மனைவியை கோடரியால் தாக்கி கொன்ற கணவன்! | தினகரன் வாரமஞ்சரி

மனைவியை கோடரியால் தாக்கி கொன்ற கணவன்!

சில மனிதர்களது நடத்தைகள் மிருகங்களை விட மோசமானவை என்பதை இந்த சமூகத்தில் அனேக சந்தர்ப்பங்களில் எம்மால் காணக் கூடியதாக உள்ளது. தனது இரத்தத்தில் உருவான பிள்ளைகளை பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து உலகுக்குத் தரும் மனைவியை, அல்லது தனது பிள்ளைகளின் தாயை கொடூரமான முறையில் கொலை செய்யுமளவுக்கு மோசமாக செயற்படும் மனிதர்களைப் பற்றி அறியக் கிடைப்பது மிகவும் துயரமானது.

 கடந்த 4ம் திகதி திங்கட்கிழமை பொலனறுவை மாவட்டத்தின் புலத்திசிரிபுல பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற கொலைச்சம்பவமொன்று அனைவரையும் உருக்கியுள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளில் 184சதுர கிலோ மீற்றர் கொண்ட லங்காபுர பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பிரதான நிருவாக உத்தியோகத்தரான 45வயதுடைய எம். எம். யமுனா பத்மினி என்பவர் அவரது வீட்டினுள்ளேயே மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

யமுனா வசித்து வந்தது புலத்திசிரிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிங்குரங்கொடையிலிருந்து சோமாவதி வரை  செல்லும் வீதியில் வரும் கால்வாய் சந்திக்கு 500மீற்றர் தொலைவில் அமைந்துள்ள தல்பொத்த, 16/1ம் இலக்க வீட்டிலாகும். அப்பிரதேசத்தில் அபூர்வமாகக் காணப்படும் சொகுசு இரு மாடி வீட்டில் அவள் வசித்து வந்தாள். அந்த வீட்டில் வைத்து அவள் கொலை செய்யப்பட்டது கடந்த 4ம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 2.20மணியளவில் அவளது கணவனான கபில பண்டார என்பவனாலாகும். யமுனாவின் கொலை தொடர்பில் பொலிஸாரிடம் அவன் ஆரம்பத்தில் கூறியது இதைத்தான்.

“நான் அதிகாலை 2.20மணியளவில் நித்திரையிலிருந்து எழும்பினேன்... வொஷ் றூம் சென்று திரும்பி மனைவியின் நுளம்பு வலையினுள் இருந்த நுளம்புகளை விரட்டினேன்.... எனது நுளம்பு வலையினுள்ளிருந்த நுளம்புகளையும் விரட்டிவிட்டுத்தான் உறங்கினேன்... சத்தம் கேட்டு திடீரென எழும்பினேன்.... முழுவதும் இருட்டாக இருந்தது.... அதேநேரம் வாசல் வழியாக கரிய நிற உயரமான ஒருவர் என்னை நோக்கி வந்தார். நான் அந்நபரைத் தாக்குவதற்காக இறங்கினேன்.... அந்நேரம் அந்நபர் அவனது கையிலிருந்த தடியோ அல்லது கத்தியோ ஏதோவொன்றால் என்னைத் தாக்கினான்.... அத்தாக்குதல் என் அருகில் படுத்திருந்த மனைவியின் மீதே பட்டது.... நான் அந்த இருட்டில் அவனை துரத்தினேன்... அவன் வெளியே தப்பி ஓடினான்....”

இச்சம்பவத்தைத் தொடர்ந்து கபில பண்டார புலத்திசிரிபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ. பீ. கே. பத்திரணவிடம் இவ்வாறு கூறியிருந்தான்.

“சேர்.... திருடன் ஒருவன் வீட்டுக்குள் புகுந்து என் மனைவியைத் தாக்கிவிட்டான்.... பின்னர் தப்பி ஓடிவிட்டான்.... என்னால் அவனைத் துரத்திப் பிடிக்க முடியாமல் போய்விட்டது.... நாம் இப்போது மனைவியை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்கிறோம்.....”

அந்த தொலைபேசி அழைப்பு அதிகாலை 4மணியளவில் கிடைத்திருந்தது. எனினும் சம்பவம் இடம்பெற்றிருப்பது அதிகாலை 2.20மணியளவிலாகும்.

யமுனாவின் தலையின் நடுவில் மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த தாக்குதலால் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது. பொலனறுவை வைத்தியசாலையில் அவள் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் யமுனா இவ்வுலக வாழ்வுக்கு விடை கொடுத்தார், அவரது இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளும் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தகவல் கிடைத்த உடன் செயற்பட்ட புலத்திசிரிபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் யமுனா கொலை செய்யப்பட்ட அவள் வசித்த வீட்டை நோக்கி விரைந்தனர். யமுனா கொலை செய்யப்பட்டிருந்தது அவளது வீட்டின் மேல் மாடியில் தனது மகள்களுடன் ஒரே கட்டிலில் படுத்திருந்த நிலையிலாகும். பொலிஸ் விசாரணைகளின் ஆரம்பத்துடன், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட புலனாய்வாளர்களுக்கு, யமுனாவின் கொலை பற்றி அவரது கணவர் கூறிய விடயங்களில் சில சந்தேகங்கள் எழுந்தன, காரணம் இது போன்ற விசாரணைகளில் அவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் அனுபவத்தின் இருப்பதனாலாகும்.

தமது வீட்டுக்கு திருடன் ஒருவன் வந்துள்ளதாகக் கூறினாலும், அத்திருடன் வீட்டினுள் நுழைந்த முறை பற்றி யமுனாவின் கணவர் எதுவும் தெரிவிக்கவில்லை. அது தொடர்பில் பொலிஸார் தொடர்ச்சியாக யமுனாவின் கணவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு, வீட்டையும் சோதனை செய்த போதும் திருடன் வீட்டுக்குள் நுழைந்ததற்கான எந்த தடயங்களையும் கண்டு கொள்ள முடியாமல் போயுள்ளது. அவன் பொலிஸாரிடம் வழங்கிய வாக்கு மூலத்தில் வீட்டின் பிரதான வாயிற் கதவு திறந்திருந்ததாகத் தெரிவித்திருந்தான். அது பொலிஸாரின் சந்தேகத்திற்கு மற்றுமோர் சான்றாக அமைந்திருந்தது.

காரணம் அக்கதவு சாதாரண கதவுகளைப் போன்று திறக்க முடியாதது. தற்காலிகமா அமைக்கப்பட்டிருந்த அக்கதவு மூடப்பட்டிருந்தது மோட்டார் சைக்கிள்களுக்குப் பயன்படுத்தப்படும் செயின் ஒன்றின் மூலமே. அதன் சாவியை வீட்டினுள் உள்ள மலர்ச்சாடியினுள்ளேயே வைத்திருப்பதாகவும் யமுனாவின் கணவன் கூறியிருந்தான். எனினும் திருடனைப் பின்தொடர்ந்து துரத்திக் கொண்டு கீழே வரும் போது முன் கதவு திறக்கப்பட்டிருந்ததைக் கண்டதாகவும் அவன் பொலிஸாரிடம் கூறியிருந்தான்.

பொலிஸாரின் கடுமையான சந்தேகத்திற்கு காரணமாக அமைந்திருந்தது அந்தக் கதவு பூட்டப்பட்டிருந்த முறைக்கமைய அதன் சாவியைத் தேடி எடுத்து பூட்டைத் திறப்பதைத் தவிர அக்கதவினைத் திறந்து கொண்டு சாதாரண திருடர்களால் உள்ளே நுழைவது முடியாத காரியம் என்பதனாலாகும். அக்கதவினை திடீரென திறந்து விட முடியாது என்பது விசாரணையினை மேற்கொள்ளும் பொலிஸாருக்கு தெரிய வந்தது.

இதேநேரம் யமுனாவின் கணவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்,

“ 3வருடங்களுக்கு முன்னர் இதே நபர் வீட்டுக்குள் நுழைய முற்பட்ட நேரத்தில் நான் வீட்டு விளக்குகளைப் போட்டேன்.... அதனைத் தொடர்ந்து அவன் பின்புறத்தால் தப்பி ஓடிவிட்டான்.... அப்போது நானும் மனைவியும் கீழ் அறையிலேயே உறங்கிக் கொண்டிருந்தோம்... என்னோடு ஊரில் எவருக்கும் குரோதம் இல்லை... நான் ஊரில் எல்லோருக்கும் உதவியிருக்கின்றேன்... மனைவின் தலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது... இரத்த வெள்ளம்.... நான் காபட் ஒன்றைப் போட்டு இரத்தத்தை மூடினேன்... எனினும் எமது பிள்ளைகள் இருவரும் இரத்தத்தைக் கண்டுவிட்டார்கள்... அவன் தான் கொண்டு வந்த கூரிய ஆயுதத்தினாலேயே தாக்கியிருக்கின்றான்... கோடரி, கத்தி, அரிவாள் எல்லாமே சமையல் அறையிலேயே இருக்கின்றது... அந்த ஆயுதத்தினால்தான் தாக்கி இருக்கிறான் போல.... எனது மனைவிக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டும் கூட நான் அவளை மரணத்திலிருந்து காப்பாற்றியிருக்கின்றேன்... நான் என் மனைவியை வீட்டில் வைத்தே சிகிச்சை வழங்கினேன்... கடைசியில் ஒரு கொடுரனின் கைகளில் என் மனைவியை இழந்திருக்கின்றேன்... அதுதான் எனக்கு வேதனையாக உள்ளது...” இவ்வாறு அவன் மிகுந்த சோகத்துடன் கூறியிருந்தான்.

அவனது இந்தக் கூற்று தொடர்பில் பொலிஸாரின் கவனம் திரும்பியது. இதனிடையே பொலிஸார் யமுனாவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவளது பிள்ளைகளிடமும் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருந்தனர். யமுனாவின் 11வயது மூத்த மகள் இவ்வாறு கூறியிருந்தார். “நான் நித்திரையிலிருந்து எழுந்து பார்த்த போது எனது தாய் வேகமாக மூச்செடுத்துக் கொண்டிருந்ததைக் கண்டேன்... அப்போது திருடன் வந்துள்ளதாகக் கூறி தந்தை கீழே ஓடினார்...” அச்சிறுமி அவ்வளவுதான் கூறியிருந்தார். விசாரணை மேற்கொண்ட பொலிஸாரின் சந்தேகம் வலுவடைந்தது. யமுனாவைக் கொலை செய்த நபர் யமுனாவின் வீட்டில் உள்ள ஒருவராகவே இருக்க வேண்டும் என்பது கணவனது நடத்தைகள் மூலம் வெளிப்பட்டது.

இதனிடையே பொலனறுவையின் உத்தியோகபூர்வ மோப்ப நாயான “லியோன்” விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து அந்த மோப்ப நாய் யமுனாவின் வீடு அமைந்துள்ள தோட்டத்தைச் சுற்றி எல்லா இடங்களுக்கும் சென்று இறுதியில் சமையல் அறையில் நின்றது.. இதுவும் கொலையாளி வீட்டினுள்ளேயே இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியது.

இதனடிப்படையில் யமுனாவின் கொலை நடந்து இரண்டு தினங்கள் கடக்கும் முன்னர் அதாவது 5ம் திகதி மாலை 3.00மணியளவில் புலத்திசிரிபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் அவர்களது வீட்டுக்குச் சென்றனர். பின்னர் விசாரணைகளிலிருந்து வெளிப்பட்ட சந்தேகநத்தின் பிரகாரம் யமுனாவின் கணவன் கபில பண்டாரவை பொலிஸார் 500மீற்றர் தொலைவில் அமைந்துள்ள புலத்திசிரிபுர பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு ஆயத்தமானார்கள். எனினும் கபில பண்டார பொலிஸாரிடம் இவ்வாறு கூறினார்.

“சேர்.... இக்கொலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை... ஏன் நீங்கள் இதில் என்னை சிக்க வைக்கப் பார்க்கின்றீர்கள்...? என்னை பொலிஸ் நிலையத்திற்கு இந்நேரத்தில் அழைத்துச் செல்ல வேண்டாம்.... தாயும் இல்லாத எனது பிள்ளைகளுக்கு இந்நேரத்தில் நான் இங்கு இருந்தே ஆக வேண்டும்....”

எனினும் சந்தேகத்திற்கு வழிவகுத்த பல விடயங்களின் காரணமாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட கபில பண்டார பின்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டான். அவனிடம் தொடர்ச்சியாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். அவ்வாறு அதிக நேரம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொலிசாருக்கு தேவை ஏற்படவில்லை. குற்றச் செயலைச் செய்த குற்றவாளியின் வாய் பொய்யைக் கூறினாலும் செய்கைகளால் அதனைப் பொய்யாக்க முடியாது என்பதை நிரூபித்து கபில பண்டார தனது மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டு அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்தினான்.

“ஆமாம்.... சேர் நான்தான் எனது மனைவியின் தலையில் அடித்தேன்.... கோடாரியால்தான் தாக்கினேன்... பின்னர் கோடரியை வீசிவிட்டேன்....”

கபில பண்டார பொலிஸாரிடம் நிறைய விடயங்களை வெளிப்படுத்தினான்.

“அன்று நான் வேலைக்குச் செல்லவில்லை.... காலை வேளையில் வீட்டிலேயே இருந்தேன்... மாலையில் நண்பன் ஒருவனைச் சந்திக்கச் சென்றேன்... இருவரும் இணைந்து பியர் அருந்தினோம்... வீட்டுக்கு வந்த போது மனைவி என்னுடன் சண்டை போட்டாள்.... நான் மது அருந்துகிறேன் என்றும், அதிகமாக கடன் பட்டுள்ளேன் எனக் கூறியும் அவள் என்னோடு சண்டையிட்டாள்....” அது நடந்தது கடந்த 04ம் திகதியாகும். யமுனா 45என்ற குறுகிய வயதில் இவ்வாறு அவசரமாகவே தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட ஒரு இருண்ட தினமாக அன்றைய தினம் அமையப் போகின்றது என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.

“சேர்.... நாம் இருவரும் சண்டை பிடித்துக் கொண்ட பின்னர் யமுனாவும், பிள்ளைகள் இருவரும் உறங்குவதற்காக மேல் மாடிக்குச் சென்றார்கள்.... பின்னர் நான் சமையல் அறையில் இருந்த கோடரியை எடுத்துக் கொண்டு மேலே சென்றேன்.... கோடாரியின் வெட்டாத பக்கத்தினால் யமுனாவின் தலையில் அடித்தேன்.... அதன் பின்னர் நான் வெளியே சென்று விட்டேன்.... பக்கத்து காணியின் புற்களுக்குள் கோடரியை வீசினேன்.... அதன் பின்னர் நான் வீட்டுக்கு வந்து கூக்குரலிட்டேன்..... வீட்டுக்குள் திருடர்கள் புகுந்து யமுனாவைத் தாக்கிவிட்டார்கள் என கத்தினேன்....”

கடந்த 05ம் திகதி பொலனறுவை வைத்தியசாலையில் இடம்பெற்ற யமுனாவின் சடலம் மீதான பிரேதப் பரிசோதனையின் போது, மழுங்கிய ஆயுதத்தினால் தலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மரண விசாரணைகளின் பின்னர் யமுனாவின் சடலத்தை அவளது தந்தையிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு, இறுதிச் சடங்கு கடந்த 06ம் திகதி லங்காபுர பிரதேசத்தில் இடம்பெற்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கபில கடந்த 06ம் திகதி பொலனறுவை நீதவான் சகித கிரசான் விக்ரமரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் சந்தேக நபர் விசேட வாக்குமூலம் ஒன்றை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பின்னர் சந்தேக நபரை 08ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதோடு, அவரது வாக்குமூலத்தை அன்றைய தினத்தில் நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

1977மார்ச் 12ம் திகதி பிறந்த யமுனா பத்மினி, கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவராகும். ஐந்து சகோதரிகளும், ஒரு சகோதரரும் அவருக்கு உள்ளனர். கட்டுகஸ்தோட்டை ஸ்ரீராகுல வித்தியாலத்தின் சிறப்புமிக்க பழைய மாணவியான யமுனா, பாடசாலையின் உதவி மாணவத் தலைவியுமாகும். அதற்கு மேலாக கட்டுகஸ்தோட்டை த்ரி சிங்கள சிமாராம விகாரையின் அறநெறி பாடசாலையின் முன்னாள் போதனாசிரியருமாவார். மிகுந்த கஷ்டங்கள், அர்ப்பணிப்புக்களுக்கு மத்தியில் கல்வி கற்று முன்னுக்கு வந்த யமுனா, வணிக முகாமைத்துவ பட்டம், இலங்கை கணக்காளர் நிறுவன உறுப்பினர், கணக்காளர் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா போன்ற உயர் கல்வி தரங்களைப் பெற்றிருந்தார். யமுனா 2004/05காலப் பகுதியில் அரச கைத்தொழில் நிறுவனத்தின் உத்தியோகத்தராகவும், 2005ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையில் குண்டசாலை பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராகவும், 2011முதல் 2016வரையில் லங்காபுர பிரதேச செயலகத்தில் அதே பதவியின் பின்னர் 2016தொடக்கம் 2018ம் வரையில் புலத்திசிரிபுர தேசிய கல்வியியல் கல்விக் கல்லூரியில் பதிவாளராகவும், பின்னர் 2018செப்டெம்பர் 18ம் திகதியிலிருந்து மரணிக்கும் வரையில் லங்காபுர பிரதேச செயலகத்தில் பிரதான நிருவாக அதிகாரியாகவும் பணியாற்றி வந்துள்ளார்.

யமுனா அனைவரினதும் மனங்களைக் கவர்ந்த ஒரு உத்தியோகத்தராக இருந்து வந்துள்ளமை அவரது கொலையின் பின்னர் பெரும்பாலானோர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட கருத்துக்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

லங்காபுர பிரதேசத்தினை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட 41வயதுடைய ஹேரத் முதியான்சேலாகே கபில பண்டார, ஆரம்ப காலத்தில் சாரதியாக இருந்தவர். அவர் தற்போது லங்காபுர கேகலுகம அரச பாடசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராக் கடமையாற்றுகின்றார். இற்றைக்கு 15வருடங்களுக்கு முன்னர் கபில பண்டார மற்றும் யமுனா ஆகிய இருவரும் கட்டுகஸ்தோட்டையில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் சந்தித்து அறிமுகமாகினர். அன்றைய தினத்தில் ஆரம்பித்த இவர்களது காதல் தொடர்பு திருமணத்தில் முடிவடைந்ததன் பின்னர் யமுனா லங்காபுர பிரதேசத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.

அவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்துள்ளனர். அண்மையில் அவர்கள் இருவரும் இணைந்து அப்பிரதேசத்திலேயே சொகுசு மாடி வீடு ஒன்றையும் நிர்மாணித்தனர். அந்த நிர்மாணப் பணிகள் இதுவரை நிறைவடையவுமில்லை.

புலத்திசிரிபுர பொலிஸார் தற்போது சந்தேக நபரான கபில பண்டாரவின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பிலும் அவரது சமூகத் தொடர்புகள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் அவர்கள் இருவரும் சமூகத்தின் முன் சிறந்த தம்பதியினராக வாழ்வதாகக் காட்டிக் கொண்டாலும் உள்ளே ஏராளமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதற்கு அவர்கள் இருவரின் சமூக அந்தஸ்து, வயது வித்தியாசம், தொழில் முரண்பாடுகள் போன்றன காரணமாக அமைந்திருந்துள்ளன.

அத்துடன் கபில பண்டார எவ்வித திட்டமிடலும் இன்றி வாழ்ந்து கொண்டிருந்த ஒருவராகும். தனது மனைவி யமுனா அதற்கு முற்றிலும் மாற்றமான பெண்ணாகும். கபிலவின் அவ்வாறான வாழ்க்கையினால் கபில தனது மனைவி மற்றும் மனைவியின் சகோதரிகள் உள்ளிட்ட பலரிடம் இலட்சக் கணக்கில் கடன் பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரு பிள்ளைகள் தொடர்பில் சிறுவர் நன்னடத்தை அறிக்கையினைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அதன் பிரகாரம் பிள்ளைகளை கம்பளை, கெலிஓயாவில் வசிக்கும் சந்தேக நபரின் மூத்த சகோதரியிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதாக புலத்திரசிரிபுல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். அந்தப் பிள்ளைகள் சந்தேக நபரின் சகோதரியுடன் நெருக்கமாக இருந்ததன் காரணமாகவே அவர்கள் அவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சந்தேக நபரான் கபில மற்றும் கொலை செய்யப்பட்ட யமுனா ஆகியோருக்கிடையில் முறுகல் ஏற்பட்டதாகவும், அதனை சமாதானப்படுத்தி வைத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் மன நிலை என்பன பற்றி சிந்தித்து தீர்மானிக்க வேண்டும் என அவர்களுக்கு புத்திமதி கூறி அனுப்பியுள்ளார்.

கணவனின் கொடூர செயலால் ஒட்டுமொத்த அரச துறையானது ஒரு சிறந்த அதிகாரியை இழந்துள்ளதுடன், அவரது மரணத்தால் இவ்வுலகில் தனித்து விடப்பட்ட இரண்டு அப்பாவி குழந்தைகளின் வாழ்க்கை தற்போது கருமேகமாகிப் போயுள்ளது.

வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் லக்ஸ்ரீ விஜேசேன, பொலனறுவை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஓஷான் ஹேவாவிதாரன ஆகியோரின் ஆலோசனையின் பேரில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த ரத்னபாலவின் கண்காணிப்பில் புலத்திசிரிபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பீ. பீ. கே. பத்திரனவின் நடவடிக்கையில் பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் தமித் குணசிங்க, பொலிஸ் சார்ஜன்களான பத்திரன, ஹேரத், பொலிஸ் கான்ஸ்டபிள்களான ஹதுருசிங்க, மதுசங்க, பெண் பொலிஸ் கான்ஸ்டபில்களான கயானி மற்றும் சஷிகா ஆகியோர் இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அமில மலவிசூரிய
தமிழில்: எம்.எஸ்.முஸப்பிர்
(புத்தளம் விசேட நிருபர்)

Comments