இதழியல் வேந்தருக்கு இலண்டனில் விழா! | தினகரன் வாரமஞ்சரி

இதழியல் வேந்தருக்கு இலண்டனில் விழா!

இதழியல் வேந்தர் கனடா உதயன் வார இதழின் பிரதம ஆசிரியர் ஆர்.என். லோகேந்திரலிங்கத்துக்கு இலண்டன் வாழ் தமிழ்ச் சமூகம் புதன்கிழமையன்று(20.7.2022) விழா எடுத்து கெளரவித்தது. ஊடகத் துறையில் இருபத்தைந்து ஆண்டு கால சாதனை நிகழ்த்தி, பொது வாழ்க்கையில் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து, கவிதை, பேச்சு, எழுத்து, இலக்கியம், சமூகம், சமயம், எனப் பல்துறைகளிலும் ஆர்.என். லோகேந்திரலிங்கம் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டி இலண்டன் வாழ் தமிழ்ச் சமூகம் இந்த விழாவினை ஏற்பாடு செய்திருந்தது. இலண்டனில் பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் நால்வர் மணி மண்டபத்தில் இந்த விழா நடைபெற்றது.  

விழா தொடங்குமுன்னர் காலை 10.30மணியளவில் இங்கு வருகை தந்த ஆர்.என். லோகேந்திரலிங்கத்துக்கு சைவ முன்னேற்றச்சங்கத்தின் ஸ்ரீ சிவகாமி சமேதர ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் சிவாச்சாரிய பெருமக்களால் சிறப்பான வரவேற்பும் கெளரவமும் வழங்கப்பட்டன. 

தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் காலை 11.30மணிக்குத் தொடங்கின. சைவ முன்னேற்றச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தற்பொழுது நிர்வாகக்குழுவில் இடம்பெற்றிப்பவருமான வாமனானந்தன் கடவுள் வாழ்த்தி இசைத்தார். திருமதி. வசந்தா மகாதேவன் தன் இனிய குரலில் தமிழ்த் தாய் வாழ்த்தினை இசைத்தார். தொடர்ந்து மறைந்த முன்னோர்களுக்கான மௌன வணக்கம் நடைபெற்றது. 

பிரித்தானிய சைவ முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் தரும.இரவீந்திர மோகன் விழாவிற்கு வருகை தந்திருந்தவர்களை வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து சைவ முன்னேற்றச் சங்கத்தின் நிறுவனர், தொண்டர் திலகம் வ.இ. இராமநாதன் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் தனது தலைமையுரையில் லோகேந்திரலிங்கத்துடனான தனது நீண்ட கால நட்பை நினைவு கூர்ந்தார். இன்றைய அவரின் வெற்றி ஒரே நாளில் பெறப்பட்டதல்ல என்றும், ஊடகத்துறையில் அவர் மேற்கொண்ட உழைப்பும், விடாமுயற்சியும், எதிர்கொண்ட சவால்களுமே அவரது சாதனையை சாத்தியமாகியிருக்கிறது என்றும் அவர் தனது தலைமையுரையில் தெரிவித்தார். தொடர்ந்து தமிழ் நாடு சேலம் பன்னிரு திருமுறை பகுப்பாய்வு மையத்தின் தலைவரும், தற்பொழுது இங்கிலாந்தில் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டிருப்பவருமான பேராசிரியர் டாக்டர் வே.சங்கரநாராயணன் தொடக்கவுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் லோகேந்திரலிங்கத்தின் ஐம்பது ஆண்டு காலப் பொது வாழ்வின் சாதனைகளை பட்டியலிட்டார். பகைவர்களை எதிர்கொள்ள வேண்டிய ஊடகத் துறையில் இருந்தும், உலகளாவிய நட்பின் நாயகனாக அவர் உயர்ந்து விளங்கும் பாங்கு, துறை தாண்டியும், தாயக மக்களுக்காக அவர் அன்றாடம் ஆற்றிவரும் சமூகநலப் பணிகள் இவைகளை அவர் பாராட்டினார். 50முதல் 70பக்கங்கள் கொண்ட வார இதழை கிட்டத்தட்ட 1250வாரங்களாக, 25ஆண்டுகள் நடத்துவது சாமானியமான சாதனை அல்ல என்றும், புலம் பெயர் தேசத்தில் வெள்ளிவிழா காணும் முதல் தமிழ் வார இதழ் கனடா உதயன் பத்திரிகை தான் என்றும் அவர் தன் உரையில் தெரிவித்தார்.  

தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய டாக்டர் நவரத்தினம், லோகேந்திர லிங்கத்தின் சாதனைகள் தமிழ் இனத்துக்கே பெருமை தருவதாக உள்ளது என்று குறிப்பிட்டார். தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய ஈழத்தின் பிரபல ஊடகவியலாளர் விக்கிரமசிங்க லோகேந்திரலிங்கத்துடன் தான் கொண்ட நட்பின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். ஒரு ஊடகவியலாளரின் பொறுப்பு, கடமை, பத்திரிகை தருமம் இவற்றை செம்மையாகக் கடைப்பிடித்து சிறப்புப் பெற்றவர் லோகேந்திரலிங்கம் என்று அவர் குறிப்பிட்டார். வாமனானந்தன் தனது வாழ்த்துரையில், உலகில் முதல் எழுத்தாளர் விநாயகப் பெருமான் என்று குறிப்பிடுவதைப் போல முதுகெலும்புள்ள பத்திரிக்கையாளரான லோகேந்திர லிங்கத்தை தமிழ் விநாயகர் என்று அழைப்பதில் தவறில்லை என்றார். டாக்டர் நித்தியானந்தம் தனது வாழ்த்துரையில் லோகேந்திர லிங்கத்தின் தமிழ்ப் பணிகளோடு, சமூகப் பணிகளும் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். இலண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய நிர்வாகி தேவசகாயம், லோகேந்திரலிங்கம் மலையகப் பகுதி மக்களுக்கு ஆற்றிவரும் சேவைகள் குறித்து பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார். இலண்டன் சிவன் கோயில் நிறுவனர் சச்சிதானந்தம் தனது வாழ்த்துரையில் இலண்டன் முரசு போன்ற பழமையான பத்திரிகைகளுடன் ஒப்பிட்டு லோகேந்திரலிங்கத்தின் பணிகளைப் பாராட்டி வாழ்த்தினார். .இந்துசேகரன் தனது வாழ்த்துரையில், யானை பலம் கொண்ட சிந்தனையாளர் லோகேந்திரலிங்கம் எழுத்தாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் ஒரு வழிகாட்டி எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து சைவ முன்னேற்றச் சங்கத்தின் சமயச் செயலாளர் திருமதி சரோஜினி சந்திரகோபால், திருமதி. புவனேஸ்வரி நடராசா, திருமதி.ரஷாந்தினி, உள்ளிட்டோரும் வாழ்த்துரைகள் வழங்கினர்.    நிறைவாகத் தனது ஏற்புரையில் கனடா உதயன் வார இதழின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் இலண்டன் வாழ் தமிழ்ச் சமூகம் எடுத்த இந்த நிறைவான நிகழ்வுக்குத் தன்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். இது போன்ற விழாக்கள் தனது பொறுப்பையும், கடமையையும் அதிகரித்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இக்கட்டான சூழ்நிலைகளிலும், இலக்கு நோக்கிய தனது பயணத்தை நிறுத்தியதில்லை என்றும், எதிர்காலத்திலும் இலக்கு நோக்கிய தனது பயணம் தொடரும் என்றும், இது போன்ற வாழ்த்துக்கள் அதற்கு வலுவூட்டும் என்றும் தெரிவித்தார். கனடா உதயன் இதழின் பிரதிகளையும் இலண்டன் வாழ் தமிழ்ச் சமூக உறவுகளுக்கு அவர் வழங்கி மகிழ்ந்தார். இலண்டன் தமிழ்ச் சமூகத்தின் இந்த இரண்டரை மணி நேர விழா, இனிய மதிய விருந்துடன் நிறைவடைந்தது. 

அ.கனகசூரியர்

Comments