் பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும். செல்ல வேண்டிய தூரம் அதுதான். முதலாவதாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு அரசியலமைப்பு அல்லது திருத்தம் எதுவாக இருந்தாலும் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அதன் பிறகு, வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

மூன்றில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை ஏற்றுக் கொண்டு, சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் வழங்கினால் இதனை நிறைவேற்ற முடியும். எனவே, நாம் அந்த செயல்முறைக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு செய்யாமல், பொதுவாக்கெடுப்பில் மக்களின் விருப்பத்தை கேள்விக்குட்படுத்த வேண்டுமா, பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தை பாராளுமன்றத்தில் திணிக்க வேவண்டுமா என்று தெரியவில்லை. வெவ்வேறு நபர்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். இறுதியில், இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மற்றும் ஒரு தரப்புக்கு வாக்கெடுப்பில் வாக்களிக்கும் 51சதவீத மக்களால் முடிவு செய்யப்படும்.

அர்ஜூன்

Comments