பொருளாதார நெருக்கடி சூழலில் ஹஜ்ஜுப் பெருநாள் | தினகரன் வாரமஞ்சரி

பொருளாதார நெருக்கடி சூழலில் ஹஜ்ஜுப் பெருநாள்

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலையில் நாம் இவ்வருட பெருநாளை அடைந்துள்ளோம். இந்த சூழலில் எல்லா மக்களதும் இயல்பு வாழ்வு பாதிப்படைந்துள்ளது. அதனால் சில விடயங்களை கருத்திற்கொள்ள வேண்டிய தேவைக்கு நாம் உள்ளாகியுள்ளோம்.

இறைவனை நெருங்குவதும் மனித நலன் பேணுதலும் பெருநாளின் நோக்கங்களாக விளங்குகின்றன. அந்த வகையில் முஸ்லிம்களாகிய எமக்கு இரண்டு பெருநாட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அப்பெருநாட்கள் அல்லாஹ்வின் நாட்டப்படி உயர்ந்த இரண்டு வணக்கங்களை தொடர்ந்தே வருகின்றன. ஒரு மாத காலம் நோன்பிருந்து இறை திருப்தியையும் பாவமன்னிப்பையும் இறை வழிகாட்டலையும் பெற்ற சந்தோசத்தில் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றோம்.

ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் ஹஜ் கடமைகளை நிறைவேற்றியும் ஹஜ்ஜுக்கு செல்லாதவர்கள் துல்ஹஜ் முதல் ஒன்பது நாட்களும் சுன்னத்தான, நபிலான வணக்கங்களில் ஈடுபட்டும் பத்தாம் நாளில் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுகின்றோம். எமது பெருநாட்களுக்கு இரண்டு தனித்துவப் பண்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று எமது பெருநாட்கள் எம்மை அல்லாஹ்வைச் சார்ந்து வாழச் செய்கிறது. (அஃயாத் ரப்பானிய்யா) மற்றையது  எமது பெருநாட்கள் முஸ்லிம்களாகிய எம்மை அனைத்து மனிதர்களுடனும் சேர்ந்து வாழச் சொல்கிறது. (அஃயாத் இன்ஸானிய்யா) ஆகும்.

நோன்பு, ஹஜ் என்ற இரு கடமைகளைத் தொடர்ந்து பெருநாட்கள் கொண்டாடப்படுகின்றன. பெருநாட்களை தக்பீரோடும் தொழுகையோடும் ஆரம்பிக்கின்றோம். இது எப்போதும் எம்மை அல்லாஹ்வைச் சார்ந்தவர்களாக வாழத் தூண்டுகின்றது.

அதேநேரம் எமது பெருநாட்களில் சந்தோசங்களை அனைத்து மக்களோடும் பகிர்ந்து கொள்கிறோம். அனைவருக்கும் முகமன் கூறுகின்றோம், நோன்புப் பெருநாளின் நிமித்தம் ஏழை வீடுகளுக்கு சென்று ஸகாத்துல் ஃபித்ர் என்ற தர்மத்தை நிறைவேற்றுகிறோம். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொடர்ந்து உழ்ஹிய்யாவை நிறைவேற்றுகிறோம். இவை மனிதர்களோடு எம்மை சேர்ந்து வாழத் தூண்டுகிறது. உழ்ஹிய்யாவைப் பற்றி அல்குர்ஆன் கூறும் போது 'இத்தினங்களில் அல்லாஹ்வின் பெயர் கூறி, அல்லாஹ் உங்களுக்கு அருளிய பிராணிகளிலிருந்து அறுத்து அதிலிருந்து நீங்கள் உண்ணுங்கள், தேவையுள்ள ஏழைகளுக்கும் கொடுத்து உதவுங்கள்' (ஸூரதுல் ஹஜ்: 28) என்றுள்ளது.    முஸ்லிம் சமூகம் உறுதியான ஈமானோடும் உயர்ந்த வணக்க வழிபாடுகளோடும் பண்பாடுகளோடும் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இஸ்லாத்தின் வழிகாட்டல்களை பின்பற்றுகின்ற முன்மாதிரி சமூகமாக வாழும் அதேவேளை, தாம் வாழும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் இஸ்லாம் எமக்கு சொல்லித்தந்திருக்கின்றது என்பதையும் நாம் மறந்து விடலாகாது.

இப்ராஹீம் (அலை) அவர்களது தியாகங்கள், முன்மாதிரிகள் என்பவற்றை ஞாபகப்படுத்துகின்ற இச்சந்தர்ப்பத்தில் அன்னார்  கேட்ட ஒரு துஆவையும் நாம் கற்றுக்கொள்ளத் தவறக்கூடாது.

'நபியே, இப்ராஹீம் 'என் இறைவனே இந்த நாட்டை பாதுகாப்பானதாக ஆக்கி அதன் குடிகளுக்கு பலவகை கனி வர்க்கங்களிலிருந்து உணவளிப்பாயாக'. (பகரா : 126)

இப்ராஹீம் நபியின் இந்த துஆ எதனை எங்களுக்கு சொல்கிறது? நாம் அல்லாஹ்வோடு சார்ந்திருப்பதற்கும் நாம் மனிதர்களோடு சேர்ந்திருப்பதற்கும் எமக்கு துணை நிற்பது, நாம் வாழும் நாடு பாதுகாப்பானதாகவும் நம் நாட்டு மக்கள் பட்டினி,பஞ்சம் இல்லாதவர்களாக இருப்பதுமாகும். 

மனிதர்கள் தன்னை வணங்க வேண்டும் என்று அல்லாஹ்தஆலா கோருவதற்கான நியாயமாக தன்னிறைவும் பாதுகாப்பும் உள்ள நாடாக மக்காவை ஆக்கியமையை அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

 'கஃபாவின் இறைவனை நீங்கள் வணங்குங்கள். அவன்தான் உங்கள் பசிக்கு உணவூட்டினான். பயத்திலிருந்து உங்களுக்கு பாதுகாப்பளித்தான்.'(பலத்: 03,04)

இப்றாஹீம் (அலை) தனது நாடு பாதுகாப்பானதாகவும் நாட்டு மக்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற தனது அவாவை பிரார்த்தனையாக இறைவனிடம் கேட்டதைப் போன்றே அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்தார்கள். அல்லாஹ்வும் அவரது பிரார்தனையை அங்கீகரித்தான். அவரது வழித்தோன்றலில் வந்த நபிமார்கள் ஊடாக அவரது கனவை அல்லாஹ் நனவாக்கினான்.

எகிப்து மக்களை பசியிலிருந்து பாதுகாத்து நாட்டை பாதுகாப்பான நாடாக மாற்றிய நபி யூசுப் (அலை) அவர்களின் வரலாற்றையே அல்குர்ஆன் அழகிய வரலாறாக வர்ணிக்கிறது.

எகிப்து நாட்டுக்கு வர இருந்த பஞ்சத்தில் இருந்து அந்நாட்டை பாதுகாத்த நபி யூசுப் (அலை) அவர்கள் தனது குடும்பத்தை எகிப்துக்கு வந்து குடியமரச் சொன்னபோது 'பாதுகாப்பான எகிப்திலே வந்து வாழுங்கள்' என்றே அழைப்பு விடுத்தார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவில் குடியேறியபோது, அவ்வூர் மக்களோடு சேர்ந்து அவ்வூரை பாதுகாப்பதற்கான அரசியல் சாசனத்தை உருவாக்கினார்கள். அந்த ஊரை நேசித்தார்கள். அந்த ஊரில் விவசாயம், வியாபாரம் வளர்ச்சி அடைவதற்கான தூண்டுதல்களை செய்தார்கள்.

 அந்த ஊரின் சுற்றுச்சூழல், சுகாதாரம், மனிதர்களின் ஆரோக்கியம், கல்வி போன்ற விடயங்களில் கவனம் செலுத்தினார்கள். 'யா அல்லாஹ் எனது இப்புதிய ஊரை எனக்கு அன்புக்குரியதாக ஆக்குவாயாக, அதனது வியாபாரத்திலும், விவசாயத்திலும் அருள் செய்வாயாக, இங்கிருக்கும் நோய்களை அகற்றுவாயாக' என பிரார்த்தனை செய்தார்கள். இந்த துஆ ஒரு முஸ்லிமுக்கும் அவன் வாழும் நாட்டுக்கும் இருக்கவேண்டிய தொடர்பைத் தெளிவுபடுத்துகின்றது.

எமது நாடும் மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எமக்குத் தெரியும். அரசியல் பிரச்சினை, உணவுப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, தொழில் பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினை, கல்விப் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அதனால் அச்சம் சூழ்ந்த நிலையில் இருந்து எம் நாட்டையும் எம் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டியதும் அதற்காக முன்னெடுக்கப்படும் நல்ல முயற்சிகளுக்கு பங்களிப்பு வழங்குவதும் எமது கடமையாகும்.

எனவே, தனி மனிதர்களாக, குடும்பங்களாக, கழகங்களாக,அமைப்புகளாக, சமூகமாக மனிதர்களின் துயர் துடைப்பு பணிகளில் ஈடுபடுவோம். தான தர்மங்களை முடியுமான வரை அதிகரித்துக் கொள்வோம். உற்பத்திப் பணிகளில் முடியுமானவரை ஈடுபடுவோம். விவசாயம், வியாபாரம், கைத்தொழில், பண்ணை வளர்ப்பு, சுகாதாரம், கற்பித்தல் போன்ற பணிகளை மனிதகுல சேவையாகக் கருதி செயற்படுவோம்.

அல்குர்ஆனும் ஸுன்னாவும் இவ்விடயத்தில் அதிக வழிகாட்டல்களை எமக்கு தந்திருக்கின்றது. 'நம்பிக்கையான வியாபாரிகள் மறுமையில் நபிமார்களோடும் ஷுஹதாக்களோடும் உண்மையாளர்களோடும் இருப்பார்கள்' என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

விவசாயத்துறையில் மறுமை நாள் வரை ஈடுபடும் அளவுக்கு நபி (ஸல்) அவர்கள் தூண்டுதல் வழங்கினார்கள்.

விவசாயத்தின் பலனை பறவைகள், மிருகங்கள், மனிதர்கள் யார் பெற்றுக்கொண்டாலும் அது விவசாயிக்கு சதகாவாக எழுதப்படும் என அன்னார் கூறினார்கள்.

இதேபோல பண்ணை வளர்ப்பு, கைத்தொழில், மருத்துவப் பணி, கற்பித்தல் பணி போன்ற மனித வாழ்க்கையை அழகுபடுத்தும் மேலும் இலகுபடுத்தும் விடயங்களை செய்யுமாறும் அதற்கு அழகிய கூலி கிடைக்கும் என்றும் அல் குர்ஆனும் ஹதீஸும் குறிப்பிட்டிருக்கின்றன.

அல்லாஹ்வின் அருள்கள் நிறைந்த ஒரு நாட்டில் நாங்கள் வாழ்கின்றோம்.

ஆகவே பெருநாளின் நோக்கத்திற்கு அமைய இஸ்லாம் கூறிய வழிகாட்டல்களோடு இந்நன்நாளைக் கொண்டாடுவோம்.

அஷ்ஷெய்க்
எம்.எச்.எம் உஸைர் இஸ்லாஹி

Comments