யாழ்ப்பாணத்தில் சைக்கிளுக்கு எகிறும் மவுசு | தினகரன் வாரமஞ்சரி

யாழ்ப்பாணத்தில் சைக்கிளுக்கு எகிறும் மவுசு

நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக பழைய இரும்பு கடைகளில் உள்ள பழைய துவிச்சக்கர வண்டிகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

எரிபொருள் விலையேற்றம், தட்டுப்பாடு காரணமாக பலரும் தமது போக்குவரத்துக்காக மீண்டும் துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இதனால் துவிச்சக்கர வண்டிகளுக்கான கேள்வி அதிகரிக்க புதிய துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் எகிறியது. புதிய லுமாலா சைக்கிள்களின் விலைகள் யாழ்ப்பாணத்தில் 90ஆயிரம் ரூபாயை அண்மித்துள்ளது.

அதேவேளை ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, திருத்தப்பட்டு (ரீக்கொண்டீசன்) விற்கப்படும் சைக்கிள்களும் 70ஆயிரம் ரூபாயை அண்மித்துள்ளது.

அதனால் பலரும் வீடுகளில் கைவிடப்பட்ட தமது பழைய துவிச்சக்கர வண்டிகளை மீளத் திருத்தி பாவிக்க தொடங்கியுள்ளனர்.

ஒரு துவிச்சக்கர வண்டியை முழுவதுமாக திருத்தம் செய்வதற்கு (கழுவி பூட்ட) யாழ்ப்பாணத்தில் 20ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக செலவாகின்றது.

குறிப்பாக துவிச்சக்கர வண்டிகளை திருத்தம் செய்யப்படும் போது தேவைப்படும் உதிர்ப்பாகங்களான போல்ஸ், கம்பிகள் , கிறீஸ் என்பவற்றின் விலைகளும் எகிறியுள்ளன.

அது மாத்திரமின்றி, கழுவி பூட்டுவதற்கான மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையும் காணப்படுகிறது.

இந்நிலைகளிலையே முன்னர் இரும்பின் எடைக்கு பழைய இரும்பு கடைக்கு விற்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளுக்கு தற்போது கேள்வி அதிகரித்துள்ளது.

பழைய இரும்பு கடைகளில் பழைய இரும்புகளுடன் காணப்படும் துவிச்சக்கர வண்டிகளை பலரும் தேடிப் போய் வாங்குகின்ற நிலைமை காணப்படுகிறது.

பழைய இரும்பின் எடைக்கு வாங்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை கூட தற்போது பழைய இரும்பு விற்பனையாளர்கள் 5ஆயிரம் தொடக்கம் 10ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான விலைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவற்றினை வாங்கி உருட்ட கூட முடியாத நிலையில் அவற்றை கொள்வனவு செய்து கொள்பவர்கள் அதனை மீள திருத்த சுமார் 30ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக செலவழிக்கின்ற நிலை மை காணப்படுகிறது.

மயூரப்பிரியன்

Comments