அழியும் ஆபத்தை எதிர்நோக்கும் இலங்கைச் சிறுத்தைகள் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

அழியும் ஆபத்தை எதிர்நோக்கும் இலங்கைச் சிறுத்தைகள்

உலகளாவிய ரீதியில் இனங்காணப்பட்டுள்ள 8வகையான சிறுத்தை உப இனங்களில் பந்தெரா பார்டஸ் கொட்டியா (Panthera pardus kotiya) என விஞ்ஞான ரீதியாக அறியப்படும் இலங்கைச் சிறுத்தையும் ஒன்றாகும். சிறுத்தைகள் பல்வேறுபட்ட சூழல்களுக்கு இசைவாக்கமடைந்து வாழக்கூடியவை என்பதனால் இலங்கையின் உலர் வலயம் முதல் ஈர வலயம் வரை இவை பரந்து காணப்படுகின்றன. சிங்கம், புலி போன்ற வலிமையான பெரிய ஊனுண்ணிகள் வாழும் நாடுகளில் சிறுத்தைகள் தம் உணவுக்காக அவற்றுடன் போட்டியிட வேண்டியுள்ளது. ஆனால் சிறுத்தைகளே இலங்கையின் உயர் ஊனுண்ணியாகவுள்ளது (Top predator). சிறுத்தைகளை அவற்றின் மஞ்சள் நிறமான தோலில் காணப்படும் கறுப்பு நிறமான புள்ளி அடையாளங்களை கொண்டு இலகுவாக இனங்கண்டுகொள்ளலாம்.

சிறுத்தைகள் தினமானது 2021ம் ஆண்டில் ஆவணி முதலாம் திகதியில் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டு, இந்தவருடம் இரண்டாவது முறையாக கொண்டாடப்படுகிறது. சிறுத்தைகள் உணவு சங்கிலியை பேணுவதன் மூலம் இயற்கை சமநிலையை பேணுவதில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் (International Union for Conservation of Nature - IUCN) சிறுத்தைகள் அழிவுறக்கூடிய நிலையிலுள்ள இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

விஞ்ஞான ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இலங்கையில் ஆயிரத்திற்கும் குறைவான சிறுத்தைகளே தற்போது வாழ்கின்றன. 

சிறுத்தைகள் தனித்து வாழும் இயல்புடையவை. ஒரு நாளில் 18மணித்தியாலங்கள் வரை உறங்கும் மற்றும் அவை மாலை முதல் இரவு மற்றும் அதிகாலை நேரங்களிலேயே சுறுசுறுப்பாக காணப்படுவதோடு மான், மரை, காட்டுப்பன்றி, குரங்கு, முள்ளம்பன்றி என்பவற்றையும் மற்றும் பறவைகளையும் இரையாக கொள்ளும்.

இவை ஒலி எழுப்பாமல் பதுங்கி இரைக்கு அருகில் சென்று விரைவாக தாக்கி இரையின் மூச்சுக்குழலை நசுக்குவதன் மூலம் அவற்றைக் கொல்கின்றன. பருமனான இரையினை 2தொடக்கம் 3நாட்கள் வரை சிறிது சிறிதாக உட்கொள்ளும் அதன் பின் 7தொடக்கம் 14நாட்கள் வரை வேறு இரை எதுவும் உட்கொள்ளாமல் வாழக்கூடியது. பெண் சிறுத்தைகள் ஒரு தடவையில் 2தொடக்கம் 3குட்டிகள் வரை ஈனுகின்றன. இவை 18தொடக்கம் 24மாதங்கள் வரை தாயுடன் சேர்ந்து வாழும். 

 தலை முதல் உடல் வரை நீளம் - அண்ணளவாக 105 -- 142 cm 

 வாலின் நீளம் - அண்ணளவாக 77 --  96 cm 

 பெண் சிறுத்தையின் நிறை - அண்ணளவாக 30 kg  

 ஆண் சிறுத்தையின் நிறை - அண்ணளவாக 77 kg  

 வாழ்விடம் - அண்ணளவாக 5சதுரகிலோமீட்டர் பரப்பளவு 

 ஆயுட்காலம் - 12 --15வருடங்கள் 

இலங்கையில் கடந்த பத்து வருடங்களில் 96சிறுத்தைகள் வரை இறந்திருக்கின்றன.

பொதுவாக சிறுத்தைகளின் இறப்பிற்கு செயற்கை காரணிகளான காடழிப்பு மற்றும் வாழ்விட இழப்பு, பொறிகளில் சிக்கி இறத்தல், தோல், பல், நகம் மற்றும் இறைச்சிக்காக வேட்டையாடுதல், மற்றும் இயற்கை காரணிகளான முதுமை மற்றும் ஏனைய மிருகங்களான முதலை, கரடி, எருமை போன்றவற்றின் தாக்குதலாலும் காரணங்களாகின்றன. சிரேஷ்ட சுற்றுச்சூழல் வழக்கறிஞர் டாக்டர் ஜெகத் குணவர்தன அவர்கள் சிறுத்தைகள் தொடர்ப்பன குற்றச்செயல்களை பற்றி கூறியதாவது, தாவர மற்றும் விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் முப்பதாவது பிரிவின் கீழ் சிறுத்தைகளை கொல்லுவதோ அல்லது துன்புறுத்துவதோ அல்லது சிறுத்தையின் தோல், பல், நகம் மற்றும் இறைச்சியினை வைத்திருப்பதோ அல்லது விற்பனை செய்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும் மற்றும் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுப்படுவோர் பொலிசாராலோ அல்லது வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தாராலோ அல்லது வன பாதுகாப்புத் திணைக்களத்தாராலோ உத்தரவின்றி கைதுசெய்யப்படுவார்கள். 

மலையகத்தில் அதிகரித்துவரும் சிறுத்தைகளின் தொடர் இறப்பு சம்பவங்களை தொடர்ந்து சிறுத்தைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் rainforest alliance இனால் ஒழுங்குசெய்யப்பட்டு Unilever நிறுவனத்தின் நிதி உதவியுடன் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கத்தினால் நடாத்தப்பட்டு வருகின்றது.

இதனை தவிர, சிறுத்தைகளுடைய வாழ்விடம், பரம்பல், உணவு பழக்கம் மற்றும் மனித சிறுத்தை மோதல் போன்ற பல ஆராய்ச்சி நோக்கங்களை அடிப்படையாக கொண்டு கிளிநொச்சி, சிகிரியா, பெலிகுல் ஓயா, பானம, கொட்டகல மற்றும் மோர்னிங் சைட் போன்ற இடங்களில் சிறுத்தைகள் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டு LOLC இன் அனுசரணையுடன் 5வருட ஆராய்ச்சி நிகழ்ச்சி திட்டம் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

கலாநிதி ச. விஜயமோகன் (வவுனியா பல்கலைக்கழகம்)  கூறியதற்கு இணங்க வடக்கில் காணப்படும் பெரிய பரப்பளவிலான, செறிந்த விதானமுடைய காடுகள் சிறந்த அளவிலான சிறுத்தைகளின் எண்ணிக்கையையும் நிலவுகையையும் வடக்கில் பேணுவதில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றது.

இருந்தாலும் சில இடங்களில், குறிப்பாக மன்னார் குஞ்சுக்குளம் போன்ற பகுதிகளில் சிறுத்தைகள் அதிகளவு கால்நடைகளை வேட்டையாடுவதனால் கால்நடை உரிமையாளர்கள் சிறுத்தைகளை நச்சூட்டப்பட்ட மாமிசங்களை கொண்டு இறக்கச்செய்து புதைக்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது. இதனால் ஒப்பீட்டளவில் ஒரு யானையின் இறப்பு வெளிப்படையாக தெரிய வருவதுபோல் சிறுத்தைகளின் இத்தகைய இறப்பு சம்பவங்கள் வெளிவருவதில்லை.

மேலும் அவர், A9வீதியானது வடக்கிலுள்ள காட்டினை ஊடறுத்து செல்வதால் அதனை கிழக்கு மற்றும் மேற்கு என இரு துண்டுகளாக பிரிகின்றது மற்றும் இவ் வீதியில் சாதாரண நாட்களில் அதிகளவு வாகனங்கள் பிரயாணம் செய்வதால் சிறுத்தைகள் இவ் வீதியினை கடப்பது அரிது. இதனால் அவற்றின் மரபணு சார்ந்த நீண்ட கால விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதனை சுட்டிக்காட்டினார்.

பேராசிரியர் இனோகா குடாவிதானகே (சபரகமுவ பல்கலைக்கழகம்) அவர்கள் மலையக சிறுத்தை பரம்பலை பற்றி கூறிய போது, ஹோட்டன் சமவெளி (horton plains) மற்றும் பீக் வில்டர்ன்ஸ் (Peak wilderness) போன்ற காடுகள் சிறுத்தைகளுக்கு சிறந்த பரந்த வாழ்விடத்தை வழங்கினாலும் காடழிப்பு மற்றும் விவசாய நிலங்களின் அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளால் துண்டாக்கப்பட்ட குறைந்த பரப்பளவை கொண்ட ஏனைய சிறிய வன பகுதிகளிலும் சிறுத்தைகள் வாழ்கின்றன. இவ்வாறான மக்களின் வாழ்விடங்களுக்கு அருகே காணப்படும் சிறிய வன பகுதிகளில் வாழும் சிறுத்தைகளிற்கு இயற்கையான இரைகளின் தட்டுப்பாடு ஏற்படும்போது அவை மனிதக் குடியேற்றங்களை நாடிச் சென்று கால்நடைகளையும் நாய்களையும் வேட்டையாடி உண்கின்றன. எனவே வீட்டில் வளர்க்கும் நாய்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் சிறுத்தைகள் வாழ்விடங்களை நோக்கி வருவதை தவிர்த்துக்கொள்ளலாம். மிக முக்கியமாக உணவு கழிவுகளை முறையாக அகற்றுவதன் மூலம் வேறு நாய்களோ அல்லது பன்றிகளோ அவ் உணவுக்கழிவுகளை நாடி வருவதை தவிர்ப்பதோடு அவற்றை நாடி வரும் சிறுத்தைகளையும் தவிர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு உரிய நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் சிறுத்தைகள் மனித குடியிருப்புகளை நாடி வருவதை தவிர்த்துக்கொள்ளலாம்.

சிறுத்தைகள் இவ்வாறான இரையை தேடி வருவதை தவிர மனிதர்களை எப்போதும் தவிர்க்க முயற்சிப்பதே அவற்றினுடைய இயல்பாகும். எனவே சிறுத்தைகள் பற்றி அறிந்து கொள்வதன் மூலமும் அவற்றில் இருந்து எங்களை எப்படி பாதுகாப்பது என்பதை தெரிந்து கொள்வதன் மூலமும் நாங்கள் இயற்கையோடு இணைத்து வாழ முயற்சி செய்து அழிந்து வரும் இயற்கை முக்கியவத்துவம் வாய்ந்த இலங்கை சிறுத்தைகளை பாதுகாக்க காருண்யம் வாய்ந்த இலங்கை பிரஜைகளாகிய நாம் கை கோர்ப்போம்.

ஸ்பென்சர் மனுவேல்பிள்ளை

Comments