மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல சோதனைக்கு மேல் வேதனைகளை எதிர்கொண்டிருக்கும் தோட்ட சமூகம் | தினகரன் வாரமஞ்சரி

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல சோதனைக்கு மேல் வேதனைகளை எதிர்கொண்டிருக்கும் தோட்ட சமூகம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வருமானம் என்பது ஆரம்ப காலந்தொட்டே போதுமானதாக இருந்ததில்லை. தோட்ட மக்களுக்கான நுகர்வுப் பொருள் விநியோகம் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் தோட்ட நிர்வாகங்களே கையாண்டு வந்ததால் மக்கள் மத்தியில் சம்பளக் குறைவு என்பது பிரச்சினைக்குரிய சமாச்சாரமாகப் படவில்லை. அதேநேரம் இவ்வாறான கட்டமைப்பு இச்சமூகத்தைக் கட்டுப்பெட்டித்தன வாழ்க்கைக்குப் பழக்கப்பட வைத்தது. எனவே உழைப்புக்கேற்ற ஊதியம் எனும் கோரிக்கை எழவில்லை. ஆனால் 1972களில் அப்போதைய ஸ்ரீமாவோ அரசாங்கம் பெருந்தோட்டங்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்து பொறுப்பேற்றுக் கொண்டது.  

அத்துடன் பெருந்தோட்ட மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படும், தொழில் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்படும் என்றெல்லாம் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. தோட்டங்கள் தோறும் விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தோட்டங்களுக்கிடையிலான போட்டிகளை நகர மைதானங்களில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்து அசத்தப்பட்டது. விளையாட்டு வீரர்களுக்கு வேலை நேர சலுகை காட்டப்பட்டது. இதன் மூலம் தோட்ட நிர்வாகங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்படவும் வழிவகுத்தது. இவ்வாறான காரணங்களால் பெருந்தோட்ட இளைஞர்கள் (தொழிலாளர்கள்) ஈர்க்கப்பட்டனர்.  

எனினும் இந்த முறைமை நாளடைவில் தொய்வடைந்தது. அடியோடு கைவிடப்படலானது. இனவாத நோக்கில் தொழிலாளர்கள் நடத்தப்பட்டார்கள். அந்நியர் கைவசம் பெருந்தோட்டங்கள் இருந்த பொழுது நடைமுறையில் இருந்த உணவு விநியோக முறைகளில் கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டன.  

அக்காலக்கட்டத்தில் நாடு மு ழுவதும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தோட்ட மக்களே. அவர்கள் தாலி முதல் தகரவாளி வரை விற்க வேண்டிய அவலம் ஏற்பட்டது. பட்டினியால் பல இடங்களில் பரிதாபச் சாவுகள் இடம்பெற்றன. தாய்சேய் மரணம் போஷாக்கு குறைப்பாட்டால் அதிகரித்தன. இந்தக் கொடிய அனுபவமே இம்மக்களை வருமான பற்றாக்குறை பற்றிய சிந்தனையைத் தூண்டியது. பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் தமது சுயநல தேவைகளுக்காக தோட்ட மக்களை காட்டிக் கொடுத்தன. இதனைப் பயன்படுத்திக் கொண்ட ஆட்சியாளர் சம்பள நிர்ணய சபை மூலம் அவ்வப்போது சிறு சிறு சம்பள அதிகரிப்பைச் செய்தனர்.  

1992களுக்குப் பின் மீண்டும் சந்திரிகா ஆட்சி பெருந்தோட்டங்களை தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விட்டது. இதன்போது தனியார் கம்பனிகளோடு செய்து கொள்ளப்பட்டது தான் கூட்டு ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் சம்பள நிர்ணய சபை மூலம் தோட்டத் தொழிலாளரது சம்பள அதிகரிப்பு முறைமையை இல்லாமல் ஆக்கியது. இந்த ஒப்பந்த சூத்திரதாரி அமரர் செளமியமூர்த்தி தொண்டமான்.  

2003ஆம் ஆண்டில் மேற்படி ஒப்பந்தத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலோட்டமாகப் பார்த்தால் தோட்டக் கம்பனிகள், தோட்டத் தொழிலாளர் தரப்பு என இருதரப்புக்குமே சமமான விதிகளை கொண்டது போலவே இவ்வொப்பந்தம் தோன்றும். ஆனால் நடைமுறையில் கடந்த வருடம் வரை நடந்து வந்தது என்னவோ கம்பனி தரப்புக்குச் சார்பான சங்கதிகளே. இந்த வேலையிலேயே 1000ரூபா அடிப்படைச் சம்பளக் கோரிக்கையை முன்வைத்தார் அமரர் ஆறுமுகன் தொண்டமான். ஆனால் அவர் உயிர்வாழும் வரை அது ஈடேறவில்லை. இதன் பின்னரான ஆட்சி மாற்றம், ஜீவன் தொண்டமான் இராஜாங்க அமைச்சராக பொறுப்பு ஏற்ற பின்புலத்தில் 1000ரூபா சம்பள அதிகரிப்புக்கு சமிக்ஞை கிடைத்தது. இது சம்பள நிர்ணய சபையின் தலையீட்டால் நடந்தது.  

ஆனால் 1000ரூபா சம்பள அதிகரிப்புக்கு எதிராக கம்பனி தரப்பு நீதிமன்றம் போனது. இந்த வழக்கின் முடிவு இம்மாத இறுதியில் வரவுள்ளது. ஆனால் சம்பள நிர்ணய சபையின் தீர்ப்பை முறையாக கையாள தோட்டக் கம்பனிகள் இதுவரை முன்வரவில்லை. பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து 1000ரூபா நாட்சம்பளத்தை முழுமையாக பெறமுடியாத நிலமையை தோற்றுவித்துள்ளது.  

இது சம்பந்தமாக இ.தொ.கா. எதை எதையோ சொன்னாலும் நடப்பது ஒன்றுமே இல்லை. செந்தில் தொண்டமான் தாம் கம்பனி தரப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் இதைக்கேட்டு கம்பனி தரப்பு தடுமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறிக் கொண்டிருக்கின்றார். யதார்த்தம் என்னவெனில் தற்போது கூட்டு ஒப்பந்தமும் இல்லை. சம்பள அதிகரிப்பும் இல்லை.  

இதனால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி ஏற்றத்தால் வழமைபோலவே பெருந்தோட்ட சமூகமே பாரிய சவாலை எதிர்நோக்குகின்றது. கோதுமை மா நிவாரணமோ வேறு வருமானமோ இல்லை. மாதாந்தம் கிடைக்கும் சம்பளம் கடனை அடைக்கவே போதாத நிலை. சாப்பாட்டுச் செலவு, பிள்ளைகளின் பாடசாலை செலவு, வேறு தவிர்க்க முடியாத அத்தியாவசிய செலவுகளுக்காக அல்லாட வேண்டிய பரிதாபம். கடன் வாங்கவோ கைமாற்று கேட்கவோ வழியில்லை. எல்லோரது நிலைமையும் மரமோறி விழுந்தவனை மாடேறி மிதித்த கதை தான்.  

இதனால் ஏற்கனவே வேறு வழியின்றி தேயிலைத் தொழிலில் ஈடுபட்டு வந்த எஞ்சிய ஆண், பெண் தொழிலாளர்கள் அதைக் கைவிட்டு அன்றாடம் கைக்குக் காசு கிடைக்கக் கூடிய தனியார் தொழில்களை நாடத் தயாராகி விட்டார்கள். இதனால் கம்பனி தரப்பு மேலும் ஆளணி இழப்பை சந்திக்க நேரிடும். இன்று தேயிலைத் தொழிலைத் தவிர பிற வேலைகளில் ஈடுபடுவோருக்கு நாட்சம்பளமாக 2000ரூபா வரை கிடைக்கின்றது. தவிர காலை, பகல் சாப்பாடு, தேனீர் கிடைக்கின்றது. வேலையை முடித்து வீடு திரும்பும்போது வேலை கொள்வோர் வீடுகளில் இருந்து பலாக்காய், ஈரப்பலா, மரவள்ளிக் கிழங்கு வீட்டுத் தோட்டங்களில் கிடைக்கும் மரக்கறிகள் என எதையாவது கொண்டு செல்ல முடிகிறது. இதனால் பலரும் இதன்பால் ஈர்க்கப்பட்டு வருகிறார்கள். மேலும் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தேயிலை தொழிற்சாலைகள் இயங்குவதில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. இதனால் பெருந்தோட்டத் துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. விரக்தியும் வியாகூலமும் கொண்டவர்களாக தோட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தவிர தனியார் வேலை வாய்ப்பு தினமும் கிடைப்பதும் அல்ல. அவை நிரந்தரமானதும் அல்ல.  

உணவுப் பொருட்கள் விலையேற்றம் அரைப்பட்டினி நிலைமையைத் தேற்றுவித் துள்ளதால் சாப்பாட்டுப் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. குழந்தைகள் மென்மேலும் மந்தபோஷ நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏலவே 200வருடங்களாக மந்தபோஷன தன்மையில் முதலிடம் பெற்று வருவது பெருந்தோட்ட பிரதேசங்களே ஆ கும். தற்போதைய நிலை மேலும் அதனை உக்கிரமடையச் செய்துள்ளது.  

பிந்திய தகவலாக உலகிலேயே மந்தபோஷனத்தால் பாதிக்கப்படுவோர் நாடுகளின் பட்டியலில் இலங்கை 7ஆவது இடத்திலும் ஆசியாவில் 2ஆவது இடத்திலும் இருக்கின்றது. அதேவேளை சத்தான ஆகாரத்துக்கு வழியின்றி மலையகத்தில் தாய்மை அடைந்துள்ள பெண்கள், பாலுௗட்டும் தாய்மார், நோயாளிகள், வயோதிபர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாடசாலை மாணவர்கள் காலை ஆகாரமின்றி பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியுள்ளது. இதனால் உடல், உளவியல் ரீதியில் பாதிக்கப்படும் ஒரு சமூகமாக தொடர்ந்தும் பெருந்தோட்ட மக்கள் இருக்க வேண்டியுள்ளது. எதிர்காலம் பற்றிய நிச்சயம் இன்றி அன்றாடம் சவால்களை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் இங்கு நிலவுகின்றது.  

பெருந்தோட்ட மக்கள் வாழ்வில் நிரந்தர தீர்வுகாணப்பட வேண்டிய பல காரியங்கள் அப்படியே இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது, போதுமான வருமானத்துக்கான வழியை உருவாக்குவதாகும். அதேநேரம் இளைஞர்களுக்கு பெருந்தோட்டப் பிரதேசங்களை மையப்படுத்திய வேலைவாய்ப்புகள். அத்துடன் தற்போது எதிர்கொண்டுள்ள பஞ்ச நிலைமைக்கு நிவாரணங்கள்.  

பெருந்தோட்ட சுகாதார சேவைகள் பொது சுகாதார முறைமைக்குள் கொண்டுவரப்பட்டு தோட்ட மருத்துவமனைகள் அபிவிருத்தி செய்யப்படுவது அவசியம். தவிர இங்கு நிலவும் சிறுவர் தாய்மார் மந்தபோஷன நிலைமையை இல்லாதொழிக்கும் குறுகியகால, நீண்டகால வேலைத்திட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும்.  

தேவைகள் ஏராளம். தீர்வுகள் அவசரம். திட்டங்கள் உருவாக்கப்படுமா? என்ன செய்யப் போகிறார்கள் பொறுப்புக்கூற வேண்டிய மலையகத் தலைமைகள்? பழைய கேள்வி தான் இன்னும் எத்தனை காலத்துக்கு இதனையே திரும்பித் திரும்பிக் கேட்க வேண்டி இருக்குமோ!    

பன். பாலா    ...?

Comments