லிட்டில் லண்டனில் கரும்புள்ளியாகக் காணப்படும் நுவரெலியா ரேஸ்கோஸ் குடியிருப்புகள் | தினகரன் வாரமஞ்சரி

லிட்டில் லண்டனில் கரும்புள்ளியாகக் காணப்படும் நுவரெலியா ரேஸ்கோஸ் குடியிருப்புகள்

நுவரெலியா பிரதான நகரிலிருந்து அரை கிலோ மீற்றர் தூரத்திலுள்ள நுவரெலியா குதிரைப் பந்தயத் திடல் உள்ளது. இத் திடலினுள் 'ரேஸ்கோஸ' கிராம மக்கள் கடந்த 200வருடங்களுக்கு முன் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட லயன் குடியிருப்புகளில் அடிப்படை வீட்டு வசதிகளும் ஏனைய வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். 54குடும்பங்களைச் சேர்ந்த 300இக்கும் அதிகமானவர்கள் எந்தவித வசதிகளும் இல்லாமல் இங்கே வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களில் சிலர் மட்டக் குதிரைகளை சுற்றுலாப் பயணிகளுக்காக வளர்த்து வருகிறார்கள். குதிரைகளைப் பார்த்துக்கொள்வதற்காக ஒரு சிலரும் இன்னும் ஒரு சிலர் குதிரைப்பந்தய ஓட்ட மைதானத்தை ஒழுங்கமைப்பு செய்வதிலும் இன்னும் சிலர் நுவரெலியா மாநகர சபையிலும் மற்றும் மரக்கறி தோட்டங்களிலும் தொழில் செய்து வருகின்றனர்.

இதேவேளை குதிரைப்பந்தய போட்டிகள் வருடம் தோறும் ஜனவரி, ஏப்ரல் ஒகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும். ஏனைய மாதங்களில் குதிரைப்பந்தய போட்டிகள் நடைபெறாது.

இந்த குதிரைப் பந்தய போட்டிகள் நடைபெறாத மாதங்களில் ஓட்ட மைதானத்தில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு தொழில் கிடைப்பதில்லை. இவர்கள் வேறு தொழில்களைத் தேடிச் செல்வார்கள். இவர்களுக்கான நிரந்தரமான ஒரு தொழில் கிடையாது.

அதேவேளை குதிரைப்பந்தய போட்டிக்காக செலவிடும் பணத்தில் ஒரு சிறிய தொகையாவது இந்த கிராம மக்களின் வாழ்வாதார தேவைக்காக பயன்படுத்தலாமே என இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவர்கள் இக் கஷ்ட காலத்தில் எப்படி வாழப்போகிறார்கள் என்பதையும் சிதிலமடைந்துபோன குடியிருப்புகளையும் பற்றி எவரும் சிந்திப்பதில்லை. ஆனால் தேர்தல் காலங்களில் மாத்திரம் இம் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக இவர்களிடம் வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்கள் அனுதாப வார்த்தைகளைக் கூறி வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். தான் வெற்றி பெற்றதும் உங்களுக்கான வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு உங்களுக்கு வசதியான வீடுகள் வழங்கப்படும். அத்தோடு உங்களின் பிள்ளைகளுக்கு தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். பிள்ளைகள் கல்வி பற்பதற்கான வசதிகள், பாடப்புத்தகங்கள் சீருடைகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்ைக எடுக்கப்படும் எனக்கூறி வாக்குகளை பெற்றுச் சென்ற பின் இவர்களை திரும்பிக்கூட பார்ப்பதில்லை என்பதே வாடிக்கையாம். வாக்குறுதி வழங்கிய அரசியல்வாதிகளை தேடிச் சென்றாலும் அவர்கள் திரும்பியும் பார்ப்பதில்லையாம்.

நுவரெலியா ஹாவா எலியவில் அமைந்துள்ள இன்டர்பெஷன் நிறுவனத்திற்கு அருகில் ஒரு புதிய வீடமைப்புத் திட்டத்தை உருவாக்கி இக் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும் என கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் நுவரெலியா மாநகர சபைக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்த தீர்மானம் இன்றுவரை செயற்பாட்டுக்கு வரவில்லை.

இந்த ரேஸ்கோஸ் குடியிருப்புகள் நுவரெலியா மாநகரசபைக்குட்பட்ட பகுதியாகும். எனினும் இங்கு வசிப்போர் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகளை நுவரெலியா மாநகரசபை கண்டுகொள்வதில்லை என்பது இவர்களின் குற்றச்சாட்டாகும்.

இந்த ரேஸ்கோஸ் குடியிருப்புகள் நுவரெலியா பீதுறுதாலகால மலையடிவாரத்திலிருந்து நுவரெலியா கிறகரி வாவிக்குச் செல்லும் நீரோடைக்கு அருகில் அமைந்துள்ளது. வருடம்தோறும் ஜுன், ஜூலை மாதங்களில் நுவரெலியாவில் பலத்த காற்றுடன் மழைபெய்யத் தொடங்கும். இந்த மழைக்காலத்தில் அதிக மழைபெய்யும் பொழுது இந்நீரோடை பெருக்ெகடுத்து இக்குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுவது வழக்கம்.

இக்காலத்தில் இவர்கள் மழை நீர் குறையும் வரை நுவரெலியா மாநகர விளையாட்டு உள்ளரங்கிலும் குதிரைப்பந்தய ஓட்டப்போட்டியை பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள உயரமான கட்டடத்திலும் தங்கவைக்கப்படுகிறார்கள். வௌ்ள நீர் வடிந்தோடிய பின் சேறும் சகதியுமான வீடுகளுக்குச் செல்லும் அவலநிலை வருடந்தோறும் திகழ்கிறது.

இந்த மாநகரத்தில் ஏனைய மக்கள் அனுபவிக்கும் அடிப்படை உரிமைகளை தாமும் அனுபவிக்க வேண்டும் என்கின்ற நியாயமான ஆசை இவர்களிடத்தில் காணப்பட்டாலும் இதனை கண்டறிந்து நிவர்த்தி செய்ய எவரும் முன்வருவதில்லை.

இதனடிப்படையில் ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள இந்த மக்கள் நுவரெலியா மாநகரில் சகல அபிவிருத்தித் திட்டங்களில் இருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டு விடுகிறார்கள்.

இக்கிராமத்தில் இருக்கும் 54குடியிருப்புகளில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றன. இவர்கள் கேட்பதெல்லாம் வீடுகளைத் திருத்தித் தாருங்கள், வசதியற்ற மலசலகூடங்களை திருத்தி தாருங்கள் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள வசதி செய்து தாருங்கள், மழைக்காலங்களில் வௌ்ள நீரினால் பாதிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்ைக எடுங்கள் என்பனவற்றையே!

மேலும் தொழில் வாய்ப்புகளுக்கு வசதி செய்து தாருங்கள் மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்தித் தாருங்கள் என்ற இவர்களின் கோரிக்ைக மிக நியாயமானவை!

லிட்டில் லண்டன் எனப் புகழப்படும் நுவரெலியா மாநகரத்தின் அழகிற்கு ஒரு கரும்புள்ளியாக ரேஸ்கோஸ் குடியிருப்புப் பகுதி விளங்குவதால் இந்த கிராமத்தை அபிவிருத்தி செய்ய சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும்.

இது இவ்வாறிருக்க, தற்பொழுது இந்த குதிரைப்பந்தயத் திடலையும் அதனைச் சுற்றியுள்ள காணியையும் விளையாட்டுத்துறை அமைச்சு பொறுப்பேற்றுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சு விடுதியொன்றை கடந்த வருடம் இந்த ரேஸ்கோஸ் கிராமத்திற்கு அருகில் அமைத்தது.

ஆனால் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் வாழும் இந்த மக்களுக்கு எந்தவொரு வசதிகளும் இந்த விளையாட்டுத்துறை அமைச்சு மூலம் வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 நூரளையூரான்  ...?

Comments