ஈழ சிறுகதை வரலாற்றில் பெண்ணியல்வாதத்தை முதலில் முன்வைத்த பவானி ஆழ்வாப்பிள்ளை | தினகரன் வாரமஞ்சரி

ஈழ சிறுகதை வரலாற்றில் பெண்ணியல்வாதத்தை முதலில் முன்வைத்த பவானி ஆழ்வாப்பிள்ளை

'ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் முதன்முதலில் பெண்ணியல்வாதத்தை முன்வைத்தவர் பவானி ஆழ்வாப்பிள்ளை ஆவார். 1960களில் மிகத் துணிச்சலான பெண்விடுதலை சார்ந்த கருத்துக்களை இவர் முன்வைத்தார். மன்னிப்பாரா? என்ற கலைச்செல்விச் சிறுகதை மூலம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்த கதாசிரியை பவானி. பவானியின் மன்னிப்பாரா பெண்ணிலைவாதம் பற்றிய பல கருத்துக்கள் பரவியுள்ள இருபதாம் நூற்றாண்டின் கடைக்கூற்றில் பலராலும் வரவேற்கப்படாவிட்டாலும், ஆக்ரோஷமான கண்டனத்துக்குள்ளாகி அக்காலத்திற் பெரும் புயலையே கிளப்பிவிட்டது' எனக் குறிப்பிட்டுள்ளார் கலாநிதி செங்கை ஆழியான், தனது ஈழத்துச் சிறுகதை வரலாறு என்ற நூலில். 

'மன்னிப்பாரா' என்ற சிறுகதை கலைச்செல்வி வைகாசி 1961இதழில் வெளியாகியது. இச்சிறுகதையில் மூர்த்தி, சுசீலா ஆகியோருக்கிடையிலான காதல் சாதிய ஏற்றத்தாழ்வினால் நிறைவேறாமல் போய்விடுகிறது. பெற்றோரின் ஆதங்கத்தை மீற முடியாதவனாகின்றான் மூர்த்தி. இதற்கிடையில் சுசீலாவிற்கு வேறொரு இடத்தில் திருமணம் முற்றாகிவிடுகிறது. தனது திருமணத்திற்கு முதல்நாள் சுசீலா மூர்த்தியைத் தேடி    அவனது வீட்டிற்குச் செல்கிறாள். 'காதலித்தவனையே கணவனாகக் கொள்வதுதான்    கற்பெனில் இந்த என் முடிவு என் கற்பு நெறிக்குச் சிறிதும் புறம்பானது அல்ல. உங்கள் உரிமையை இப்பொழுதே எற்றுக் கொள்ளுங்கள். நமது வாழ்வை இக்கணமே வாழ்ந்து முடித்துவிடுவோம், மானசீகமாய் மட்டுமன்றி என்னால் என்றுமே உங்களோடு வாழமுடியாது. ஆனால் இந்தக்கணம் உங்களோடு வாழ்கிறேன். இதை அறிந்தால் உலகம் என்னைக் கேவலமாகக் கருதும், பகிஷ்கரித்துவிடும். ஆனால்.. ஆனால் கடவுள் என்னை மன்னிப்பார் இல்லையா' என்கிறாள் சுசீலா. மூர்த்தி அவளை இறுக அணைத்துக் கொண்டான். நிச்சயமாக நம்மை மன்னிப்பார்' என்கிறான். 

பழைமைவாதம் வேரூன்றிய அக்கால கட்டத்தில் சுசீலாவின் இந்த முடிவு ஈழத்து இலக்கிய உலகில் பெரும் கண்டனத்துக்கு இலக்காகியது. கதாநாயகியின் முடிவை எதிர்த்து கதையை வேறு விதமாக மாற்றி கவிஞர் எஸ்.எம். சவுந்தரநாயகம் எழுதிய கதையும், அவளுடைய முடிவை ஆதரித்து அவளைப் புரட்சிப் பெண்ணாகக் கொண்டு செந்தாரகை எழுதிய கதையும் 'மன்னிப்பாரா' என்ற அதே தலைப்பிலேயே கலைச்செல்வியின் அடுத்த இதழ்களில் வெளியாகின. 

யாழ்ப்பாணத்தில், அளவெட்டிக் கிராமத்தில் பிறந்த பவானி கொழும்பு பெண்கள் கல்லூரியில் ஆரம்பக்கல்வி கற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரி. பிற்பட்ட காலத்தில் புலம்பெயர்ந்து பிரித்தானியாவை வாழ்விடமாகக்கொண்டவர். 1958/59ஆம் ஆண்டுக்குரிய இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கத்தின் இதழான 'இளங்கதிரில்' இவரது அர்ப்பணம் என்கிற சிறுகதை 'மதிற்பிற்குரியது, நூற்பரிசு பெற்றது' என்கிற சிறுகுறிப்புடன் வெளியாகியிருக்கின்றது.  

பவானியின் சிறுகதைத் தொகுப்பொன்று 1962இல் கடவுளரும் மனிதரும் என்ற தலைப்பில் வெளியாகியது. 1994இல் செல்வி திருச்சந்திரன், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் ஊடாக இச்சிறுகதைத் தொகுதியை மீள்பதிப்புச் செய்துள்ளார். முன்னைய தொகுப்பில் இடம்பெறாத சில கதைகளும் சேர்க்கப்பட்டு இத்தொகுப்பு இருபது கதைகளுடன் வெளியானது.  

பவானியின் கதைகளது நோக்கினையும் போக்கினையும் விளக்கும் வகையில் அவற்றில் முக்கியமான சில கதைகள் பற்றி தாய்வீடு மார்ச் 2017இதழில் அருண்மொழிவர்மன் எழுதிய மதிப்பீட்டின் சில பகுதிகள் கீழே தரப்படுகிறது: 

'தொகுப்பில் இரண்டாவது கதையாக அமைகின்ற பொரிக்காத முட்டை என்கிற கதை பவானியின் கதைகளில் இருக்கின்ற கூர்மையான அவதானங்களுக்குச் சான்றாக அமைகின்றது.

முதல்முறையாகக் கருவுற்றிருக்கின்ற உஷாவும் அவள் கணவன் சந்திரனுமே இக்கதையில் வருகின்ற கதாபாத்திரங்கள். தனது சிறுவயதில் இருந்து உஷா சேகரித்து வைத்திருக்கின்ற சிறு சிறு பொருட்களை அவளும் சந்திரனும் பார்த்து அவளது சிறுபிராய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுகின்றார்கள். அப்போது அவள் சிறுவயதில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்கின்ற கரிக்குருவியின் முட்டையொன்று விழுந்து உடைந்துவிடுகின்றது. சிறுவயதில் குருவிக்கூட்டில் இருந்து தான் எடுத்து ஒளித்து வைத்திருந்த அந்த முட்டை உடைந்தது அவள் மனதில் அவளது கரு பற்றிய சஞ்சலத்தினை உருவாக்கிவிடுகின்றது.

அந்த சஞ்சலத்தினால் அவள் தொடர்ந்து அலைக்கழிந்து, மனங்கலங்குகின்றாள். குழந்தை பிறக்கும்வரை இந்தப் பதற்றமும் சஞ்சலமும் அவளை ஆட்டுவிக்கின்றது.

கதை முழுவதும் உடைந்தபோன கரிக்குருவியின் முட்டை பற்றிய நினைவுகளே அவளது இந்த நிலைமைக்குக் காரணம் என்று சொல்லப்பட்டாலும், அண்மைய உளவியல் ஆய்வுகளின் அடிப்படையில் இது கருவுற்றிருக்கும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தத்துடன் தொடர்பான உளவியல் சிக்கல் என்றும் புரிந்துகொள்ளமுடிகின்றது. அந்த உளவியல் சிக்கல்பற்றிய பவானியின் அவதானம் கூர்மையானது.  

கனவு என்கிற கதை உளவியல் பின்னணியுடன் அமைந்த இன்னொரு கதை. முத்தம்மா என்று கேலியாக அழைக்கப்படும் முத்து திருமண வயதடைந்து திருமணமாகாமல் இருப்பதற்காக ஊராரால் கேலி செய்யப்படுபவன்.

அவனிடம் பட்டம் கட்டக் கற்றுக்கொண்ட சிறுவர்கள்கூட வளர்ந்து திருமணமாகிக் குடும்பமான பின்னரும் முத்து தனியனாகவே இருக்கின்றான்.

'ஆண்மை' என்பது பற்றிய கற்பிதம் அவன் ஆண்மையில்லாதவன் என்று அவனைக் கேலிசெய்கின்றது. அதே முத்து, மீனா என்கிற மாணவி அவளது காதலனுடன் ஊருக்கு மறைவாகப் பேசுவதைக் காணுகின்றான். பின்பொருநாள் அவள் தனது காதலனுக்காகக் காத்திருக்கின்றபோது பாலியல் தாக்குதல் செய்கின்றான். அவனைத் தேடி ஊரார் செல்கின்றபோது அவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ளுகின்றான். இந்தக்கதை 'ஆண்மை' பற்றிய கற்பிதம், பாலுணர்வு, பெண்கள் பற்றிய பொதுப்புத்தி ஆகியவற்றை நுட்பமாகக் காட்சிப்படுத்துகின்றது. தவிர, சிறுவயதில் தந்தையால் தாயும், முத்துவும் தனித்துவிடப்படுகின்றமையும், இளவயதிலேயே தாயும் இறந்துவிட ஒரு விதத்தில் ஊராரை அண்டியே வாழவேண்டிய நிலை முத்துவுக்கு இருந்தமையும்கூட அவனை இவ்விதமாகக் கட்டமைக்கக் காரணிகளாக இருந்திருக்கக்கூடும். 

வறுமை காரணமாகவும் சீதனம் போன்ற சமூக வழக்கங்களின் தடைகளாலும் இளவயதுப் பெண்கள் இரண்டாம், மூன்றாம் தாரங்களாக வயதானவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகின்ற வழக்கம் முன்னாட்களில் அதிகம் இருந்ததை அறிந்திருக்கின்றோம்.

பிரார்த்தனை என்கிற கதையில் வறிய குடும்பமொன்றில் மூத்த பிள்ளையாகப் பிறந்த சுமதி தனது பதினெட்டாவது வயதில் ஐம்பதுவயது ஆன ஒருவருக்கு மூன்றாம் தாரமாகத் திருமணம் செய்து வைக்கப்படுகின்றாள். சுமதியின் உணர்வுகளையும் மனநிலையையும் இத்திருமணம் பற்றிய எதிர்ப்புகளையும் இந்தக் கதையில் மிகவும் நுட்பமாக பவானி வெளிப்படுத்துகின்றார். 

'எத்தனை கொடிய இரவுகள்! சபாபதி அவளைத் தீண்டிவிட்டால் சுமதியின் சதை கூசும்! முதலில் தன் விதியை ஏற்றுக்கொள்ள முயன்றாள்.

 ஆனால் சபாபதி பசிப்பார்வையோடு அவளை அணுகும்போது கரங்களால் அவளை அணைக்கும்போது சுமதிக்குக் கூச்சலிடவேண்டும் போலிருக்கும்... 

இதுதான் பத்து வருஷங்களாகச் சுமதி நடத்திவரும் வாழ்க்கை. இன்று சபாபதி கண்ணை மூடிவிட்டால் சுமதிக்கு அது விமோசனமாகாதா? ஏன் எத்தனை நாள் ஆத்திரத்தில் வெறுப்பில் எண்ணியிருக்கிறாள் இந்தக் கிழம் செத்துத் தொலைக்காதா என்று! இன்று அப்படியே நடந்துவிடும்போல தோன்றுகையில் மட்டும் ஏன் வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டுகிறாள்?' 

கட்டாயத் திருமணம் செய்துவைக்கப்பட்ட வயதில் முதிய, மனதுக்குப் பிடிக்காத கணவன் சாகக் கிடக்கின்றபோது ஏன் சுமதி திருமணமாகிப் பத்து வருடங்களாகக் கும்பிடாத கடவுள்களையெல்லாம் மீண்டும் கும்பிடுகின்றாள் என்பதைக் கதை முடிவில் சொல்கின்றார், 'உள்ளத்தில் அடியில் இருந்து உணர்ச்சி ஒன்றிய வேகத்தோடு புதிய நம்பிக்கையோடு வேண்டுகிறாள், கடவுளே அவர் சாகட்டும்... கடவுளே அவர் சாகட்டும்...' 

அன்றைய காலப்பகுதியில் நிலவிய பெண்களுக்கெதிரான சமூக வழக்கங்களுக்கும் அடிமைத்தனத்திற்கும் எதிரான மிக வலுவான எதிர்க்குரல்களில் ஒன்றாக இதனைப்பார்க்க முடிகின்றது.  

பவானியின் கதைகளை நோக்குகின்றபோது அவர், தான் அவதானித்தவற்றை, சமூக வழக்கங்கள் மனித நேயத்திற்கு நெருக்கடி ஏற்படுத்திய சூழல்கள் பற்றிய தனது எதிர்வினையை, தனது எழுதுக்களினூடாக வெளிப்படுத்தினார். மனிதத்துவம் மீதான அவரது காதலும் சமூகம் தனிமனிதருக்குத் தருகின்ற நெருக்கடி பற்றிய கோபமுமே அவரது எழுத்துகளின் சாரம். அந்தவகையில் இலக்கிய வரலாற்றின் அடிப்படையில் மாத்திரமல்லாது தனது எழுத்துகளூடாகவும் அவர் முக்கியத்துவம் வாய்ந்தவரே. இந்தத் தொகுதியில் இருக்கின்ற அதிர்ச்சி மதிப்பீட்டை ஏற்படுத்தக் கூடிய அன்பின் விலை என்கிற கதை, நிலவியல் அடிப்படையில் செயற்கைத்தனம் வாய்ந்த நிறைவு என்கிற கதை, உன்னை உணர என்கிற அதீத உணர்ச்சிவயமான கதை என்பன எனது வாசிப்பில் மிகச் சாதாரணமான கதைகளே.

ஆயினும் ஒரு தொகுதியாக வாசிக்கவும், ஈழத்து இலக்கிய வரலாறு பற்றிய ஆய்வுகளுக்கும் இந்தக் கதைகள் மாத்திரமல்ல தொகுக்கப்படாத பவானியின் ஏனைய கதைகள் தொகுக்கப்படுவதும் மிக முக்கியமானதே. 

Comments