அரசியலமைப்பு ரீதியாகத் தேர்வானவர் ரணில் | தினகரன் வாரமஞ்சரி

அரசியலமைப்பு ரீதியாகத் தேர்வானவர் ரணில்

இன்றைய பொருளாதாரப் பிரச்சினைக்கு நாட்டில் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினை தான் அடிப்படைக் காரணம் என்கிறார் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன். தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய செவ்வியில் 70வருடங்களாக தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு அரசுகள் கோடானு கோடி ரூபாய் பணம்செலவு செய்தமை பொருளாதாரத்தை பின்னடையச் செய்தது என்கிறார். செவ்வி முழுமையாக....  

கேள்வி: -கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் டளஸுக்கு வாக்களிப்பதாக இருந்ததே. ஆனால் ரணிலுக்குக் கிடைத்த வாக்குகளைப் பார்த்தால் ரணிலுக்கு கூட்டமைப்பினரும் வாக்களித்துள்ளதாகவே தெரிகின்றதே உண்மையா? 

பதில்:- கூட்டமைப்பில் இருந்து யாராவது மாறிப் போட்டார்களா என்று எனக்கு தெரியவில்லை. இரகசியமாக வாக்களித்த படியால், யார் யாருக்கு வாக்களித்தார்கள் என்று சொல்ல முடியாது. 

டலஸுக்கு ஆதரவானவர்களும் ரணிலுக்கு வாக்களித்ததாகவும், ஜே.வி.பியின் ஆட்களும் வாக்களித்தனர் என்றும் பல கதைகள் இருக்கின்றன. 

எது எப்படி இருந்தாலும், ரணிலுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளைப் பார்க்கின்ற போது, பொதுஜன பெரமுன கட்சியினர் அதிகமானவர்கள் வாக்களித்ததாக எனக்கு தெரிகிறது. கூட்டமைப்பினர் மாறிப் போட்டார்களா என்று எனக்கு சொல்ல முடியாமல் இருக்கின்றது. 

கேள்வி:- ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தொடர்பாக பல சர்ச்சையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றனவே?  

பதில்:- அவர் பணம் வாங்கினார் என்பது நியாயமற்ற குற்றச்சாட்டு என நினைக்கிறேன். உறுதியாக கூற முடியாது. அதை நான் நம்பவில்லை. 

கேள்வி:- தற்போதைய நிலையில் கூட்டமைப்பின் அடுத்த கட்ட அரசியல்நகர்வு என்னவாகஇருக்கும்? 

பதில்:- ரணிலின் நகர்வுகள் எவ்வாறு அமையப் போகின்றது என்பது மிக முக்கியமான விடயம். ஏனெனில், கூட்டமைப்பின் அடுத்த கட்ட நகர்வுக்கு, தற்போது உள்ள சூழ்நிலையில், இனப்பிரச்சினை தீர்வு குறித்து அரசாங்கம் எந்த நகர்வையும் எடுக்காது. நாங்கள் அழுத்தங்களை பிரயோகித்துக் கொண்டிருப்போம். 

நாங்கள் டலஸ் அழகப்பெருமயிடம் பேசிய, காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச் சட்டம், காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை ரணிலிடமும் வலியுறுத்துவோம். 

பாராளுமன்றம் சென்று அங்கு அரசியல் யாப்பின் பிரகாரம் இன்றி, ஜனாதிபதியால் செய்யக்கூடியவற்றுக்கு கட்டாயமாக அழுத்திக் கேட்போம். ஆனால், நாங்கள் அவருக்கு எதிராக வாக்களித்து, அவருக்கு எதிராக தீர்மானம் எடுத்தது, சில வேளைகளில் அவரது மனதில் இருக்கலாம். 

இருந்தாலும், ரணில் நாட்டின் தலைவர் என்ற படியால் இந்த விடயங்களை செய்யலாம் என்று நம்புகிறேன். 

கேள்வி:- நல்லாட்சி அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்வு மற்றும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள், அரசியல் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இன்றைய சூழ்நிலையில் இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என நம்புவது சாத்தியமாகுமா? 

பதில்:- நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இனப்பிரச்சினை தீர்விற்காக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். அது முடிவு பெறவில்லை. அது வேறு விடயம். ஆனால், அது இப்போது நடைபெறும் என நான் எதிர்பார்க்கவில்லை.  

ஆனால் மற்ற விடயங்களை, அவர் செய்யக்கூடியவை களை செய்யும் படி வலியுறுத்துவோம். அவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக செய்து தருவார் என எதிர்பார்க்கின்றோம். அவர் தான் இந்த இடத்திற்கு வருவதற்கான முயற்சிகளை எடுத்து வந்திருக்கிறாரே தவிர, கோட்டாபய ராஜபக்ஷகளை பாதுகாக்கவோ,, ராஜபக்ஷகளை பாதுகாக்கவோ செய்வார் என எதிர்பார்க்கவில்லை.  

கேள்வி:- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக கோரி, காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன? 

பதில்:- அவர் அரசியலமைப்பின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்டவர். விலக சொல்லுவது இந்த நாட்டிற்கு நல்லதல்ல. 

அப்படி விலகத்தான் வேண்டுமென்றால், அரசியலமைப்பு ரீதியாக விலகச் செய்வதற்கு வழிகள் இருக்கின்றன. அதற்குரிய முயற்சிகளை எடுக்க வேண்டும்... 

அவர் தான் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயம் அல்ல. இவரை விட மிகச் சிறந்த ஒருவர் வந்தால் கூட, நாடு முன்னேற்றமடைய வேண்டும்.. இன்று இருக்கக்கூடிய இந்த நிலை மாற வேண்டும். சிங்கள மக்கள் மட்டுமன்றி எமது மக்களும் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  

கேள்வி:-அமையவுள்ள சர்வ கட்சி அரசில் கூட்டமைப்பு அங்கம் வகிக்குமா? 

பதில்:- பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து சர்வகட்சி அமைப்பது பொருத்தமான ஒன்று, இன்றைய சூழ்நிலையில் கட்சி பேதமின்றி செயற்படுவதன் மூலம் தான் இந்த நாட்டை இக்கட்டான நிலையில் இருந்து மீட்க முடியும்.  

ஆனால், இன்றும் கூட, எங்களை விடுங்கள். நாங்கள் அரசில் இருப்போம், இருக்கமாட்டோம் என்பதெல்லாம் வேறு விடயம். ஆனால் தென்னிலங்கை கட்சிகள், இன்றும் கூட இவ்வளவு இறுக்கமான நிலையில் நாடு இருக்கும் போது கூட, தங்களுடைய அதிகாரம், தாங்கள் தான் தனியாக அதிகாரத்துக்கு வர வேண்டும் என்று போட்டி போடும் நிலைமை துயரமானது. அவர்கள் தங்களுடைய போக்குகளையும், நான் தான் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற போக்கையும் கைவிட்டு, நாட்டை முன்னோக்கி நகர்த்த வேண்டும் என்பதே என்னுடைய தனிப்பட்ட விருப்பம். 

அவ்வாறான நிலைமை உருவாகினால், நாங்களும் அவர்களுடன் சேர்ந்து, முன்னெடுப்புக்களை செய்வதற்கு தயாராகவே இருக்கின்றோம். 

கேள்வி:- அவ்வாறு கூட்டமைப்பு இணையுமானால் என்னென்ன நிபந்தனைகளை முன்வைக்கும் ? 

பதில்:- எந்த வித நிபந்தனைகளும் இல்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த நாட்டை முன்னோக்கி நகர்த்த வேண்டும். தமிழ் மக்களுடைய இந்த தேசிய இனப்பிரச்சினை என்பது தான் ஒரு அடிப்படை காரணம் பொருளாதார பின்னடைவுக்கு, 70வருடங்களாக தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு அவர்கள் செலவு செய்த கோடான கோடி ரூபாய் பணம். இவை எல்லாம் முக்கியமான காரணம். 

தொடர்ந்தும் தமிழ் மக்களைப் புறந்தள்ளி, இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமென்று, நினைத்துச் செயற்படுவார்களாக இருந்தால், இந்த நாடு நிச்சயமாக முன்னேறாது.

இப்போதுள்ள முதலாவது பிரச்சினை இந்த நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவது. 

அதைச் செய்கின்ற அதேநேரத்தில், எமது தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கும் நியாயமான தீர்வை காண வேண்டும். அப்படியான நிலைப்பாட்டை அவர்கள் எடுப்பார்கள் என்று நம்பினால் தான், நாங்கள் அவர்களுடன் இணைந்து செயற்பட முடியும் என்றார். 

சுமித்தி தங்கராசா

Comments