சமையல் GAS தட்டுப்பாடு முழுமையாக குறைவடையும் | தினகரன் வாரமஞ்சரி

சமையல் GAS தட்டுப்பாடு முழுமையாக குறைவடையும்

உலக வங்கியுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் மற்றும் லிற்றோ நிறுவனத்தின் முயற்சியினால் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய வெகுவிரைவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு முழுமையாகக் குறைவடையும் என்று ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த ஜூன் 15ஆம் திகதி முதித பீரிஸ் லிட்ரோ நிறுவனத் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் ஓமான் வர்த்தக நிறுவனத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன் பின்னர் எமது நிபந்தனைகளுக்கு அவர்களை இணக்கம் தெரிவிக்க வைத்ததன் பின்னர் , எரிவாறு இறக்குமதிக்கான டொலரைத் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன் பின்னர் 20நாட்களுக்குள் 33,000தொன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்டோரது ஒத்துழைப்புடன் டொலரை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அத்தோடு உலக வங்கியுடனான பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டன. அதற்கமைய உலக வங்கியிடமிருந்து 70மில்லியன் டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

உலக வங்கியின் 70 மில்லியன் டொலர்களையும் , லிட்ரோ நிறுவனத்தின் 20 மில்லியன் டொலர்களையும் கொண்டு ஒக்டோபர் மாதம் வரை ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Comments