கருங்கடல் உடன்பாடும் மேற்கின் தந்திரோபாயமும்! | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

கருங்கடல் உடன்பாடும் மேற்கின் தந்திரோபாயமும்!

சர்வதேச அரசியல் களத்தில் உக்ரைன் -ரஷ்ய விவகாரம் நீட்சி பெற்றதொன்றாக விளங்குகின்றது. இரு நாடுகளுக்குமிடையிலான போர் ஐரோப்பிய பொருளாதாரத்தில் மட்டுமன்றி உலகளாவிய பொருளாதாரத்தையும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளி வருகிறது. அதேநேரம் ரஷ்யாவின் பொருளாதார பலப்படுத்தலும் கீழைத்தேய நாடுகளின் பொருளாதார எழுச்சியும் பேசப்படும் விடய

மாக காணப்படுகிறது. இந்திய பொருளாதா ரத்தின் வளர்ச்சி பற்றிய குறியீடுகளும் ரஷ்ய பொருளாதாரத்தின் ஏற்றமும் சீனப்

பொருளாதாரத்தின் மந்த நிலையும் அடை யாளப்பட்டாலும் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளின் பொருளாதார மந்தநிலை அதிகரித்திருப்பதாக புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இத்தகைய நெருக்கடிக்குள் உக்ரைனின் தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான உக்ரைன்- ரஷ்ய உடன்படி

க்கை (22.07.2022) ஐ.நா சபை முன்னி லையில் துருக்கியின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது. இக்கட்டுரையும் கருங்கடல் துறைமுகம் சார்ந்து ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்படிக்கையின் பின்னாலுள்ள அரசியலையும் அதன் விளைவுகளையும் தேடுவதாக அமையவுள்ளது.

கருங்கடலை நோக்கிய ரஷ்யாவின் முற்றுகை உலகம் முழுவதும் உள்ள சந்தைகளின் உணவு விநியோகத்தை முற்றாகவே பாதித்திருந்தது. இதனால் பாரியளவிலான உக்ரைனின் தானிய உற்பத்தியை ஏற்றுமதி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனை கருத்திற்கொண்டு உலகநாடுகள் குறிப்பாக மேற்குநாடுகள் ரஷ்யா மீது பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது. அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் உக்ரைனுக்கு பல மில்லியன் கணக்கான ஆயுதங்களை வழங்குவதற்கு முன்வந்த சூழலில் ரஷ்ய கருங்கடல் முற்றுகையை பதில் நடவடிக்கையாக மேற்கொண்டிருந்தது. மிகப்பிந்திய தரவுகளின்படி உக்ரைனுக்கு 270மில்லியன் அமெரிக்க டொலரை பாதுகாப்பு செலவீனத்துக்காக அமெரிக்கா உதவியாக வழங்கி உள்ளது. இதில் நடுத்தர தூர தாக்குதலை மேற்கொள்ளும் ரொக்கெட் வகைகள், ஆளில்லாத விமானங்கள் விமான எதிர்ப்பு பீரங்கிகள், ஆட்லறி ரொக்கெட்டுகள் போன்றவை உள்ளடங்கலாக ஆயுத தளபாடங்களை வழங்குவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது. ரஷ்யாவின் பீரங்கி படைகளை எதிர்கொள்ளும் விதத்தில் தகவல் தொடர்பு பரிமாற்றங்களையும் ஒருங்கிணைப்புக்கான தொழில்நுட்பங்களையும், கூடுதல் வெடிமருந்துகளையும், 36 000பீரங்கி வெடிபொருட்களையும் வழங்குமென வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு சபையின் ஒருங்கிணைப்பாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார். இவ்வறிவிப்பு வெளியாகிய சந்தர்ப்பத்தில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தையே ரஷ்யா மீறியுள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. எனவே, இங்கு இரு நாடுகளுக்குமிடையிலான போர் என்பது ஐரோப்பாவுக்கு மட்டுமன்றி உலகம் முழுவதற்குமான பொருளாதார நெருக்கடிக்கான பொறியை கட்டமைத்துள்ளது. இத்தகைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான உத்திகளை ரஷ்யாவும் உக்ரைனும் வகுத்து கொண்டாலும் அதன் நடைமுறையை சாத்தியப்படுத்துவதில் அதிக நெருக்கடியை கொண்டுள்ளது. அதனை விரிவாக நோக்குவது அவசியமாகும்.  

முதலாவது, கருங்கடல் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட குறுகிய காலத்தில் உக்ரைனுடைய எல்லைப்பகுதியை அண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள விமானைப்படை தளம் மற்றும் புகையிரத பாதை கட்டமைப்பு, ஆயுதக்கிடங்கு மற்றும் உக்ரைனின் போர்க்கப்பலை இலக்கு வைத்து ரஷ்யா பாரிய ஏவுகணை தாக்குதலை நிகழ்த்தியதாக தெரிய வருகிறது. இத்தாக்குதல் குறித்து ரஷ்யா கருத்து தெரிவிக்கும் போது இராணுவ இலக்குகளை மாத்திரமே குறிவைத்து தாக்கியதாகவும், எந்த அடிப்படையிலும் தானிய ஏற்றுமதியை அது பாதிக்காதெனவும் அறிவித்துள்ளது. கருங்கடல் துறைமுகம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் ஒப்பந்தத்தை மீறும் செயலென உக்ரைன் தெரிவித்த போது தானிய ஏற்றுமதி நடவடிக்கையை துரிதப்படுத்த முன்வந்துள்ளது. உலகளாவிய ரீதியில் உக்ரைன் மேற்கு நாடுகளின் ஒத்துழைப்போடு ரஷ்யாவிற்கு எதிரான போரை மேற்கு நாடுகளுக்காக நிகழ்த்திவருவதை அவதானிக்க முடிகின்றது. அதனையே தானிய ஏற்றுமதியிலும் வெளிப்படுத்துவதாக தெரிகின்றது. பி.பி.சி-இன் செய்தி அறிக்கையின்படி ரஷ்ய ஒப்பந்தத்தை மீறியுள்ளது எனக்குறிப்பிட்டுள்ள மறுகணம் தானிய ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியுள்ளமை அவதானிக்க முடிகிறது.  

இரண்டாவது, உக்ரைனின் தானிய ஏற்றுமதி மேற்கு நாடுகளின் அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்யும் என்ற அடிப்படையில் செயற்பட்டுள்ளதோடு ரஷ்யாவின் பொருட்கள் ஏற்றுமதிக்கான தடையை விதித்த லித்துவேனியா அதனை நீக்கியுள்ளதோடு ரஷ்யாவின் ரயில் இணைப்பை பயணிகள் மற்றும் பொருட்களை எற்றி இறக்கும் ரயில் பயணத்தையே அனுமதித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அத்தகைய தடைகளை பிறப்பித்த லித்துவேனியா உடனடியாக அமுலுக்குவரும் விதத்தில் அத்தகைய தடைகளை 25.07.2022அன்று நீக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்ய வங்கிகளுக்கு விதித்த தடையினை நீக்கியுள்ளது என்பதை இதே பகுதியில் குறிப்பிட்டிருந்தமை கவனிக்கத்தக்கது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் ரஷ்யாவின் பொருளாதார நெருக்கடி ஐரோப்பாவை அதிக பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது என்பதையும் அதிலிருந்து விடுபடுவதற்கான உத்திகளை ஐரோப்பா கட்டமைத்து வருவதாகவும் ஐரோப்பாவிலிருந்து வெளிவரும் ஊடகங்களில் முதன்மையான கருத்துக்களாக காணப்படுகின்றது.  

மூன்றாவது, கருங்கடல் விவகாரம் உக்ரைன்-ஐரோப்பிய பொருளாதார கட்டுமானத்தில் ஆரோக்கியமாக காணப்படுகின்ற அதேவேளை ரயாவும் தனது போர்வலுவை கருங்கடலில் உறுதிப்படுத்திக்கொள்ளவும் அதனூடாக மேற்கு-உக்ரைன் ஆயுத விநியோகத்தினை நெருக்கடி உள்ளாக்கவும் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக. தானிய ஏற்றுமதிக்கான கருங்கடல் துறைமுகங்களை திறந்துவிடும் போக்கானது ஆயுத பரிமாற்றத்துக்கான தடையினை அதிகப்படுத்தவதாகவே தெரிகின்றது. இதனூடாக உக்ரைனில் ஆயுத தளபாடங்களின் அளவீட்டையும் போர்க்கப்பல்களின் வலிமையையும் முடிவுக்கு கொண்டுவருகின்ற நோக்கில் ரஷ்யாவின் நடவடிக்கை அமைந்துள்ளது.  

நான்காவது, கருங்கடல் உடன்பாடு வெளிப்படையாக ரஷ்யாவின் இராணுவ தளபாடங்களை பாதுகாப்பதற்கும் அதனை பலப்படுத்துவதற்கும் உத்தியாக அமைந்துள்ளது. குறிப்பாக ஈரானிடமிருந்து தருவிக்க முயலும் ஆளில்லாத விமானங்கள் ரஷ்யாவின் ஆயுத தளபாட விநியோகத்தையும் தொடர் ரோந்துகளையும் உக்ரைனின் ஆளில்லாத விமானங்களிலும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது. இதனை தடுக்கவும் இதற்கான பதிலீட்டை மேற்கொள்ளவும் அத்தகைய உடன்படிக்கை வலுவான பலத்தை ரஷ்யாவிற்கு ஏற்படுத்தி கொடுக்க முடியுமென்று போர் வல்லுனர்கள் கணிப்பிடுகின்றனர். இதன்மூலம் கருங்கடல் உடன்படிக்கை பாதுகாப்பு நலன்சார்ந்த உடன்படிக்கையாக காணப்படுகின்றது. 

ஐந்தாவது, துருக்கியுடனான ரஷ்யாவின் நகர்வு கருங்கடல் உடன்படிக்கை சார்ந்த அம்சமாகவே மதிப்பீடு செய்யப்படுகின்றது. நேட்டோ அணியிலும் மேற்கு அணியிலும் அங்கத்துவம் பெற்ற துருக்கியுடன் ரஷ்யா உடன்படிக்கையை எட்டுவதென்பது பிராந்திய அரசியல் சமநிலையின் புதிய வடிவமாகவே காணப்படுகின்றது. அவ்வகை மாற்றமானது, உக்ரைன் -ரஷய போரின் பங்குதாரராக துருக்கி மாற்றப்பட்டுள்ளதுடன், கருங்கடல் துருக்கியின் செல்வாக்குக்கு உட்பட்டது என்பதனாலும் ரஷ்யா துருக்கியுடன் நெருக்கமான உறவை அல்லது முரண்பாடற்ற உறவை கட்டமைப்பதில் கரிசனை கொண்டு செயற்படுகின்றது. எஸ்-400இனை ரஷ்யாவிடமிருந்து தருவித்த துருக்கி கருங்கடல் உடன்பாட்டின் மூலம் இராணுவரீதியிலான மூலோபாய நோக்குநிலையில் நெருக்கமான நாடாக ரஷ்யாவை அடையாளம் கண்டுள்ளது. இதனால், மேற்கு நாடுகளின் அரசியல் இராணுவரீதியிலான பிரிப்புகளுக்குள் உட்படாத உறவுநிலையை துருக்கி ரஷ்யாவோடு கொள்ள முயலுகிறது. 

ஆறாவது, கருங்கடல் உடன்படிக்கை ரஷ்யா,- துருக்கி, உக்ரைனுடன் இணைந்து செயற்படுவதென்பதுவும் ஈரானை பக்கபலமாக கொண்டுள்ளமையும் இஸ்ரேலிய அரசியல் இருப்பை அதிகம் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. சிரிய விவகாரத்தில் முரண்பட்ட ஈரான் துருக்கியை ஒன்றிணைப்பதிலும் துருக்கி- சிரிய எல்லையில் குர்திஷ்தானியர்களுக்கு பாதுகாப்பு வலையமொன்றை கட்டமைப்பதிலும் உரையாடல் முன்னகர்த்தப்பட்டுள்ளது. எனவேதான் இஸ்ரேலின் இருப்பும் சிரியாவின் எல்லைப்பகுதியும் அரசியல் ரீதியான நெருக்கடியை இஸ்ரேலுக்கு ஏற்படுத்த விளைந்துள்ளதென போரியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இத்தகைய அரசியல் நெருக்கடி இராணுவ நெருக்கடியாக பரிணாமம் பெறுகின்ற போது பிராந்திய அரசியலுக்கான சமநிலை புதிய தோற்றப்பாட்டை எட்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

எனவே, கருங்கடல் சார்ந்து ரஷ்யா, -துருக்கி,-உக்ரைன் மற்றும் ஐ.நா சபை மேற்கொண்ட உடன்பாடென்பது ரஷ்யாவின் நலன்களையும் மேற்கு நாடுகளின் நலன்களையும் அதிகம் முதன்மைப்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் உக்ரைன் மேற்கு நாடுகளுக்கு தானியத்தை ஏற்றுமதி செய்வதனூடாக ஆயுத தளபாடங்களை இறக்குமதி செய்யவும் ரஷ்யாவுடனான போரை நீடிக்கவும் வாய்ப்பானதாகவே மட்டுமே அமையும். ஐரோப்பிய பொருளாதாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு இவ்உடன்பாடு இடைக்கால தீர்வை ஏற்படுத்தும். மறுவலமாக மேற்கு நாடுகளின் ஆயுத குவிப்பும் ரஷ்யாவின் போர்நகர்வும் இவ்வுடன்படிக்கைக்கூடாக எட்டப்படும் நிலை தவிர்க்க முடியாததாகும். ஐ.நா சபையின் தற்காலிக ஏற்பாடுகளை தவிர போரை முடிவுக்கு கொண்டுவரும் நிரந்தர ஏற்பாடுகளே இன்றைய அவசியப்பாடாக உள்ளது.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments