பதுக்கல் பேர்வழிகளுக்கு கொண்டாட்டமாகிப் போன அத்தியாவசிய பொருள் தட்டுப்பாடு | தினகரன் வாரமஞ்சரி

பதுக்கல் பேர்வழிகளுக்கு கொண்டாட்டமாகிப் போன அத்தியாவசிய பொருள் தட்டுப்பாடு

எங்கு பொருட்களுக்கு பெருமளவு தேவை இருக்கிறதோ அங்கே அவை தட்டுப்பாடாகுவதும் அவற்றின் விலை அதிகரிப்பதும் வழமையான சந்தைப் போக்கு. அதுபோலவே அப் பொருட்கள் பதுக்கப்படுவதும் கொள்ளை விலையில் விற்கப்படுவதும் நடைபெறத்தான் செய்யும்.

பிரச்சினை, இவற்றை இயல்பானவை எனக் கருதி அப்படியே விட்டு விடுவதா அல்லது தீவிர நடவடிக்கைகளை எடுத்து பதுக்கல்களை வெளியே கொண்டு வந்து சட்ட நடவடிக்கை எடுப்பதா?

இன்று ஒரு லீட்டர் பெட்றோல் ஆயிரம் ரூபாவுக்கு பின் கதவால் விற்கப்படுகிறது. ஒரு எரிவாயு சிலிண்டர் பத்தாயிரத்துக்கு போகிறது. அதற்கு அதிகமாகவும் பணம் கொடுக்க பலர் தயாராகவே உள்ளனர். எத்தனை தடவைகள் மண்ணெண்ணை வழங்கினாலும் வாங்குவோர் தொகை குறைந்தபாடாக இல்லை. காரணம், இல்லா வீடுகளிலும் லீட்டர் கணக்கில் மண்ணெண்ணெய் வாங்கி வைத்திருக்கிறார்கள். எத்தனை தடவைகள் வழங்கினாலும் அதே சனம் வரிசையில் நின்று மண்ணெண்ணெய் வாங்கி வைத்துக் கொள்வதைப் பார்க்க முடிகிறது. அடுத்த முறை நமக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சமே இந்த அதிகளவு சேமிப்புக்கான காரணம். மேலும் அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் என்ற எதிர்பார்ப்பும் மற்றொரு காரணம். விநியோகம் சீராக இருந்தால் பதுக்கல் இருக்காது. ஒரு பொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது மனிதனின் சேகரிக்கும் ஆவலும் அதிகமாகி விடுவது உலகெங்கும் இயல்பே!

டீசலுக்காக நண்பரொருவர் வரிசையில் நின்றார். அவரது வாகனம் நூறாவதாக நின்று கொண்டிருந்தது. அப்போது அவர் அருகே வந்த ஒரு முச்சக்கர சாரதி, உங்களுக்கு வரிசையில் 25ஆவது இடம் வேண்டுமா அல்லது 50தாவது இடம் வேண்டுமா/ 25ஆவது இடம் என்றால் 2500ரூபா தாருங்கள். 50தாவது இடம் என்றால் 1500தாருங்கள் என்று கேட்டாராம். வேண்டாம் எனக் கூறியவர், டீசல் வரிசையில் முச்சக்கர வண்டியை எப்படி நிறுத்துவீர்கள்? என்று கேட்டிருக்கிறார். நண்பரொருவரின் வாகனம் வருவம்வரை இடம் பிடித்து வைத்திருக்கிறேன் என்று அவர் சமாதானம் சொன்னாராம்!

 ஆனால் இந்த நியாயங்களை முன் நிறுத்தி பதுக்கல்களை அனுமதிக்கலாமா? திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது... அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது என்ற எம்.ஜி.ஆர். பாடல் நினைவுக்கு வருகிறதா? பதுக்கலையும் அனாவசிய சேகரிப்பையும் தடுக்கத்தான் வேண்டும். தடுக்காவிட்டால் ஒரு போலியான தேவைகளையும் தட்டுப்பாட்டையும் அது சமூகத்தில் ஏற்படுத்திவிடும். இங்கே நாம் நுவரெலியாவில் நடக்கும் பதுக்கலைப் பார்ப்போம். ஏனெனில் அனைத்தையும் வியாபாரமாக்கும், எரிகிற வீட்டில் பிடுங்கியது. இலாபம் என்கிற மனப்பான்மை களையப்பட வேண்டியது அவசியம்.

எனக்கு அனைவரும் ஒத்துழைத்தால் மஸ்கெலியாவில் உணவுப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவேன் என்கிறார் மஸ்கெலிய பிரதேசசபை உறுப்பினர் ராஜ்குமார். "பெருந்தோட்ட மக்கள் தற்பொழுது பாரிய பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் அவர்களிடம் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்து வியாபாரிகள் கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றார்கள். இவர்களுடைய உண்மை முகத்தை வெளியில் கொண்டுவர வேண்டுமாக இருந்தால் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று ஆவேசப்படுகிறார் ராஜ்குமார். அது மாத்திரமல்ல இன்னும் பல இடங்களில் உணவுப் பொருட்கள் பதுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து பகுதிகளிலும் எரிவாயு தட்டுப்பாடு மண்ணெண்ணை தட்டுப்பாடு வீட்டு சமையல் எரிவாயு தட்டுப்பாடு என்பதால் அனைத்திற்கும் மக்கள் வரிசைகளில் நிற்க வேண்டிய மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. வரிசையில் நின்ற மண்ணெண்ணைக்காக ஒருவர் உயிரிழந்த மிகவும் கவலைக்கிடமான சம்பவம் ஹட்டனில் நிகழ்ந்தது. இது தவிர இன்னும் பல இடங்களிலும் இந்த துர்ப்பாக்கியமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

 உண்மையிலேயே பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றதா? அல்லது செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றதா?அல்லது வர்த்தகர்களால் திட்டமிடப்பட்டு பொருட்கள் பதுக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றதா? இப்படிப் பல கேள்விகள் ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக ஆராய முற்பட்டோம்.  நுவரெலியா மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு 84638லீற்றர் மண்ணெண்ணையும் சமையல் எரிவாயு 48456 (12.5கிலோ) சிலின்டர்கள் தேவைப்படுவதாகவும் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபர பிரிவிற்கு பொறுப்பான கே.பி.விஜேரத்ன தெரிவிக்கின்றார். இந்த புள்ளிவிபரமானது 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பிறப்பு இறப்பு கணிப்பீட்டின்படியே கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏழுலட்சத்து 80ஆயிரம் பேருக்கே இந்த மண்ணெண்ணையும் சமையல் எரிவாயுவுமே தேவைப்படுவதாக கே.பி.விஜேரத்ன குறிப்பிடுகின்றார்.

 அதே நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் 25எரிவாயு நிரப்பு நிலையங்கள் இருப்பதாகவும் அவற்றில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 16நிரப்பு நிலையங்களும் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான 9நிரப்பு நிலையங்களும் இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார்.

அதே நேரம் நுவரெலியா மாவட்டத்திற்கு மாதாந்தம் 35இலட்சம் லீற்றர் டீசலும் 22இலட்சம் லீற்றர் பெற்றோலும் தேவைப்படுவதாக கொட்டகலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தானத்தின் பொறுப்பாளர் தெரிவிக்கின்றார்.

 இந்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கின்ற பொழுது நுவரெலியா மாவட்டத்திற்கு ஒரு நாளைக்கு சராசரியாக 2822லீற்றர் மண்ணெண்ணை தேவைப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் இருக்கின்ற விற்பனை நிலையங்களின் அடிப்படையில் பார்க்கின்ற பொழுது ஒரு விற்பனை நிலையத்தில் சராசரியாக 112லீற்றர் தேவைப்படுகின்றது அல்லது விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால் இன்றைய நிலைமையில் இதனை விட பல மடங்கு அதிகளவான மண்ணெண்ணை கொள்வனவு செய்யப்படுகின்றது. அதற்கு ஒரு காரணமாக அமைந்திருப்பது சமையல் எரிவாயுவின் தட்டுப்பாடாகும். அதே நேரத்தில் கள்ளச் சந்தையில் மண்ணெண்ணை தாராளமாக​ கிடைக்கின்றது. அது எப்ப சாத்தியமாகின்றது?

 நுவரெலியா மாவட்டத்திற்கு ஒரு நாளைக்கு தேவையான டீசல் சராசரியாக 1.16இலட்சம் லீற்றர். இதனை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 25நிரப்பு நிலையங்களில் 4000ஆயிரம் லீற்றர் என்ற அடிப்படையில் விற்பனை செய்ய வேண்டும். ஆனால் அதனை விட அதிகமாக டீசல் தற்பொழுது விற்பனை செய்யப்படுகின்றது. அப்படியானால் அதற்கான காரணம் என்ன? நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலாத்துறை பின்னடைவை சந்தித்துள்ளது. புதிய வாகனங்கள் கொள்வனவு செய்ய முடியாது. அப்படியானால் எவ்வாறு அதிகமாக டீசல் விற்பனை செய்யப்பட முடிகிறது? எங்கோ ஒரு இடத்தில் இடறுகிறதல்லவா?

 நுவரெலியா மாவட்டத்திற்கு ஒரு நாளைக்கு தேவையான பெற்றோல் சராசரியாக 73ஆயிரம் லீற்றர். இதனை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 25நிரப்பு நிலையங்களில் 2920ஆயிரம் லீற்றர் என்ற அடிப்படையில் விற்பனை செய்ய வேண்டும். ஆனால் அதனை விட அதிகமாக பெற்றோல் தற்பொழுது விற்பனை செய்யப்படுகின்றது.

நுவரெலியா மாவட்டத்திற்கு ஒரு நாளைக்கு 1615சமையல் எரிவாயு (12.5) கொள்கலன் விற்பனைக்காக தேவைப்படுகின்றது. ஆனால் அதனை விட அதிகமான சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படுகின்றது. அப்படியானால் நிச்சயமாக எங்கோ ஒரு இடத்தில் சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்படுகிறது என்பது தானே இதன் அர்த்தம்? இதற்கு சான்றாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கினிகத்தேனை பகுதியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினால் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 85சிலின்டர்களை குறிப்பிடலாம். இது நீரில் மிதக்கும் பனிப் பாறையில் ஒரு சிறு பகுதி மாதிரித்தான். அநுராதபுரத்தில் ஒரே இடத்தில் 600சமையல் எரிவாயு கொள்கலன்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அது தவிர மேமாதம் 9ஆம் திகதி ஏற்பட்ட அசாதாரண நிலைமையின் பொழுது எரியூட்டப்பட்ட பல வி.ஐ.பி. வீடுகளில் சமையல் எரிவாயு உட்பட பல பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

 நுவரெலியா மாவட்டத்தில் இந்த பொருட்களைத் தவிர அரிசி, கோதுமை மா உட்பட இன்னும் பல அத்தியாவசிய பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றார்கள். அது தவிர மஸ்கெலியா பிரதேச சபையில் கோதுமை மா பதுக்கல் தொடர்பாக உறுப்பினர் ராஜ்குமார் கடந்த ஜூன் 10ம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் பல தகவல்களை வெளியிட்டார். இப்போது அனைத்து நகரங்களிலும் பதுக்கல்கள் இடம்பெறுகின்றன என்று அவர் சொல்கிறார்.

இது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகல்கள் வழங்கப்பட்ட பேதிலும் அவர்கள் தங்களுடைய கடமைகளை செய்ய முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது என்பது அவர்கள் தரப்பு வாதமாக உள்ளது. காரணம் தமது வாகனங்களுக்கான டீசல் பெற்றுக் கொள்ள முடியாததால் கடமைகளை செய்ய முடியவில்லையாம்! இவ்வாறான சூழலில் கள்ளவர்த்தகர்களுக்கும், பதுக்கல் பேர்வழிகளுக்கும் இது கொண்டாட்டமாகி விட்டிருக்கிறது. பூனைகள் தூங்கும்போது எலிகளுக்கு கொண்டாட்டடம் தானே! மக்கள் சிரமப்படும்போது வர்த்தகர்கள் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்வது எந்தளவு பொருத்தமானது?

நூரளை எஸ். தியாகு

Comments