இன்றைய சவால்களை முறியடிப்பதற்கான புதியதொரு ஆரம்பம்! | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

இன்றைய சவால்களை முறியடிப்பதற்கான புதியதொரு ஆரம்பம்!

அரசியலாக இருந்தாலும் சரி, வியாபாரமாகஇருந்தாலும் சரி அனைத்துக்கும் புதியதொரு ஆரம்பம் உத்வேகத்தை அளிப்பதாக அமையும். தற்பொழுது நாட்டில் காணப்படும்சவால்களுக்கு மத்தியில் புதியதொரு ஆரம்பத்துக்கான தேவைஉணரப்பட்டுள்ளது.

மாற்றம் வேண்டும் எனக் கோரி மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், புதியதொரு ஆரம்பத்துக்கான தேவை உணரப்பட்டுள்ளது. நாட்டை சிக்கல்களிலிருந்து மீட்டெடுப்பதற்குத் தலைமைத்துவம் வகிக்க முன்வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் புதியதொரு பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

சவால்களுக்கு மத்தியில் பிரதமர் பதவியை ஏற்றிருந்த அவர், தற்பொழுது நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்று நாட்டின் சவால்களுக்கு விடைதேடும் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்தப் பயணத்துக்குப் புத்தூக்கமான ஆரம்பத்தைப் பெறும் நோக்கில் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, புதிய நோக்கத்துடன் மூன்றாவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. அரசியலமைப்பின் 70 (1) ஆம் பிரிவின்படி பாராளுமன்றக் கூட்டத்தொடரினை இடைநிறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய கடந்த 28ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி முடிவுக்குக் கொண்டு வந்திருந்தார்.

எதிர்வரும் 03ஆம் திகதி 10மணிக்கு ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. பாராளுமன்றக் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டு வருவது என்பது புதியதொரு ஆரம்பம் எனக் கூற முடியும்.

அதுவரை பாராளுமன்றத்தில் இருந்த பெரும்பாலான குழுக்கள் யாவும் இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் நியமிக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்படும். இது தவிரவும் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படும் போது அரச தலைவர் அதாவது ஜனாதிபதி பாராளுமன்றத்துக்குத் தலைமை வகித்து கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்துவார்.

தமது அரசாங்கம் எதிர்காலத்தில் முன்னெடுக்கவிருக்கும் திட்டங்கள் குறித்த விளக்கத்தை ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் தெளிவுபடுத்துவார். கொள்கைப் பிரகடன உரைநிகழ்த்தும் போது மாத்திரம் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அக்கிராசனத்தில் அமர்ந்து உரைநிகழ்த்த முடியும்.

அரசியலமைப்பின் 33 (2) ஆவது பிரிவு பாராளுமன்றதின் அமர்வு ஒவ்வொன்றினதும் ஆரம்பத்திலும் அரசாங்கக் கொள்கைக் கூற்றை வாசிப்பதற்கும், பாராளுமன்றத்தின் சடங்குமுறையான இருக்கைகளில் தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது.

பாராளுமன்ற வரலாற்றை எடுத்துக் கொண்டால் 1947ஆம் ஆண்டு முதல் 50இற்கும் மேற்பட்ட தடவை பாராளுமன்ற கூட்டத் தொடர்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுப் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 1978ஆம் ஆண்டின் பின்னர் மாத்திரம் 26தடவைகளுக்கு மேல் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆளுநர் சேர். கென்றி மொங் மாசொன் மூர் தலைமையில் முதலாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரானது வைபவரீதியாக 1947ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 14ஆம் திகதி அன்று ஆரம்பிக்கப்பட்டது. இங்கு ஆளுநர் அவர்களின் சிம்மாசன உரை இடம்பெற்றது.

இரண்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு இரண்டாவது எலிசபெத் மகாராணி அவர்களினால் 1954ஆம் ஆண்டு சித்திரை மாதம் 12ஆம் திகதி வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்து. இங்கு மகாராணியின் சிம்மாசன உரை அரசாங்கத்தினால் சபையில் வாசிக்கப்பட்டது. அதன் பின்னரான காலப்பகுதியில் பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர்கள் வைபவ ரீதியாகவும் வைபவ ரீதியற்றமுறையிலும் ஆரம்பிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்கள் உள்ளன.

1978ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 7ஆம் திகதி புதிய அரசியல் யாப்பு பிரகடனப்படுத்தப்பட்டதன் மூலம் ஜனாதிபதியின் சிம்மாசன உரைக்குப் பதிலாக அரசின் கொள்கைப் பிரகடன அறிக்கை வாசிக்கப்படும்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவி ஏற்றதன் பின்னர் முடிவுக்குக் கொண்டுவந்த இரண்டாவது பாராளுமன்றக் கூட்டத் தொடராக இது காணப்படுகிறது. இதற்கு முன்னர் எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை அவர் முடிவுக்குக் கொண்டு வந்து நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்திருந்தார்.

இந்த நிலையில் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் மிகவும் எதிர்பார்ப்பு மிகுந்ததாகக் காணப்படுகிறது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், புதிய ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்தவுள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து கடந்த சில மாதங்களாக அடிக்கடி பாராளுமன்றத்துக்கு அறிவித்துவரும் அவர், எதிர்காலத்தில் எவ்வாறான திட்டங்களைத் தமது அரசாங்கம் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்றது என்பதை இதில் தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மக்கள் எதிர்கொள்ளும் எரிவாயு, எரிபொருள் பிரச்சினைக்கான தீர்வுகள், நீண்ட காலத்தில் நாட்டை ஸ்திரமான பொருளாதார நிலைமைக்குக் கொண்டு வருவதற்கு எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட பலவிடயங்கள் குறித்து அவர் தனது உரையில் பிரஸ்தாபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றுக்கும் அப்பால், பாராளுமன்ற ஜனநாயகக் கட்டமைப்பில் எப்பொழுதும் அதிக நம்பிக்கை கொண்டுள்ள நபராகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணப்படுகிறார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் பாராளுமன்றத்தில் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்தபோது கூட இவ்விடயத்தை வலியுறுத்தியிருந்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மாற்றம் செய்யப்படுவதுடன், பாராளுமன்றத்தின் குழு முறைமை மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். அமைச்சரவை பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறக் கூடியதாக இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

எனவே, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரில் மேலும் பல பாராளுமன்றக் குழுக்கள் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கொண்டுவரப்பட்ட துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இவற்றை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். இது மாத்திரமன்றி நிதி விடயத்தைக் கண்காணிப்பதற்கு மேலும் புதிய குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இவ்வாறான நிலையில் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரானது ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்துவதற்கான புதியதொரு ஆரம்பமாக இருக்கும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பி.ஹர்ஷன்

Comments