தத்தளிக்கும் சிறார்களுக்காக வாழ்நாளை அர்ப்பணிக்க தயார் | தினகரன் வாரமஞ்சரி

தத்தளிக்கும் சிறார்களுக்காக வாழ்நாளை அர்ப்பணிக்க தயார்

தாய்ப் பாசத்துக்காக  ஏங்கித்தவிக்கும் சிறார்களுக்கு உன்னதமான தாய்ப்பாசத்தை வழங்குவதற்கான  மகத்தான அரிய வாய்ப்பு தனக்கு கிட்டியுள்ளதாக, எஸ்.ஓ.எஸ். சிறுவர்  கிராமத்தில் அன்னையாக பணியாற்றும் ஆரோக்கியநாதர் றோஸ்மலர்  தெரிவித்துள்ளார்.

தங்களது பெற்றோரின் அரவணைப்பின்றி  தத்தளித்துக்கொண்டிருந்த 24சிறார்களுக்கு தான் அன்னையாக இருந்து,  அவர்களுக்கு தாய்ப்பாசத்தை வழங்கி ஆளாக்கியுள்ளதாகவும், அவர்  தெரிவித்துள்ளார்.

தாய்ப்பாசத்தை வழங்கி உன்னதமான  சேவையாற்றும் வாய்ப்புக் கூட, அச்சிறார்களினால் தனக்குக்  கிட்டியுள்ளதாகவும், அவர் கூறினார்.

சமூகத்தில்  எதிர்பாராதவிதமான சூழ்நிலைகளினால் பெற்றோரை இழந்து தத்தளிக்கும்  சிறார்களையும்   குடும்ப சூழ்நிலைகளினால் உரிய  பெற்றோரினால் அரவணைக்க முடியாத சிறார்களையும் ஒன்றுசேர ஒரே குடையின் கீழ்  அரவணைத்து உன்னதமான சேவையாற்றும் கிராமமாக எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம்  உள்ளது.

இந்த எஸ்.ஓ.எஸ். கிராமத்தின் யாழ்ப்பாணக்  கிளையில் சேவையாற்றுபவரான பலாலியைச் சேர்ந்த 49வயதுடைய றோஸ்மலர் தனது  சேவை பற்றி தினகரன் வாரமஞ்சரி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றார்....

யாழ்ப்பாணம்,  பலாலியைச் சேர்ந்த எனக்கு, யுத்த சூழ்நிலை காரணமாக க.பொ.த. சாதாரணதரம்  வரையே பாடசாலைக் கல்வியைத் தொடர முடிந்தது. 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில்  எமது ஊரில் நிலவிய யுத்த சூழ்நிலையைத் தொடர்ந்து, நாம் உடைமைகள்  அனைத்தையும் இழந்து இடப்பெயர்வுக்கு உள்ளாகியதோடு, எமது குடும்பமும்  வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில்,  மேற்கொண்டு எனது பாடசாலைக் கல்வியை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதோடு,  திருமண வாழ்க்கையும் எனக்கு அமையவில்லை.

இவ்வாறான  சூழ்நிலையில் தனிமையில் எனது வாழ்நாளை தொலைத்துவிடக் கூடாதெனவும்,  சமூகத்துக்கு ஏதாவதொரு வகையில் சேவையாற்ற வேண்டுமெனவும் எண்ணினேன். அப்போது  எனது 29ஆவது வயதில் முதியோருக்கு சேவையாற்ற வேண்டுமென்று எண்ணிய  எனக்கு, எதிர்பாராத திருப்புமுனையாக சமூகத்தில் தத்தளிக்கும்  சிறார்களுக்குச் சேவையாற்றும் பாக்கியம் கிட்டியது என்கின்றார் அவர்.

இந்நிலையில்,  கடந்த 2011ஆம் ஆண்டு முதல் எஸ்.ஓ.எஸ். கிராமத்தில் சேவையாற்றும் பாக்கியம்  எனக்கு கிட்டியது. அச்சேவையில் இணைந்து இவ்வருடத்துடன் சுமார் 11  வருடங்களாகின்றன என்கின்றார் அவர். 

ஒவ்வொரு  சிறார்களும்  வெவ்வேறுப்பட்ட இடங்களிலிருந்து வெவ்வேறுப்பட்ட குடும்ப  சூழ்நிலைகளிலிருந்து வருவதோடு மாத்திரமின்றி, அவர்கள் வெவ்வேறுபட்ட  மனநிலைகளைக் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.

இவ்வாறு  என்னிடம் ஒப்படைக்கப்படும் சிறார்களுக்கு முதலில் தாய் ஸ்தானத்திலிருந்து  தாய்ப்பாசத்தை வழங்குகின்றேன். இதனைத் தொடர்ந்து அச்சிறார்களை ஒரே  குடும்பக் கட்டமைப்புக்குள் கொண்டுவரும் வகையில், அச்சிறார்களின் தனிப்பட்ட  விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றேன் என்கின்றார் அவர்.

எஸ்.ஓ.எஸ். கிராமத்தில் ஏற்கெனவே இணைந்துள்ள சிறார்களுடன், புதிதாக வரும் சிறார்களை மெது மெதுவாக இணைக்கின்றேன்.

என்னிடம்  ஒப்படைக்கப்படும் சிறார்களுக்கு, நான் ஓர் அன்னையாக இருந்து நேரடியாகச்  சொல்லி வளப்படுத்துவதற்கு அப்பால், அச்சிறார்கள் எமது எஸ்.ஓ.எஸ்.  கிராமத்திலுள்ள ஏனைய சிறார்களுடன் சேர்ந்து பழகுவதால் அவர்களை நல்லதொரு  பண்பட்ட கட்டமைப்புக்குள் இலகுவில் கொண்டுவர முடிவதோடு, இது வெற்றிகரமாகவும் அமைகின்றது என்கின்றார் அவர்.

எஸ்.ஓ.எஸ். கிராமத்தில்  வைத்து பராமரிப்பதற்காக ஒப்படைக்கப்படும் சிறார்களை, அன்னையர்களாகிய   எம்மிடம் ஒப்படைக்கும்போது, 3கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

அவையாவன,  சிறார்களின் பண்பட்ட பழக்கவழக்கம், அவர்களின் பாதுகாப்பு மற்றும்  ஆரோக்கியம், கல்வி ஆகியவற்றோடு, அவர்கள் சமூகத்தில் நற்பிரஜைகளாக திகழ  வேண்டும் என்பனவேயாகும். இம்மூன்று கோரிக்கைகளையும் நாம் கவனத்திற்கொண்டு,  அச்சிறார்களை வளர்த்து ஆளாக்குவதே எம் கண் முன்னால் காணப்படும் பாரிய  சவாலாகும்.

இச்சவாலை நான் சாதகமாக ஏற்றுக்கொண்டு,  குறித்த 3கோரிக்கைகளையும் பின்பற்றி, என்னிடம் ஒப்படைக்கப்பட்ட சிறார்களை  சமூகத்தில் நற்பிரஜைகளாகவும் இணைத்துள்ளேன் என்கின்றார் அவர்.

மேலும்,  எமது எஸ்.ஓ.எஸ். அமைப்பின் நிபந்தனைக்கமைய ஓர் அன்னையின் வகிபாகமானது  60  வயதுவரையேயாகும். இருந்தபோதிலும் அவ் 60வயதிற்கு அப்பால் பணியாற்றும்  பாக்கியம் எனக்கு கிட்டினால், சமூகத்தில் தத்தளிக்கும் சிறார்களுக்காக எனது  வாழ்நாளை அர்ப்பணித்து சேவையாற்ற நான் தயாராகவுள்ளேன் என்கின்றார் அவர்.

திருமண  வாழ்க்கை எனக்கு அமையவில்லை என்று நான் சோர்ந்து போகவில்லை. நான் பெண்ணாக  இருந்துகொண்டு  சமூகத்தில்  உன்னதமான சேவையாற்றி என்னை  அர்ப்பணிப்பதற்கு   எத்தனையோ வழிகள் உள்ளன என்பதை உணர்ந்துகொண்டேன்.

அவ்வாறான உன்னதமான சேவைகளில் ஒன்றே மழலைச் செல்வங்களை அன்புடன் அரவணைப்பது. தற்போது அச்சேவையாற்றி நான் மனத்திருப்தி அடைகின்றேன்.

தாய்மையானது,  நாம் பிள்ளைகளை பிரசவித்து வளர்ப்பதில் மாத்திரம் அடங்கிவிடவில்லை.  அதற்கும் அப்பால், யாரோ பிரசவித்த சிறார்களை எமது பிள்ளைகளாக அரவணைத்து  அவர்களை சமூகத்தில் நற்பிரஜைகளாக ஆளாக்குவதிலும் உன்னதமான தாய்மை  தங்கியுள்ளது. இங்குதான் தாய்மை, பெண்மை மதிக்கப்படுவதோடு, பூரணத்துவமும்  அடைகின்றது என்கின்றார் அவர்.

திவாகர் ரட்துரை

தற்போதைய சூழ்நிலையில் பெற்றோரால் பராமரிக்க முடியாத சிறார்களை பொறுப்பேற்க நாம் தயாராகவுள்ளோம் - திவாகர் ரட்னதுரை

எஸ்.ஓ.எஸ்.  சிறுவர் கிராமமானது 3எழுத்துகளைக் கொண்டதாக ஒஸ்ரியாவில் 1949ஆம் ஆண்டில்,  அதாவது இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர், பெற்றோரை இழந்து தனது  சகோதரியால் பராமரித்து வளர்க்கப்பட்டவரான கலாநிதி ஹேர்மன் மைனர்  என்பவரினால் தொடங்கப்பட்டதோடு, தற்போது 138நாடுகளில் அதன் கிளைகளைக்  விஸ்தரித்துள்ளது எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம்.

இரண்டாம்  உலக மகா யுத்தத்தில் பாதிப்புற்ற சிறுவர்களை மையமாகக் கொண்டே அப்போது இந்த  எஸ்.ஓ.எஸ். கிராமம், கலாநிதி ஹேர்மன் மைனரினால் தொடங்கப்பட்டதாக,  இலங்கைக்கான எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமத்தின் தேசிய இயக்குநர் திவாகர்  ரட்னதுரை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையிலும்  எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமமானது 6இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  1981ஆம் ஆண்டு அப்போதிருந்த அரசாங்கத்தின் அனுமதியுடன் 15ஏக்கர் இட  வசதியுடன் பிலியந்தலையில் அதன் தலைமைக் காரியாலயம் உருவாக்கப்பட்டது.   இதனைத் தொடர்ந்து நுவரெலியா, காலி,  அநுராதபுரம், மொணராகலை,  யாழ்ப்பாணத்திலும் எஸ்.ஓ.எஸ். கிராமம் அதன் கிளைகளைக் பரப்பியது.

அத்தோடு,  பெற்றோரால் பராமரிக்கப்பட முடியாத சிறார்களையும் கவனத்திற்கொண்டு குடும்ப  வலுவூட்டல் திட்டத்தை, மேற்கண்ட 6இடங்கள் உட்பட காலியின் பெரலியவிலும்,  மாத்தறையின் கந்தரவிலும், முல்லைத்தீவின் மல்லாவியிலும்  எஸ்.ஓ.எஸ்.  கிராமம் மூலமாக மேற்கொள்கின்றோம்.

மேலும், எமது சேவைகளில்                 Vocational Training Centres      ஐயும் நடத்துவதோடு, இந்நிலையங்களானவை மொனராகலை, பண்டாரவளையின் மல்பொத,  அநுராதபுரம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில்  உள்ளன. இந்நிலையங்களில்  எஸ்.ஓ.எஸ். கிராம சிறார்களுக்கு மாத்திரமின்றி, வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள  ஏனைய சிறார்களுக்கும் இலவச பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.இதனை  விடவும், கல்வியமைச்சின் அனுமதியுடன் சுமார் 1,000சிறார்கள், க.பொ.த.  உயர்தரம்வரை கல்வி கற்கும் வகையில், ஹேர்மன் மைனர் எனும் பாடசாலை  பிலியந்தலையில் இயங்குவதோடு, இச்சிறார்களுக்காக சுகாதார அமைச்சுடன் இணைந்து  பிலியந்தலையில் சுகாதார நிலையமொன்றையும் நடத்துகின்றோம்.

இலங்கையில்  எஸ்.ஓ.எஸ். கிராமமானது, சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு பிரிவின் கீழ் பதிவு  செய்யப்பட்டு, அதன் கோட்பாட்டுக்கமைய இயங்கி வருகின்றது. சிறுவர்  நன்னடத்தை பராமரிப்பு பிரிவின் மூலமாக நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய,  இச்சிறார்கள், எஸ்.ஓ.எஸ். கிராமத்தில் அனுமதிக்கப்படுகின்றார்கள். 

இந்நிலையில்,  இச்சிறார்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பளித்து, சிறார்களை பராமரிப்பதோடு,  அவர்களின் இனம், மதம், மொழி போன்ற விடயங்களுக்கும் எஸ்.ஓ.எஸ். கிராமம்  மதிப்பளிக்கின்றது.

தாய்ப்பாசத்துடன் கூடிய உயரிய  பாதுகாப்பை சிறார்களுக்கு வழங்குவதோடு, அவர்களின் சுகாதாரம்,  கல்வியில்  கூடிய கவனம் செலுத்துகின்றோம். கல்வியை பொறுத்தவரையில், எஸ்.ஓ.எஸ்.  கிராமத்தில் இருக்கும் சிறார்கள் ஒவ்வொருவரும், குறைந்தபட்சம்  என்.வி.கியூ. - 3தரத் தகைமையாவது பெற்றிருக்க வேண்டுமென்பதோடு,  மேற்படிப்புகளை தொடரும் சிறார்களுக்கும் முன்னுரிமை வழங்கின்றோம்.

தாய்,  தந்தையரை இழந்த சிறார்களையும் இன்னோரன்ன குடும்ப சூழ்நிலைகளினால்  பெற்றோரினால் கைவிடப்பட்ட சிறார்களையும் நாம் பொறுப்பேற்றுக்கொண்டு  பராமரிக்கின்றோம்.

அத்தோடு, பெற்றோரால் பராமரிக்கப்பட  முடியாத சூழ்நிலையிலுள்ள சிறார்களுக்கும் குடும்ப வலுவூட்டல்,  திட்டத்தின்  மூலம் எஸ்.ஓ.எஸ். கிராமம் உதவிக்கரம் நீட்டுகின்றது.

பொதுவாக, பிரசவிக்கப்பட்ட குழந்தைகளிலிருந்து 10வயதுக்குட்பட்ட சிறார்களை நாம் பொறுப்பேற்கின்றோம்.

இருந்தபோதிலும்,  ஒரு குடும்பத்தில் ஒரே சகோதரர்கள் இருக்கும் பட்சத்தில், அச்சகோதரர்களில்  ஒருவருக்கு சற்று வயது கூடினாலும், அச்சகோதரர்களைப் பிரிக்காது நாம்  பொறுப்பேற்கின்றோம். அதேநேரம் ஆண், பெண் எனும் பாகுபாடும் சிறார்கள்  மத்தியில் காட்டாமலும் ஒரே குடும்பக் கட்டமைப்பின் கீழ் அச்சிறார்களை நாம்  வளர்க்கின்றோம்.

பெண் சிறார்களை பொறுத்தவரையில் 18  வயதுவரையே தங்களது எஸ்.ஓ.எஸ். கிராம அன்னையுடன் தங்கியிருக்கலாம். அதன்  பின்னர் அவர்கள் எஸ்.ஓ.எஸ். கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பெண்கள்  விடுதியில் தங்கியிருந்து சமூகத்தில் இணைய முடியும்.

ஆண் சிறார்களை பொறுத்தவரையில் தங்களது எஸ்.ஓ.எஸ். கிராம அன்னையுடன் 14வயதுவரை தங்கியிருந்து, அதன் பின்னர்                 Youth Boys Home      இல் இணைய முடியும். அங்கு அவர்கள் தமது 18வயதை பூர்த்தி செய்து, சமூகத்தில் இணைய முடியும்.

எஸ்.ஓ.எஸ்.  கிராமத்தில் தங்கியிருக்கும் சிறார்களின் வயதெல்லையானது 18ஆக  இருந்தபோதிலும், அப்பதினெட்டு வயதுக்குப் பின்னரும் அவர்கள்  பாதுகாப்புக்காக எம்முடன் தங்க விரும்பும் பட்சத்தில், அவர்கள் சமூகத்தில்  இணையும்வரை நாம் அவர்களுக்கு பாதுகாப்பு வசதி வழங்குகின்றோம்.

இலங்கையில்  எஸ்.ஓ.எஸ். கிராமம் தொடங்கிய காலகட்டத்தில் ஓர் அன்னையிடம் 10சிறார்களை  பராமரிப்புக்காக ஒப்படைத்தோம். அச்சிறார்களை  மேலும் சிறந்த அணுகுமுறையுடன்  கையாளும் வகையில், தற்போது ஓர் அன்னையிடம் 8சிறார்களை ஒப்படைக்கின்றோம்.

இக்கிராமத்தில்  அன்னையரும் தங்களது சிறார்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். சிறார்களும்  தங்களது அன்னையரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

மேலும்,  ஏதோவொரு காரணத்தினால் மண வாழ்க்கையில் இணையாத 30வயது முதல் 45  வயதுக்கிடைப்பட்ட பெண்களையே எமது எஸ்.ஓ.எஸ். கிராம அன்னையராக தெரிவு  செய்கின்றோம். 2வருடகாலத்திற்கு ஓர் அன்னைக்குரிய என்.வி.கியூ. - 4  தரத்தைக் கொண்ட பயிற்சியை வழங்குவதோடு, அவர்களுக்கு முதல் 3மாதங்களுக்கு  கொடுப்பனவு வழங்குகின்றோம். இதன் பின்னர் ETF, EPF  உடன் சம்பளம்  வழங்குவதோடு, அவர்களது 60வயது பூர்த்தியைத் தொடர்ந்து ஓய்வூதியத்தோடு,  சேவை அடிப்படையில் கொடுப்பனவும் வழங்குகின்றோம்.

எமது  பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களை அன்னையாக்குவதோடு, அப்பயிற்சியில் சற்று  பின்தங்கி தேர்ச்சி பெறுபவர்களை சிற்றன்னையாக்குகின்றோம். இத்தாய்மார்கள்  தங்களது 60வயதை பூர்த்தி செய்யும் பட்சத்தில், அவர்கள் வேறிடங்களுக்கு  செல்லாத வகையில், எஸ்.ஓ.எஸ். கிராமத்தில் அவர்களுக்கு நிரந்தர தங்குமிட  வசதியையும் ஏற்படுத்திக்கொடுக்கின்றோம். இதன் பின்னர், அவர்கள்  சிறார்களுக்கு அம்மம்மாவாக செயற்படும் வகிபாகத்துடன் காணப்படுகின்றார்களார்  எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது எமது நாட்டில்  நிலவும் இக்கட்டான சூழ்நிலையில், தங்களது பிள்ளைகளை பராமரிக்க முடியாது  கஷ்டப்படும் பெற்றோர், அப்பிள்ளைகளை எம்மிடம் ஒப்படைக்கும் பட்சத்தில்,  அவர்களை பொறுப்பேற்க நாம் தயாராகவுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்.சுகந்தினி  

Comments