அரசியல் நெருக்கடிகள் தணிந்து நாடு வழமைக்கு திரும்பினாலேயே பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்! | தினகரன் வாரமஞ்சரி

அரசியல் நெருக்கடிகள் தணிந்து நாடு வழமைக்கு திரும்பினாலேயே பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்!

'உலகளாவிய ரீதியில் நாடுகளின் பொருளாதார செயற்பாடுகளின் வேகம் தணிந்து மெதுவடைந்து வருவதாக IMF இன் அண்மைய அறிக்கையொன்று கூறுகிறது. இதனால் இலங்கையின் பிரதான ஏற்றுமதிச் சந்தைகளில் ஒரு தொய்வுநிலை ஏற்பட்டு இலங்கையின் ஏற்றுமதி வருவாய்கள் வீழ்ச்சியடையும் அபாய நிலை தோன்றியுள்ளது' 

இலங்கை தற்போது அனுபவித்துவரும் எரிபொருள் நெருக்கடி எதிர்வரும் மாதம் மேலும் தீவிரமடைவதற்கான சமிக்ஞைகள் மிகத் தெளிவாகத் தென்படுகின்றன.  

நாட்டில் ஏற்பட்ட அரசியல் அசைவுகளின் பின்னர் ஒரு உறுதியான அரசியல் பொருளாதாரப் புறச்சூழல் உருவாகி நாடு படிப்படியாக வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட சம்பவங்கள், அது தொடர்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பங்காளிகளின் நடத்தைகள் மற்றும் எதிர்வினைகள் என்பவற்றை நுணுக்கமாக ஆராய்ந்து கடந்த காலப் பட்டறிவுடன் ஒப்புநோக்குமிடத்து இலங்கைப் பொருளாதாரம் வழமைக்குத் திரும்புவது இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதும் தற்போது இடம்பெற்றுவரும் உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் பொருளாதார நகர்வுகள் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் ஒரு படி மோசமான நிலைக்கு கொண்டு சென்ற பின்னரே பொருளாதார மீட்சியைப்பற்றிச் சிந்திக்கச் செய்யும் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.  

கடந்த வாரம் IMF இன் குறிப்புகளும் Fitch Ratings எனப்படும் சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனத்தின் அறிக்கையும் இலங்கை இன்னமும் அரசியல் உறுதிப்பாடற்ற நிலையில் உள்ளமையையும் கடன் மீளச்செலுத்தல் பொறிமுறை தொடர்பில் நிலையற்ற தன்மையை தொடர்ந்தும் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளன.  

இதனால் இலங்கையின் பொருளாதார மீட்சி காலதாமதமடைவதாகக் கொள்ளலாம். இலங்கை IMF இடம் கடன்பெறச் சென்றுள்ள போதிலும் ஏற்கெனவே பெற்றுள்ள கடன்களை மீளச் செலுத்துவது தொடர்பில் கடன் வழங்கியவர்களுடன் பேசி ஒரு உடன்பாட்டிற்கு வராமல் அதன் உதவிகள் இலங்கைக்குக் கிடைக்காது.  

அவ்வாறு IMF இன் அனுசரணை கிடைக்காமல் சர்வதேச கடன் தரமிடல் நிறுவனங்கள் இலங்கையைக் கடன் பெறுவதற்குத் தகுதி உள்ள நாடு என்று அறிவிக்காது. இதனால் இலங்கையினால் சர்வதேச சந்தைகளில் கடன் பெறமுடியாது. நட்பு நாடுகளிடமிருந்து கடன்களைப் பெறுவது மாத்திரமே இப்போது இலங்கைக்கு எஞ்சியுள்ள ஒரே வழியாக உள்ளது. நட்பு நாடுகள் என்ற வகையிலும் இந்தியாவைத் தவிர எந்த ஒரு நாடுமே அப்போதைய நெருக்கடியான ஒரு சூழலில் இலங்கைக்கு போதியளவு நிதியுதவிகளைச் செய்ய முன்வரவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.  

இந்தியாவும் இப்போதுள்ள நிலையில் மேலதிக கடன் உதவிகளைச் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சீனா இலங்கைக்கு உதவக்கூடிய நிலையில் இருந்தாலும் அது வணிகக் கடன்களை மாத்திரமே வழங்கும் அல்லது பிணையாக இலங்கையின் சொத்துகளில் எதையாவது எதிர்பார்க்கும்.  

இப்போது ஏற்கெனவே சீனாவிடமிருந்து பெற்ற மீள் கட்டமைப்புச் செய்யுங்கள் என்று IMF உடன் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்து அழுத்தங்களை விடுத்து வருகின்றன. ஆயினும் சீனா இது தொடர்பில் சாதகமாக சமிக்ஞைகள் எதையும் வழங்கவில்லை.

இது IMF உடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்து கடன் ஒப்பந்தமென்றைச் செய்வதில் காலதாமதங்களை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் உலகளாவிய ரீதியில் நாடுகளின் பொருளாதார செயற்பாடுகளின் வேகம் தணிந்து மெதுவடைந்து வருவதாக IMF இன் மிகச் சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்று கூறுகிறது. இதனால் இலங்கையின் பிரதான ஏற்றுமதிச் சந்தைகளில் ஒரு தொய்வுநிலை ஏற்பட்டு இலங்கையின் ஏற்றுமதி வருவாய்கள் வீழ்ச்சியடையும் அபாய நிலை தோன்றியுள்ளது.  

இலங்கையின் ஏற்றுமதிகள் பிரதானமாகச் செல்லும் ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் பொருளாதார மெதுவடைதல் ஏற்பட்டு பணவீக்கம் அதிகரித்துச் செல்கிறது. எனவே இலங்கையின் ஏற்றுமதிச் சந்தைகளைக் காப்பாற்றிக் கொள்வது மிகமிக அவசியமாகும். 

ஆனால் அண்மையில் ஏற்பட்ட ஆட்சி அசைவின் பின்னர் அந்நாடுகளின் ராஜதந்திரிகளுடன் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்புகளின்போது பேசப்பட்ட விடயங்களாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை நோக்குமிடத்து ஒரு மிகப்பலம் பொருந்திய செல்வந்த நாடு அதன் வெளிநாட்டு ராஜதந்திரிகளைக் கையாள்வதை ஒத்த ஒரு போக்கினை அவதானிக்க முடிந்தது.  

எடுக்கிறதோ பிச்சை மிதக்கிறதோ பல்லக்கில் என்பது போல, இலங்கை மக்கள் அனுபவித்துவரும் இன்றைய வலிமிகுந்த பொருளாதாரச் சுழலில் சொந்த மக்களின் வயிற்றைப்பற்றி யோசித்து ஏற்கெனவே நமது ஏற்றுமதிச் சந்தைகளாக உள்ள நாடுகள் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்துள்ள சுழ்நிலையிலும் அவற்றுடன் முரண்படாமல் முடிந்தளவில் இணங்கிச் சென்று அவற்றின் உதவிகளைப் பெற எத்தனிப்பதே இலங்கை மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும்.  

அதனை விடுத்து அந்த நாடுகளுக்கு அரசியல் பயிற்சி வகுப்பு எடுக்க முனைவது பொதுமக்களையே நேரடியாகப் பாதிக்குமேயன்றி ஆட்சியாளர்களையல்ல. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கைக்கு வழங்கியுள்ள GSP+ சலுகைகளை நீக்குவதாக அறிவித்தாலே போதும் இலங்கையின் ஏற்றுமதிகள் சரிந்து விழுந்துவிடும். 

ஆயினும் மேற்குலக நாடுகள் தொடர்ந்தும் இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால் இலங்கையில் முழுமையான மக்கள் ஆணையுடன் ஒரு ஜனநாயக ஆட்சிமாற்றம் இடம்பெறும் வரை அவை மதில் மேல் பூனைகளாக இருந்து காய்களை நகர்த்துகின்றன.  

உலகின் சர்வாதிகரிகளாகக் காணப்பட்ட மிகப்பலம் பொருந்திய நபர்களே மேற்குலகின் காய் நகர்த்தலில் தமது சொந்த நாட்டு மக்களாலேயே அடித்து விரட்டப்பட்டார்கள். ஆகவே உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாக உள்ள இலங்கை ஏனைய நாடுகளின் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்பது முக்கியம்.  

இந்த அரசியல் நெருக்கடிகள் தணிந்து வழமை நிலை ஏற்படாத வரையில் இலங்கையால் டொலர்களைத் திரட்ட முடியாது. நாடு அவசரகால நிலையில் உள்ளபோது சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதோ வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைக்க எத்தனிப்பதோ வெற்றி பெறாது.  

இன்றைய சூழலில் நாட்டின் எரிபொருள் கையிருப்புகள் ஓரிரு வாரங்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கும். எரிபொருள் கப்பல்களை வரவழைப்பதற்கு போதிய டொலர்களைப் பெற முடியவில்லை என பெற்றோலிய வளத்துறை அறிவித்துள்ளது.

மத்தியவங்கி அதனை வழிமொழிந்துள்ளது. பெற்றோலிய இறக்குமதிக்காக மாதாந்தம் 450தொடக்கம் 600மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக மத்தியவங்கி முன்னர் கூறியது. சாதாரண ஏற்றுமதி வருமானங்களை வைத்து இதனை ஈடுசெய்ய முடியாத நிலை உள்ளது.  

உணவு மற்றும் மருந்துப்பொருள்கள் என்பவற்றையும் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. எனவே இப்போது டொலர்கள் இல்லை என்று கூறி பெற்றோலியத்தைக் கொண்டுவர இயலாவிட்டால் இரு வாரங்களின் பின்னர் நாடு முடங்கும் நிலை ஏற்படும்.

அப்போது பெற்றோலியத்தை வரவழைத்தால் அதிக விலை செலுத்திக் கொள்வனவு செய்ய நேரிடும். எனவே வருமுன் காப்போனாகச் செயற்படவேண்டிய தருணத்தில் டொலர் இல்லை. அதனால் எதிரகாலத்தில் நெருக்கடி ஏற்படும் என்று அபாய சங்கு ஊதுவதல்ல அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டியது. பிரச்சினைக்குரிய தீர்வைக்காண்பதே அவர்கள் செய்ய வேண்டியது.  

மறுபுறம் மிகநீண்ட காத்திருப்பின் பின்னர் இம்மாத நடுப்பகுதியில் டீசல் மற்றும் பெற்றோலியக் கப்பல்கள் நாட்டுக்குள் வந்தன. அவை முறையாக விநியோகிக்கப்படுகின்றனவா என்பது கேள்விக்குரியது.

அனுமதிப்பங்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பெற்றோல் மாபியா ஒன்று தோன்றுவதால் முச்சக்கர வண்டிகள் மூலமாக பெற்றோல் பெறப்பட்டஜஸ்ரீ ஒரு லீற்றர் 3000ரூபா வரையில் விற்கப்படும் அவல நிலை உருவாகியது. இவை ஒவ்வொரு நிலையங்களாக ஓடி ஓடி பெற்றோல் சேகரித்து விற்கும் தொழிலில் சிலர் ஈடுபட்டனர்.  

சவாரியில் ஈடுபட்டு வருமானம் உழைப்பதை விட பெற்றோல் விற்று உழைப்பது மிகவும் இலாபகரமாக உள்ளதால் பெரும்பாலான முச்சக்கர வண்டிகளை முன்புபோல வீதிகளில் காண முடிவதில்லை. QR முறைமை மூலம் உரியவகையில் ஒவ்வொரு வாகனத்திற்கும் உரிய பங்கீட்டை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.  

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நாட்களில் ஒவ்வொரு பெற்றோல் நிலையத்திற்கும் எரிபொருள் வினியோகிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளும் தமது கடமைகளை உரிய முறையில் செய்ய வேண்டும். தற்போது எரிபொருள் வரிசைகளில் விரயமாகும் நேரத்தை அளவிடமுடியாதுள்ளது.  

பெற்றோலிய விநியோகத்தை சரியாக முகாமை செய்யாவிட்டால் வேறு எதைச் செய்தாலும் நாட்டின் பொருளாதாரச் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவரமுடியாது. இப்போதைய நிலை சில குழுக்கள் நிலைமையைப் பயன்படுத்தி கொள்ளை இலாபம் ஈட்டவும், அதிகாரிகள் கண்டும் காணாதது போல விலகிச் செல்லவும் வசதியான ஒரு அராஜக சூழலை உருவாக்கியுள்ளது.  

அடுத்த எரிபொருள் கப்பல்கள் வராத பட்சதில் இந்த எரிபொருள் மாபியாக்கள் விரிவடைந்து பலம் பெறவும் வழிவகுக்கும் சாதாரண பொதுமக்கள் தமது நாளாந்த தேவைகளுக்கு இந்த மாபியாக்களில் தங்கியிருக்கும் நிலையும் உருவாகாமல் இது தவிர்க்க வேண்டும். கையிருப்பில் உள்ள எரிபொருள் முறையான விதத்தில் பகிர்ந்தளிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.   

கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை,
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments