போஷாக்கின்மை என்ற அபாயத்தை தடுத்து நிறுத்தக்கூடிய அமெரிக்காவின் 32 மில்லியன் டொலர் உதவி | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

போஷாக்கின்மை என்ற அபாயத்தை தடுத்து நிறுத்தக்கூடிய அமெரிக்காவின் 32 மில்லியன் டொலர் உதவி

கடந்த 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற G7எனப்படும் உலகின் செல்வந்த நாடுகளின் மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இலங்கையின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு மேலதிக உதவியாக 20மில்லியன் டொலர்களை வழங்குவதாக அறிவித்தார். 

 

 

இதன் கீழ் அடுத்துவரும் பதினைந்து மாத காலப்பகுதிக்கு 800,000கும் மேற்பட்ட பாடசாலை மாணவருக்கு உணவளிக்கும் பாடசாலை போஷாக்கு மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்திற்கு உதவியளிப்பதற்கும் 27,000இற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மாருக்கும் உணவு வவுச்சர்களை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.  

அத்துடன் இலங்கையில் இலகுவில் பாதிக்கப்படும் நிலையில் உள்ள மக்கள் பிரிவினருக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக உணவு உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு விவசாய உதவிகள் மற்றும் பணப்பங்களிப்புகள் ஊடாக சுமார் 30,000விவசாயிகளுக்கு உதவவும் இதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது.  

அமெரிக்கா மேற்கொண்ட இந்த அறிவிப்பானது உணவுப்பாதுகாப்பு பொதுச் சுகாதாரம் மற்றும் அனைத்து இலங்கை மக்களினதும் பொருளாதார மேம்பாடு தொடர்பில் அமெரிக்கா கொண்டுள்ள தொடர்ச்சியான உறுதிப்பாட்டினை நிரூபிப்பதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.  

இலங்கையின் பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு உதவி நல்குவதோடு இந்த குறிப்பிட்ட உதவியானது மிகவும் தேவைப்படும் நிலையில் உள்ள சமூகங்களுக்கும் சிறுவர்களுக்கும் சென்றடைவதை அமெரிக்கா உறுதி செய்யும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதுவரை அமெரிக்கா இலங்கைக்கு வழங்க உறுதியளித்துள்ள 12மில்லியன் டொலர் மனிதாபிமான உதவிகளுடன் சேர்த்து மொத்தம் 32மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த உதவிகள் USAID எனப்படும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் ஊடாக வழங்கப்படும் எனவும் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுத் தாராதரங்களை கடைப்பிடிக்கும் பங்காளர்களுக்கு வழங்கப்படுவதாகவும் எனவே இந்த நிதியளிப்பானது கணக்கீடு செய்யப்படுவதையும் உணவுப் பாதுகாப்பின்மையால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களை அது சென்றடைவதை உறுதிப்படுத்தவும் முடியும் எனவும் அமெரிக்காவின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இலங்கையில் கோவிட் 19கொள்ளை நோயினால் 2020ஆண்டிலிருந்து மோசமாகப் பாதிக்கப்பட்டு இப்போது பொருளாதார வீழ்ச்சியினால் முற்றாகக் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இலங்கையின் சமூகப்பிரிவினருக்கு அமெரிக்காவின் இலக்குப்படுத்தப்பட்ட இந்த நிதி அளிப்புகள் பேருதவியாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அமெரிக்கா தொடர்ச்சியாகவே இலங்கைக்கு இத்தகைய உதவிகளை வழங்கி வந்துள்ளது.  

குறிப்பாக, பாடசாலைச் சிறார்களின் போஷணை மட்டத்தை மேம்படுத்த உதவும் பிஸ்கட் வழங்கும் திட்டம் பாடசாலைகளில் நீண்டகாலமாக அமுலில் இருந்தது. அமெரிக்காவின் உதவி மூலமே இது சாத்தியப்பட்டது. பின்னர் இது நிறுத்தப்பட்டு மதிய போசனம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. குறைந்தபட்சம் பாடசாலைக்கு சமூகமளிப்பதன் மூலம் உணவுத் தேவையில் சிறிய ஒரு பகுதியையாவது இத்திட்டங்கள் மூலம் மிகவும் பாதிக்கப்படும் நிலையில் உள்ள மாணவர்கள் பூர்த்தி செய்யக்கூடியதாக இருந்தது.  

ஆனால் இப்போது இவை எதுவும் நடைமுறையில் உள்ளதாகத் தெரியவில்லை. அத்துடன் காலை உணவின்றி பாடசாலை செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் சென்றிருக்கிறது. அது மட்டுமன்றி இலங்கையில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாரின் போஷாக்கு மட்டத்தை மேம்படுத்தும் நோக்கிலான திரிபோஷ உணவு வழங்கும் திட்டம் மிக நீண்டகாலமாகவே நாட்டில் நடைமுறையில் இருந்துவந்தது.  

ஆனால் இப்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. திரிபோஷவை உற்பத்தி செய்வதற்கான உள்ளீடுகளின் விலைகள் அதிகரித்தமையும் இலங்கை அரசாங்கத்தின் பசுமை விவசாயத் திட்டத்தின் காரணமாக உள்நாட்டில் ஏற்பட்ட சோளம், பயறு போன்ற விவசாய உற்பத்திகளின் வீழ்ச்சியினால் இதற்கான உள்ளீடுகளைப் பெறமுடியாமல் போனமையும் இதனை முன்கொண்டு செல்வதில் தடைகளை எற்படுத்தியுள்ளன. இதனால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாரின் போஷணை மட்டம் வெகுவாகக் குறைந்து போயுள்ளதுடன் சிசுக்களின் போஷணை மட்டம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.  

மேலதிக ஊட்டச் சத்துகளை வழங்கும் பால்மா வகைகளின் விலைகள் வானத்தைத் தொடுமளவுக்கு உயர்ந்து சென்றுள்ள நிலையில் சாதாரண ஒரு குடும்பத்தினால் தாய்மாருக்கும் சிசுக்களுக்கும் மேலதிக உணவாதாரத்தை உறுதி செய்ய முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. கொவிட் நிலை காரணமாக எற்பட்ட முடக்கங்கள் இந்நிலையை தீவிரப்படுத்தியுள்ள அதேவேளை 2022இல் மிகமோசமாக அதிகரித்துச் சென்று கொண்டிருக்கும் பணவீக்கம் காரணமாக நாளாந்த உணவுத் தேவைகளில் ஒரு பகுதியையேனும் பெற்றுக்கொள்ள முடியாத பேரவல நிலை உருவாகியுள்ளது.  

சுகாதார மற்றும் போஷணை மேம்பாட்டுக்காய் உருவாக்கப்பட்டுள்ள அரச இயந்திரக் கட்டமைப்புகள் இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இவ்வாறான ஒரு புறச்சூழலிலேயே அமெரிக்காவின் இலங்கைக்கான நிதியளிப்பு குறித்த அறிவித்தல் வெளிவந்துள்ளது.  

இலங்கை ரூபாவில் சுமார் 720மில்லியன் பெறுமதியான இந்த நிதியளிப்பானது தேவைகளுடைய அனைவருக்கும் உதவியளிக்கப் போதுமானதாக இல்லாவிட்டாலும் இப்போதைய நிலையில் இது காலத்தின் பால் கிடைக்கும் பேருதவியாகவே பார்க்கப்பட வேண்டும்.  

இந்த உதவிகள் உரிய பிரிவினரைச் சென்றடைவதை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அமெரிக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமையானது இந்தப் பணத்திலும் ஒரு பகுதியை கபளீகரம் செய்து விடுவார்களோ என்ற ஐயத்தின் விளைவோ எனத் தெரியவில்லை.  

சமூக குறிகாட்டிகள் தொடர்பில் இலங்கை சுதந்திரம் பெற்ற காலப்புதியில் இருந்தே சிறப்பான அடைவுகளைப் பெற்றிருந்தமை பலராலும் பாராட்டப்பட்டிருந்தது. ஒரு நடுத்தர வருமானம் பெறும் நாட்டின் சமூக குறிகாட்டிகளின் அடைவுகளை குறைந்த வருமானம் பெறும் இலங்கை அடைந்து கொண்டமையானது ஆய்வாளர்களால் வியந்து நோக்கப்பட்டது. இது தொடர்பில் இலங்கை கடைப்பிடித்த கொள்கைகள் பாராட்டப்பட்டன. ஆனால் தொடர்ச்சியாகவே போஷாக்கின்மையானது இலங்கையின் சமூக அபிவிருத்தியில் மிகப்பெரிய ஒரு குறைபாடாக சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது.  

 

போஷாக்கின்மையானது ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் மோசமான பின்விளைவுகளை எற்படுத்தக் கூடும். முதலாவதாக போஷாக்கின்மையானது ஒருவரது வாழ்நாள்களைக் குறைத்துவிடும். இதனால் பொருளாதார ரீதியில் பங்களிக்கவல்ல காலப்பகுதி சுருங்கிவிடும். அதனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும்.  

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான காலப்பகுதி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி ஒரு நாட்டின் வாழ்நாள் எதிர்பார்க்கையில் ஏற்படும் 10சதவீத அதிகரிப்பு அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வருடாந்தம் 0.4சதவீத வளர்ச்சியை எற்படுத்தும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல மிக அரிதான உற்பத்தி வளமாகக் கருதப்படும் மனித மூலதனத்தைக் கட்டியெழுப்புவதில் போஷாக்கின்மையானது தடைகளை எற்படுத்தக் கூடும்.  

அண்மைய ஆய்வுகளின்படி ஒரு சிசு பிறந்தது முதல் மூன்றுவருட காலப்பகுதியில் அது உள்ளெடுக்கும் கலோரிகளின் அளவு அது வளர்ந்து 20வருடங்களின் பின்னர் உழைக்கும் வருமானத்தில் தாக்கம் செலுத்தும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதிக கலோரிகளை உள்ளெடுக்கும் குழந்தை பின்னாளில் அதிக வருமானத்தை உழைப்பது தெரியவந்துள்ளது. அக்குழந்தை உற்பத்தித்திறன் மிக்கதாக இருப்பதே இதற்குக் காரணமாகும்.  

எனவேதான் கர்ப்பிணிகள் பாலுாட்டும் தாய்மாரின் போஷாக்கு மட்டம் அதிகரிப்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதனால் அமெரிக்காவின் நிதியுதவி நீண்டகால ரீதியில் இலங்கையைப் பாதிக்கவல்ல போசணைக்குறைபாட்டுப் பிரச்சினையை ஈடுகொள்ள ஒரு சிறிய பங்களிப்பை வழங்கக்கூடும். ஆனால் ஏற்கெனவே கட்டியெழுப்பபட்டுள்ள மனித மூலதனத்தையும் உள்நாட்டில் சரியாகப் பயன்படுத்த வக்கின்றி வெளிநாடுகளுக்கு விற்று டொலர் தேடமுயற்சிக்கும் ஆட்சியாளருக்கு இவ்விடயங்கள் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருக்கும்.    

கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழம்

Comments