பொருளாதாரத்துக்கும் கட்சிச் சாயம் பூசப்பட்டது! | தினகரன் வாரமஞ்சரி

பொருளாதாரத்துக்கும் கட்சிச் சாயம் பூசப்பட்டது!

'உபாலி விஜேவர்தன ஐ.தே.க காரர் என்பதால் அவரது தொழில்கள் முடக்கப்பட்டது போலவே ஸ்ரீமாவின் ஆள் என்பதால் தாச முதலாளி காணாமல் போனார்!'

சேர் ஒலிவர் குணதிலக்க, அன்றைய எல்லா உயர்குடி வகுப்பு மற்றும் செல்வந்தர்களைப்போலவே, பிரிட்டிஷ் பண்ணையில் வளர்க்கப்பட்டவர். பிரிட்டிஷ் மகாராணியார் அவருக்கும் 'சேர்' பட்டம் வழங்கி கௌரவித்தார் என்றால் எப்பேர்ப்பட்ட பிரிட்டிஷ் விசுவாசியாக இருந்திருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள். பிரிட்டிஷ் அரசு டொமினியன் அந்தஸ்துடன் கூடிய இலங்கையை யாரிடம் ஒப்படைத்தது என்றால் கருப்பு வெள்ளைக்காரரான டி.எஸ். சேனாநாயக்கவிடம் தான்! இலங்கை முதலாளித்துவத்தில் இருந்து தடம் புரண்டு சோஷலிசத்துக்குள் சென்று விடலாம் என்பதால்தான் எஸ். டபிள்யூ. பண்டாரநாயக்க சுட்டுக் கொல்லப்பட்டார் என்றொரு வாதம் அப்போதிருந்தே முன்வைக்கப்பட்டிருந்தது. அவருக்குப் பின் பதவியேற்ற அவரது மனைவியான ஸ்ரீமாவோவின் அரசைக் கவிழ்க்க பிரிட்டிஷ் ஆதரவாளர்களும், ஆங்கில வழிக் கல்வி கற்ற, கொழும்பு கிறிஸ்தவ உயர்குடி உயர் இராணுவ பொலிஸ் பதவிகளை வகித்தோருமான சிலர் ஒரு இராணுவ புட்சியை 1962இல் அரங்கேற்ற முனைந்து தோல்வியைத் தழுவினார். அப்போது தேசாதிபதியாக விளங்கியவர் மகாராணியால் நியமனம் செய்யப்பட்ட சர் ஒலிவர் குணதிலக்க.

வகுக்கப்பட்ட வகையில் திட்டம் நிறைவேறியிருக்குமானால் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் முக்கிய அமைச்சர்களும் கைது செய்யப்பட்டு கொழும்பு இராணுவ தலைமையக சுரங்க அறைகளிலும் பனாகொடை இராணுவ முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள். அடுத்த கட்டமாக சதிப்புரட்சி செய்தவர்கள் இராணி மாளிகைக்கு (ஜனாதிபதி மாளிகை) சென்று தேசாதிபதி ஒலிவர் குணதிலக்கவை சந்தித்து ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசைக் கலைக்கும்படி கேட்டிருந்திருப்பார்கள்.

திட்டம் இப்படித்தான் வகுக்கப்பட்டிருந்தது. சதிப் புரட்சி பிசுபிசுத்து வீட்டில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு ஒலிவர் குணதிலக்க மீதிருந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. இவர் தேசாதிபதியாக நீடிப்பது தனக்கு ஆபத்தானது என்று கருதிய அவர் சர் ஒலிவரை பதவி நீக்க நினைத்தார். ஆனால் பிரிட்டிஷ் மகாராணியால் நியமனம் செய்யப்பட்டவரை இலங்கை அரசினால் பதவி நீக்கம் செய்ய முடியாது. எனவே அன்று பிரதமரின் செயலாளராக விளங்கிய, பிரட்மன் வீரக்கோன் உடனடியாக லண்டனுக்கு பிரதமரின் கடிததத்துடன் அனுப்பபட்டார். ​ேசர் ஒலிவர் குணதிலக்கவை அப் பதவியில் இருந்து அகற்றி ஸ்ரீமாவோ பண்டாநாயக்கவின் உறவினரான வில்லியம் கோபல்லாவை தேசாபிதியாக நியமனம் செய்யும்படி மகாராணிக்கு அக் கடிதத்தில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

அதன்படியே மகாராணியாரும் குணதிலக்கவை நீக்கிவிட்டு கோபல்லாவையை புதிய தேசாதிபதியாக நியனம் செய்தார். ​ேசர் ஒலிவர் குணதிலக்க இச்சதிப் புரட்சி முயற்சியுடன் சம்பந்தப்படுத்தப்பட்டு கைதாகாமல் விடப்பட்டதற்கு அவர் மகாராணியால் நியமனம் செய்யப்பட்டவர் என்பதே காரணம்.

இதன் பின் விளைவாகவே கொழும்பு கேஸ் கம்பனியின் மீது அரசின் சீற்றம் பாய்ந்தது. கம்பனி இயங்காமல் போனது. தற்போது கொழும்புக்கு வரும் பஸ்கள் நிறுத்தப்படும் இடமாகவும் தனியார் குணசிங்கபுர பஸ் நிலையமும் அக்காணியிலேயே அமைந்துள்ளன. இக் கேஸ் கம்பனி தொடர்ந்தும் இயங்கி வந்திருக்குமானால் கொழும்பு ஹோட்டல்கள் மற்றும் வீடுகளுக்கு தொடர்ந்தும் தரை வழிக்குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு வழங்கப்பட்டிருக்க முடியும். சமையல் எரிவாயுக்காக மக்கள் பேயாக அலையும் இச்சந்தர்ப்பத்தில் ஏற்கனவே இருந்த ஒரு எரிவாயு வழங்கும் வசதியை இலங்கையின் குறுகிய அரசியல் கண்ணோட்டம் காரணமாக இழக்க நேரிட்டதை இங்கே பதிவு செய்ய வேண்டியுள்ளது.

அரிசியை முக்கிய விஷயமாக முன்வைத்து இந்நாட்டில் செய்யப்பட்ட அரசியல் மோசமான விளைவுகளைத் தந்த மாதிரியே தேசிய அரசியலமைப்பு தேசிய பொருளாதாரத்தையும் கட்சிக் கண்ணோட்டத்தில் பார்த்தால் ஏற்பட்ட பேரிழப்புகளையும் நாம் எடைபோட்டு பார்க்கத்தான் வேண்டும்.

இலங்கையின் மிகச் சிறந்த தொழிலதிபராக உபாலி விஜேவர்தனவை குறிப்பிட முடியும். பெரிய குடும்பத்துப் பிள்ளை. றோயல் பழை மாணவர். ஜே. ஆருக்கு உறவினர். இலங்கையில் பெயர்போன கென்டொஸ் சொக்லட் நிறுவனத்தை நிறுவியவர். த ஐலண்ட் பத்திரிகை நிறுவனத்தை ஆரம்பித்தவர். இலங்கையின் சுதந்திர வர்த்தக முதலீட்டுச் சபையின் முதலாவது தலைவர். இடை விடா முயற்சி கொண்டவர்.

அறுபதுகளில் யுனிக் வர்த்தகப் பெயரில் கெஸட் ரெக்கோர்டர், கிராமபோன், வானொலி என்பனவற்றை தயாரித்தார். உபாலி பியட் கார்கள் உள்ளூரில் இணைக்கப்பட்டு கார்கள் தயாரிக்கப்பட்டன. 'லம்ரேட்டா' என்ற ஸ்கூட்டர் பாவனைக்கு வந்தது. 1970இல் ஆட்சி மாறியதும் பதவிக்கு வந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, இத் தொழில் முயற்சியாளருக்கு மேலும் வாய்ப்புகள் வழங்கி உற்சாகமூட்டுவதற்கு பதிலாக அவரை தனக்கு ஆபத்தாக வரக்கூடிய ஐ.தே.கட்சிக்காரராகவும், இறக்குமதி அனுமதிப் பத்திரங்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. எனவே இப் புதிய தொழில் முயற்சிகள் அனைத்தும் மூடப்பட்டன. இழப்பு, நாட்டின் பொருளாதாரத்துக்கு!

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்தில் தாச முதலாளி என்ற புதிய தொழிலதிபர் வெளிச்சத்துக்கு வந்தார். அவர் ஆடைத் தொழிற்சாலைகள் அமைத்தார். பொறளை, கொள்ளுப்பிட்டியில் இலங்கையின் முதல் சுப்பர் மார்க்கட்டுகளை அமைத்தார். தாச ஷொப்பிங் சென்டர் என அவை புகழ்பெற்றன. இதே காலப் பகுதியில் எலிபண்ட் ஹவுஸ், மெலிபன், ஸ்டார் பிராண்ட் டொபி கம்பனி போன்ற அரசியல் சார்ந்து வர்த்தகம் செய்யாத வர்த்தக நிறுவனங்கள் தப்பிப் பிழைத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

1977இல் ஐ.தே.க ஆட்சிக்கு வந்ததும், தொழிலதிபராக ஆயிரக்கணக்கானனோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வந்த தாச முதலாளி மீது நெருக்கடிகள் கொண்டுவரப்பட்டன.

ஏனெனில் அவர் 'ஸ்ரீமாவின் ஆள்' என்றே பார்க்கப்பட்டாரே தவிர, நாட்டின் பொருளாதாரத்துக்கு வளம் சேர்க்கக்கூடியவர் என்று பார்க்கப்படவில்லை. எனவே தாச முதலாளி காணாமல் போனார்!

நாட்டின் பொருளாதாரத்தையும் அதன் வளர்ச்சியையும் பரந்த கண்ணோட்டத்தில் பார்க்கத் தவறிய அரசியல்வாதிகளின் தொடர்ச்சியான செயல்பாடுகளே இன்றைய நிலைக்கு நாட்டைத் தள்ளியது. உபாலி விஜேவர்தனவும் தாச முதலாளியும் இரு உதாரணங்கள் மட்டுமே!

அடுத்தவாரம் 1953ஹர்த்தால் வெற்றி பெற்றதையும் அதன்பின் விளைவுகளையும் பார்ப்போம். ஹர்த்தால் என்பது தமிழ் அல்லது சிங்கள மொழி சொல் அல்ல. அது குஜராத்தி சொல். குஜராத்திகாரரான மகாத்மாகாந்தி கண்டெடுத்து பயன்படுத்திய சொல்.

அருள் சத்தியநாதன்

Comments