சண்டிலிப்பாய் கல்வளை விநாயகர் ஆலய தேர்த் திருவிழா | தினகரன் வாரமஞ்சரி

சண்டிலிப்பாய் கல்வளை விநாயகர் ஆலய தேர்த் திருவிழா

பல காலத்திற்கு முன்பு நிறுவப்பட்டுள்ள சண்டிலிப்பாய் கல்வளை விநாயக  ஆலயக் கொடியேற்ற வைபவம் 3. 7. 2022இல் ஆரம்பமாகி 12.07.22இல் இரதோற்சவம் நடைபெற உள்ளது.

ஒல்லாந்தர் இந்த நாட்டை ஆண்ட காலத்தில் வாழ்ந்த பெரியார் வில்லவராய முதலியாரின் புத்திரர் சின்னத்தம்பிப் புலவர், இயற்றியருளிய நூல்கள் நான்கு. அவை மறைசையந்தாதி, கல்வளையந்தாதி, கரவை வேலன் கோவை, பறளை விநாயகர் பள்ளு ஆகும்.

இவற்றில் இரண்டாவதாகக் குறிப்பிட்ட கல்வளையந்தாதி இந்த ஆலயத்து விநாயகர் பேரில் பாடப்பட்டிருக்கிறது. இந்நூலில் ஆலயத்தின் மகிமையும் அதன் சுற்றாடலின் பெருமையும் அழகுற எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.

இப்புராதன தலமானது முற்காலத்திலே இந்தியாவிலிருந்து வந்த இராஜகுமாரியான மாருதப்புரவீக வள்ளி என்பவரால் யாழ்ப்பாணப் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்ட ஏழு விநாயகர் ஆலயங்களுள் ஒன்றென கூறுவார்கள்.

பல்லவர் காலத்திற்கு முற்பட்ட சிற்ப முறையில் அமைந்த விநாயகர் சிலை ஒன்று இங்கு உள்ளது. இதன் மூலம் இப் புண்ணிய தலத்தின் தொன்மையை அறியக் கூடியதாக உள்ளது.

இந்த ஆலயத்தின் திருவூஞ்சல் பாடல்களை யாழ்ப்பாணத் தமிழ் அரச பரம்பரையில் உதித்த அழகாண்மை வல்லவ முதலியார் பாடியுள்ளார்.

இவர் அரசன் பர நிருபசிங்கனின் மூத்த புதல்வராவர். இவரது தம்பியாரான வெற்றி வேலாயுத முதலியாரின் ஆளுமையின் கீழிருந்த சண்டிலிப்பாயில் அமைந்த கல்வளை விநாயகர் பேரில் அதிக பக்தியுடையவராகில் கல்வளை விநாயகர் திருவூச்சல் என்னும் திருவூஞ்சற்பாடல்களைப் பாடி நிலை பெறச் செய்துள்ளார்.

பல வருடங்களாக ஆலயத்தின் செயலாளராகக்  கடமையாற்றிய காலத்தில் எமது உறவினரான  வீரசிங்கம் (நைஜீரியா) கோவில் வாசலில் நின்று தான் என்ன திருப்பணி செய்ய வேண்டும் என்று என்னிடம் வினவினார்.

நான் ஆலயத்திற்கு தேர் இல்லாக் குறையை விளக்கமாகக் கூறினேன். அவர் இன்முகத்துடன் மறுகணமே தான் பொறுப்பேற்று செய்விக்கிறேன் எனக் கூறினார்.

அதன் படி சித்திரத் தேர் செய்வித்து வெள்ளோட்டமும் நடைபெற்றது. அப்பொழுது நான் இவ் அற்புதத்தைப்பற்றி அடியார்களுக்கு சொற்பொழிவாற்றி மகிழ வைக்கக் கூடியதாக இருந்தது.

சுவாமிநாதன் தர்மசீலன் J.P
முன்னாள் செயலாளர்
தர்மகத்தா சபை

Comments