சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதனால் பாராளுமன்றத்தை பலப்படுத்த வழிபிறக்கும் | தினகரன் வாரமஞ்சரி

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதனால் பாராளுமன்றத்தை பலப்படுத்த வழிபிறக்கும்

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது பாராளுமன்றத்தைப் பலப்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்தும். இதன் மூலம் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லமுடியும் என சபை முதல்வரும், கல்விஅமைச்சருமான கலாநிதி சுசில் பிரேமஜயந்ததெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்காலத்திட்டங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதேஅவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த எம்முடன் பலவிடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

கே: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய இடைக்கால அரசாங்கத்தினால் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க முடியும் என நீங்கள் நம்புகின்றீர்களா?

பதில்: இது குறித்து தற்பொழுது பேசப்பட்டு வருகிறது. உதாரணமாக, சில வாரங்களுக்கு முன்பு எரிவாயு விநியோகம் கேள்விக்குறியாக இருந்தது. இந்த நிலைமை தற்பொழுது மாறியுள்ளது. லிற்றோ நிறுவனத்தின் தகவல்களின்படி அடுத்த இரண்டு வாரங்களுக்குள் எரிவாயு வரிசைகள் எதுவும் இருக்காது. எனவே, தொடர்ச்சியான எரிவாயு விநியோகத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னர் உரம் தொடர்பாகப் பாரிய பிரச்சினையிருந்தது.

அரசாங்கத்தினால் 44,000மெற்றிக்தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்ய முடிந்ததுடன், இது தற்பொழுது விநியோகிக்கப்பட்டு வருகிறது. பெரும்போகம் ஆரம்பமாகியுள்ள நிலையில் நெல்லுக்கு மட்டுமன்றி தேயிலை, மரக்கறிகள் மற்றும் சோளம் போன்ற பயிர்களுக்கும் உரம் வழங்க அரசாங்கம் கேள்விப்பத்திரங்களைக் கோரியுள்ளது.

பெரும்போகத்துக்குப் பின்னர் அடுத்த சில மாதங்களுக்குள், உணவு விநியோகம் இப்போது இருப்பதை விட நல்ல நிலைமைக்கு வரும் என்று நான் நினைக்கிறேன். அந்நிய செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள் இறக்குமதி செய்வது தற்போது ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தச் சவால்களுக்கு மத்தியிலும் (ஓகஸ்ட் 1முதல்) வழங்கப்படும் எரிபொருளின் அளவைக் கட்டுப்படுத்தி, QR குறியீட்டைப் பயன்படுத்தி வாகனங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு செய்துள்ளது. அந்தச் செயல்முறையினால் நாம் எப்படி இலக்குகளை அடையப் போகிறோம் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் இருந்து அதிக எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய் பெறுவதற்கான சாத்தியங்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். அதற்கு சில வாரங்கள் ஆகும். செப்டம்பரில் இந்த இலக்கை அடைய முடியும் என்று நினைக்கிறேன்.

கே: தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து விடுபட சர்வகட்சி ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ள சில ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினரக்ளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: இந்த விடயங்கள் ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அண்மையில் நடைபெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்து அவர் விளக்கமளித்தார். அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேசுவதற்கும், பாராளுமன்றக் குழு அமைப்பைப் பலப்படுத்த எதிர்பார்த்துள்ள விடயங்கள் குறித்தும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் உண்மையான இளைஞர்களின் குரலுக்கு செவிசாய்க்க ஜனாதிபதி ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். அதைச் செய்ய அரசு தயாராக உள்ளது. ஆட்சியில் அவர்களின் கருத்துகளையும் யோசனைகளையும் பெற விரும்புகிறோம்.

கே: நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்கான ஒரே வழி அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதுதான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்த இது வழிவகுக்கும். தற்போது முழுஉலகமும் எம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, சர்வதேச சமூகம், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் நன்கொடை வழங்கும் நாடுகள் போன்ற நிதி நிறுவனங்களும் இலங்கை தொடர்பான தமது நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்வது மிகவும் நல்ல செய்தியாக இருக்கும்.

கே: காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான சமீபத்திய சம்பவங்கள் குறித்து பிரதான எதிர்க்கட்சி கவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு விசாரணை நடத்துமா?

பதில்: ஊடகங்களில் காட்டப்பட்ட தகவல் மற்றும் வீடியோ காட்சிகளுக்கமைய அமைதியான போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தவில்லை. அவர்கள் செய்தது ஜனாதிபதி செயலகத்தை விடுவிப்பதாகும். முதலில் போராட்டக்காரர்களை அந்த இடத்தைக் காலி செய்யும்படி பொலிஸார் இரண்டு தடவை கோரிக்கை விடுத்தபோதும், அதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை. ஜனாதிபதி செயலகம் இல்லாமல் ஜனாதிபதிக்கு தனது கடமைகளை நிறைவேற்ற இடமில்லை. எனவே, பாதுகாப்புப் படையினர் குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களை வளாகத்திலிருந்து வெளியேற்றினர். அதுதான் உண்மையில் அங்கு நடந்தது. அவர்கள் போராட்ட இடத்திற்குச் செல்லவில்லை. ஜனாதிபதி செயலகத்தின் நுழைவுத் தடை மற்றும் இடையூறு ஏற்படும் பாலம் வரை அவர்கள் மட்டுப்படுத்தப்பட்டனர். ஜூலை 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களின் விளைவாக ஜனாதிபதி செயலகத்தின் வேலியும் உடைக்கப்பட்டது. மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் அங்கு அலுவலகம் தொடங்குவது சிரமமாக இருந்தது. ஜனாதிபதி செயலகத்தை விடுவிப்பதற்காக, பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை வளாகத்திலிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கே: பொதுத்தேர்தலை உடனடியாக நடத்தி புதிய அரசாங்கம் விரைவில் அமைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நீங்கள் கருத்துத் தெரிவிக்க விரும்புகிறீர்களா?

பதில்: அது அவருடைய தனிப்பட்ட கருத்து. எத்தனையோ அரசியல் கட்சிகள் உள்ளன. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன ஏறத்தாழ மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றது. சில அரசியல் கட்சிகள் வெவ்வேறு நோக்கங்களை அடைய வேண்டும் என்பது வெளிப்படையானது. முதலாவதாக, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்திற்கு உத்தரவாதம் அளித்து, பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விநியோகிப்பதற்கான சிறந்த வழிமுறையை அமுல்படுத்த வேண்டும்.

இந்தத் தேவைகளை பூர்த்தி செய்யாமல் தேர்தலை நடத்த முடியாது. மறுபுறம், அரசியலமைப்பு விதிகளின்படி, நாங்கள் பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றாவிட்டால், இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது. அதாவது அடுத்த ஆண்டு மார்ச் வரை காத்திருக்க வேண்டும். பாராளுமன்றத்தை கலைப்பது ஜனாதிபதியின் விருப்பமாகும். நாம் செய்ய விரும்புவது முதலில் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

கே: எவ்வாறாயினும், அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன, இது எதிர்க்கட்சிகளையும் அமைதியான போராட்டங்களையும் நசுக்கும் முயற்சி என்று அவர்கள் கூறுகிறார்கள். உங்கள் பார்வை என்ன?

பதில்: எதிர்க்கட்சிகளை அடக்குவதற்காக அந்நடவடிக்ைக அல்ல. அவசரகால விதிமுறைகள் இல்லாமல், சில கூறுகளின் நடத்தையை கட்டுப்படுத்த முடியாது. காலிமுகத்திடல் போராட்டத் களத்திலும் மற்ற எல்லா இடங்களிலும் வெவ்வேறு குழுக்கள் உள்ளன. மே 9அன்று சில தனியார் மற்றும் பொதுச்சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பதை நாம் பார்க்கலாம். மே 9கலவரங்களின் விளைவாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தனக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.

இதுதான் நாட்டின் நிலைமை. காலிமுகத்திடலில் உள்ள அனைத்துக் குழுக்களும் ஒரே நிலைப்பாட்டில் இல்லை. சில உண்மையான இளைஞர் குழுக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புகின்றன. இருப்பினும், மறைமுக நோக்கங்கள் மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களைக் கொண்ட சில தரப்பினர்களும் அங்கு உள்ளனர். ஜூலை 9சம்பவங்களைத் தொடர்ந்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பொல்துவ சந்திக்கு வந்திருந்ததையும், ஏறக்குறைய 3000முதல் 4000பேர் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையும் எம்மால் பார்க்க முடிந்தது.

அவர்கள் பாராளுமன்ற வளாகத்துக்குள் புகுந்து தாக்க விரும்பினர். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தால் தேர்தல் நடைபெறும் வரை காத்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் நிச்சயமாக அவர்களால் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும். எனவே, சில குழுக்களின் மறைமுக நோக்கம் அரசியலமைப்புக்கு வெளியே அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகும். அந்த போராட்டங்களில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் கூட அந்த வரிசையில் இல்லை என்று நினைக்கிறேன். நாங்கள் செய்ய விரும்புவது நாட்டில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுத்து மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதாகும்.

அர்ஜூன்

Comments