ஹர்த்தாலுக்கு பணிந்து டட்லி ராஜினாமா புதிய பிரதமராக சேர் ஜோன் கொத்தலாவல | தினகரன் வாரமஞ்சரி

ஹர்த்தாலுக்கு பணிந்து டட்லி ராஜினாமா புதிய பிரதமராக சேர் ஜோன் கொத்தலாவல

இலங்கையை உலுக்கி எடுத்த அந்த ஹர்த்தால் 1953ஓகஸ்ட் 12ம் திகதி நடைபெற்றது. ஒரே தினத்தில் வடக்கு, கிழக்கு, தென், மத்திய, ஊவா, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் வெற்றிகரமாக ஹர்த்தால் நடைபெற்றது. கொழும்பு அப்படியே ஸ்தம்பித்துப் போனது. மாட்டு வண்டில்காரர்களும் அப்பனே முருகா என வீட்டில் இருந்து விட்டனர். தனியார் பஸ் கம்பனிகள் கதவுகளை இழுத்து மூடின. டிராம் வண்டிகள் இயங்கவில்லை. ரயில்கள் ஓடவில்லை. கொழும்பின் பல இடங்களில் பாதைக்கு குறுக்கே மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. சில இடங்களில் தண்டவாளங்கள் அகற்றப்பட்டிருந்தன. அக் காலத்தில் தனியார் வாகனங்கள் மற்றும் லொரிகள் குறைவு. தாக்கி சேதம் விளைவித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அவையும் வாலைச் சுருட்டிக் கொண்டன. போராட்டக்காரர்கள் வீதிகளில் ஆங்காங்கே கூட்டமாகக் காணப்பட்டதால் கடைகள், அரசு கட்டடங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டதால் நாடே வெறிச்சோடிப் போனது. திறக்கப்பட்டிருந்த கடைகளும் பலாத்காரமாக மூடப்பட்டன. மொத்தத்தில் முழு நாடுமே ஸ்தம்பித்துப் போனது.

அன்றைய பிரதமர டட்லி சேனநாயக்கவும் அவரது மதியூகியும் நிதியமைச்சருமான ஜே.ஆர்.ஜயவர்தனவும் இடதுசாரிகளால் இலங்கை மக்களைத் தம் வசப்படுத்திவிட முடியும் என்பதை கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொய் வாக்குறுதிகளை வழங்குவதும் பின்னர் அதற்கு மாறானவற்றை செய்வதும் இலங்கை அரசியலில் வழமையே. எழுபதுகளில் பதவிக்கு வருவதற்காக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அளித்த வாக்குறுதிகளில் ஒன்று குறைந்த விலையில் அரிசி கொண்டுவந்து தருவோம் என்பதாகும். இரண்டு கொத்து அரிசியை இலவசமாகத் தருவோம் என்றார். அப்போது உலகில் அரிசி விளைச்சல் குறைவு. விலை அதிகம். அதிக விலைக்கும் அரிசி இறக்குமதி செய்ய முடியாது என்பதே உண்மை நிலை. எதிர்த்தரப்பினர், கொண்டுவந்து தருவதற்கு எங்கே அரிசி? என்று எதிர்க்கேள்வி எழுப்பினர். ஸ்ரீமாவோ தளரவே இல்லை.

“நான் சொன்னால் சொன்னது தான்! சந்திரனில் இருந்தாவது அரிசி கொண்டுவந்து தருவேன்” என்றார் ஒரே போடாக! தேர்தல் பரப்புரையின் போது அக்கோஷம் ஒரு பாடலாகவே மாறிப்போனது. சீனி இல்லாமல் தேனீர் அருந்துவோம், சந்திரனில் இருந்தாவது அரிசி கொண்டு வருவோம் என கூட்டத்துக்குக் கூட்டம் கோஷம் போட, கரகோஷமும் விசிலும் வானைப் பிளந்தது! 1970தேர்தலில் டட்லியின் ஐ.தே.க. பயங்கரத் தோல்வியைத் தழுவ, ஸ்ரீமாவோவின் கூட்டணி அதிரி புதிரி வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தது. அவரது ஆட்சியில்தான் பின்னர் அரிசி, மா பஞ்சமும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டது!

ஸ்ரீமாவிடமிருந்த ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக 1977தேர்தலின் போது ஐ.தே.க.வின் ஜே.ஆர்.ஜயவர்தன, எட்டு இறாத்தல் தானிய வகைகளைத் தருவேன் எனத் தேர்தல் வாக்குறுதியைத் தந்தார். அரிசிக்கும் மாவுக்கும் அல்லாடிக் கொண்டிருந்த இலங்கைக் குடிமக்கள் பஞ்சம் போக்க வந்த தம்பிரானே! என அவர் பக்கம் சேர்ந்து கொண்டு அத்தேர்தலில் ஐ.தே.க.வுக்கு வரலாறு காணாத வெற்றியைத் தந்து ஆட்சிபீடத்தில் அமர வைத்தார்கள். கூடவே தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வட்டமேசை மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்வேன் என்ற வாக்குறுதியையும் தந்தார் ஜே.ஆர்.

பதவிக்கு வந்ததும் ஜே.ஆர். அரசு இரண்டையும் செய்யவில்லை! வட்டமேசை மாநாட்டைக் கூட்டி தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும். பதிலாக வடக்கின் தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதற்கென விசேட இராணுவ அதிகாரி புல் வீரதுங்கவை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்து, அவருக்கு ஆறுமாதகால அவகாசத்தை தந்தார். வீரதுங்க போய் வந்ததன் பின்னர் முன்னரைவிட தீவிரவாதம் வடக்கில் வளரவே செய்தது. ஆறு இறாத்தல் தானியம்  எங்கே என்று எதிர்த்தரப்பினர் கேட்டபோது, நாட்டை திறந்த பொருளாதாரத்துக்கு திறந்துவிட்டு விட்டேன். யார் வேண்டுமானாலும் கடைகளில் தமக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார் ஜே.ஆர்! அரிசி, தானியங்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என்ற மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புக்கு வேட்டு வைத்ததன்மூலம் ஜே.ஆர். அரிசி அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்தார் என்பது உண்மையே.

அதேபோல வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்களைத் தவிர ஏனையோருக்கான அரசி பங்கீட்டு புத்தகம் மற்றும் குடும்ப அட்டைகளை ஜே.ஆர். பறித்துக் கொண்டார். இனாமாக எதையும் தர மாட்டோம். உழைக்கவும் அதற்கான ஊதியம் பெறவும் வாய்ப்புகளை உருவாக்கித் தருவோம் என்பது ஜே.ஆரின் கொள்கையாக இருந்தது. 1952ஹர்த்தால் வெற்றியை சகித்துக் கொள்ள முடியாதவராக, அடிபட்ட புலியாக காத்திருந்த ஜே.ஆர். அரிசி அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்ததை வரவேற்கத்தக்கதாகவே மக்களும் பார்த்தார்கள்.

1953ஹர்த்தால் டட்லி சேனநாயக்காவை வெகுவாகவே பாதித்து விட்டது. சில மாதங்களுக்கு முன்னர் தமது கட்சிக்கு கௌரவமான வெற்றியைத் தந்த அதே மக்கள் தனது அரசுக்கு எதிராக இவ்வளவு ஆவேசமாக இறங்குவார்கள் என்பதை அவரால் நம்ப முடியவில்லை. அலரி மாளிகையில் தான் டட்லி சேனநாயக்க வாசம் செய்தார். அன்றைய அலரி மாளிகைக்கும் காலி வீதிக்கும் இடையே ஒரு அரைச்சுவர் இருக்கும். எட்டிப் பார்த்தால் அலரி மாளிகை வாசலைப் பார்க்கலாம். பொதுவாகவே ஆள்அரவமற்றிருக்கும். காவலுக்கு சில பொலிசார். இன்றிருக்கும் பிரமாண்டமான கட்டடங்கள் அன்றில்லை.

பிரதமர் டட்லி சேனநாயக்க தொடர்ந்தும் அலரி மாளிகையில் வசிப்பது நல்லதல்ல என அவருக்கு சொல்லப்பட்டது. அங்கு அரச உயர் மாநாடுகள் நடத்தப்படுவது பாதுகாப்பானதல்ல என்று அறிவுறுத்தப்பட்டதால் அன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூடமிட்டிருந்த எச்.எம்.எஸ். நியுபவுன்ட்லான்ட் என்ற போர்க் கப்பலில் அமைச்சரவை மாநாடு நடைபெற்றது. நாடு அச்சமயத்தில் செயலிழந்து கிடந்தது. நாடெங்கும் லட்சக்கணக்கானோர் வீதிகளில் இறங்கியிருந்ததால் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் இடம் பெற்றிருந்தன. அடுத்ததாக என்ன நடக்கும் என்பது தெரியாத நிலை. முக்கிய அரசு அலுவலகங்கள், துறைமுகம், இரத்மலானை விமான நிலையம் என்பனவற்றுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பிரச்சினை எழுந்திருந்தது. எதிர்க்கட்சிகள் ஒரு நாள் ஹத்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தபோதும் மக்களின் ஆவேசத்தைப் பார்க்கும்போது இது எத்தனை நாள் நீடிக்கும் என்பது தெரியாத நிலை ஏற்பட்டிருந்ததால் அரசு அரண்டு போயிருந்தது.

அன்றைய தினம் தொடர்ச்சியாக பல முக்கிய மாநாடுகள் அக்கப்பலில் நடைபெற்றன. பொலிஸ் அதிகாரிகள், முப்படைத் தளபதிகள் இந்த ஆலோசனை மாநாடுகளுக்கு அழைக்கப்பட்டனர். அன்று தேசாதிபதியாக விளங்கியவர் சேர் ஒலிவர் குணதிலக்க. பிரதமரின் ஆலோசகராகவும் அவர் செயல்பட்டு வந்தார்.

அச்சமயத்தில் மனம் பேதலித்துப் போயிருந்த டட்லி சேனநாயக்க உடல் பாதிப்புற்று நோயுற்றார். உண்மையாகவே நல்ல மனிதரான டட்லியால் இந்த ஹர்த்தாலைத் தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை. இதில் இருந்து எப்படி மீள்வது என்பதையும் அவர் அறிந்திருக்கவில்லை. எனவே நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளை துரித கதியில் மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சு சேர் ஒலிவர் குணதிலக்கவிடம் கையளிக்கப்படடது. அவர் அவசரகால சட்டத்தைப் பிறப்பித்து பொலிசாருக்கு உதவும் வகையில் இராணுவத்தை சேவைக்கு அழைத்தார். ஒலிவர் குணதிலக்க அன்றைய இராணி மாளிகையில் இருந்து அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ஒலிவர் குணதிலக்க ஒரு பனங்காட்டு நரி. பிரிட்டிஷ் விசுவாசி. சில ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திரம் பெற்ற இலங்கையை மார்க்சிஸ்டுகளின் கையில் கொடுப்பதா? என்று ஆத்திரப்பட்ட அவர் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். இம் மோதல்களில் பத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் உயிரிழந்தனர். 13ம் திகதி அதிகாலை அளவில் ஹர்த்தாலின் வீச்சு பெரும்பாலும் ஓய்ந்திருந்தது. தமது இடதுசாரி தலைவர்கள் கேட்டுக் கொண்டால் மட்டுமே ஹர்த்தாலைக் கைவிடுவோம் என அவர்கள் தெரிவித்து வந்ததாகவும் 13ம் திகதி நண்பகல் அளவில் ஹர்த்தால் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தன.

பிரதமர் டட்லி சேனநாயக்க நோயுற்று ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதால் புதிய பிரதமர் நாட்டுக்குத் தேவைப்பட்டார். டட்லி தன் பதவியை இராஜிநாமா செய்தார். உடனடியாக ஐ.தே.க. உயர்மட்டம் கூடி கேணல் சேர். ஜோன் கொத்தலாவலையை புதிய பிரதமராக நியமனம் செய்தது. கொத்தலாவலை அரிசி விலை உயர்வை குறைப்பதாக அறிவித்தல் விடுத்தார்.

இலங்கையின் அரிசி அரசியல் ஒரு பிரதமரை இராஜிநாமா செய்ய வைத்தது! ஆசிய நாடுகளில், குறிப்பாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இருந்து விடுதலை பெறும் நாடுகளில் கம்யூனிஸ்டுகள் கை ஓங்குவதாகவும் உணவை ஒரு ஆயுதமாக கம்யூனிஸ்டுகள் பயன்படுத்துவதாகவும் மேற்குலகம் நம்புவதற்கு இந்த ஹர்த்தால் வழி வகுத்தது. எனவே இந்தகைய அபாயம் கொண்ட நாடுகளை கைவிட்டுவிடக்கூடாது என அமெரிக்காவும் மேற்குலகும் கருதின. (தொடரும்)

அருள் சத்தியநாதன்

Comments