கல்வியின் சிறப்பு | தினகரன் வாரமஞ்சரி

கல்வியின் சிறப்பு

கற்றவர்கள் எப்போதும் சமூகத்தில் உயர்ந்த இடத்திலேயே மதிக்கப்படுகின்றனர். ஒருவரிடம் எவ்வளவுதான் செல்வங்கள் கொட்டிக்கிடந்தாலும் கல்விச் செல்வம் இல்லையேல் அவரிடம் உள்ள ஏனைய செல்வங்களுக்கு மதிப்பில்லை.

ஒருவரிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் அதனை கணக்கு வைத்துக் கொள்ளவும், நல்ல காரியத்திற்கு பயன்படுத்தவும் கல்வி அறிவு மிக அவசியமாக கொள்ளப்படுகின்றது. ஒரு வீட்டில் உள்ள வறுமையை போக்கவும், நாட்டை அபிவிருத்தி செய்யவும் கல்வியறிவு மிகவும் முக்கியம்.

சிறந்த கல்வி ஒரு மனிதனை உயர்ந்த இடத்திற்கு இட்டுச் செல்லும். இந்த உலகத்தில் கல்வியால் உயர்ந்தவர்கள் பலரை உதாரணமாக குறிப்பிடலாம்.

அவர்களுள் டாக்டர் அப்துல்கலாம், அரிஸ்டோட்டில், அம்பேத்கர், ஆபிரகாம் லிங்கன், பிளாட்டோ மற்றும் சாக்கிரட்டீஸ் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவார்.

உலகின் முதலாவது தத்துவஞானியாக போற்றப்படும் சாக்கிரட்டீஸ், அவர் நஞ்சூட்டப்படும் வரை புத்தகங்களை படித்துக் கொண்டுதான் இருந்திருக்கிறார். அவர் கற்ற கல்விதான் அவரை அறிவியலாளராக மாற்றியது.

அப்துல் கலாம் சிறுவயதில் இருந்தே கல்வி மேல் கொண்ட ஆர்வம் தான் அவரை விஞ்ஞானியாக உருவாக்கி, உலகம் போற்றும் மனிதராக மாற்றியது.

கல்வி ஒரு மனிதனை முழுமையானவன் ஆக்குகின்றது. கல்வியானது கள்வர்களால் திருட முடியாத, நிலையாக வாழ்க்கை முழுவதும் தொடர கூடிய ஒரு செல்வமாகும்.

“இளமையில் கல்வி சிலையில் எழுத்து” என்கின்றது ஆத்திசூடி. அதாவது இளமையில் கல்வியை நன்றாக கற்கும்போது அக்கல்வியானது நம்மை உயரிய இடத்திற்கு இட்டுச் செல்லும். உயர்ந்த பதவிகளை பெற்றுத் தரும்.

ஒருவர் சிறந்த கல்வியைப் பெற்று உயர்ந்த பதவிகளை பெறும்போது பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அவரது வாழ்க்கைத்தரம் உயர்வடைகின்றது.

“கற்க கசடற கற்றவை கற்ற பின் நிற்க அதற்கு தக” என்கின்றுது திருக்குறள். நாம் வெறுமனே கல்வியை கற்றல் மட்டும் போதுமானது அல்ல. கற்ற கல்விற்கேற்ப வாழ்க்கையில் நாம் ஒழுக வேண்டும். நாம் பெற்ற கல்வியை அனைவருடனும் பகிர்ந்து மற்றவர்களும் வாழ வழிவகை செய்யவேண்டும். கல்வியினை பெறுதல் ஒவ்வொருவரினதும் பிறப்புரிமை ஆகும்.

அந்த கல்வியை மேம்போக்காக கற்காமல் அதிக சிரத்தை எடுத்து கற்றால் மாத்திரமே வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும். எனவே கல்வியை ஜயம் திரிபுற கற்று சீரும் சிறப்புமாக வாழ்வோமாக!

வினோ மதிவதனி, 
லுணுகலை.    

Comments