ஈதுல் அழ்ஹா: பெருநாளை அமல்களால் அலங்கரிப்போம் | தினகரன் வாரமஞ்சரி

ஈதுல் அழ்ஹா: பெருநாளை அமல்களால் அலங்கரிப்போம்

இஸ்லாம் இரண்டு பெருநாட்களை எமது மனித வாழ்வுக்கு அவசியமான  பெறுமானங்களைக் கொண்டதாக அமைத்து தந்துள்ளது. அவற்றில் ஒன்று ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள், மற்றையது ஈதுல் அழ்ஹா எனும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என்பது இப்ராஹீம் (அலை) அவர்களும் அன்னாரது குடும்பத்தினரும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அமைய மேற்கொண்ட தியாங்களையும் அர்ப்பணிப்புக்களையும்  நினைவூட்டக்கூடியவையாக அமைந்துள்ளன. குறிப்பாக புனித மக்கா நகரில் நிறைவேற்றும் ஹஜ் கிரியைகளின்  அனைத்து அம்சங்களும் இப்ராஹீம் (அலை) அவர்களதும் அன்னாரது குடும்பத்தினரதும் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் நினைவூட்டக்கூடியனவாக உள்ளன. 

அந்த வகையில் துல்ஹிஜ்ஜா மாதம் 10ம் பிறையினை புனித ஹஜ்ஜுப் பெருநாளாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம் அத்தினத்தின் மகிமைகளை அறிந்து நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறையில் அப்பெருநாளை அமைத்துக் கொள்ளும் போது அல்லாஹ்விடம் அளப்பரிய  நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும். அத்தோடு அந்நாளே இபாதத் ஆகவும் அமையும் என்பதில் இல்லை.

நோன்புப் பெருநாள் தின இரவின் மஃரிப் முதல் மறுநாள் காலை பெருநாள் தொழுகை ஆரம்பிக்கும் வரைக்கும் தக்பீர் சொல்வது ஸுன்னத்தாகும். ஹஜ்ஜுப் பெருநாள் என்பதால் அய்யாமுத்து தஷ்ரீக் தினங்களான பிறை 10,11,12,13அஸர் தொழுகை வரையும் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் தக்பீர் சொல்வது விரும்பத்தக்கதாகும்.

பெருநாள் தினத்தில் பெருநாளுக்காக குளிப்பது மிக முக்கியமான ஒரு சுன்னத் ஆகும். பெருநாள் இரவு நடுநிசியிலிருந்து இக்குளிப்பை நிறைவேற்றலாம். 'ஈதுல் அல்ஹா வுடைய சுன்னத்தான குளிப்பை நிறைவேற்றுகிறேன்' என்ற நிய்யத்துடன் குளிப்பதன் மூலம் நன்மைகளை அடைந்துகொள்ளலாம்.

நறுமணம் பூசிக்கொள்வதும் மற்றுமொரு விசேடமான சுன்னாவாகும். அத்தோடு ஆடைகளில் சிறந்த ஆடையை அணிந்து கொள்வதும் நபிவழியாகும். ஹஜ்ஜுப் பெருநாளைப் பொறுத்தவரையில், சூரியன் உதயமாகி 20நிமிடங்கள் கழிந்ததுடன் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதும் தொழுகைக்கு புறப்பட முன்னர் எதனையும் சாப்பிடாது தொழுகைக்கு செல்வதும் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையாகும்.

இப்பெருநாள் தொழுகையின் முதல் ரக்அத்தில் 7தக்பீர்கள் சொல்வதும் இரண்டாம் ரக்அத்தில் 5தக்பீர்கள் சொல்வதும் சுன்னத்தாகும். ஒவ்வொரு தக்பீருக்கு இடையிலும் 'ஸுப்ஹானல்லாஹ் வல்ஹம்துலில்லாஹ் வலாஇலாஹ இல்லால்லாஹு அல்லாஹு அக்பர்' என்று சொல்லிக்கொள்வது சிறப்பாகும்.

பெருநாள் தினத்தில் கடைபிடிக்க வேண்டிய மற்றுமொரு சுன்னா, ஒரு பாதையால் தொழுகைக்கு சென்று வேறொரு பாதையால் வீட்டுக்குத் திரும்புவதாகும். (ஆதாரம்: முஸ்லிம்). அத்தோடு பெருநாள் தொழுகையை முடிந்தளவு நேர்காலத்தோடு தொழவேண்டும் (நூல்: அஹ்மத்). பெருநாள் தொழுகை ஸுன்னா முஅக்கதாவாகும்.

மேலும் பெருநாள் தொழுகை முடிந்ததும் சிலர் குத்பா பிரசங்கத்தை செவிமடுக்காமல் திரும்பி விடுகின்றனர். ஆனால் பெருநாள் தொழுகை எவ்வாறு சுன்னத்தோ அதேபோன்று பெருநாள் குத்பா பிரசங்கத்தை கேட்பதும் சுன்னாவாகும்.

பெருநாள் தினத்தில் வாழ்த்துக்கூறல். ஒருவரை ஒருவர் சந்தித்து முஸாபஹா செய்து 'தகப்பாலல்லாஹ் மின்னா வமின்கும்' (அல்லாஹ் எங்களையும் உங்களையும் ஏற்றுக்கொள்வானாக) என்று வாழ்த்துச் சொல்வதும் கூட நபிவழியாகும். இவ்வார்த்தை வெறுமெனே ஒரு வாழ்த்து மட்டுமல்லாது அது உயர்ந்த ஒரு துஆ வும் கூட. 

மேலும் ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தில் மேற்கொள்ளும் அமல்களில் சிறந்த அமலாக அமைவது உழ்ஹிய்யாவாகும். பெருநாள் தினத்தன்று மனிதன் நல் அமல்களில் இரத்தம் ஒட்டி குர்பான் கொடுப்பதைவிட அல்லாஹ்வுக்கு விருப்பமான அமல் வேறெதுவும் இல்லை. உழ்ஹிய்யா கொடுக்கப்படும் பிராணி அதன் கொம்புகளுடனும் முடிகளுடனும் குழம்புகளுடனும் நாளை மறுமைநாளில் வரும். அறுக்கப்படும் மிருகத்தின் இரத்தம் பூமியில் விழும் முன்னரே அது அல்லாஹ்விடம் சென்றடைகின்றது. எனவே அதனை மன விருப்பத்துடன் நிறைவேற்றுங்கள்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: இப்னு மாஜா)

அதேநேரம் பல்லின  மக்கள் வாழும் நாடொன்றில் குர்பானியை நிறைவேற்றும் போது ஏனைய மதத்தவர்களின் உணர்வுகளை மதித்து நடந்து கொள்ளவும் தவறக்கூடாது. அதற்கு தேவையான வழிகாட்டல்களையும் இஸ்லாம் வழங்கியே இருக்கின்றது.

இவை இவ்வாறிருக்க, பெருநாள் தினத்தில் அடக்கஸ்தலங்களுக்கு சென்று அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இனபந்துக்களை தரிசிக்கவும் அவர்களுக்காக பிரார்த்திக்கவும் தவறக்கூடாது.

பெருநாள் தினத்தில் எமது சகோதர சகோதரிகள், இனபந்துக்கள் உறவினர்கள் நண்பர்கள் ஆசிரியர்கள் உஸ்தாத்மார்கள் போன்றோருக்கு நேசக்கரம் நீட்டுவதும் அவர்களுடன் உறவை பலப்படுத்திக்கொள்வதும், பகையை மன்னித்து விடுவதும் அதிகளவிலான நன்மைகளைப் பெற்றுத்தரும் செயற்பாடுகளாகும்.

குறிப்பாக எமது தாய் தந்தையர், உடன்பிறந்த சகோதர சகோதரிகள் உட்பட இரத்த உறவுகளுடன் உறவை பலப்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பமாகப் பெருநாளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இரத்த உறவுகளை பேணுவதன் மூலம் சுகமாக வாழ்வதோடு நீண்ட ஆயுளையும் பெற்றுக்கொள்ள முடியும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அத்தோடு பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் சீராகவும், சந்தோசம் நிறைந்த நிம்மதியான வாழ்வு கிட்டவும் தியாகத் திருநாளாம் இந்நன்நாளன்று பிரார்த்தனை செய்யவும் நாம் தவறக்கூடாது.  இஸ்லாம் காட்டித்தந்துள்ள வழிமுறைகள் படி இப்பெருநாளை அமைத்து  ஈதுல் அழ்ஹாவைக் கொண்டாடி மகிழ்வோம்.

மௌலவி
எம்.யூ.எம். வாலிஹ்
(அல் - அஸ்ஹரி), வெலிகம

Comments