உலகளாவிய போரை நோக்கி நகரும் நேட்டோ? | தினகரன் வாரமஞ்சரி

உலகளாவிய போரை நோக்கி நகரும் நேட்டோ?

உலக அரசியல் கடந்த ஒரு தசாப்தங்களுக்கு மேலாக கிழக்கு நாடுகள் எதிர் மேற்கு நாடுகள் என்ற போக்கினை தீவிரமாக ஏற்படுத்தி வருகின்றன. மேற்கு நாட்டின் தலைவர்கள் ஒன்றுகூடும் எல்லா சந்தர்ப்பங்களிலும் கிழக்கு நாடுகளின் எழுச்சிக்கு எதிராக தீவிர அணுகுமுறையை மேற்கொள்வதும் திட்டமிடுவதும் அதற்கான நகர்வுகளை   செயற்படுத்துவதும் வழமையான       அரசியலாக காணப்படுகின்றது.

 

கடந்த (ஜூன்) 26-30வரையில் ஜேர்மனியிலும், ஸ்பெயினிலும் நடந்த இரு வேறு உச்சி மாநாடுகள் மேற்குறித்த உலக அரசியலுக்கான அணுகுமுறைகளை வெளிப்படுத்தி உள்ளன. அதாவது, ஜேர்மனியின் பவேரியன் ஆல்ப்ஸ் நகரில் ஜி-07நாடுகளுக்கான சந்திப்பும், ஸ்பெயின் தலைநகரங்களில் ஒன்றான மட்ரிட்டில் நோட்டோ நாடுகளின் சந்திப்பும் சமகால உலக அரசியல் களத்தை முதன்மைப்படுத்தியுள்ளது. அக்கட்டுரை ஜி-07மற்றும் நேட்டோ நாடுகளின் தலைவர்களின் சந்திப்பின் நோக்கத்தை அடையாளப்படுத்த முயற்சிக்கிறது.

முதலாவது, ஜி-07நாடுகளுக்கான சந்திப்பு பிரதானமாக பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான உத்திகளை பிரதிபலித்திருந்தது. அம்மாநாட்டில் கலந்து கொண்ட ஜேர்மன், பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய அங்கத்துவ நாடுகளோடு இந்தோ -பசுபிக் பொருளாதார சக்திகளும் பார்வையாளர் நாடுகளாக கலந்து கொண்டன. கடந்த பல ஆண்டுகளாக ஜி-07சந்திப்பு பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் உலகளாவிய பொருளாதாரத்தை எவ்வாறு கையாள வேண்டும்  என்பது பற்றிய உரையாடலை மேற்கொண்டிருந்த போதும் சமகால உச்சி மாநாடு அங்கத்துவ நாடுகளிடையே ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியையும் அதனை எதிர்கொள்வது பற்றியும் கவனத்தில் கொள்ளப்பட்டது. குறிப்பாக உக்ரைன் மீதான ரஷ்ய போர் ஐரோப்பாவிற்குள் ஏற்படுத்தியுள்ள எரிவாயு மற்றும் பெற்றோலியம் தொடர்பான நெருக்கடியும் அதற்கான மாற்று உபாயங்கள் பற்றிய கருத்தாடல்களும் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தன. அதுமட்டுமன்றி உக்ரைனுக்கான மனிதாபிமான உதவியாக 2.8பில்லியன் அமெரிக்க டொலரும், வரவு- செலவுத் திட்டத்துக்கான உதவித்தொகை 29.5பில்லியன் அமெரிக்க டொலர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடையை நீடிப்பதுடன், தங்கத்தினாலான பரிமாற்றத்தினை மேற்கொள்வதற்காக ரஷ்யாவின் இலக்கினை தடைசெய்வது எனவும் தீர்மானித்துள்ளது.  அத்தோடு உலக பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்துவரும் வாழ்க்கைச்செலவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் ரஷ்யாவின் சக்தி வளத்தில் தங்கியிருக்கின்ற நிலைமையை மாற்றியமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. உலகளாவிய ரீதியில் உணவுப் பாதுகாப்பையும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள உணவுச் சங்கிலியையும் பலப்படுத்துவதெனவும் ஜி-07தலைவர்கள் உரையாடியுள்ளனர். சர்வதேச மட்டத்தில் காலநிலை வலையமொன்றினை ஒத்துழைப்பினூடாக ஏற்படுத்துவதெனவும் மிகப்பிரதானமாக அத்தகைய காலநிலை வலயத்தை முன்னோக்கி நகர்த்தவும் இலக்குகளை அடையவும் தெளிவான வரையறையான மாற்றங்களை முதன்மைப்படுத்தவும் அதற்கான கொள்கை வகுப்பொன்றை வரையவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், காபன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துகின்ற கைத்தொழில் உற்பத்திகளை ஊக்குவிப்பதெனவும், பங்குபற்றலுக்கும் ஒத்துழைப்புக்குமூடாக சர்வதேச மட்டத்தை சக்தி வளத்தை பரிமாற்றம் செய்வதற்கான இடைத்தொடர்பாளராக உழைப்பதெனவும் அத்தோடு அனல் மின்வலுவின் பயன்பாட்டை ஊக்குவிப்பதென்ற ஜி-07மாநாட்டின் 2021ஆம் ஆண்டு இலக்கை மேலும் நீடிப்பதென்றும் பாரிஸ் உடன்படிக்கையை பலப்படுத்துவதென்றும் இம்மாநாட்டில் உரையாடப்பட்டது.

இரண்டாவது, நேட்டோ நாடுகளின் மட்ரிட் உச்சி மாநாடானது நேட்டோ விஸ்தரிப்பு சார்ந்து முதன்மைப்படுத்தப்பட்டதோடு உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை எதிர்க்கும் அணுகுமுறைகளும் உக்ரைனுக்கான ஆயுத தளபாட தேவைகளை நிறைவு செய்வதற்கான முன்மொழிவுகளும் உரையாடப்பட்டன. நேட்டோவின் அங்கத்துவ நாடுகள் 30இனை கடந்து பின்லாந்து, சுவிடன் புதிய உறுப்பு நாடுகளாக முன்மொழியப்பட்டதும் துருக்கி ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பினை கைவிட்டதும் இம்மாநாட்டில் இடம்பெற்ற பிரதான விடயங்களாகும். அத்துடன் நேட்டோ உச்சி மாநாட்டின் பார்வையாளர் நாடுகளாக அவுஸ்ரேலியா, நியுஸிலாந்து, ஜப்பான் மற்றும் தென்கொரியா என்பன ஒத்துழைப்பையும் உலகளாவிய சவாலையும் எதிர்கொள்கின்ற விதத்தில் இம்மாநாடு நகர்த்தப்பட்டிருந்தது. பிரதானமாக பயங்கரவாதத்துக்கு எதிரான முழுஅளவிலான போரை பிரகடனப்படுத்தியதோடு ரஷ்யாவின் உக்ரைன் மீதான போரினால் ஏற்பட்டிருக்கும் உணவு நெருக்கடி சார்ந்தும் ரஷ்யா மற்றும் சீனாவுக்கிடையில் வளர்ச்சியடைந்து வரும் பிராந்திய ரீதியிலான செல்வாக்கு ஒத்துழைப்பையும் சார்ந்து விவாதிக்கப்பட்டதோடு நேட்டோவின் புதிய ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளாக துனிசியா, மொரிடானியா மற்றும் துர்கிஷ் ஆகியன அறிவிக்கப்பட்டன. 

எனவே, மேற்குறித்த இரு உச்சி மாநாடுகளும் அதிக முக்கியத்துவம் கொடுத்த விடயங்களாக காணப்படும் அம்சங்களை விளங்கிக்கொள்வது அவசியமாகும்.

ஒன்று, ஜி-07நாடுகள் உள்நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி ரஷ்யாவை மையப்படுத்தி உரையாடியிருப்பதோடு அதனுடைய தீர்வுகளை நோக்கி நகர்வதற்கான உத்திகளையும் வகுத்துள்ளது. குறிப்பாக ரஷ்யாவின் இறக்குமதிக்குள் அகப்பட்டிருக்கும் ஐரோப்பாவை பாதுகாக்கும் விதத்தில் மாற்று சக்தி வளம் சார்ந்து கரிசனை செலுத்த ஜி-07தலைவர்கள் முயன்றுள்ளனர். பெற்றோலியம், எரிவாயு போன்றவற்றிற்கான மாற்றுக்களை அடையாளம் காண்பதும் அதனை ஊக்குவிப்பதும் இம்மாநாட்டின் பிரதான நோக்கமாக இருந்தது.

இரண்டு, ஜி-07உச்சி மாநாட்டில் ரஷ்யாவால் முன்மொழியப்பட்டு ஆரம்பகாலத்தில் அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தங்கத்தின் பரிமாற்றம் தொடர்பான விடயம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதாவது உலக நாடுகளின் பொருள் பரிமாற்றம் நாடுகளுக்கு இடையில் நிகழ்த்தப்படுகின்ற போது தங்கம் பிரதான பரிமாற்று ஊடகமாக செயற்பட்டது. இது பின்னர் அமெரிக்காவின் எழுச்சியினாலும் உலகளாவிய அரசியல் ஆதிக்கத்தினாலும் படிப்படியாக கைவிடப்பட்டு டொலர் பரிமாற்றத்துக்கும் வெளியீட்டுக்குமான இருப்பாக கருதப்பட்டது. அதனை எண்ணெய் வள நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்த அமெரிக்கா டொலரை முன்னிலைப்படுத்தி பொருளாதார ரீதியாக உலகத்தை டொலரின் கீழ் கொண்டு வந்தது. இதனை முறியடிக்கும் விதத்திலேயே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது உற்பத்திக்கான சந்தை பெறுமானத்தை ரூபிளில் செலுத்த வேண்டுமென நிபந்தனை விதித்தார். அது ஐரோப்பிய நாடுகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதால் மீளவும் தங்கத்தை முன்னிறுத்தியுள்ளார். இவ்வாறு தங்கத்தில் பரிமாற்றம் நிகழ தொடங்குமாயின் டொலரினதும் அமெரிக்காவினதும் ஆதிக்கம் படிப்படியாக வீழ்ச்சியடையும். எனவே தான் ஜி-07நாடுகளில் அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நான்கு நாடுகளும் ரஷ்யாவின் முன்மொழிவை முழுமையாக நிராகரித்ததோடு ஏனைய மூன்று நாடுகளும் மௌனம் சாதித்தன என்பதுவும் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயமாகும்.

மூன்று, ஜி-07உச்சி மாநாட்டின் பிரதான இலக்காக ரஷ்யாவே காணப்படுகின்றது. ரஷ்யாவிற்கு எதிரான போரை ஊக்குவிப்பதற்கும், உக்ரைனை முன்னிறுத்தி ரஷ்யாவை தோற்கடிப்பதையும் பிரதான நோக்காக கொண்டுள்ளமையை வெளிப்படுத்தி நிற்கிறது. ரஷ்யாவிற்கு எதிரான போருக்காக உக்ரைனியர்கள் கொல்லப்பட ஐரோப்பியர்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையை ஜி-07நாடுகள் ஊக்குவிக்கின்றன. உக்ரைனியர்கள் ரஷ்யாவின் தாக்குதல்களால் கொல்லப்படுகிறார்கள். அல்லது அவர்களின் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி புவிசார் அரசியல் அறிவின்றி உக்ரைனியர்கள் மேற்குடன் கூட்டுச்சோர்ந்து ஐரோப்பாவின் தானிய களஞ்சியமான உக்ரைனை சிதைக்கின்றனர். மறுபக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்கள் எரிபொருள் மற்றும் பெற்றோலியத்துக்கான நெருக்கடியை சந்திப்பதோடு பொருட்களின் விலையேற்றத்தினால் அதிக வரி செலுத்தும் நெருக்கடியையும் எதிர்கொண்டு வருகின்றனர். இப்போரை மேலும் ஊக்குவிப்பதனால் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியும் மனித சமூகங்களுக்கிடையிலான மோதலும் குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் ஒரு உலக யுத்தத்தை தயார் செய்வதற்கான அணுகுமுறையை ஜி-07நாடுகள் ஏற்படுத்தி வருகின்றன.

நான்காவது, நேட்டோ உச்சி மாநாட்டையும் ஜி-07மாநாடு போன்றே அவதானிக்க வேண்டிய சூழல் காணப்படுகின்றது. ஜி-07பொருளாதார நோக்குநிலையிலும், நேட்டோ இராணுவ நோக்கு நிலையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. நேட்டோவின் விஸ்தரிப்பை எதிர்த்து ரஷ்யா மேற்கொண்ட உக்ரைன் மீதான போரை மேலும் ஊக்குவிக்கும் விதத்தின் பின்லாந்தையும் சுவிடனையும் நேட்டோவின் அங்கத்துவமாக இணைத்ததன் மூலம் நேட்டோ நாடுகள் திட்டமிட்டுள்ளன. அதாவது ரஷ்யா ஒரு போரை உலகளாவிய தளத்தில் ஏற்படுத்த வேண்டுமென நேட்டோ கரிசனை கொள்கிறது. அமெரிக்கா மீண்டுமொரு யுத்தத்தை ஐரோப்பாவில் உருவாக்க முயலுகிறது. அதனை மேற்கு ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் அங்கீகரிக்கின்றனர். ஏற்கனவே முதலாம், இரண்டாம் உலக மகா யுத்தங்களை எதிர்கொண்டு அழிந்துபோன ஐரோப்பா மீளவுமொரு போருக்கு தயாராவதை நேட்டோ கட்டமைக்கின்றது.

ஐந்தாவது, உலக பொருளாதார நெருக்கடி உலகப்போர்களுக்கு திறவுகோலாக அமைந்துள்ளது என்பதை வரலாற்றாசிரியர்களும் யதார்த்தவாதிகளும் உணர்ந்துள்ளனர். ஐரோப்பா ஒரு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் நகர்கின்றது. எனவே உலக யுத்தமொன்று வெடிப்பதற்கான சூழ்நிலையை அமெரிக்கா மட்டுமன்றி முழுஉலகமும் கொண்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையை வலுப்படுத்தம் விதத்திலேயே நேட்டோவின் விஸ்தரிப்பும் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளும் உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுதங்களும் பொருளதார உதவிகளும் ஏற்படுத்த வாய்பை வழங்குகின்றது.

எனவே, ஜி-07உச்சி மாநாடும் நேட்டோ உச்சி மாநாடும் ரஷ்யாவிற்கு எதிரான அணுகுமுறையை கொண்டிருந்த போதும் அவ்வணுகுமுறை ரஷ்யாவிற்கு எதிரான போராக எழுச்சி பெறவும் ரஷ்யா உலகத்தை நோக்கிய ஒரு போரை தொடுக்கவும் வாய்ப்பை தந்துள்ளது. ரஷ்யா சுவிடன் மற்றும் பின்லாந்து  உக்ரைன் மீதான போரை நிகழ்த்துமாயின் அப்போரில் நேட்டோ தன்னை ஈடுபடுத்தி கொள்ள முழுமையான அங்கீகாரம் ஏற்பட்டுள்ளது. நேட்டேவும் ஜி-07உம் ரஷ்யாவை மட்டுமன்றி சீனாவையும் அதன் கணனி யுத்தத்தையும் கலப்பு போரையும் எதிர்கொள்ளும் விதத்தில் நகர்ந்துள்ளது. ஒட்டுமொதத்தில் ரஷ்யாவிற்கும் சீனாவுக்குமெதிரான பலமான அணியையும் அதற்கான கட்டுமானங்களையும் திட்டமிடல்களையும் உருவாக்குவதில் நேட்டோவும் ஜி-07உம் முனைப்பாக செயற்படுகின்றது.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments