சமூக உணர்வும், நற்பண்புகளும் கொண்ட ஒரு நல்ல நண்பன் | தினகரன் வாரமஞ்சரி

சமூக உணர்வும், நற்பண்புகளும் கொண்ட ஒரு நல்ல நண்பன்

"இளநெஞ்சன்"முர்ஷிதீன் -

மாளிகாவத்தை

அன்பு நண்பர் "போரத்தோட்டை ரிஸ்மி" இறையடி சேர்ந்துவிட்டார் என்ற தகவலின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை. இறப்பு இறைவனின் நாட்டம் என்பது எங்கள் ஈமானிய ஓட்டம். இருந்தாலும், நண்பர் ரிஸ்மியின் இழப்பு இன்னும் நம்ப முடியவில்லை.

இதயம் இன்னும் அழுகிறது.

ஐந்தாறு நாட்களுக்கு முன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தோம்.

ஜூன் மாதம் 28ஆம் திகதி திஹாரியில் உள்ள நண்பன் கவி நேசன் நவாஸின் வீட்டுக்கு போகவேண்டி இருந்த பயணத்தை, அடுத்த வாரம் (ஜுலை 5ஆம் திகதி ) செவ்வாய்க்கிழமைக்கு மாற்றியிருந்தோம். றிஸ்மியின் வேண்டுகோளின் பேரில்.

"முர்ஷிதீன்,எனக்கு  27, 28ஆம் திகதிகளில் பாடசாலையில் விடுமுறை எடுப்பது சிரமம். அடுத்த வாரம் நான் ரெடி" என்று பச்சைகொடி காட்டியிருந்தார்.

நானும், கவிஞர்கள் கிண்ணியா அமீரலி, நஜ்முல் ஹுஸைன்,போரத்தோட்டை ரிஸ்மி ஆகிய நால்வரும்தான் இந்தப்பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தோம்.

இரண்டு மாதங்களுக்கு முன் திட்டமிட்டிருந்தும், அது கை விடப்பட்ட நிலையில், கடந்த வாரம் நண்பர் கிண்ணியா அமீரலி மீண்டும் தூண்டிவிட்டார்.

"பெட்ரோல் இல்லை என்பதால் மோட்டார் சைக்கிளில் போகாமல், பஸ்ஸில் போவோம் என்று

வலியுறுத்தியிருந்தார்.

ஒரு கவிஞர், ஆசிரியர், இலக்கியவாதி என்பதற்கும் அப்பால் சமூக உணர்வும், நற்பண்புகளும் கொண்ட ஒரு நல்ல நண்பனை இழந்த வேதனையில் நான்.

கவிஞர் கிண்ணியா அமீரலியும் நானும், அவருடைய வீட்டில் கண்ட விருந்தோம்பலும்......

இளம் ஊடகவியலாளர் அனஸ் அப்பாஸின் வீட்டில் நடத்திய பலகத்துறை இலக்கிய வட்டத்தின் உறுப்பினர்களுடன் கவிஞர் ரிஸ்மி தலைமையிலான கலந்துரையாடலும்.....

வலம்புரி கவிதா வட்டத்தின் கவியரங்கு கொழும்புக்கு வெளியில், நீர்கொழும்பு,போரத்தோட்டை கலை இலக்கியப்பேரவையின் ஆதரவுடன் வெற்றிகரமாக நடத்தி முடித்த ஆளுமையும்...

என்னுடைய தலைமையில் இடம்பெற்ற வலம்புரி கவிதா வட்டத்தின் 75ஆவது கவியரங்கில் கட்டாயம் பாட வேண்டும் என்று எனக்குக்கொடுத்த வாக்கின்படி, நீர்கொழும்பிலிருந்து தன்னுடைய குடும்ப வைபவமொன்றையே தவிர்த்து, கொழும்பு வந்த நட்பின் ஆழமும்...

இன்றும் என் கண் முன்னால்...... !

நண்பா ...... நீ எங்கள் நெஞ்சங்களில் வாழ்கிறாய்.....

எங்கள் பிரார்த்தனைகளில் புன்னகைக்கிறாய்.....

அந்த ஜன்னதுல் பிர்தவ்ஸ் உன் வரவுக்காய் காத்திருக்கின்றது....

எங்கள் ஊமைத்தனமான அழுகைக்கும் அப்பால்...உள்ளம் பெருமிதப்படுகிறது...

நீ எங்களுக்கு நண்பனாகக்கிடைத்தாய் என்பதற்காக !

 

Comments