கடுமையான விலைவாசி உயர்வை பெருந்தோட்ட சமூகம் எப்படிச் சமாளிக்கப் போகிறது? | தினகரன் வாரமஞ்சரி

கடுமையான விலைவாசி உயர்வை பெருந்தோட்ட சமூகம் எப்படிச் சமாளிக்கப் போகிறது?

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் சோஷலிச கூட்டரசாங்கம் 1970ம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றியுடன் ஆட்சியில் அமர்ந்தது. ஸ்ரீமாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 91பாராளுமன்ற ஆசனங்களும் கூட்டணிக் கட்சிகளான சமசமாஜ கட்சிக்கு 19இடங்களும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு இடங்களுமாக மொத்தம் 116இடங்களுடன் பாராளுமன்றத்தில் இக் கூட்டணிக்கட்சி அசுர பலத்துடன் அமர்ந்தது.  

எதிர்க்கட்சியான ஐ.தே.க வெற்றிபெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை வெறும் 17மட்டுமே. பெரும் சோஷலிச புரட்சியையும் சாதாரண மக்களுக்கான ஆட்சியையும் இந்த அரசு அமைக்கப் போகிறது என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஏனெனில் நாட்டின் முன்னணி சோஷலிச மற்றும் கம்யூனிச தலைவர்கள் அந்த ஆட்சியில் அமர்ந்திருந்தனர். என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டீ. சில்வா, எஸ்.ஏ. விக்கிரமசிங்க, பீட்டர் கெனமன், வாசுதேவ நாணயக்கார ஆகிய இடதுசாரிகள் ஸ்ரீமாவின் கூட்டரசில் அங்கம் வகித்தனர். 

ஆனால் அந்த அரசினால் நான்கு ஆண்டு காலம் கூட மக்கள் அபிமானத்தை தன் வசம் வைத்திருக்க முடியவில்லை. 1971ஜே.வி.பி கிளர்ச்சியில் பல நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்கள் மாண்டனர். 1974இல் நாட்டில் அரிசிக்கும் மாவுக்கும் பஞ்சம் ஏற்பட்டது. இதே காலப்பகுதியில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுகம்பனிகளுக்கு சொந்தமான பெருந்தோட்டங்களை அரசு சுவீகரித்தது. பின்னர் அவற்றை உசவசம், ஜனவசம மற்றும் பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் ஆகிய மூன்று நிறுவனங்களின் கீழ் அத்தோட்டங்களைக் கொண்டு வந்தது.  

அரசு பெருந்தோட்டங்களை கையேற்றதும் சிங்கள கிராமமயமாக்களுக்கு தோட்டக்காணிகள் விடுவிக்கப்பட்டன. ரூபா மற்றும் ஸ்டேர்லிங் கம்பனிகளும் தேசிய மயமாக்கப்பட்டன. அதே சமயம் பெருந்தோட்ட நிர்வாகம் அரசியல் மயப்பட்டு கண்டவரெல்லாம் அங்கே உத்தியோகம் பெற்றுக் கொண்டதால் தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்க ஆரம்பித்தன. பெருந்தொகையான தமிழ்த் தொழிலாளர்கள் வீதிக்கு விரட்டப்பட்டனர். ஏராளமானோர் தாயகம் திரும்பினர்.  

பெருந்தோட்ட மக்கள் ஏற்கனவே வாய்க்கும் வயிறுக்குமாகவே வாழ்ந்து கொண்டிருந்தனர். திடீரென ஏற்பட்ட சூழ்நிலைகளால் கைக்கு கிடைத்தால்தானே வாய்க்கு என்ற நிலை ஏற்படவே அவர்களை பட்டினி நிலை சூழ்ந்தது. அத்தகைய பட்டினி நிலையை அவர்கள் அதற்கு முன்னர் சந்தித்தது கிடையாது. அக் காலத்தில் அவர்கள் நாடற்றவர்கள். தோட்டங்களுக்கு வெளியிலும் மக்கள் அரிசிக்கும், அரை இறாத்தல் பாணுக்காகவும் அலைந்து கொண்டிருந்தபோது நாடற்றவர்களான தமிழர்களுக்கு எப்படி அரசு வழங்கக்கூடிய சகாயங்கள் வந்து சேரும்?   நாட்டில் பஞ்ச நிலை வரக்கூடிய ஒரு சூழல் இப்போது திரும்பவும் எழுந்துள்ளது. சாப்பாட்டுக்கு கஷ்டம் வரலாம்; வராமலும் போகலாம். ஆனால் இன்றைய சிரமதசை இன்னும் ஓராண்டுக்கு இப்படியே நீடிப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. பொருட்களின் விலை நம்பமுடியாத அளவில் அதிகரித்துச் செல்கிறது. கடந்த மாதம் இருநூறு ரூபாவுக்கு விற்ற உருளைக் கிழங்கு இப்போது 550- 600ரூபாவுக்கு போகிறது. அத்தியாவசிய உணவுகளான மா, சீனி, பருப்பு என்பன அதிரடிப் பாய்ச்சலில் இருக்க, இந்த எதிர்பாரா சூழலை சமாளிக்கும் நிலையில் பெருந்தோட்ட சமூகம் உள்ளதா? என்பதே கேள்வி.  

பெருந்தோட்டங்களில் கொவிட் நேரத்திலும் அரசியல் சூறாவளி வீசும் இன்றைய சூழலில் வேலைகள் வழமை போலவே நடைபெற்று வருகின்றன. இது ஒரு ஆறுதலான விஷயம். முடிவு எடுக்கப்பட்டதைப் போல ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட்டா விட்டாலும், பெருந்தோட்டங்கள் இயங்கிய வருகின்றன.  

ஒரு வீட்டில் மூன்று அல்லது நான்குபேர் தொழிலுக்கு சென்றால் அந்த வீட்டில் பெரும்பாலும் பொருளாதாரப் பிரச்சினைகள் எழுவதில்லை. வசதிகளுடன் வாழலாம். தோட்ட வேலைகள் போக மேலதிக வருமானமாக மாடு, ஆடு, கோழி வளர்ப்பு அல்லது காய்கறித் தோட்டம் என்பனவும் இருக்குமானால் பிரச்சினையே கிடையாது. இந்த வசதிகள் இல்லாதவர்கள், தோட்டத் தொழில் வருமானத்தை மட்டும் எதிர்பார்த்திருக்கும் குடும்பங்கள் கஷ்டத்தை எதிர் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.  

பெருந்தோட்டக் குடும்பங்களின் தினசரி செலவுகளை வெளியாரின் தினசரி செலவுகளுடன் ஒப்பிடும்போது சில செலவுகளில் இருந்து பெருந்தோட்ட வாசிகள் தப்பிக் கொள்ள முடிகிறது. போக்குவரத்து செலவு வெளியில் உள்ளவர்களுக்கு பெரிய தலைவலியாக இருக்க, தொழிலாளர் குடும்பங்களுக்கு அது பெரும்பாலும் பொருட்டல்ல. தண்ணீர், விறகு, மருந்து அல்லது மருத்துவ சிகிச்சை, உடைகளுக்கான செலவு என்பன மிகவும் குறைவு. உணவை எடுத்துக் கொண்டாலும் எளிமையானாலும் சந்தானதுமான உணவுகளை உண்பதற்காக வசதி அவர்களுக்கு உள்ளது. பொதுவாகவே பிளேன் டீ அருந்தும் வழக்கம் இருந்தாலும் பசும்பாலை பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.  

தோட்டங்களில் மா, பலா, வாழை, ஈரப்பலா, மரவள்ளி, வற்றாளை போன்றவற்றையும் கீரைகள், கத்தரி, வெண்டி, தக்காளி, கிழங்கு வகைகள் என்பனவற்றையும் பயிரிட்டுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு தோட்டங்களில் மிகுதி. கால் நடைவளர்ப்புக்கான வசதிகள் காணப்படுவதால் கால்நடை வளர்ப்பு என்றுமே அங்கே இருந்துவந்த ஒன்றுதான்.  

ஆடு வளர்ப்பு தோட்டங்களில் பரவலாகக் காணப்படுகிறது. ஆடுகளின் இனப்பெருக்கம் வேகமானது. குறுகிய காலத்தில் பல்கிப் பெருகும். ஒரு ஆடு சாதாரணமாக 30ஆயிரத்துக்கும் அதிகமாக விற்பனையாகிறது. குட்டிகளை பத்தாயிரத்துக்கு வாங்கலாம். ஆனால் விசேஷ காலங்களைத் தவிர ஆடுகளை வெட்டி பங்கிட்டுப் புசிக்கும் வழக்கம் தோட்டங்களில் பரவலாக இல்லை. மாடு வெட்டி புசிக்கும் பழக்கம் அரிது. எனினும் ஒருவர் 15மாடுகளை வளர்த்தால் அவர் இலட்சாதிபதியாக வாழ முடியும். மாடு வளர்ப்பின் மூலம் காணி வாங்கி, வீடுகள் அமைத்து, வாகன வசதிகளோடு வாழ்வோரை தனிப்பட்ட ரீதியாக நான் அறிவேன்.  

எனினும் இவர்களும் தமது தொழிலில் பிரச்சினைகளை சந்திக்கவே செய்கிறார்கள். ஒரு லீட்டர் பாலின் 105ரூபா, ஆனால் புண்ணாக்கு கிலோ 85முதல் 100ரூபா வரை விற்பனைக்கு உள்ளது. புல் அறுத்து போடுவதற்கு பணம் செலுத்த வேண்டும். மருத்துவ செலவும் உண்டு. கோழித்தீனுக்கு அலையவேண்டிய நிலையில் கோழி வளர்ப்போர். தள்ளப்பட்டுள்ளனர். 100, 150கோழிகள் வளர்த்து வந்த சிறு பண்ணையாளர்கள் கோழித் தீன் பிரச்சினை காரணமாக கோழிகளை விற்றுவிட்டார்கள் என்று அறிய முடிகிறது. தேடித் தேடிப் பார்த்தாலும் சோளம் கிடைப்பதில்லை. கோழித் தீவனம் கிடைப்பதாக இருந்தாலும் யானைவிலை குதிரைவிலை என்கிறார்கள். முன்னர் கோழிகளை திறந்து விட்டு வளர்க்க முடிந்தது. இப்போது இது சாத்தியம் இல்லை.  

மொத்தத்தில் பெருந்தோட்டங்கள் ஒரு பஞ்ச நிலையை அல்லது கடுமையான விலை உயர்வை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதைப் பார்ப்போமானால் 1970களில் சந்தித்த மோசமான பட்டினி நிலை ஏற்படாது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.  

ஒரு ஆசிரியரிடம் மாணவ மாணவியர் பகல் உணவாகக் கொண்டு வரும் உணவுகள் எவ்வாறு உள்ளன எனக் கேட்டபோது, பெரும்பாலும் சோறும் ஒரு கறி மற்றும் கீரை அல்லது சம்பலே கொண்டுவருவார்கள் என்றார் அவர். முட்டை கொண்டு வருவோர் குறைவே என்று சொல்லும் இவர் மாமிசம் மிகமிகக் குறைவு என்கிறார்.

ஒரு பெண்ணிடம் உங்கள் ஒரு நாள் உணவு பற்றி சொல்ல முடியுமா என்று கேட்டபோது,  

"காலையில் ஒரு பிளேன்டீ, ரொட்டியை சம்பலில் தொட்டு சாப்பிட்ட பின்னர் ரொட்டியையும் சம்பலையும் சுற்றி எடுத்துக் கொண்டு மலைக்குச் செல்வேன். அங்கே வருபவர்களும் பிளேன் டீயையும் ரொட்டியையும் தான் எடுத்து வருவார்கள். வேலை முடிந்து வீடு சென்றதும் சோறு சமைப்பேன். கூடவே பருப்புக் கறி அப்புறம் ஒரு மரக்கறியுடன் இரவு சாப்பாடு முடிந்துவிடும்" என்று பதில் சொன்னார்.  

மேலும் சிலரிடம் விசாரித்தபோது ஏறக்குறைய இதே பதில்தான் கிடைத்தது. சிலர் இரவிலும் ரொட்டி சாப்பிடுவோம். அதில் பிரச்சினை கிடையாது என்றார்கள். மரவள்ளி, வற்றாளை, பலா என்பன நிறையவே கிடைக்கக்கூடிய இடமாக தோட்டங்கள் காணப்பட்டாலும் இவை இம் மக்களின் விரும்ப உணவாக என்றைக்கும் இருந்ததில்லை. ஆனால் இவை ஆரோக்கியமான உணவுகள்.  

கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, மீன், முட்டை என்பன அடிக்கடி உணவில் இடம்பெறும் உணவுகள் அல்ல. இப் பழக்கம் குழந்தைகளின் போஷாக்கை பாதிக்கிறது என்று சுகாதார உத்தியோகத்தர்கள் எடுத்துச் சொன்னாலும் காதில் போட்டுக் கொள்வதில்லையாம். மீன் விற்போர் தோட்டங்களுக்குள் பெரும்பாலும் செல்வதில்லை. என்றைக்கும் பெருந்தோட்டங்களில் மீன் உணவு என அறியப்படுவது டின் மீன்களைத்தான்.  

ரொட்டி பசிதாங்கும் என்பது இம் மக்களின் பொதுவான அபிப்பிராயம். 2500ரூபா கொடுத்து பால்மா வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. கிடைத்தால் பால் டீ அல்லது பிளேன் டீ என்ற மனப்பான்மையை இம் மக்களின் எல்லா உணவுப் பழக்கங்களிலும் காண முடிகிறது. அதே சமயம் கடுமையாக உழைத்தால் மேலதிக பணம் தேடலாம் என்பதும் இவர்களுக்குத் தெரியும்.  

எனவே, ஒரு உணவுப் பஞ்சம், அதாவது வாங்கிப் பாவிக்கக்கூடிய உயரத்தில் அத்தியாவசிய உணவுகள் இல்லாத ஒரு நிலையில், பெருந்தோட்ட சமூகம் எழுபதுகளில் பாதிக்கப்பட்டதுபோல பாதிக்கப்பட மாட்டாது என்று உறுதியாக சொல்ல முடியும். அதே சமயம் பள்ளி மாணவ மாணவியரின் உணவில் சத்துகள் குறைந்து விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோர் கடமை. இப்போதிருந்தே உணவில் அதில் முட்டைகள், கிழமைக்கு மூன்று தடவைகளாவது, சேர்த்துக் கொள்ள வேண்டும். மா மட்டுமே சாப்பிடுவோம் என்று அடம்பிடிக்காமல் மரவள்ளி, வற்றாளை மற்றும் தானியங்களையும் சேர்த்துக் கொள்ளப் பழக வேண்டும். பருப்புடன் கிழங்கு, கத்தரி, தக்காளி, கீரை என்பனவற்றைச் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் ஏற்கனவே அவர்களிடம் உள்ளதுதான்.  

தோட்டங்களில் பயிர் மற்றும் கால்நடை வளர்ப்புக்கு வசதி உள்ளது. வீட்டுத் தோட்டங்களை ஏற்படுத்திக் கொள்வது, முடிந்தால் கோழிகளை வளர்ப்பது என்பன உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவுடன் போராடுவதற்கு நிச்சயம் உதவும்.    

தலவாக்கலை
பி. கேதீஸ்

Comments