மலையகப் பிரதேசத்தை தமிழ் நாவலுக்குக் களமாக்கிய முதல்வர் நந்தி | தினகரன் வாரமஞ்சரி

மலையகப் பிரதேசத்தை தமிழ் நாவலுக்குக் களமாக்கிய முதல்வர் நந்தி

நந்தி என்ற புனைபெயர் கொண்ட எழுத்தாளர், ​​பேராசிரியர், மருத்துவர் எஸ். சிஞானசுந்தரம் பற்றி, கலாநிதி நா. சுப்பிரமணியன்  பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

'ஈழத்தின் நவீன தமிழ் இலக்கியத்துறையில் அடியெடுத்து வைத்துக் குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தந்த முதலாவது மருத்துவ அறிவியலாளர் என்ற வகையிலும் மலையகப் பிரதேசத்தினைத் தமிழ் நாவலுக்குக் களமாக்கிய முதல்வர் என்ற வகையிலும் நந்திக்கு ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிரந்தர இடமுண்டு. (நந்தி மணிவிழா மலர் -பக்:138)

  நந்தி  தமிழ்க் கலை இலக்கியத் துறைகளில் நாற்பது ஆண்டுகளுக்குமேல் தொடர்பு கொண்டவர். புனைகதை, நாடகம், மருத்துவ அறிவியல் துறைகளில் எழுத்தாளராகத் திகழ்ந்த இவர், நடிப்பு, நாடகத் தயாரிப்பு ஆகிய துறைகளிலும் அவ்வப்போது கவனஞ்செலுத்தி வந்துள்ளார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளைத் தலைவராகத் திகழ்ந்து எழுத்தாளர், கலைஞர், திறனாய்வாளர் ஆகிய பல நிலையினரையும் செயலூக்கத்திற்குத்   தூண்டிநின்றவர்.

நல்லூர் வி. செல்லத்துரைக்கும்  செல்லம்மாவுக்கும் 30-.03.-1928இல்  பிறந்த நந்தியினது இயற்பெயர் சிவஞானசுந்தரம். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வைத்தியப் படிப்பை நிறைவு செய்து மேற்படிப்பினை லண்டன் பல்கலைக்கழத்தில் பெற்றவர். இவருக்கு  நந்தி என்ற புனைப்பெயரை வழங்கி ஆசீர்வதித்தவர் தமிழக மூதறிஞரான ராஜாஜி.

இவரது முதலாவது சிறுகதை சஞ்சலமும் சந்தோஷமும் 1947இல் வீரகேசரியில் வெளியானது. 1960இல் மலையகத்தில் நந்தி சுகாதார அதிகாரியாக இருந்த காலத்தில் மலையகத்தைப் பின்புலமாகக் கொண்ட மலைக்கொழுந்து என்ற நாவலை எழுதினார். இவரது முதல் நாவலான மலைக்கொழுந்து 1962இல் தினகரன் இதழிலே தொடராக வெளிவந்து பின்னர் 1964இல் நூல்வடிவம் பெற்றது. மலையத் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் பிரச்சினைகளை சித்தரித்த முதலாவது நாவல் என்ற பெருமை இதற்குரியது.  தொழிற்சங்கங்களுக்கிடையே நிலவிய போட்டியும் தனிமனித முரண்பாடுகளும் தொழிலாளர் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பது இந்நாவல் மூலம் எடுத்துக் காட்டப்படுகிறது.

'தொழிலாளியான மலையப்பன் முத்து வீராயியைக் காதலிக்கிறான். தோட்டத்தின் தொழிற்சங்கங்களுக்கு இடையேயிருந்த போட்டி இருவரும் இணைவதற்குத் தடையாகிறது. தோட்டத்து டிஸ்பென்ஸர் பதி தீவினை சூழ்வோனாகி முத்துவீராயியின் தந்தைக்கும் மலையப்பனுக்கு மிடையில் பகை மூட்டுகிறான்.

 

சின்னத்துரையான மகராஜன் முத்து வீராயியை மணம் புரியத் திட்மிடுகிறான். மலையப்பனை விழ்த்துவதற்காக திட்டமிட்ட கலகம் அவனது தங்கை போன்ற  வள்ளியை உயிர்ப்பலி கொள்கிறது. மகராஜனை மணக்க மறுத்து முத்துவீராயி மலையிலிருந்து வீழ்ந்து உயிர் துறக்கிறாள். 

இக்கதையம்சத்திற்குத் துணையாக மலையக மக்களின் வாழ்க்கைமுறை பற்றிய விவரணங்கள் அமைகின்றன. மருத்துவ நிபுணரான ஆசிரியர் தமது தொழின்முறை அனுபவங்களை நாவலில் புகுத்தியுள்ளார். மலையகத் தொழிலாளரது வாழ்க்கையை அனுதாபத்துடன் நோக்கும் யாழ்ப்பாணத்து நடுத்தர வர்க்கத்தர் ஒருவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது இந்நாவல்' (ஈழத்து தமிழ்நாவல் இலக்கியம் என்ற நூலில் நா. சுப்பிரமணியன்)

தனது 13வயதிலே எழுதத் தொடங்கி தமிழிலும் ஆங்கிலத்திலும் மிக ஆர்வமுள்ள எழுத்தாளராக விளங்கியவர் நந்தி.

இவரது நாவல்களான மலைக்கொழுந்து, தங்கச்சியம்மா, நம்பிக்கைகள் என்பனவும் சிறுகதைத் தொகுதிகளான ஊர்நம்புமா?, கண்களுக்கு அப்பால், நந்தியின் கதைகள், தரிசனம், நந்தியின் சிறந்த சிறுகதைகள் ஆகியனவும் குரங்குகள் என்ற நாடகப் பிரதியும் படைப்பிலக்கிய நூல்களாக வெளிவந்துள்ளன.

இவர் ஆங்கிலத்தில் எழுதிய கூடுதலான புத்தகங்கள் மருத்துவத்துடன் தொடர்புடையவை. இவர் எழுதிய 'ஆராய்ச்சிகள்' என்ற நூல் இரு பகுதிகளைக் கொண்டது. இந்நூல் இலங்கையின் எல்லா மருத்துவக் கல்லூரிகளிலும் உபயோகிக்கப்படுவதுடன், ஆராய்ச்சிக்கல்வி பயிலும் மாணவர்களாலும் பாவிக்கப்படுகின்றது. அத்துடன் மட்டுமல்லாது மருத்துவம் சம்பந்தமாகவும் மக்களின் உடல்நலம் சம்பந்தமாகவும் 50இற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டார். 16நூல்களை தமிழிலும், 4நூல்களை பாமர மக்களிற்கான மருத்துவ நூல்களாகவும், 2நூல்களை சிறுவர்களுக்காகவும், மேலும் 2நூல்களை ஆன்மீகத்திற்குரிய நூல்களாகவும்,  ஆசிரியர்களுக்காக மனிதனின் உயர்வு என்ற ஒரு சத்தியசாயி கல்வி நூலையும் வெளியிட்டுள்ளார்.

நந்தி எழுதிய சுகாதார அறிவியல் நூல்கள்பற்றி டாக்டர் எம். கே. முருகானந்தன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

குழந்தை வளர்ப்பு பற்றி அவர் எழுதிய கட்டுரைத் தொடர்கள் மிகவும் பிரபல்யமானவை. இதை அவர் வெறும் கட்டுரைகளாக எழுதவில்லை. ஒரு டொக்டர் அண்ணன் தனது அன்புத் தங்கைக்கு எழுதிய பாசமுள்ள கடித வடிவிலே இதை அமைத்திருந்தார்.

குழந்தை வளர்ப்பு பற்றிய விடயங்களை மக்களிடையே பரப்ப இந்த இலக்கிய வடிவத்தை அவர் எடுத்தாண்ட செயல் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தது. ஏனெனில் கட்டுரையாக எழுதினால் அது வெறும் விபரக் கொத்தாக கவர்ச்சி அற்றுவிடும். 

ஆனால் கடிதமாக எழுதும்போது அது ஒருவருடன் மற்றவர் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்கின்ற விதத்தில் எழுதப்படுவதால் ஆசிரியருக்கும் வாசகனுக்கு மிடையே ஒரு அந்நியோன்னிய உணர்வை ஏற்படுத்தி வாசகனை அதனோடு நெருங்கிவரச் செய்து சொல்லப்படும் விஷயங்களையும இலகுவாகப் பரிந்துகொள்ளச் செய்கிறது. சுகாதாரக்கல்விக்கு இலக்கிய வடிவம் கொடுத்து அதைக் கவர்ச்சிகரமாக்கினர். எனவே அவரை சுகாதார இலக்கியத்தின் முன்னோடி என்று சொல்லாம்' அன்புள்ள நந்தினி, நந்தினி உன்பிள்ளை, உங்களைப்பற்றி ஆகியன இவ்வகை சார்ந்த நந்தி எழுதிய சுகாதார இலக்கிய நூல்களிற் சிலவாகும்.

நந்தி அரசாங்க சுகாதார சேவையின் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு மட்டங்களில் 1966ஆம் ஆண்டுவரை கடமையாற்றினார். 1967ஆம் ஆண்டு ஆவணி மாதம் பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூகநல மருத்துவ பிரிவில் இணைந்து துணைப் பேராசிரியராக உயர்ந்தார்.

அத்துடன் மருத்துவ விஞ்ஞானப்பிரிவின் தலைமை நிர்வாகஸ்தராகவும் மேற்படிப்பிற்கான சமூகநல மருத்துவப் பீடத்தின் தலைமை அதிகாரியாகவும் விளங்கினார். 1978ஆம் ஆண்டு யாழ். மருத்துவப் பீடம் ஆரம்பிக்கப்பட்ட பொழுது சமூகநல மருத்துவ பீடத்தின் முதல் பேராசிரியராக பதவியேற்றது முதல் தனது கடைசி மூச்சுவரை அப்பதவியிலேயே பணியாற்றினார். 1984ஆம் ஆண்டிலிருந்து 1988ஆம் ஆண்டுவரை மருத்துவ பீடத்தின் தலைவராக திகழ்ந்ததுடன் 1979ஆம் ஆண்டிலிருந்து 1993ஆம் ஆண்டுவரை யாழ்ப் பல்கலைக்கழகத்தின் ஆலோசனைச் சபையின் அங்கத்தினராகவும் கடமையாற்றினார்.

உலக சுகாதார நிறுவனத்திற்காக 1985ஆம் ஆண்டிலிருந்து 1999ஆம் ஆண்டுவரை மலேசியா, பங்களாதேஷ், மொங்கோலியா, இந்தியா, மியன்மார், சிம்பாப்வே, வட கொரியா ஆகிய நாடுகளில் சுகாதார ஆராய்ச்சிக்கூடங்களில் சர்வதேச ஆலோசகராகப்  பணிபுரிந்தார்.

நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டவராக விளங்கிய நந்தி மாணவப் பருவத்திலேயே ஷேக்ஸ்பியர் ஆங்கில நாடகங்களில் பல முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்துப் பாராட்டுக்களையும் பரிசில்களையும் பெற்றவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.  

நந்தியால் 1949இல் விசித்திர மூக்குக் கண்ணாடி என்ற தலைப்பில் சிறுகதையாக எழுதப்பட்டு பின்னர் வானொலி நாடகமாக 1957இலும் புதும கண்ணாடிய என சிங்கள வானொலியிலும் வெளிவந்த ஆக்கம், 1975இல் குரங்குகள் என்ற தலைப்பில் மேடை நாடகமாகப் பவனி வரத்தொடங்கியது. பேராதனைப் பலகலைக்கழக அரங்கு உட்பட பத்துக்கும் மேற்பட்ட அரங்குகளில் மேடையிடப்பட்டது.

நந்தியின் சிருஷ்டியாக விளங்கிய இந்த நாடகம் அவரது நடிப்புடனும் நெறியாள்கையுடனும் சேர்ந்த புதிய வார்ப்பு.  சமூகத்தின் பொட்டுக்கேடுகளைப் பிட்டுக்காட்டும் வகையில் புதிய உத்திகள்  பாய்ச்சப்பட்ட மேடைநாடகம் இது.

நந்தி இருபத்தைந்துக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களில் நடித்து வானொலி நேயர்களின் பாராட்டைப் பெற்றவர். அத்தோடு இலக்கியம், மருத்துவம் சம்பந்தமான இவரது வானொலிப் பேச்சுகள் இலங்கை வானொலியில் மட்டுமல்லாது லண்டன் பி. பி. ஸி, சிங்கப்பூர் வானொலி ஆகியவற்றிலும்  தொடராக இடம்பெற்றன.

ஈழத்தில் திரைப்படத்துறையில் பரீட்சார்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது நந்தியும் தனது பங்களிப்பைச் செய்யத் தவறவில்லை. பொன்மணி என்ற திரைப்படத்தில், பல பிள்ளைகளின் தந்தையாக மத்தியதர மனிதனாய்த் தோன்றி நடித்தார்.  ஈழத்தின் நவீன தமிழ் இலக்கியத்துறையில் அடியெடுத்து வைத்த முதலாவது மருத்துவர், மலையகப் பிரதேசத்தினைத் தமிழ் நாவலுக்குக் களமாக்கிய முதல்வர், சுகாதார இலக்கியத்தின் முன்னோடி ஆகிய பெருமைகளைக்கொண்ட நந்தி அவர்கள்  27.-05-.2005 அன்று அமரரானார்.

Comments