அரசின் தற்போதைய அவசர முன்னுரிமை தேர்வு மக்களின் உணவுப் பாதுகாப்பே! | தினகரன் வாரமஞ்சரி

அரசின் தற்போதைய அவசர முன்னுரிமை தேர்வு மக்களின் உணவுப் பாதுகாப்பே!

இலங்கையில் மில்லியன் கணக்கான மக்கள் உணவு எரிபொருள் எரிவாயு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள நிலையில் நாட்டில் ஏற்றபட்ட அரசியல் பொருளாதார நெருக்கடி ஒரு மனிதாபிமான அவசர நிலையாக (humanitarian emergency) மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களான உலக உணவுத் திட்டம் (WFP) ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) ஐக்கிய நாடுகளின்சனத்தொகை நிதியம் (UNFPA) போன்ற நிறுவனங்களும் உலக செஞ்சிலுவைச் சங்கம் போன்ற மனிதாபிமானத் தொண்டு நிறுவனங்களும் அபாயச் சங்கு ஊதியுள்ளதுடன் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உதவும் பொருட்டு சர்வதேச நிதி உதவிகளையும் கோரியுள்ளன. ஆனால் உள்நாட்டில் இப்பிரச்சினையின் தீவிரத்தன்மை பற்றி யாரும் கண்டு கொண்டதாகவோ உரிய எதிர்வினையாற்றியதாகவோ தெரியவில்லை. மாறாக பொறுப்புக் கூறவேண்டியவர்கள் அரசியல் சித்துவிளையாட்டுகளிலேயே காலத்தைக் கடத்துவதாகத் தெரிகிறது.

கடந்த இரு வருடங்களாக கொவிட் 19நோய் நிலை காரணமாக போதிய உணவைப்பெற்றுக் கொள்ள போராட்டம் நடத்திவந்த மக்கள் மீது பொருளாதார நெருக்கடியும் இடியாக வந்திறங்கியுள்ளது. குறிப்பாக ஒரே பெற்றோரைக் கொண்ட குடும்பங்கள் (single parent households) மீதும் நிலையான தொழில் புரியாதவர்கள் மீதும் ஏற்கெனவே தொழில்களை இழந்து தவிப்பவர்கள் மீதும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.  

அரசாங்கத்தின் முறையற்ற விவசாயக் கொள்கை காரணமாக சடுதியாக வீழ்ச்சியடைந்த தானியங்கள், மரக்கறிகள், பழவகைகள் போன்ற விவசாய விளைபொருட்களின் உற்பத்திகள் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மேலும் வீழ்ச்சியடைந்தது.  

குறிப்பாக மீன்பிடித்துறையிலும் நெல் விவசாயத்துறையிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றைச் சந்தைகளை நோக்கி நகர்த்துவதற்கான போக்குவரத்துக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் மிகப்பெரிய சிரமம் எதிர்நோக்கப்பட்டமையால் அரிசி மரக்கறி உட்பட்ட உணவுப் பொருள்களின் விலைகள் துரிதமாக அதிகரித்துச் சென்றன. 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022இல் கடந்த ஏழு மாத காலப்பகுதியில் இலங்கையில் உணவுப்பொருள்களின் விலையதிகரிப்பைக் காட்டும் உணவுப் பணவீக்கத் தரவுகள் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன.

இவ்வருடத்தின் ஆரம்பத்திலிருந்தே உணவுப்பொருள் விலைகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துச் சென்றுள்ள போதிலும் கடந்த இரண்டு மாதங்களில் உணவுப்பொருட்களின் விலைகள் கடுகதி வேகத்தில் உயர்ந்துள்ளமை தெளிவாகிறது.  

இதனால் அடித்தட்டு மக்கள் உட்பட இலங்கை மக்களில் பெரும்பாலானோர் கடும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். 24இலட்சம் பேர் வறுமைக் கொட்டின் கீழ் விழுந்துள்ளனர். தமது வாழ்வாதாரத்தை இழந்து உணவுப்பொருட்களின் சுழல் விலையதிகரிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இலங்கையில் உள்ள பத்து குடும்பங்களில் மூன்று குடும்பங்கள் அதாவது சுமார் 6.3மில்லியன் பேர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக உலக உணவுத்திட்டம் கூறுகிறது. இவர்களில் 65000பேர் உணவுப் பற்றாக்குறையால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சுமார் 6.7மில்லியன் பேர் ஏற்றுக் கொள்ளத்தக்க நல்ல உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். அத்துடன் இரண்டு இலட்சம் குடும்பங்கள் அவசர வாழ்வாதார சமாளிப்பு உபாயங்களான உணவு வேளைகளைத் தவிர்த்தல் உண்ணும் உணவின் அளவைக்குறைத்தல் உண்ண விரும்பத்தகாத உணவு வகைகளை உண்ணத் தலைப்படல் போன்றவற்றை கடைப்பிடிப்பதாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களில் பெருந்தோட்டத்துறையில் உள்ளவர்களே நகர்ப்புற மற்றும் கிராமப்பற மக்களை விடவும் மிக மோசமான பாதிப்பகளை எதிர்கொண்டுள்ளனர். அங்கே வாழும் மக்களில் அரைப்பங்கிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் போதியளவு உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். நகர்ப்புறங்களில் வாழும் வறிய மக்கள் தம்மிடம் உள்ள தங்க நகைகள் சேமிப்புகளை விற்றுத் தீர்த்து பிச்சினையைச் சமாளிக்க முயலும் அதேவேளை தோட்டப்புற மக்கள் ஏற்கெனவே உணவுக்காகக் கடன் பெற்று வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  

இப்போதைய உணவுப் பொருள் விலையதிகரிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாடு என்பவற்றுக்கு தீர்வாக பொதுமக்கள் இப்போது கடைப்பிடிக்கும் உபாயங்கள் எதிர்காலத்தில் அவர்களின் வருமானம் உழைக்கும் ஆற்றலை மோசமாகப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

குறிப்பாக கர்ப்பிணி மற்றும் பாலுௗட்டும் தாய்மார்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் போதிளவு நிறையுணவைப் பெற முடியாத நிலையில் அவர்களது போஷாக்கு நிலை பாதிக்கப்பட்டு எதிர்காலத்தில் ஒரு ஆரோக்கியமற்ற சந்ததி உருவாவதுடன் அவர்களது தொழில்படையின் தரமும் வீழ்ச்சியடைந்து வருமானம் உழைக்கும் ஆற்றலும் வீழ்ச்சியடையும். ஏற்கெனவே இலங்கைச் சிறார்களின் போஷாக்கு மட்டம் குறைவாக உள்ளதென்று சர்வதேச ஆய்வுகள் காட்டியுள்ள நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலை மிக ஆழமான பாதிப்புகளை உருவாக்கும்.  

மற்றுமொரு சர்வதேச செய்தி நிறுவனமொன்றின் தகவலின்படி இலங்கையில் வாழம் குடும்பங்களில் எழுபது சதவீதமானவை உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றன. உலக சுகாதார தாபனம் பரிந்துரை செய்துள்ளதன்படி போஷாக்குமிக்க உணவைப் பெற வேண்டுமாயின் ஒரு குடும்பம் மாதமொன்றுக்கு 93675ரூபா தொடக்கம் 148868ரூபா வரையிலான வருமானத்தை ஈட்ட வேண்டும். ஆனால் இலங்கையில் குடும்பம் ஒன்றின் சராசரி வருமானம் 76414ரூபாவாகும். இலங்கையில் மிக வறிய 20சதவீதமான குடும்பங்கள் 17572ரூபாவை மட்டுமே மாதாந்த வருமானமாகப் பெறுவதாக உத்தியோக பூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.  

ஆகவே இலங்கை மக்களில் மிகக் கணிசமான பேர் உணவுப்பாதுகாப்பில் சவால் மிக்க நிலையில் காணப்படுகின்றனர். எனவே இலங்கை அரசாங்கத்தின் அவசர முன்னுரிமைத் தெரிவாக மக்களின் உணவப் பாதுகாப்புை உறுதிப்படுத்தல் அமைய வேண்டும். உடனடியாக அது செய்யப்படல் வேண்டும். இது தொடர்பில் உரிய தரப்பினர் கரிசனை கொள்வது முக்கியம்.     அரசின் தற்போதைய அவசர முன்னனுரிமை  தேர்வு மக்களின் உணவிப் பாதுகாப்பே!

கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை,
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments