முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடியாக விளங்கிய அ.ந. கந்தசாமி | தினகரன் வாரமஞ்சரி

முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடியாக விளங்கிய அ.ந. கந்தசாமி

'தற்காலத்திலே தங்களை முற்போக்கு எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னோடியாக அ. ந. கந்தசாமி விளங்கினார். ரத்த உறவு என்னும் கதை அவரது அரசியற் போக்கினைக் காட்டும் வகையில் அமைந்திருக்கிறது. கவிதை எழுதும் ஆற்றல் அவரிடமுண்டு. கவீந்திரன் என்ற புனைபெயரில் துறவியும் குஷ்டரோகியும்  போன்ற சில நல்ல கவிதைகளை எழுதியுள்ளார்.'

அ.ந கந்தசாமி, சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், கவிஞர், சிறுவர் இலக்கியப் படைப்பாளி, கட்டுரையாளர், நாடகாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகங்கள் கொண்டு இயங்கியவர்.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் நடராஜா கௌரியம்மா தம்பதியருக்கு மகனாக 08-.08.-1924அன்று அ. ந. கந்தசாமி பிறந்தார்.  இவருக்கு ஐந்து வயதாக இருந்தபோதே தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். தாய் கௌரியம்மாவும் தந்தை இறந்து 41ஆம் நாள் இறந்துவிட்டார்.

தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கற்ற கந்தசாமி சிறிதுகாலம் அளவெட்டி சென்று பாட்டியுடன் வாழ்ந்து வந்தார். அங்கு தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் மீண்டும் யாழ். இந்துக் கல்லூரியில் 10ஆம் வகுப்புவரை கல்வி கற்றார்.

அளவெட்டியில் வாழ்ந்ததால் தன் பெயரில் முன்னொட்டாக 'அ' என்பதையும், தந்தையின் பெயரின் முதலெழுத்தான 'ந' என்பதையும் இணைத்து அ. ந. கந்தசாமி என்று தன்னை அழைத்துக் கொண்டார். இவர் பதினான்கு வயது முதலே எழுதத் தொடங்கினார்.  ஈழகேசரி நடத்திய பேச்சு, கதை, கட்டுரைப் போட்டிகளில் பங்குபற்றி கதைப் போட்டியில் முதற்பரிசும் பெற்றார்.

அ.ந.கந்தசாமியின் சிறுகதைப் பிரவேசம் ஈழகேசரி மூலம் நிகழ்ந்தது. ஈழகேசரியில் அவரது முதலாவது சிறுகதை குருட்டு வாழ்க்கை (1941) வெளிவந்தபோது இவருக்கு வயது பதினேழு. இவர், பல்வேறு இதழ்களிலும் நாற்பது சிறுகதைகள்வரை எழுதியுள்ளார்.

இரத்த உறவு, ஐந்தாவது சந்திப்பு, நாயிலும் கடையர், - ஆகிய கதைகள் இவருக்குப் பெரும் புகழீட்டிக் கொடுத்தன. முதலிரு கதைகளும் சிங்கள மொழியில் பெயர்க்கப்பட்டு புகழ்பெற்றவை. தேயிலைத் தோட்டவாழ்வு பற்றிய 'நாயிலும் கடையர்' - மிகச் சிறந்த தமிழ்ச் சிறுகதை என பல்வேறு ஈழத்து விமர்சகர்களால் பாராட்டப்பட்டதொன்று.

சிறுகதையைப் போலவே, கவிதைத் துறையிலும் ,வர் வெற்றியீட்டினார். எதிர்காலச் சித்தன் பாட்டு, துறவியும் குஷ்டரோகியும், சத்திய தரிசனம் எனபன சிறந்தவை. 1966ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சாகித்திய மண்டலம் நடத்திய பாவோதல் நிகழ்ச்சியில் அ. ந. கந்தசாமி பாடிய 'கடவுள்  என் சோர நாயகன்| என்ற கவிதை பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.  அந்தக் கூட்டத்தில் குறிப்புரை ஆற்றிய, தென் புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை 'ஒரு நூற்றாண்டிற்கு ஒருமுறைதான் இப்படிப்பட்ட நல்ல கவிதை தோன்றும்' என்று பாராட்டினார்.

'தினகரன் வாரமஞ்சரியில் மனக்கண் என்ற நாவலை அ.ந. கந்தசாமி தொடராக எழுதினார். அந்நாவல் வெளிவந்தபோது ஆயிரக்கணக்கான வாசகர்கள் விரும்பிப் படித்தார்கள். தொடர்கதை மூலம் வாராவாரம் வாசகர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் அ.ந.க இந்த நாவலை எழுதவில்லை. யதார்த்தமாக இருக்கவேண்டும் என்ற நோக்குடன் எழுதினார். மனக்கண் நாவல் இலக்கியத்திற்குக் கிடைத்த அரிய பொக்கிஷம்' எனக் குறிப்பிட்டுள்ளார் அந்தனி ஜீவா, அ.ந.க. ஒரு சகாப்தம் என்ற தனது நூலில்.

மறுமலர்ச்சிக் குழுவின் உருவாக்கத்துக்கு காரணமானவர்களில் ,வரும் ஒருவராவார். ,லங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்றத்துக்கு முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கிய இவர், அச்சங்கத்தின் சங்ககீதத்தையும்  இயற்றினார்.

ஆரம்பகாலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான தேசாபிமானியில் இவர் பணியாற்றினார். பின்னர் சுதந்திரன் இதழில் சேர்ந்து 1949முதல் 1952வரை பணியாற்றினார். 1953இலிருந்து 1963வரை இலங்கைத் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்தார்.

தகவற்துறையில் பணிபுரிந்த காலகட்டத்தில் தகவற்துறையினால் வெளியிடப்பட்ட 'ஸ்ரீலங்கா' இதழாசிரியராகவும் விளங்கினார். அக்காலத்தில் சிங்களச் சட்டத்தின் காரணமாக சிங்களப் பரீட்சை எடுக்காமல் வெளியேறிய இவர், 'டிறிபியூன்| என்ற ஆங்கிலப் பத்திரிகையில் கடமையாற்றினார். அச்சமயம் திருக்குறள் பற்றிய ஆங்கில ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். எமிலி சோலாவின் 'நாநா' (புதினம்), பெர்ட்ராண்ட் ரசலின் 'யூத அராபிய உறவுகள்', 'பொம்மை மாநகர்' என்னும் சீனப் புதினம், ஓ ஹென்றியின் சிறுகதைகள் மற்றும் பல படைப்புகளை மொழிபெயர்த்தார்.

அதன் பின்னர் தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். ஒப்சேர்வர் பத்திரிகையில் உரை திருத்துபவராகவும் சிலகாலம் வேலை பார்த்துள்ளார். பின்னர், வீரகேசரி ஆசிரியர் குழுவில் சிலகாலம் பணியாற்றியுள்ளார்.  வீரகேசரியில் பணி ஆற்றிய காலத்தில் அங்குள்ள அச்சுத் தொழிலாளருக்காக தொழிற்சங்கம் அமைத்துப் போராடினார்.

முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட மாத ஏடான புதுமை இலக்கியம் நவம்பர் 1971இதழில் இவர் எழுதிய நான் ஏன் எழுதுகிறேன்  என்ற கட்டுரையின் ஒரு பகுதி பின்வருமாறு அமைந்துள்ளது.

'எழுத்தாளன் வாழ்க்கையை விமர்சிப்பதுடன் நின்று விடக்கூடாது. அந்த விமர்சனத்தின் அடிப்படையில் வாசகர்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை ஊட்டவேண்டும். அவ்வித நம்பிக்கையில்லாவிட்டால் முன்னேற்றமில்லை. வாழ்வே இல்லை. இவ்வித பிரக்ஞையில் பிறக்காமல் வெறுமனே யதார்த்தத்தை ஒரு சுத்த இலட்சியமாகக் கொண்டு எழுதும்போது நம்பிக்கைக்குப் பதில் அவநம்பிக்கையின் தொனிகளே கேட்க ஆரம்பிக்கலாம். நைந்த உள்ளத்தின் சோகக் குரலாகக் கேட்கும் எழுத்தால் பயனில்லை. நொந்த உள்ளத்தின் செயல் துணிவுகொண்ட வேகக்குரலாக அது ஒலிக்க வேண்டும். வாழ்வதற்கு நேரடியாகவோ, குறிப்பாகவோ, மௌனமாகவோ வழிகாட்டும் எழுத்தே எழுத்து. இந்தக் கருத்துகள் என்னை உந்துகின்றன. அவற்றுக்காகவே நான் எழுதுகின்றேன்.

மனிதன் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவனுக்கு சமுதாயப் பொறுப்பொன்று உண்டு. வெறுமனே உண்ணுவதும், உறங்குவதும், புலனுகர்ச்சிகளில் ஈடுபடுவதும் வாழ்க்கையாகாது. அறிவு வளர்ச்சி பெற்ற மனிதன் ,வற்றோடு வேறு சில காரியங்களையும் செய்ய விரும்புவான். மற்றவர் முகத்தின் புன்னகை, தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் முல்லைமலர் போல் அவனுக்கு இன்பத்தையூட்டும். இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும், துயரமும், அழுகையும், ஏக்கமும், கண்ணீரும், கம்பலையுமாக நாம் வாழுமுலகம் இருக்கிறது. ஏழ்மைக்கும், செல்வத்துக்கும் நடக்கும் போரும், அடிமைக்கும், ஆண்டானுக்கும் நடக்கும் போரும், உயர் சாதியானுக்கும் தாழ்ந்த சாதியானுக்கும் நடக்கும் போரும், அசுர சக்திகளுக்கும், மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் இன்று உலகையே கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போர்களினால் வாழ்வே ஒரு சோககீதமாகிவிட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்துவிட வேண்டும். அதன் பின்தான் போரொழிந்த சமத்துவ சமுதாயம் பூக்கும். அதைப் பூக்க வைக்கும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற கருத்தை உலகின் புகழ்பெற்ற பேனா மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர்'

ஈழத்து சிறுகதை மணிகள் என்ற நூலில் செம்பியன் செல்வன், அ. ந. கந்தசாமி பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: இவரின் எழுத்துக்கள், மானிடவர்க்கத்தின் முன்னேற்றத்தைத் தடைசெய்யும் சாதி, சமய வேறுபாடுகள், ஆண்டான் அடிமை அமைப்பு, வர்க்க வேறுபாடுகள் போன்ற கைவிலங்குகளை அறுத்தெறிந்து சுதந்திரமானதும், சகோதரத்துவமானதும், சமத்துவமானதுமான சகவாழ்வினை வேண்டி நின்றதனாலேயே கலாநிதி க. கைலாசபதி  'கட்டறுத்த புரோமத்தியஸ் என்று கருதப்படும் வகையில் முற்போக்கை முழுமூச்சாகத் தழுவிக்கொண்டவரும் முற்போக்கு இலக்கிய அணியின் மூத்த பிள்ளைகளுள் ஒருவருமான அ.ந.கந்தசாமி|  என்று குறிப்பிடுவதும் கருத்தில் கொள்ளத்தக்கது'

அ.ந. கந்தசாமியின் 'மதமாற்றம்' என்ற நாடகத்தைப் பற்றி பேராசிரியர். க. கைலாசபதி,இதுவே தமிழில் இதுவரை எழுதப்பட்ட நாடகங்களில் ஆகச்சிறந்தது'என்று குறிப்பிட்டுள்ளார்.

பாரதியார் வரலாற்றை ஆராய்ந்து,  பாரதியார் கூறிய யாழ்ப்பாணத்துச் சாமியார் - அல்வாயூர் அருளம்பல தேசிகர் என நிலை நாட்டியவர் அ.ந. கந்தசாமி.

வெற்றியின் இரகசியங்கள் (உளவியல் கட்டுரைகள்) மதமாற்றம் (நாடகம்) என்பன அ.ந. கந்தசாமியின் நூல்களாக வெளிவந்துள்ளன.

அ.ந. கந்தசாமி 14-.02-.1968 அன்று அமரரானார்.

Comments