வலிமையுள்ள சிலந்தி வலை | தினகரன் வாரமஞ்சரி

வலிமையுள்ள சிலந்தி வலை

உழைப்பு என்று சொன்னால் எறும்பையும் முயற்சி என்று சொன்னால் சிலந்தியையும்தான் உதாரணமாக சொல்வார்கள். சிலந்தி என்றதும் நம் நினைவுக்கு வருவது அதன் வலைதான். இந்த வலைதான் சிலந்தி வாழ்வதற்கான இருப்பிடமாக உள்ளது. சிலந்தியின் வாயிலிருந்து வரும் எச்சிலைக் கொண்டு இந்த வலை பின்னப்படுகிறது. இந்த வலையில் வந்து விழும் பூச்சிகளை இரையாக்கிக்கொண்டே சிலந்தி வாழ்கிறது. வலையின் ஆயுட்காலம் முடிந்து அது பழையதாகும்போது அந்த வலையை விட்டு விட்டு வேறொரு வலையைப் பின்னத் தொடங்குகிறது. சிலந்தி.பூச்சி இனத்தைச் சேர்ந்த சிலந்தியில் கோடு போட்ட சிலந்தி என்றும், சிறிய சிலந்தி என்றும் பல வகைகள் உள்ளன.  

ஆர்ப் வீவர் என்ற கோடு போட்ட ஒருவகை சிறிய சிலந்தி கூட்டமாக சேர்ந்து கூடு கட்டுகின்றன. இந்த வகை சிலந்திகள் ஆபிரிக்காவிலுள்ள மழைக்காடுகளில்தான் அதிகமாகக் காணப்படுகின்றன. அளவில் சிறியதாக இருந்தாலும் காடுகளில் இரண்டு மரங்களை இணைப்பது போன்றும், கிளைகளை இணைத்து பல மீட்டர் நீளம் கொண்ட வலையைப் பின்னும். இந்த சிலந்தியின் வலை எளிதில் அழிந்துபோகாது. மழை, காற்று மற்றும் விலங்குகளாலும் சேதம் ஏற்பட்டுவிட்டால், உடனடியாக பல சிலந்திகள் கூட்டாகச் சென்று வேலை செய்து வலையை சரிசெய்கின்றன. வலையில் வந்து விழும் உணவை எல்லா சிலந்திகளும் பகிர்ந்து உண்ணும். பெண் சிலந்திகள் வேட்டையாடுவது மற்றும் வலையில் உள்ள சிலந்திகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்திவரும்.  

உலகிலேயே மிகப் பெரிய சிலந்தி வலையை விஞ்ஞானிகள் மடகாஸ்கர் தீவில் கண்டுபிடித்துள்ளனர். மடகாஸ்கரில் உள்ள ஒரு ஆற்றின் மேல் பரந்து விரிந்து காணப்படுகிறது இந்த சிலந்தி வலை.  

இதுவரை அறியப்படாத ஒரு வகை பொருளால் இந்த வலை பின்னப்பட்டுள்ளது. மிகவும் வலுவாகவும், உறுதியாகவும் காணப்படுகிறது. டார்வினின் ஸ்பார்க் ஸ்பைடர் என்ற புதிய வகை சிலந்தி இந்த உயிரியல் பொருளை வெளிப்படுத்துவதாகவும் தெரிய வந்துள்ளது. ஒரே சிலந்தியால் பின்னப்பட்ட உலகின் மிகப்பெரிய வலை என்ற பெயரையும் இது பெற்றுள்ளது.  

என். வினோமதிவதனி,  
லுணுகலை.  

Comments