சரித்திரங்களை மீட்டிச் செல்லும் மைக்கல் கொலினின் கவிதைகள் | தினகரன் வாரமஞ்சரி

சரித்திரங்களை மீட்டிச் செல்லும் மைக்கல் கொலினின் கவிதைகள்

வெளியீட்டு விழாவில் யாழ். அரசாங்க அதிபர் மகேசனின் நயவுரையிலிருந்து.... காதலும் மனிதாபிமானமும் கலந்து படைக்கப்பட்டுள்ள கவிஞர் மைக்கல் கொலினின் காதல்  கவிதைகள் கல்லடிப் பாலம் முதல் கம்போடியா வரை சரித்திரங்களை மீட்டிச் செல்கின்றன என 'என் இனிய பட்டாம் பூச்சிக்கு' நூல் வெளியீட்டு விழாவில் நயவுரையாற்றிய யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பொது நூலகத்தில் அண்மையில் நடைபெற்ற 'என் இனிய பட்டாம்பூச்சிக்கு'  கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நூல் நயவுரையாற்றிய  யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்ந்தும் தமது உரையில்:

சமகால இலக்கியத் தளத்திலே தொடர்ச்சியாக எழுதிக் கொண்டு வரும்

கவிஞர் மைக்கல் கொலினின் கவிதைகளாகட்டும் சிறுகதைகளாகட்டும் அல்லது ஏனைய படைப்புகளாகட்டும் அவை சமூகத்தின் அவலங்களை அப்படியே படம் பிடித்து காட்டுவதாக அமைந்துள்ளன. கவிஞர், எழுத்தாளர் என இலக்கியத் துறையில் அகலக் கால் பதித்து செயல்பட்டு வருபவர் அவர்.

 

தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் சிறப்பான ஒரு இலக்கியவாதி என இவரை பேராசிரியர் மௌனகுரு பாராட்டியிருக்கின்றார்.

அந்த வகையில் இலக்கியப் படைப்புகளை தொடர்ச்சியாக பிரசவித்துக் கொண்டிருக்கின்ற ஒருவராக அவரை நாம் பார்க்கின்றோம்.

அவருடைய காதல் கவிதைகளை நாம் காதல் கவிதைகள் என்ற வட்டத்திற்கு அப்பால் நோக்குவோமானால் அதில் காதலும் மனிதாபிமானமும் கலந்து காணப்படுகின்றன. அவருடையது   பிரபஞ்சத்தையும் தாண்டி அதற்கு அப்பால் பறந்து செல்கின்ற காதல். அதற்கு இணை இல்லை.

 காதலை வெறும் வார்த்தைகளுக்குள் அடக்கி விட முடியாது. அதனைத்தொடர்கின்றவர்களுக்கு அது இன்பமானது. காதலினால்  முடியிழந்தவர்கள் இருக்கின்றார்கள். பலர் மகுடம் தாண்டியும் நிலைத்திருக்கின்றார்கள். காதல் என்பது இளையோர், பெரியோர் அல்லது ஏனையோர் என அனைவராலும் விரும்பப்படுகின்ற பிரிக்க முடியாத விடயம்.

அதனை மைக்கல் கொலின் தமது கவிதைகளில் தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளார்.

கல்லடிப் பாலத்தில் தொடங்கி கம்போடியா வரை சென்று பல அற்புதமான சரித்திரங்களை எமக்கு ஞாபகப்படுத்துகின்றன.

நாம்  மூத்த குடிகள், பழந்தமிழர்கள்   என்ற உண்மையை அவர் ஆங்காங்கே அதில் கொண்டு செல்கின்றார். அதைவிட வெகு உச்சமாக  இளைஞர்களுக்கு தேவையான இயலுமையை அவர் தொட்டுக்காட்டுகின்றார். புது இரத்தம் பாய வேண்டும் என அவர் ஒரு கவிதையிலே மிகவும் அழுத்தமாக கூறுகின்றார்.

சமகால நிகழ்வுகளோடு அதனைச் சுருக்கிக் கொள்ளாது, இளைஞர்கள், குறிப்பாக வடக்கு கிழக்கிலே உள்ள இளைஞர்களுக்கான எச்சரிக்கையாகவும் அழைப்பாகவும் கூட அதனை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 கவிதையுயூடாக கவிஞர் தொட்டுக் காட்டியிருக்கின்ற அம்சங்கள் வார்த்தைகளால் விபரிக்க முடியாதவை.

காதலை மட்டுமன்றி பல்வேறு கனதியான விடயங்களையும் அவர் தமது கவிதைகளில் உள்ளடக்கியுள்ளார்.

மேலோட்டமாகவே இந்த கவிதை நூலை நான் வாசித்தாலும் என்னையும் அந்த கவிதைகள் பேசவைத்தன.

ஒவ்வொருவருடைய வாசிப்பு போக்கிலும் இந்த கவிதைகள் அவர்களையும் பேச வைக்கும்  என்றால் மிகையில்லை

கவிஞர் மைக்கல் கொலினின் இலக்கியப்பயணம் தொடர வேண்டும் மேலும் பல உச்சங்களை அவர் தொட வேண்டும் என வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டார் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்.

எடுத்துக்கொண்ட பங்கை மிகச் சிறப்பாக  நிகழ்த்திக் காட்டியதுடன் மிகவும் எளிமையாகவும் அற்புதமாகவும் தமது உரையை அவர் நகர்த்திச்சென்றதை பாராட்ட வேண்டும். ஒரு அரச அதிகாரியான அவரது இலக்கிய நேசிப்பும் இலக்கியத்தின் மீது அவர் கொண்டுள்ள ஆர்வமும் அவரது இந்த நயவுரையில் வெளிப்பட்டன.

"பல பேராசிரியர்களை, கலாநிதிகளை, சிரேஷ்ட விரிவுரையாளர்களை, நூற்றுக்கணக்கான விரிவுரையாளர்களைக்  கொண்ட ஒரு பல்கலைக் கழகம்  ஆற்றவேண்டிய பணியை தனி ஒருவனாக நின்று புரியும் மைக்கல் கொலினால் மட்டக்களப்பு மண் பெருமையுருகிறது" என

கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் புகழாரம் சூட்டினார்.

மகுடம் பதிப்பகம் மூலம் தனது ஏழு நூல்கள் உட்பட இதுவரை அறுபதிற்கும் மேற்பட்ட நூல்களை மைக்கல் கொலின்  பதிப்பித்துள்ளார். ஈழத்து இலக்கிய வெளிக்கு அவரது பங்களிப்பு மிக முக்கியமானது. தொடர்ச்சியாக இயங்கிவரும் மைக்கல் கொலின்  பல்கலைக்கழக இலக்கிய விருதுக்கும் தகுதியுடையவர் என்றார். பெளர்ணமி கலை இலக்கிய நிகழ்வுத் தொடரின்  43வது நிகழ்வாக

மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்திய மகுடம் வி. மைக்கல் கொலினின்

என் இனிய பட்டாம் பூச்சிக்கு  கவிதைத்  தொகுப்பு வெளியீட்டு விழா மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு தமிழ்ச்சங்க தலைவர் சைவப்புரவலர்  வி. றஞ்சிதமூர்த்தியின் தலைமையில் நடைபெற்றது.கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம்  பிரதம விருந்தினராகவும்  கிழக்குப் பல்கலைக் கழக வேந்தர் பேராசிரியர்                 ம.செல்வராஜா, மட்டக்களப்பு மாநகர முதல்வர்    தி.சரவணபவன் ஆகியோர் அழைப்பு அதிதிகளாவும்  கலந்து நூலை வெளியிட்டு வைத்தனர்.

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் . க.மோகனதாசன் நூல் அறிமுக உரையை ஆற்றினார்.

நூல் வெளியீட்டுரையை எழுத்தாளரும், அதிபருமான ச. மணிசேகரனும், வரவேற்புரையை மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்க பொருளாளர் கதிரவன்.              த.இன்பராசாவும் ஆற்ற நன்றியுரையைமகுடம். வி. மைக்கல் கொலின் நிகழ்த்தினார்.  நிகழ்வை கவிஞர்ஜி .எழில் வண்ணன் தொகுத்து வழங்கினார்.

மீன் பாடும் தேன்நாட்டில் நடைபெற்ற இந்த இலக்கிய விழா  ஒரு மாலைப் பொழுதை மேலும் மகிழ்ச்சிகரமாக்கியிருந்தது என்றால் அது மிகையல்லை.

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments