ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்பார்ப்பது போல எல்லோரும் பதவி விலகினால் நாட்டைக் கொண்டு நடத்துவது யார்? | தினகரன் வாரமஞ்சரி

ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்பார்ப்பது போல எல்லோரும் பதவி விலகினால் நாட்டைக் கொண்டு நடத்துவது யார்?

இலங்கையின் கடந்த வார ஆட்சி மாற்றம் கலவையானவிமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய தலைமைத்துவம் மற்றும்புதிய அரசாங்கத்துடன் நெருங்கிச்செயற்பட விரும்புவதாக அமெரிக்காஉள்ளிட்ட மேற்குலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் மற்றும் போன்ற சர்வதேசநிறுவனங்களும் அறிவித்திருக்கின்றன.

உள்நாட்டில் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சாரார் புதிய தலைமைக்கு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கால அவகாசம் வழங்கப்படவேண்டும் என்று கூறுகின்றனர். பாராளுமன்றத்தில் சூழ்ச்சியினால் இந்த மாற்றம் ஏற்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இறுதியில் போட்டியிட்ட மூன்று பேரில் மூன்று வாக்குகள் பெற்றவரால் பதவிக்கு வரமுடியாது என்பது ஒருபுறமிருக்க எஞ்சியுள்ள இருவரில் யார் இப்போதைய நிலையில் பொருளாதார ரீதியில் நாடு மேலும் சீரழிவதை தடுத்து நிறுத்தக்கூடிய கொள்கைகளை ஆதரிப்பவர் யாருக்கு சர்வதேச சமூகத்தின் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது யாருக்கு நாட்டின் இரண்டாம் நிலை உயர்பதவியில் நெடுங்காலம் இருந்த அனுபவம் இருக்கிறது. யார் தனது சுய நலனுக்காக பொதுச்சொத்தை களவு செய்யமாட்டார் என்று ஒப்பிட்டுப்பார்த்தால் இப்போது தெரிவு செய்யப்பட்டுள்ளவர் ஒப்பீட்டு ரீதியில் பொருத்தமான தெரிவாகக் கருதப்படமுடியும்.  முன்வைக்கப்பட்ட மாற்றீடுகளில் ஒன்றையே தெரிவு செய்ய வேண்டியிருந்தது.

எவ்வாறாயினும் புதிய தலைமையின் கீழ் எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடுகளை நீக்கி உணவுப்பொருள் கிடைப்பனவை வழமைக்குக் கொண்டுவர முடிந்தால் நாடு படிப்படியாக வழமை நிலைக்குத் திரும்ப ஆரம்பிக்கும்.

புதிய தலைமைத்துவத்தின் கீழ் அரசியல் உறுதிப்பாடு ஏற்படுமாயின் நாட்டை குறுகிய காலத்திற்குள் வழமைக்குக் கொண்டுவருவதற்கான கொள்கைத் திட்டங்களை ஏற்கெனவே வகுத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

புதிய ஜனாதிபதியைப் பொருத்தமட்டில் உலக அரசியல் தொடர்பாகவும் பொருளாதாரக் கொள்கைகள் அவற்றின் போக்குகள் தொடர்பாகவும் ஆழமான வாசிப்பு உண்டு. உலகமயமாக்கலில் இலங்கை தனக்குரிய பங்கினை வகிக்க வேண்டும் என உறுதியாக நம்புபவர். கிணற்றுத் தவளைகளாக இருந்து நாட்டைக்கட்டியெழுப்ப முடியாது எனக்கருதுபவர். இலங்கையில் இருக்கும் புத்திஜீவிகளை விட ஹாவர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களின் ஆலோசனைகளை அதிகம் நம்புபவர்.

நாட்டின் பொருளாதாரக் கொள்கைவகுப்பில் ஏற்கெனவே 2015-2018காலப்பகுதியில் அத்தகைய ஆலோசனைகள் பெறப்பட்டன. முன்னைய ஆட்சியாளர்களுக்கு இத்தகைய ஆழமான அறிவோ வெளிநாடுகளுடனான தொடர்போ இருக்கவில்லை.

முன்னையவர்களோடு ஒப்பிடுகையில் இவர் நேரடியாக ஊழல் செய்ததாக கூறப்படவில்லை. இவரோடு இருந்தவர்கள் அவற்றைச் செய்தனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நடைமுறையில் உள்ள சட்டத்தை மீறாமல் தாம் அடக்கவேண்டும் என நினைப்பவற்றை அடக்க வல்லவர்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைக்கப்பட்டமை இதற்கு நல்ல உதாரணம். அவசரகால நிலைமையின் கீழ் சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாக இது காட்டப்படும். ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு விகாரமாதேவிப் பூங்காவில் இடம் ஒதுக்கித் தரப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. நகரத்தின் நிர்வாக மையப்பகுதியில் அதுவும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருமிடத்தில் போராட்டம் நடத்துவது பொருளாதார மீட்சிக்கு தடையாக அமையும் என காரணம் கூறப்படும்.

ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் வரும் வழியில் இறங்கி பாதுகாப்புத் தரப்பினருக்கு நன்றி தெரிவித்தமை புதிய ஒரு சமிக்ஞையாக இருந்தது. இனிமேல் அவர்களும் கையைவீசி செயற்படலாம். எனவே எதிர்ப்பு நடவடிக்கைகளும் போராட்டங்களும் அடக்கப்படும் சூழல் உருவாகும்.

மறுபுறம் நாட்டை வழமைக்கு கொண்டுவர போராட்டங்கள் தடையாக இருக்கும் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. இப்போதைய சுழ்நிலையில் பொதுமக்களுக்கு சுவாசிப்பதற்கு ஒரு சிறு கால இடைவெளியாவது தேவை. ராஜபக்ஷ கூட்டம் அகற்றப்படவேண்டும் என்பதில் பெரும்பாலான மக்களுக்கு மாற்றுக்கருத்தில்லை. அக்கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றால் அது ஒரு வகையில் வெற்றியே. மறுபுறம் மற்றைய வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தால் அவர்களின் கரம் ஓங்கியிருக்கும். அத்துடன் நேரடியாக இனவாதம் பேசும் அதே குழு செல்வாக்கு பெற ஆரம்பித்திருக்கும்.

இப்போதைய தலைமையிடம் நீங்கள் ராஜபக்ஷக்களின் நண்பனா என்று ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்வியினால் கடுப்படைந்த அவர் தாம் மக்களின் நண்பன் என்று பதிலளித்ததுடன் ராஜபக்ஷர்களுக்கு சார்பாக தாம் செயற்படவில்லை என்றும் ஊடகவியலாளராக நன்றாக தயார்படுத்திக் கொண்டு கேள்வி கேட்கவேண்டும் எனவும் ஆலோசனை கூறினார்.

கடந்த காலங்களில் அவர் ராஜபக்ஷர்களை காப்பாற்றினாரோ இல்லையோ இப்போது தனது கனவு மெய்ப்பட்டுள்ள நிலையில் தம்மை பலப்படுத்தி நிலைப்படுத்திக் கொள்ள செய்ய வேண்டியவற்றை கட்டாயம் செய்வார் என நம்பலாம். அடுத்துவரும் இடைப்பட்ட காலத்தில் கூட்டாட்சியோ சர்வகட்சி ஆட்சியோ எதுவோ மேலிடத்தில் இருக்கப்போவது இவர்தான்.

புதிய நிர்வாகத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்படவேண்டியது அவசியம் என்றே தோன்றுகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்பார்ப்பது போல எல்லோரும் பதவி விலகினால் நாட்டைக் கொண்டு நடத்தப்போவது யார்? அதற்கு அவர்களிடம்  உரிய பதில் ஏதும் இல்லை. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பது போல பூமியில் நிலவும் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத கோட்பாட்டு ரீதியான அணுகுமுறைகளால் உடனடிப் பயனேதும் ஏற்படப் போவதில்லை.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பை அவதானித்த பலருக்கும் ஏற்பட்ட கேள்வி இவர்களையா பாராளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளோம் என்பது. இத்தனைபேர் இருக்கிறார்களா என்பது அடுத்தது. இவர்களில் பலரை ஒரு தடவையாவது பாராளுமன்றத்தில் உரையாற்றுவதைக் கண்டிருக்கிறோமா என்பது இன்னொன்று.

இலங்கையில் குடித்தொகை முதிர்ந்துவருவது உண்மைதான், அதற்காக ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாத அளவுக்கு தள்ளாத வயதில் ஓய்வு எடுத்து வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்காமல் இங்கு வரவேண்டுமா புதியவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாதா என்பது அடுத்த வினா. நாட்டின் அரைவாசிக்கும் மேற்பட்டோர் பெண்கள். ஆனால் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் அது பிரதிபலிக்கிறதா என்பது அடுத்த வினா. இவர்களில் சிலரை டொக்டர்; என்று அழைத்தார்கள் எந்தப் பல்கலைக்கழகங்களில் எந்த ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து இப்பட்டங்களை இவர்களில் சிலர் பெற்றார்கள் என்பது இன்னொரு வினா.

இவ்வாறு பல்வேறு வினாக்கள். சிங்கப்பூர் பாராளுமன்றம் கனேடியப் பாராளுமன்றம் என்பவற்றில் மக்கள் பிரதிநிதித்துவம் எவ்வாறு உள்ளது அவர்களது கல்வித்தகுதிகள் என்ன என்பது பற்றி மக்கள் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதனடிப்படையில் அடுத்துவரும் தேர்தலில் மக்கள் சரியானவர்களைத் தெரிவுசெய்து வாக்களிக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள் ஏற்கெனவே தமது குட்டையில் ஊறியுள்ள பழைய மட்டைகளுக்கே வேட்புமனு கொடுப்பார்களாயின் தகுதிவாய்ந்தவர்கள் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட வேண்டும். தேர்தல் செலவுகள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்பட வேண்டும். சாதாரண ஒரு பொதுமகனும் தேர்தலில் போட்டியிடக்கூடியவாறு தேர்தல் செலவுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் சரியானவர்களைத் தெரிவுசெய்ய வேண்டும். சோற்றுப் பார்சலுக்கும் போத்தலுக்கும் செல்வாக்குக்கும் ஆசைப்பட்டு அதே கொள்ளைக் கூட்டத்திற்கு முத்திரையிடக் கூடாது.

இப்போது வாக்காளர்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் நிலைமைகள் வழமைக்குத் திரும்பி இன்னும் இரண்டரை வருடங்கள் கடந்து தேர்தல் ஒன்று வரும்போது இன்று கொள்ளைக் கூட்டமாகத் தெரிந்த கூட்டம் நாடுகாக்கும் வீரர்களாக தேசியப் பற்றாளர்களாக மக்களுக்குத் தெரியலாம்.

ஏனெனில் இலங்கை 1931இலிருந்தே ஜனநாயகம் பேசினாலும் இலங்கையின் பெரும்பான்மை வாக்காளர்களின் அரசியல் கல்வியறிவு பூச்சியம். அதைவிட முக்கியம் என்னவென்றால் பெரும்பான்மை இலங்கையர்களுக்கு பரம்பரை பரம்பரையாக இருந்துவரும் மறதிநோய். இப்போது நிகழ்வது இன்னும் இருவருடங்களில் அவர்களுக்கு நினைவிருக்குமா? இருக்காது என்பது அரசியல்வாதிகளுக்கு நன்கு தெரியும். ஆனால் தமிழர்களும் முஸ்லிம்களும் இதிலிருந்து விதிவிலக்கு. நூற்றாண்டுகள் சென்றாலும் எதையும் அவர்களை மறப்பதுமில்லை மன்னிப்பதுமில்லை. இந்நிலையில் புதிய தலைமை என்ன செய்யப்போகிறது என்பதை காலமே தீர்மானிக்க வேண்டும்.

கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை,
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments