​பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க மலையக சமூகம் தயாராக வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

​பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க மலையக சமூகம் தயாராக வேண்டும்

மலையகத்தின் பிரதான நகரங்கள் மற்றும் நகரை அண்மித்த பகுதிகளில் பொதுப் போக்குவரத்து சேவைகள் குறைந்த அளவிலாவது உண்டு. பெரும்பாலான தோட்டப்பகுதிகளுக்கு பொது போக்குவரத்து சேவைகளே இல்லை. 

நகரங்களில் இருந்து 20 / 30கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பாலும் தோட்டங்கள் உள்ளன. மலை உச்சிகளில் தோட்டங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் நகர்ப்பகுதிகளில் இருந்தே வருகை தருகின்றனர். 

தோட்டப்புற பாடசாலைகளில் ஆசிரியர் விடுதி வசதிகள் இல்லை. சில தோட்டங்களில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பாடசாலையில் அதிபர் விடுதி என ஒன்று இருக்கும், அதிலும் நீர் உட்பட அடிப்படை வசதிகள் குறைந்தளவிலேனும் காணப்படும். எனவே ஆசிரியர்கள் விடுதிகளில் தங்கி தமது கடமைகளைச் செய்தார்கள். தற்போது விடுதி வசதி இல்லாததால் ஆசிரியர்கள் நீண்டதூரம் நடந்தே பாடசாலைகளுக்கு செல்கின்றனர். பாதையில் வாகனங்களுக்காக காலை 10மணிவரை காத்திருந்து வாகனங்கள் கிடைக்காத நிலையில், தூரம் நடந்துபோக முடியாத அளவுக்கு தொலைவாக இருந்ததால் ஆசிரியர்கள் மீண்டும் வீடு திரும்ப வேண்டியிருந்தது.  

பெருந்தோட்டப் பகுதியில் தரம் 5முதல் தரம் 9வரையிலான பாடசாலைகளே அதிகமாக உள்ளன.

தரம் 5தொடக்கம் தரம் ஒன்பதுக்கு மேல் உள்ள மாணவர்கள் தூரத்திலுள்ள நகர்ப்பகுதி பாடசாலைகளுக்கே செல்ல வேண்டியிருக்கிறது. 

இவர்கள் முச்சக்கரவண்டி மற்றும் சிறியரக வாகனங்களிலேயே பாடசாலைக்கு செல்கின்றனர். சில பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பஸ்கள் இருந்தபோதும் தற்போது இந்த போக்குவரத்து சேவைகளும் குறைந்தும் பலபகுதிகளில் இல்லாமலும் போயுள்ளன.  

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாது. அத்தியாவசிய பொருள் கொள்வனவிற்கு நகரப் பகுதிக்கே செல்ல வேண்டியுள்ளது. தோட்டப்பகுதிகளில் சிறிய பெட்டிக்கடைகளே அனேகமாக உள்ளன. இவற்றில் நுகர்வுக்கு தேவையான பொருட்களை தேவையான அளவில் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.  

தோட்டப்பகுதிகள் ச.தொ.ச கடைகள் இல்லை. சில தோட்டங்களில் கூட்டுறவுக் கடைகள் உள்ளன. அதில் 5000/= ரூபாவிற்கு மட்டுமே மாதமொன்றிற்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன . 

அதுவும் தோட்டத்தில் பேர்பதிந்து நிரந்தரமாக தொழில் புரிபவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகின்றன.

இன்று தோட்டப்பகுதியில் வாழ்பவர்களில் 40சதவீதமானவர்கள் தோட்டத்துறையில் தொழில் புரிவதில்லை.  இவர்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு, வெளியிடங்களில் வேலை என உள்ளனர்.

இவர்களுக்கு இந்த கூட்டுறவு கடைகளில் பொருட்கள் வழங்கப்படுவதில்லை தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு ஐயாயிரம் ரூபாவுக்கு 15கிலோ மா, 15கிலோ அரிசி என மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வழங்கப்படுகின்றது.

இந்தத் தொகையை அவர்களது சம்பளத்தில் பிடித்துக் கொள்வர். பணம் நேரடியாகப் பெறுவது இல்லை.  

எனவே தோட்டப்பகுதியில் உள்ள அனைவரும் பொருள் கொள்வனவு நிமிர்த்தம் நகருக்கு வரவேண்டியுள்ளது. முன்பு எமது மக்கள் நடைப் பயணமாக வந்து மூட்டைகளை தலையில் சுமந்தே சென்றனர். இன்றைய சூழல் இது சாத்தியம் இல்லை.  

இரசாயன உரம் இல்லாத நிலையிலும் மாற்று வருமானம் இல்லாத நிலையில் காதில், கழுத்தில் இருந்த நகைகளை விற்றும் அடகுவைத்தும் 30ஆயிரம் ரூபாவிற்கு உர மூடையொன்றை வாங்கி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டாலும் உரிய விலை கிடைப்பதில்லை.  

பசு மாடுகளை வளர்ப்போரின் பசும்பாலை சேகரிக்க வெளியார் வருவதில்லை, தமது உற்பத்தி பாலை பல கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்றே கொடுக்க வேண்டியுள்ளது. 

வெளியிடங்களுக்கு நாட்கூலிக்கு செல்பவர்களும் நகர்பகுதிகளுக்கு தொழில் நிமித்தம் செல்பவர்களும் தமது தொழிலை இழந்துள்ளனர். மிதிவண்டிகளை அதிக விலைகொடுத்து கடன்பட்டு வாங்கி பலர் தற்போது பயன்படுத்துகின்றனர். 

மலைப்பாங்கான பகுதி என்பதால் ஒருவழிப் பயணத்திற்கு மட்டும் பயன்படுத்தி நடுவழியில் வண்டியைத் தள்ளிக்கொண்டு செல்ல வேண்டியதாகிறது.  

இவ்வாறு போக்குவரத்துப் பிரச்சினைகள் இருந்தாலும் மக்கள் நடைப் பயணமாக சென்று தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதைக் காணக்கூடியதாக உள்ளது. முச்சக்கரவண்டியை நம்பி வாழ்ந்தவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிப்படைந்துள்ளது. 

இவர்கள் மாற்று தொழிலைத் தேடி கூலி வேலைகளுக்கு செல்கின்றனர். போக்குவரத்தால் பெருந்தோட்டப் பகுதி மக்கள் பாதிப்படையாத விதத்தில் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள பெருந்தோட்டப் பகுதிகளில் கூட்டுறவுக் கடைகள், ச.தொ.ச கடைகள் அமைக்கப்பட வேண்டும். பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டு ஆசிரியர் விடுதிகளை அமைக்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வருமானம் மார்க்கம் வேண்டும். வரவுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மலையகம் முகம்கொடுக்கத் தயாராக வேண்டும்.  

ஆர். நவராஜா  
படங்கள் : தெல்தோட்டை தினகரன் நிருபர் 

Comments