உறுதியாக கட்டமைக்கப்படும் புரட்சி அதிகாரமும் வன்முறையும் நிறைந்தது | தினகரன் வாரமஞ்சரி

உறுதியாக கட்டமைக்கப்படும் புரட்சி அதிகாரமும் வன்முறையும் நிறைந்தது

அரகலய கிளர்ச்சி என்பது பின்நவீனத் தன்மைகொண்டது.  திட்டமிடப்படாத, கருத்துக்களைத் மக்கள் மயப்படுத்தி அதிலிருந்து அதிகாரத்தை நோக்கியோ அல்லது அரசை எதிர்த்தோ உருவாகாமல் தன்னெழுச்சியாக உருவானது. எப்போது தோன்றும் எப்போது மறையும் என்று தெரியாமல் தோன்றி தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி நிறைவடையும் கிளர்ச்சியாக அது இருக்கும். தற்காலிகமான தன்னெழுச்சியாக உருவாகி, அரசாங்கத்தை கலங்கடித்து அதே வேகத்தில் மறைந்துபோகும்.  

யார்மீது பொறுப்புச் சுமத்துவது என்ற பிரச்சினையை வெளிப்படுத்தும். யார் தலைமை தாங்குகின்றனர் என்று எப்போதும் கண்டுபிடிக்க முடியாத தன்மையை கொண்டிருக்கும். வழிநடாத்தும் அடையாளமிடப்பட்ட குழுவோ, நிறுவனப்படுத்தப்பட்ட தலைமைத்துவ அமைப்போ அதற்கிருக்காது. அதனிடம் பன்மையான கோரிக்கைகள் இருக்கும். இத்தனையையும் மிகத் தீர்க்கமாக கடைப்பிடிக்கும் வரை அது பின்நவீனத்துவ கிளர்ச்சியை சார்ந்து இயங்குவதாக அமைந்திருக்கும். இந்தப் பண்புகளை எப்போது அந்தக் கிளர்ச்சி இழக்க நேரிடுகிறதோ அப்போதே, மிக எளிதாக அதிகாரத் தரப்பினரால் கையகப்படுத்தி வீழ்த்தப்படும் நிலைக்குச் சென்றுவிடும்.  

அரக்கலய கிளர்ச்சிக்கும் இதுதான் நடந்தது. ஆரம்பத்தில் நிறுவனமயப்படுத்தப் படாததும், தலைமைத்துவமற்றதுமான கிளர்ச்சியாகவே தொடங்கியது. மக்களின் மனங்களில் இருந்து ராஜபக்ஷக்களின் அரசுக்கெதிரான ஒரு எதிர்ப்பலையாக வெளிக்கிளம்பியது. அப்படி மக்கள் கிளர்ந்தெழுவதற்கு பிரதானமான காரணமாக அமைந்திருந்தது “பொருளாதார நெருக்கடியும் அதனால் உருவான அன்றாட வாழ்வின் மீதான சிக்கல்களும்தான்”. எரிவாயுத் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை, அதீதமான விலையேற்றம் நாட்டு மக்களை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியது. அதன் விளைவாக தன்னெழுச்சியாக நாடு தழுவியரீதியில் மக்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். பின்னர் படிப்படியாக அந்தக் கிளர்ச்சியை நோக்கி நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள் இணைந்து கொள்ளத் தொடங்கினர். இந்த எதிர்ப்பை குவிமையப்படுத்தி தொடருவதற்காக ஓர் இடத்தை தேர்வு செய்தனர். அந்த இடம் காலிமுகத்திடலாக இருந்தது. அதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் இந்த மக்கள் எதிர்ப்பு மையங்களும் உருவாகின. மக்கள் எழுச்சிக் கிளர்ச்சிகளும் நாடெங்கும் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்டன. இந்த அனைத்துக் கிளர்ச்சிகளின் முக்கிய கோஷமாக இருந்தது ராஜபக்ஷக்களை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதுதான். சுமார் எண்பத்தைந்து நாட்கள் வரை இந்தக் கோஷம்தான் மக்களினதும், கிளர்ச்சி மையங்களினதும் பிரதானமான கோஷமாக இருந்தது.  

ரணில் பிரதமராக பதவியேற்று சுமார் 25நாட்கள் வரைக்கூட ராஜபக்ஷக்களை அதிகாரத்திலிருந்து வெளியேறுங்கள் என்பதே மையப்பேச்சாகவும், ரணிலுக்கெதிரான கோஷம் துணைச் செயற்பாடாகவுமே இருந்தது.  

இந்த இடத்தில் ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும், தமிழர்களுக்கெதிரான எந்த அரச பயங்கரவாதக் கட்டவிழ்ப்பின் போதும் அனைத்து இனங்களையும் சேர்ந்த நாட்டுமக்கள் இப்படியான கிளர்ச்சிகளை ஒன்றிணைந்து இதுவரை செய்ததில்லை. முஸ்லிம்களுக்கெதிரான அரச ஆதரவோடு வன்முறைகள் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட போதும் கூட, அனைத்து இனங்களையும் சேர்ந்த நாட்டு மக்கள் ஒன்றிணைந்து இப்படியான கிளர்ச்சிகளில் இறங்கியதில்லை. அந்தத் தருணங்களில் எல்லாம் பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறுபான்மைச் சமூகங்களுக்கெதிரான வன்முறைகளில்தான் ஈடுபட்டிருந்தனர். மலையக மக்கள் இப்படியான பிரச்சினைகளை எதிர்கொண்ட போதும் கூட இதேதான் நிகழ்ந்தது.  

ஆனால், அனைத்து இனங்களைச் சேர்ந்த மக்களும் ஒன்றிணைந்து கிளர்ச்சியை முன்னெடுக்க வந்திருப்பது, பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போதுதான். இதனடியாக நாம் கற்றுக்கொள்ள முடியுமாக  இருக்கின்ற ஒரே விசயம், பிற சமூகங்களுக்கு அரசாலோ அல்லது அரச ஆதரவாலோ எந்தவகையான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டாலும் பெரும்பான்மை மக்கள் கவனத்திற் கொள்ளப்போவதில்லை என்பதுதான்.  

ஆக, ரணிலுக்கு எதிரான கோஷம் என்பது இந்த 100நாள் அரக்கலய கிளர்ச்சியின் எண்பது நாட்களைக் கடந்த பிறகு இணைத்துக்கொள்ளப்பட்ட ஒன்று. அதுவும், ரணில் பிரதமராகி பல நாட்களுக்குப் பின்னரே அரக்கலயவின் கவனத்திற்குள் உட் செலுத்தப்பட்ட ஒரு விசயம். அதனால்தான் மக்களிடம் ரணிலுக்கு எதிரான கோஷம் என்பது தன்னெழுச்சியாக உருவாகாகமல் இடையில் இணைக்கப்பட்டதாக அமைந்திருக்கிறது. எனவே, மக்களின் தன்னெழுச்சியான கிளர்ச்சியில் பிந்தி வந்து இணைந்துகொண்ட ஒரு கோஷம் என்பதால் அனைத்து மக்களின் கரிசனத்திற்குமுரிய ஒன்றாக அது மாறிவிடவில்லை. 

இன்று மக்களின் அரசுக்கெதிரான பிரதானமான எதிர்ப்பு தணிந்து, ரணிலுக்கும் ஒரு வாய்ப்பை வழங்கிப் பார்ப்போம் என்ற வகையில் மக்கள் மத்தியில் பொதுவான தன்னெழுச்சியான கிளர்ச்சி என்பது இரண்டுபட்டு நிற்கிறது. அதிலும் மக்களின் ஆரம்ப தீவிரம் தணிந்து ஒரு அரைமனதோடு எதிர்க்க வேண்டிய தேவையையும் உருவாக்கியிருக்கிறது.  

மக்களின் தன்னெழுச்சியான கிளர்ச்சி தணிந்திருப்பதையும், ரணிலை நிரந்தரமாக எதிர்ப்பது என்றும், அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கிப் பார்ப்போம் என்றும் மக்கள் பிரிந்திருக்கின்றனர். ஆக, அரகலயவின் கிளர்ச்சி ஏற்படுத்தியிருந்த தீவிரமும், அதன் பரபரப்பும் குறைந்து மென்மையடைந்திருக்கிறது. இதை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற மனநிலையில் குறிப்பிட்ட குழுக்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், மக்கள் அவற்றை பாதியளவுதான் பேசுபொருளாக எடுத்துக்கொண்டிருக்கின்றனர்.  

தன்னெழுச்சியாக உருவான, அதுவும் பொருளாதார நெருக்கடி காரணமாக உருவான மக்களின் அதிருப்திகளை ஒருங்கிணைத்து நிறுவனமாகவும், இந்தக் கிளர்ச்சிக்கு தலைமை கொடுக்கவும் சில அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் திட்டமிட்டு அரகலயவுக்குள் நுழைந்து செயல்படத் தொடங்கியதும் மக்களின் தன்னெழுச்சி என்ற அம்சம் தலைகீழாக மாற்றமடைந்துவிட்டது. ரணில், சரத் பொன்சேகா, ஜேவிபி, சஜித் தலைமையலான எதிர்க் கட்சி போன்றவர்களின் ஆதரவுக் குழுக்களும் அரக்கலயவுக்குள் நுழைந்து மக்களின் அதிருப்திகளை பயன்படுத்தி, தங்கள் அரசியலை இலாபமானதாக ஆக்க முயற்சித்தன. சில குழுக்களும், தன்னெழுச்சியாக இணைந்த மக்களும் நீங்கியிருக்கின்றனர். தற்போது, முழுக்க முழுக்க அரச அதிகாரத்தை கைப்பற்றும் எண்ணத்திலுள்ள மாற்று அணியினரின் ஆதரவுக் குழுக்கள் மாத்திரமே களத்தில் இருக்கின்றனர். என்னைப் பொறுத்தவரை மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்திற்கு மாத்திரமே ஆதரவு அளிக்க முடியும். அந்த எழுச்சி ஏன் உருவானதோ அதற்கான காரணங்கள் சரிசெய்யப்பட வேண்டும் என்பதையே ஆதரிப்பேன். இன்று மாற்று அணியினரின் அரசியல் இலாபத்தோடு கூடிய இன்றைய கோரிக்கைகளையோ அல்லது வீம்புக்கான எதிர்ப்புகளையோ ஆதரிக்க முடியாது. மாற்று எதிரணியினர் தன்னெழுச்சியான மக்களின் பொருளாதார நெருக்கடியினால் உருவான அரசுக்கெதிரான கிளர்ச்சியினுள் நுழையும் வரை, சட்டத்திற்கு புறம்பான எந்த நடவடிக்கைகளிலும் மக்கள் இறங்கவில்லை. அதை நோக்கி மக்கள் துாண்டப்படவுமில்லை. ஆனால், அதிகாரத்தை கைப்பற்றும் ஆசையில் மக்களை சட்டத்திற்கு விரோதமான கிளர்ச்சி நடவடிக்கைகளில் தூண்டிச் செயல்பட வைத்தமைக்கு மாற்று அணியினரே பொறுப்பேற்க வேண்டும். ஜனாதிபதி செயலகத்தை கைப்பற்றியது. அலறி மாளிகையைக் கைப்பற்றியது. பாராளுமன்றத்தை கைப்பற்ற வேண்டும் என கருத்துக்களை முன்வைத்தது. இலங்கை ரூபாவாஹினிச் செய்திச் சேவை நிலையதிற்குள் நுழைந்து ஒளி- –  ஒலிபரப்பு நடவடிக்கைகளுக்கு இடைஞ்சல் செய்தது. பிரதமரின் வீட்டை எரித்தது. பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை உடைத்தது எரித்தது என்று நீளுகின்றது இந்தப் பட்டியல்.  

தன்னெழுச்சியான மக்களின் கிளர்ச்சிகளை அதன் பண்பை மாற்றி வன்முறை சார்ந்த போராட்டமாக மாற்ற எவை, எவர்கள் காரணமாக இருந்தனர் என்பது நிச்சயம் மீள் பரிசீலிக்க வேண்டிய ஒன்றே. அந்த வகையான நடவடிக்கைகள்தான் மக்களின் தன்னெழுச்சியான கிளர்ச்சியைக் கூட தொடர முடியாத நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.  

மக்களின் ஆரம்பக் கிளிர்ச்சிக்கு காரணமாக இருந்த பொருளாதார நெருக்கடி என்ற பிரதானமான அம்சத்தையும் கடந்து, வேறு கருத்து நிலைகளையும் பலவீனப்பட்டிருந்த மக்களின் கிளர்ச்சியோடு இணைத்து மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்தைக் கொண்டது என்றே கூற வேண்டும்.  

சிலர் அரசமைப்பில் மாற்றம் வேண்டும் என்கின்றனர். நிச்சயமாக இது அனைவராலும் ஏற்கக் கூடிய ஒன்றே. இந்த நாட்டுக்கு அவசியமான ஒன்றும் கூட. ஆனால், அதை செய்வதற்கு முன்பு பொருளாதார நெருக்கடியை சீர் செய்ய வேண்டும். தற்காலிகமானதும் முதன்மையானதுமான தேவையாக இருக்கும் இந்த மக்கள் பிரச்சினையைத்தான் இன்று முதன்மையானதாக எடுத்துக் கொள்ள முடியும். அதன் பிறகே நீண்ட கால இலட்சியமாக கருதப்படும் அரசமைபில் செய்ய வேண்டிய மாற்றம் மற்றும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு போன்றவற்றை கவனத்திற்கொண்டு செயல்பட முடியும்.  

இன்று அரச எதிரப்பு அணியாக இருக்கின்ற எத்தனை அரசியல் கட்சிகள் அரசமைப்பு மாற்றத்தில் “மதச்சார்பற்ற” யாப்பை ஏற்கப் போகின்றன? இனப்பிரச்சினைக்கான தீர்வை கொடுப்பதற்கு எத்தனை கட்சிகள் விரும்பப் போகின்றன? இப்படியான கேள்விகள் இந்த இடத்தில் முக்கியமானவை.

அவற்றையும் கருத்திற்கொண்டே இன்றைய அரசியல் ரீதியிலான தங்கள் செயற்பாடுகளை சிறுபான்மை அரசியல் கட்சிகளும், சிறுபான்மைச் சமூகங்களும் தீர்மானிக்க வேண்டும். வெறுமனே, தாங்கள் கடந்த காலங்களில் ராஜபக்ஷ முகாமினரால் அனுபவித்த துயரங்களை மனதில்வைத்துக்கொண்டு, அவர்களின் ஆதரவோடு ஜனாதிபதியாக வந்திருக்கும் ரணிலை எதிர்ப்பதினூடாக “பழிவாங்கும்” ஒரு சின்னத்தமான மனநிலைக்குச் சென்றுவிட முடியாது.

தற்போதைய அரசமைப்பிற்கு அமைவானதும், சட்டரீதியிலானதுமான நடவடிக்கைகளை அதிகாரத்தரப்பு நடைமுறைப்படுத்துகிறது. இன்று நடைபெறும் கைதுகள் அப்படியானவைதான். இப்படி கைது செய்யப்படுவதற்கு சட்டவிரோதமான நடவடிக்கைகளில் இறங்கியதே காரணம். இந்த மக்கள் அவர்கள் பாட்டில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில், அவர்களை சட்டவிரோதமான வன்முறைகளில் இறங்கத் தூண்டியது எவை? யார்? என்ற விசயங்களும் கவனத்திற் கொள்ளப்பட்டு அவற்றையும் எதிர்க்க வேண்டும். அரசு என்ற வகையிலும், சட்டம் என்ற வகையிலும், அதிகாரத் தரப்பு தனக்கெதிரான நடவடிக்கைகளை இல்லாமல் ஆக்குவதற்கு அல்லது தணிப்பதற்கு தற்போதைய அரசமைப்பை பாவிக்கும் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், அப்படியான நிலைக்கு மக்களைத் தூண்டிய காரணத்தையும், தூண்டிய தரப்புக்களையும் கூட கவனத்திற்கொண்டு எதிர்ப்புக்களை வெளிப்படுத்த வேண்டும். அப்படியானால் மட்டுமே நாம் மக்களின் பக்கம் நின்று செயற்படுகிறோம் என்று பொருள். அரசுக்கு ஆதரவாகவோ அல்லது அரசுக்கு எதிரான முகாம்களுக்கோ ஆதரவாக செய்படுவது மக்களின் பக்கம் நின்று செயற்படுவதாக ஆகிவிடாது.

கடந்த காலத்தில், சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் பெரும்பான்மைக் கட்சிகள் அரசமைப்பு திருத்தங்களில் பங்கேற்றிருந்தனர்.

அவர்கள் கூட மதச்சார்பற்ற அரசமைப்பு குறித்து கவனம் செலுத்தியிருக்கவில்லை. அரசமைப்பில் மாற்றம் கொண்டுவருவதென்பது, பிரதானமாக மதச்சார்பற்ற ஒரு அரசமைப்பு அவசியமானது. அதே நேரம், நாட்டின் அரைவாசிக்கும் மேற்பட்ட பெண்களின் நலன்கள், (அதிகாரம்,தொழில், பாதுகாப்பு, அவர்களுக்கான உரிமை) தொடர்பிலும், தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் போன்றவர்களின் அரசியல் அபிலாஷைகளையும் கவனத்திற் கொண்டதுமான ஒரு அரசமைப்பு உருவாக்கப்படாதவரை இந்த நாடு சிறந்ததொரு பன்மைத்தன்மைகொண்ட கலாசாரங்களின் ஒன்றியமாக இருக்கப் போவதில்லை.

இன்று மக்கள் எதிர்நோக்கும் அவசியமானதும், அவசரமானதுமான பொருளாதார நெருக்கடியை சீராக்குவது தொடர்பில் அக்கறை கொள்வோம். ஏனெனில், நாட்டில் 70வீதமான மக்கள் பொருளாதார நெருக்கடியால் அவதிப்படுகின்றனர். அதை விட்டு விட்டு அதிகாரத்திற்கான போட்டியை மையப்படுத்தி எதிரணியினர் பரப்பும் கருத்துக்களை பின்தொடர மக்களைத் தூண்டத் தேவையில்லை. அப்படித் துாண்டினாலும், தன்னெழுச்சியாக மக்களிடம் எழும்பாத எந்தக் கிளர்ச்சியும் குறித்த விளைவின் எல்லைக்குச் சென்றடையாது. அதே நேரம் வன்முறை அரசியலும், அதன் விளைவுகளையும் பலமுறை இலங்கை சந்தித்திருக்கிறது. அதுபோன்ற ஒன்று மீண்டும் நமது நாட்டுக்கு அவசியமானது அல்ல. வன்முறையை தூண்டும் வகையில் மக்கள் மனங்களை தொந்தரவு செய்யும் எந்தக் கருத்துக்களையும் ஆதரிக்க முடியாது. அதை எதிர்ப்பதைத் தவிர வேறு தெரிவுகள் இல்லை. மெல்ல மெல்ல கருக்கொள்ளும் மென்மையான வன்முறைகளும், அவற்றை ஆதரிப்பதினூடாக விரிவடைய வாய்ப்புள்ளது. எனவே, அரசமைப்பினதும், சட்டத்தினதும் எல்லைக் குட்பட்ட வகையில் அவற்றை தடுத்தே ஆக வேண்டும். ஆனால், அவற்றைத் தடுப்பதற்கு இருக்கின்ற அரசமைப்பு என்பது சர்வாதிகாரத் தன்மைக்கு நிகரானது. அதை மக்கள் பங்கேற்போடு எதிர்வரும் ஜனநாயகத் தேர்களின் போது மாற்றியமைக்க முயற்சிப்பதுதான் சரியான வழிமுறை. ஆனால், அந்தத் தேர்தல்கள் வரும் இரண்டரை ஆண்டுக்குள் மக்களின் பொருளாதார நெருக்கடி தீர்க்கப்பட்டுவிட்டால், கிளர்ச்சிக்கான மனநிலை மக்கள் மனங்களில் இருந்து தூர்ந்துபோய்விடும் என்ற அச்சத்தில்தான் எதிரணியினர் மக்களை கிளர்ச்சி மனநிலையோடு தேர்தல் வரை வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இந்தவகையான தவறான கருத்துக்களை பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இரண்டரை வருடத்திற் பின்னர் தேர்தல் வரும்போது, மக்கள் இதே எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சி மனை நிலையோடு இருந்தால் எதிரணியினர் மிக இலகுவாக ஆட்சியைக் கைப்பற்ற முடியும். அதன் பின்னர், இன்று ரணிலுக்கு எதிராக முன்வைக்கும் கோஷங்களை சரிசெய்து அவர்கள் ஆட்சியை செய்ய முடியும். அதுவரை, வன்முறைக்கு ஆதரவான நிலைப்பாட்டை ரணில் எதிர்ப்பு என்ற கோஷத்தில் தூண்ட வேண்டியதில்லை.

என்னைக் கேட்டால் புரட்சி வேண்டாம் என்றுதான் சொல்வேன். புரட்சியை நான் அதிகமும் எதிர்ப்பேன். ஒவ்வொரு கல்லாக அடுக்கி உறுதியாக கட்டமைக்கப்படும் புரட்சி மிக கேவலமான அதிகாரமும் வன்முறையும் நிறைந்த ஒரு இடம். அங்கு கொலைகள் என்பதற்கு புனிதமான இடமிருக்கிறது. அழிவுகளை கொண்டாட்டமாக வைத்திருக்கிறார்கள். அங்கு எதுவுமே சரியாக இல்லை. இது நவீனத்துவத்தின் புரட்சி பற்றிய தன்மை கொண்டது. ஆனால், தற்காலிகமான, தன்னெழுச்சியான சிறியளவிலான புரட்சியை மட்டுமே யாரால் எப்போது தொடங்கியது என தெரியாமல் தோன்றி, அதிகாரத்தை கலங்கடித்து, எப்போது கைவிடப்படும் எனத் தெரியாமல் மறைந்துபோகும்.

றியாஸ் குரானா

Comments