எடப்பாடி ஆரம்பித்திருக்கும் புதிய பயணம்; மலர்ப்பாதையா, கல்லும் முள்ளுமா? | தினகரன் வாரமஞ்சரி

எடப்பாடி ஆரம்பித்திருக்கும் புதிய பயணம்; மலர்ப்பாதையா, கல்லும் முள்ளுமா?

அதிமுக-வின் இடைக்காலப் பொதுச் செயலாளராக கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்தெடுக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. அந்தக் கூட்டத்தில் கட்சியிலிருந்து ஓ.பி.எஸ்ஸை நீக்கியதைத் தொடர்ந்தது அவர் வகித்துவந்த பொருளாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக-வின் மூத்த தலைவருமான திண்டுக்கல் சீனிவாசன் அறிவிக்கப்பட்டார். இந்தநிலையில், கட்சியின் பல புதிய பொறுப்புகள் உருவாக்கப்பட்டு அதற்கான அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி, கட்சியின் துணைப்பொதுச் செயலாளராக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலையச் செயலாளராக வேலுமணி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதேபோல, தற்போது அவைத்தலைவராக இருக்கும் தமிழ்மகன் உசேன் வகித்துவந்த அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்றச் செயலாளராக மூத்த தலைவர் பொன்னையனும், அமைப்புச் செயலாளர்களாக, செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், பெஞ்சமின் உள்ளிட்ட 11பேரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

``இந்த அறிவிப்பு என்பது முழுக்க முழுக்க சமுதாய அடிப்படையில்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் கே.பி.முனுசாமி. தர்மயுத்த காலத்தில், ஓபி.எஸ்ஸின் பக்கம் இருந்தவர், கடந்த சில ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக மாறினார். அதைவிட ஒற்றைத் தலைமை முன்னெடுப்புகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார். அந்த அடிப்படையில் அவர் துணைப் பொதுச்செயலாளராக்கப்பட்டுள்ளார். அதேபோல, மற்றொரு துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம் வகித்துவந்த பதவிக்கு, அதே சமூகத்தைச் சேர்ந்த நத்தம் விஸ்வநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். தவிர, நத்தம் விஸ்வநாதனும் தர்மயுத்த காலத்தில் பன்னீரின் பக்கம் இருந்தவர்தான். ஆனால், ஒரு சில அதிருப்திகளால், எடப்பாடி பக்கம் தாவியவர், அவர் ஒற்றைத் தலைமையாக வருவதற்கும் பக்கபலமாக இருந்தார். பொதுக்குழுவிலும்கூட தனிப்பட்ட முறையில் மிகக் கடுமையாக பன்னீரை விமர்சித்துப் பேசினார். அதற்குப் பிரதிபலனாக அவருக்கும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல பொருளாளர் பொறுப்பு என்பது முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஓ.பி.எஸ்ஸிடம் இருந்ததால், அதே சமூகத்தைச் சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும், பொருளாளருக்கு இருந்த வரவு-செலவு அதிகாரங்கள் இப்போது பொதுச் செயலாளருக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தவிர எடப்பாடி பழனிசாமி வகித்துவந்த தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பு, அதே சமூகத்தைச் சேர்ந்தவர், அவருக்குப் பக்கபலமாக இருப்பவர் என்கிற அடிப்படையில் எஸ்.பி.வேலுமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, எம்.ஜி.ஆர் மன்றப் பொறுப்பாளராக மூத்த தலைவர் என்கிற அடிப்படையில் பொன்னையனுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொன்னையனை அவைத்தலைவராக்கும் முயற்சியில் இருந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், ஓ.பி.எஸ் அப்போது அதற்குத் தடையாக இருக்கவே, இருவருக்கும் பொதுவாக தமிழ்மகன் உசேன் அந்தப் பொறுப்புக்கு வந்தார். பின்னர், கொடுத்த பொறுப்பை எதற்கு எடுக்கவேண்டும், தவிர இஸ்லாமியருக்கான அங்கீகாரமாகவும் இருக்கட்டும் என அப்படியே விட்டுவிட்டார்கள்.

தவிர, அமைப்புச் செயலாளர்களாக, செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ஆர்.காமராஜ், ஓ.எஸ் மணியன் என முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த நான்கு பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடிக்கு பக்கபலமாக இருந்தது ஒருபுறம் இருந்தாலும், ஓ.பி.எஸ்ஸை ஓரம்கட்டியதன் மூலம் முக்குலத்தோர் சமூக மக்களிடம் எழும் அதிருப்தியைச் சமாளிக்கும் யுக்திதான் இது. தவிர சி.வி.சண்முகம், கே.பி.அன்பழன் என இருவருக்கு வன்னிய சமூகத்தைச் சேர்ந்த இருவருக்கும் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் சட்ட ரீதியாக எடப்பாடிக்கு பக்கபலமாக இருந்தவர் சி.வி.சண்முகம் மாநில பொறுப்பில் இல்லாமல் இருந்தார். அதேபோல முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பட்டியலில் அதிகமாக இருப்பதால் அதைச் சமாளிக்கும் யுக்தியாக வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த கே.பி.அன்பழகனுக்கும் பொறுப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான ஓ. பன்னீர் செல்வத்தை ஒரம் கட்டுவதற்கு பதவிகள் சாதி ரீதியாக வழங்கப்பட்டுள்ளன. ஓபிஎஸ் சாதியைச் சேர்ந்தவர்களுக்கே பதவிகள் கொடுத்தால் சாதி ரீதியாக எழக்கூடிய எதிர்ப்புகளை அவர்கள் சமாளித்து விடுவார்கள் என்று எடப்பாடி தரப்பு நினைக்கிறது.

இது பன்னீர் செல்வம் எடுத்திருக்கும் அதிரடி முடிவு. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு ஆளுமைகளும் இல்லாத நிலையில் ஓ.பி.எஸ். கை ஓரம் கட்டி களையெடுக்க எடுக்கப்பட்டிருக்கும் இம் முயற்சி, நீண்ட கால திட்டமிடலின் விளைவாகவே நடந்தேறியிருக்க வேண்டும். பக்கச் சார்பின்றிப் பார்ப்போமானால் இரட்டைத் தலைமை என்பது ஒரு பிரதான அரசியல் கட்சிக்கு உகந்ததாக இருக்க முடியாது. எடப்பாடியார் ஒபிஎஸ்சை நம்பத் தகுந்தவர் அல்ல எனக் கருதுவாரானால் அதில் தவறு இருக்க முடியாது. பன்னீர் செல்வம் எப்போதும் தன்னையும் தன் நலன்களையுமே முன் நிறுத்தி கூழைக்கும்பிடு போட்டுக் கொண்டிருப்பவர், அவரை ஜெயலலிதா பயன்படுத்திக் கொண்டது அவரது திறமையைக் கருதி அல்ல. தன் சொற்படி நடக்கக் கூடியவர் என்பதே தெரிவுக்குக் காரணம். இப்படிப்பட்டவரை எடப்பாடி தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு கட்சியை வளர்க்கவும் தி.மு.கவுக்கு எதிரான கட்சியாக மாற்றவும் முடியாது என்பதை அவதானிகளும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

இப்போது ஏறக்குறைய கட்சியின் கட்டுப்பாட்டை எடப்பாடியார் எடுத்துக் கொண்டுவிட்டார். இப்போது பன்னீர் செல்வாக்கை ஒட்டுமொத்தமாகக் களையும் வேலை தான் நடந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் எடப்பாடிக்கு மும்முனைகளில் எதிர்ப்புகள் உள்ளன. முதலாவது தி.மு.க அது பிரச்சினை இல்லை. அ.தி.மு.கவின் தோற்றமும் வளர்ச்சியும் தி.மு.கவை வைத்தே நிகழ்ந்து வந்திருக்கிறது. இரண்டாவது எதிர்ப்பு, பன்னீர் செல்வத்திடமிருந்து வரக்கூடியது. அவருக்கு எதிரான நடவடிக்கைகள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. மூன்றாவது சசிகலா எதிர்ப்பு. சசிகலா இப்போதும் தானே கட்சியின் பொதுச்செயலாளர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். சசிகலாவும் தினகரனும் தொடர்ந்தும் அ.தி.மு.க மீது தாக்குதல்களை பல வழிகளிலும் தொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.  இவற்றை எல்லாம் தவிர்த்தபடியே புறமுகிடச் செய்து கட்சியை கட்டி வளர்க்க வேண்டிய பெரிய பொறுப்பு எடப்பாடியாருக்கு உண்டு. அதற்கான தளபதிமாரை அவர் வைத்திருக்கவும் செய்கிறார். அவர் தனது பாதுகாப்புக்காக பா.ஜ.க.வை நாட வேண்டியிருக்கலாம.

அதேசமயம் பா.ஜ.க.வுடனான கூட்டு என்பது அவருக்கு பலவீனமாகி விடவும் முடியும். தற்போதைய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எடப்பாடிக்கு தலை வலியாகவும் மாறலாம்.

சூழ்நிலையின் கைதியாக எடப்பாடி செயல்பட வேண்டியிருந்தால் தி.மு.கவுக்கு எதிராக அ.தி.மு.கவை கொம்பு சீவுவதில் பிரச்சினைகள் எழலாம். எனவே பல வழிகளிலும் திட்டமிட்டு செயலாற்றாவிட்டால் கூட இருப்போரே அவருக்கு குழிபறித்துவிடலாம். எனவே எடப்பாடியாருக்கு இப் புதிய பயணம் முள் பாதையாகவே இருக்கும். அதாவது முள்ளில் இருந்து மலர்பாதை நோக்கிய பயணம். அது அவ்வாறு அமையுமா? என்பதே கேள்வி.

ஷோபனா அருள்

Comments