வேண்டிய வரத்​​தை அள்ளி வழங்கும் பத்தனையூர் ஸ்ரீ காட்டு மாரியம்மன் | தினகரன் வாரமஞ்சரி

வேண்டிய வரத்​​தை அள்ளி வழங்கும் பத்தனையூர் ஸ்ரீ காட்டு மாரியம்மன்

நுவரெலியா  மாவட்டத்தில் புகழ் பூத்த பிரசித்தி பெற்ற பல ஆலயங்கள் இன்றும்  காணப்பட்டாலும் கொட்டகலை பத்தனை ஊர் ஸ்ரீ காட்டு மாரியம்மன் ஆலயம் நம்பி  வருபவர்களின் குறைத் தீர்க்கும் ஆலயம் என்றால் அது மிகையாகாது.சுமார் 150வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த இந்த ஆலயம்  நுவரெலியா செல்லும் பிரதான வீதியில் பத்தனை சந்தியிலிருந்து சுமார் ஒரு  கிலோ மீற்றர் தூரம் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் மிகவும் ரம்மியமான  சூழலில் உலக புகழ்பெற்ற டெவோன் நீர்வீழ்ச்சியை பார்த்த வண்ணம்  அமைந்துள்ளது.

நீர்வீழ்ச்சியின் சல சல சத்தத்தைத்  தவிர வேறு எந்த ஒரு சத்தமும் அற்ற மிகவும் அமைதியான சூழலில்  ஆலயம் காணப்படுகின்றது.

ஆலயத்திற்கு  செல்லும் வழியில்  மிகவும் பிரமாண்டமான முறையில் முகப்பு  மண்டபம் மற்றும் நடந்து செல்வதற்கான  படிகள் பல கோடி ரூபாய்  செலவில் அமைக்கப்பட்டாலும்  அம்மன் எழுந்தருளியுள்ள ஆலயம் ஆரம்பம் முதல்  இப்போதும் அதேபோன்றே  காட்சியளிக்கின்றது. நம்பி வருபவர்கள் தாங்களே பூஜை செய்யும் வடிவில் அமைந்திருப்பது  பக்தர்களுக்கும் அடியவர்களுக்கும் இடையே உள்ள நெருக்கத்தினை பறைசாற்றுகின்றது.

இந்த ஆலயத்திற்கு பூஜை  செய்வதற்கு பூசகர் ஒருவர் இருந்தாலும் பக்தர்கள் விரும்பும் வேளையில்  சென்று வணங்குவதற்கு ஏற்றாற் போல் அமைந்திருப்பது இந்த ஆலயத்தில் உள்ள  விசேட அம்சமாகும். கதவின்றி இருந்தாலும்  பொருட்கள் பாதுகாப்பாக இருப்பதும் அம்மனின் மீதுள்ள நம்பிக்கைக்கு சான்று பகிர்கின்றன.

கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ள போதிலும் ஆலயத்தினை புனர்நிர்மானம்  செய்யக்கூடாது இயற்கையில் எழுந்தருளியவாறே இருக்க வேண்டும் என்பது தொன்று  தொட்டு கடைபிடிக்கப்பட்டுவரும் மரபாகவே காணப்படுகின்றது.

ஆலயத்தில்  உள்ள அம்மன் திருவுருவச் சிலைக்கு அருகாமையில் பல்வேறு இலட்சினைகள்  பொறிக்கப்பட்ட கல் வெட்டுக்கள் காணப்படுகின்றன. அம்மனின் அருளையும் உணர்ந்த பக்த  அடியார்கள் நாட்டின் நாலாபுறமிருந்தும் இன மத வேறுபாடின்றி வந்து வழிபட்டு  செல்வது மற்றுமொரு விசேட அம்சம். ஒவ்வொரு பௌர்ணமி  தினத்திலும் நாட்டின் நான்கு திசைகளிலிருந்து வரும் பெரும் எண்ணிக்கையிலான  பக்தர்கள் அம்மனை தரிசிப்பதற்கு மறப்பதில்லை.

அவர்கள் வந்து வழிபாடுகளை  செய்து விட்டு பலருக்கு அன்னதானமும் இட்டுச்செல்வதனையும் ஏழைகளின் பசி  தீர்ப்பதனையும் ஒரு கடமையாகவே கொண்டிருப்பது அம்மனின்  அனுக்கிரகத்தினால் என்றே எண்ணத்தோன்றுகின்றது. சிறப்புக்கு ரிய இந்த  ஆயலத்தினை பாதுகாத்து எம்மவர்கள் பயன்பெற தேவைப்படும் நடவடிக்கைகளை  பிரதேசவாசிகளும், சமயத்தின் பால் அக்கறை கொண்டவர்களும் மேற்கொள்ள வேண்டும்  என்பது அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாகும். 

மலைவாஞ்ஞன்

Comments