கம்பனி தரப்பை எதிர்கொள்ள முடியாத சங்கத்தரப்பு; சங்கங்கள் இரண்டுபட்டிருப்பதால் கொண்டாடி குதூகலிக்கும் கம்பனிகள்! | தினகரன் வாரமஞ்சரி

கம்பனி தரப்பை எதிர்கொள்ள முடியாத சங்கத்தரப்பு; சங்கங்கள் இரண்டுபட்டிருப்பதால் கொண்டாடி குதூகலிக்கும் கம்பனிகள்!

பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கிடையே நிலவும் ஒற்றுமை இல்லா நிலைமையை கம்பனி தரப்பினர் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாக இவ்வார ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார் இ.தொ.கா. பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான். 

வாஸ்தவமான சங்கதி. ஆனால் புதிய தகவல் அல்ல. இதைத்தான் கடந்த பல சகாப்தங்களாக சொல்லியும் எழுதியும் வருகின்றார்கள். ஆரம்பத்தில் இடதுசாரி, வலதுசாரி சித்தாந்தங்களை மையமாகக் கொண்டு தொழிற்சங்கப் பணிகளை ஆரம்பித்த சில தலைமைகள் பின்னர் அரசியல் ஆர்வம் கொண்டு தமது கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டன.

இதனால் அவர்களை நம்பிய தொழிலாளர்கள் அம்போவென கைவிடப்பட்டனர். இதேவேளை ஜே.ஆர். ஜெயவர்த்த னவால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்புத் திட்டம், 1987களில் உருவாக்கம் பெற்ற மாகாண சபைகள் முறைமை போன்றவை பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களின் வீரியத்தை கட்டுப்படுத்தியது. 

1989களில் இ.தொ.காவில் இருந்து பிரிந்து சென்ற பெ. சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியை ஆரம்பித்தார். இவரது தனிப்பட்ட ஆளுமை நம்பிக்கைளை உற்பவித்தது. அவரும் தொழிற்சங்க வாயிலாக அரசியலுக்கு உள்வாங்கப்பட்டார். அவர் வாழ்ந்தவரை மக்கள் அபிமானத்தை காப்பாற்றினார். 

உண்மையில் தலைமைத்துவ போட்டி, ஆதிக்கம், தனிமனித ஆராதனை காரணமாகவே தொழிற்சங்கப் பிளவுகள் ஏற்பட்டன.

இப்பிளவுகள் புதிய பரிமாணத்துக்கான வாயில்களாக அமையாததன் காரணமாக சுயநல தேவைகளுக்கான சந்தர்ப்பங்களாக மாற்றப்பட்டன.   குறிப்பாக அரசியலை ஆதாயம் தரும் மார்க்கமாக எண்ணியவர்கள் தொழிற்சங்க தாற்பரியங்களைக் காவு கொடுக்கலாயினர். இதனால் தொழிற்பிரச்சினைகள் கிடப்பில் போடப்பட்டன.

வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு கிடைத்தமையினால் உரிமைகோரல் என்னும் முழக்கத்தின் பேரில் அவர்களை வாக்கு வங்கிகளுக்கான பலிகடாக்களாகவே மாற்றி விட்டுள்ளார்கள் இந்தத் தலைமைகள். 

இ.தொ.காவிலிருந்து தமிழ் முற்போக்குக் கூட்டணி வரையிலான கட்சிகள் இதற்கான வகிபாகத்தை ஏற்றே ஆக வேண்டும். கடந்தகால சம்பள அதிகரிப்பு போராட்டங்களில் கூட தமது ஒற்றுமையை பிரதிபலிக்காமல் ஒண்டிக்கு ஒண்டி சண்டி என்ற போக்கிலேயே மலையகத் தலைமைகள் செயற்பட்டிருக்கின்றன. 

 

பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் இன்று பலவீனமடைந்து போயுள்ளன. கூட்டு ஒப்பந்தமும் கைவிடப்பட்ட நிலையில் தொழிற்சங்கங்கள் தனித்தனி தீவுகளாக நின்று தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளன. அவ்வாறு எடுக்கப்படும் தீர்மானங்களால் எதுவுமே ஆனதாகத் தெரியவில்லை. எனவேதான் பொது எதிரியோடு போராடுவதை புத்திசாலித்தனமாக தவிர்த்து தமக்குள்ளேயே குடுமிப்பிடிச் சண்டைகளை நடாத்தி தாமும் குழம்பி மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கின்றன மலையகத் தலைமைகள். 

1000ரூபா சம்பள அதிகரிப்பை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக உறுதிசெய்து மாதங்கள் பல ஆகிவிட்டன, எனினும் முறையாக அது நடைமுறைக்கு வரவில்லை. எனினும் கம்பனித் தரப்பை இணக்கப்பாட்டு வழிக்குக் கொண்டுவர முடியாதுள்ளது. சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி வழிவிடாத கதையாகியுள்ளது சம்பள அதிகரிப்பு. 

இதுவரை இ.தொ.கா இந்த விவகாரம் சம்பந்தமாக ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் அது ஏன் சாத்தியப்படவில்லை என்றொரு கேள்வி எழுகிறது. இ.தொ.காவும் இன்று பலவீனம் அடைந்துள்ளதன் வெளிப்பாடாக இதனை ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது?  

பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தோட்டக் கம்பனிகள் பயன்படுத்தலாம். ஆனால் தம்மை ஒற்றுமைப்படுத்திக் கொள்ள இதுவரை இ.தொ.கா. உருப்படியாக என்ன செய்துள்ளது? அல்லது தமிழ் முற்போக்குக் கூட்டணிதான் என்ன செய்துள்ளது? தேசியம் பேசுகிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் மனோ கணேசன் மலையக தொழிற்சங்கங்கள் ஒற்றுமையாக செயற்பட எதனையும் செய்வதாக தெரியவில்லை.  

பெரும் அவதிக்குள்ளாகி அல்லோல கல்லோலப்படுகின்றார்கள் மலையக மக்கள். விலைவாசி வான்முட்டும் அளவுக்கு உயர்ந்துக் கொண்டிருக்கின்றது. எரிபொருள் பிரச்சினையால் வேலைவாய்ப்புகளும் குறைவடைந்து வருகின்றது. சவாலான இந்தப் பொழுதில் சவடால் பேசிக் கொண்டிருப்பதால் என்ன பயன். 

மலையக தொழிற்சங்க அமைப்புகள் தமது வேற்றுமை உணர்வுகளை ஓரங்கட்டிவிட்டு பொது வேலைத் திட்டத்தின் கீழ் ஒன்றுபட்டு செயலாற்றினால் மட்டுமே சம்பள அதிகரிப்பும் மற்றும் அனைத்து பிரச்சினைகளையும் அடியோடு தீர்க்கலாம் என்று ஜீவன் தொண்டமான் நம்பினால் அதற்கான முன்னகர்வுகளை எடுக்கலாமே!

அதனை பெருந்தோட்ட மக்கள் முன்னிலையில் வைக்கலாமே. விட்டுக் கொடுப்புடன் முன்வரும் பட்சத்தில் அதற்கு முட்டுக்கட்டை போடும் தலைமைகளின் முகமூடிகள் சுலபமாக கிழிக்கப்படும் வாய்ப்புக் கிட்டும் அல்லவா? 

இதனை விட்டு ஏதோ ஒரு மூன்றாம் தரப்பு பார்வையாளனின் பதிவு போல குறைசொல்லிக் கொண்டிருப்பதால் மக்கள் சமாதானம் அடையப் போவது கிடையாது.

ஏதாவது முன்னெடுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்படுமிடத்து யார் தலைமை தாங்குவது? யாருக்கு முதன்மை? என்றெல்லாம் கெளரவப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்ததன் காரணமாக சந்தித்துவரும் தோல்விகளை இனியும் மக்கள் எவ்வளவு காலத்துக்குதான் தாங்கிக் கொள்ளப் போகிறார்கள்?    

Comments