“உணர்வுகளின் சங்கமம்” கவிதை நூல் வெளியீட்டு விழா | தினகரன் வாரமஞ்சரி

“உணர்வுகளின் சங்கமம்” கவிதை நூல் வெளியீட்டு விழா

மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் வெளியீட்டில் இளையதம்பி அரியநாயகத்தின் “உணர்வுகளின் சங்கமம்” கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க கட்டிடத்தில் இடம்பெற்றது. 

மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி பாரதி கென்னடி கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளதுடன் நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி மு.முருகமூர்த்தியும் கெளரவ அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி க.அருளானந்தமும் கலந்துகொண்டனர். 

அதிதிகள் வரவேற்பினைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில் தமிழ்மொழி வாழ்த்து, வரவேற்புரை, வரவேற்பு நடனம் ஆகியவை இடம்பெற்றதைத் தொடர்ந்து தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தியின் தலைமையுரை இடம்பெற்றது. 

அதனைத் தொடர்ந்து நூல் வெளியீட்டுரை யும் நூல் வெளியீடும் சிறப்பாக இடம்பெற்றன. தொடர்ந்து, நூல் நயவுரை, அதிதிகள் உரை, படைப்பாளி கௌரவிப்பு மற்றும் ஏற்புரை என்பன இடபெற்றன. 

குறித்த நூலின் முதல் பிரதியை மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் பெற்றுக்கொண்டதுடன், ஏனைய அதிதிகளுக்கும் நூலின் பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

வ.சக்திவேல்

Comments